(கொரோனாவால் மறைந்த என் சமவயதுடைய கல்லூரிப் பருவத்து ஸ்நேகிதிக்கு)

இடைவெளியில்லாமல் என்னுள் ஒளிர்ந்தனள்
உயிரே உன்னிடம்
இடைவெளி எங்ஙனம் காப்பேன்
நோக்கினால் மனந்தொற்றிப் பரவும்
நோயே
உந்தன் கண்களை
எக்கணம் சேர்வேன்
முத்தம்
விடுதலை எனில்
முகத்தினை
எப்படி
கவசச்சிறையில்
மறைப்பேன்?
உடம்பை நோய் தாக்கும்
நினைவை?
உன்
நினைவின் நிழலை
என்செய்யும்?
இளமையில் உணர்ந்த கரங்களின் இணைவின் வெம்மையை எந்நீரில் கழுவினால் போகுமோடி
எந்த நோயும்
நீங்கிவிடும்
சமூகப் பரவலான
காதலோ
விலகினால் பரவும்
எதிர்த்தால் வளரும்
அணைத்தால் அல்லவா
அன்பில் அமைதியுறும்
நிறைவேறா வெம்மை கண்களில் தேக்கி
நீயில்லாமல்
பேசுகிறேன்
எதிரே
நீயாக
மாறியும்.
