கட்டுரைகள்
Published:Updated:

கவிதை: கடவுளை நிரப்புதல்

கவிதை
பிரீமியம் ஸ்டோரி
News
கவிதை

ஜீவன் பென்னி

வெறுப்புகளைத் திடமாகப் பகிர்ந்துகொண்ட பிறகு

நாங்கள் சிறப்பாகப் புரிந்துகொண்டோம் எங்களது கடவுளை.

பயங்கரமாக எல்லாவற்றையும் தாக்கியதற்குப் பிறகு

நாங்கள் நெருக்கமாக உணரத்துவங்கினோம் எங்களது கடவுளை.

இவ்வளவு குருதிகளை வெளியேற்றி விட்ட பிறகு

நாங்கள் ஆழமாகக் கண்டுகொண்டோம் எங்களது கடவுளை.

எல்லாவற்றையும் எரித்துச் சாம்பலாக்கிவிட்ட பிறகு

நாங்கள் முழுவதுமாக வெளிப்படுத்தியிருந்தோம் எங்களது கடவுளை.

ஒவ்வொன்றாகத் திட்டமிட்டபடி முடித்துவிட்ட பிறகு

நாங்கள் நிறைவாக நிரப்பியிருந்தோம் எங்களது கடவுளை.

எதுவுமே தெரியாமல் இருந்துவிட்ட பிறகு

நாங்கள் தைரியமாக மறைத்திருந்தோம் எங்களது கடவுளை.

என்றுமே உலர்ந்திடாத அழுகையொன்றை உலகின் கைகளுக்கொன்றாய்

கொடுத்துவிட்டுத் தங்களிருப்பிடத்திலிருந்து வெளியேறும் உயிர்களை

வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கின்றன அக் கடவுளின் விழிகள்.

அதன் கைகளிலிருக்கும் கழிவிரக்கங்களோ

கொல்லப்பட்டவர்களுக்குப் போதுமானதாக இல்லை

தாக்கப்பட்டவர்களுக்குப் போதுமானதாக இல்லை

அழுதுகொண்டிருப்பவர்களுக்கும் போதுமானதாக இல்லை.

மேலுமது

நிச்சயமாக இப்பிளவுகளின் ஆழத்திற்குள் செல்வதேயில்லை.

ஒரு ரொட்டித்துண்டின் அளவுள்ள நீதிக்காக எப்போதும்

ஏதாவதொரு சாலையில் போராடிக்கொண்டேயிருப்பதற்குப்

பழகிக்கொண்டிருக்கின்றனர் அவர்கள்

புதைக்கப்படும் நிச்சயமுள்ள இந்நிலத்தில்.

கவிதை
கவிதை

முழுவதும் எரிந்த குடில்களிலிருந்து

நாங்கள்

நமது தேசத்தின் ஒழுங்கற்ற படமொன்றையெடுத்தோம்

அதன் கறுப்பு நிறங்களிலிருந்து தோன்றிடும் வலிகளைத் தனிமைப்படுத்தினோம்

அதன் வன்மங்களை முழுவதுமாக வரிசைப்படுத்தினோம்

அதன் காரணங்களை ஒவ்வொன்றாக விசாரித்தோம்

பறிகொடுத்துவிட்ட ஒன்றைத் தேடியபடி எங்கள் பின்னால் வந்திடும்

சிறிய குழந்தைகளுக்கு வெறுங்கைகளையே காண்பித்தோம்.

நாட்டிற்குள் இருக்கவேண்டியவர்கள் என்பவர்களுக்கும்

நாட்டை விட்டே வெளியேற வேண்டியவர்கள் என்பவர்களுக்கும்

இடையில்

நின்றுகொண்டிருக்கும் அக்குழந்தைகளை

இரண்டு முறை எரிக்க முடியாது அவர்களால்.