பிரீமியம் ஸ்டோரி

மீட்சி

பழக்கதோஷத்தில்

அவர்தான் முதலில் நீட்டினார்

நானும் குலுக்கிவிட்டேன்

விலகிக்கொண்டோம்

அவரது கண்களில் அச்சம் விரிய

எனது கண்களில் அவருக்கான தரிசனம்.

வீட்டுத் திண்ணையில் சோப்புத் துண்டுகள் காத்திருக்கின்றன.

உயிர் மீனென நழுவும் துண்டுகளிலிருந்து

கரைந்து நுரைக்கும் நீர்

தோட்டத்து வாழையின் காலடியில் மோதுகிறது.

தலைமுறை செழிக்க வீட்டுக்கிழவி

குலதெய்வத்தைத் துணைக்கழைக்கிறாள்.

எனக்கே எனக்கான கிருமியே! நோயே!

என்னை மீண்டும் இந்தப் பாழும் வாழ்வில் விட்டுச் செல்கிறாய்!

கவிதை
கவிதை

வழிதவறிய கிருமிகள்

தெரு பூட்டப்பட்டு இருக்கிறது

வாசல் கதவு தள்ளினால்

திறந்துகொள்ளும் கிருமிகள்

தெருவுக்கும் வாசலுக்குமாக அல்லாடுகின்றன.

வீட்டில் மின்விளக்குகள்

அணைக்கப்பட்டுவிட்டன

வந்த வேகத்தில் கிருமிகள் சுவரில் முட்டிக்கொள்கின்றன

கைதட்டு! குதூகலி!

ஊர்த்தலைவர் கிருமிகளைத் தலைச்சுற்ற வைக்க

அடுத்தொரு திட்டம் வைத்துள்ளார்

அவரவர் முகவரியைக் கிணற்றில் தொலைத்துவிடுவதென்று.

கிணறுதான் இல்லை

அரசாங்கமென்றால் சும்மாவா

நிதி ஒதுக்கும் வேலையை முடுக்கி விட்டுள்ளது

அதுவரை பிழைத்துக்கிடக்கும் கடமை

குடிகளாகிய நமது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முட்டுச்சந்து நாள்கள்

ஒரு நாளொன்று புலரும்போதே

சலிப்பாய் இருக்கிறது.

பூட்டிய கதவுகளுக்குள் இருக்கத்தான்

ஆர்ப்பாட்டமெல்லாம்.

கொள்ளை நோயை எதிர்கொள்ள

சுடுநீர், கஷாயம் என்று போர்த்தயாரிப்புகள் வேறு.

பறித்தோம் சுட்டோம் உண்டோம்

என்றிருந்த நாள்தான்

எவ்வளவு இலகுவானவை!

மூளைக்குள் ஒரு பழங்குடிப் பாடல்

வந்து போகிறது.

மூன்று வேளை சமையலுக்குள்

நம்மைத் திணித்த லெளகீகம் இருக்கிறதே!

சமைத்தே அலுக்கும் வீட்டுப் பெண்கள்

ஒரு சாடையில்

கால்களை அடுப்புக்குள் வைத்து முறைக்கும் ஜகன்மோகினியாகின்றனர்.

அத்தனையும் சும்மா இருப்பதற்கான

மெனக்கெடல்கள்தான்

என்பதை நினைக்கும்போது

மேலும் சலிக்கிறது.

இதில் நிமிடத்துக்கு இத்தனை முறை வைத்து

மூச்சு வேறு விட வேண்டியிருக்கிறது!

செடியில் பூத்துச் சருகாகும்

மலரென ஒரு நாள்

எந்தத் தடயமுமின்றி வந்துபோகாதா?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு