Published:Updated:

``அவள் கேட்டதெல்லாம் 100 புத்தகங்கள்தான்" - இணையருக்குக் கேரள இளைஞர் வழங்கிய நிக்காஹ் பரிசு

புத்தகம்
புத்தகம்

நிக்காஹ் சமயம் பெண்ணுக்கு மெஹர் கொடுப்பது இஸ்லாத்தில் நடைமுறை. கடந்த அக்டோபரில் இஜாஸ் அஜ்னா நிக்காஹ் நிச்சயமானது. நடைமுறைப்படி பெண் மெஹராகக் கேட்கும் பொருளை மணமகன் கொடுத்தாக வேண்டும். அஜ்னா தங்கம் வைரம் என எதுகேட்டாலும் கொடுப்பதற்குத் தயாராக இருந்தார். ஆனால்...

``அவள் பரிசாகக் கேட்ட 100 புத்தகங்களைக் கொடுத்து அவளை என் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டேன். இனி வாழ்நாளுக்கும் நாங்கள் இணைந்து மேற்கொள்ளப் போகும் சாகசப் பயணத்துக்காக...

இன்ஷா அல்லாஹ்"

கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த இஜாஸ் ஹக்கிம் வெள்ளச்சலில் முகநூலில் இப்படியொரு பதிவைப் பகிர்ந்திருந்தார். ஹக்கிம் ஒரு பயணக்காரர், கதை சொல்லி, சமூகச் செயற்பாட்டாளர். அண்மையில் அதே கொல்லம் பகுதியைச் சேர்ந்த அஜ்னா நசீம் என்பவருடன் நிக்காஹ் செய்திருக்கிறார். நிக்காஹ் சமயம் தாங்கள் மணமுடிக்கும் பெண்ணுக்கு மெஹர் கொடுப்பது இஸ்லாத்தில் நடைமுறை. கடந்த அக்டோபரில் இஜாஸ் அஜ்னா நிக்காஹ் நிச்சயமானது. நடைமுறைப்படி பெண் மெஹராகக் கேட்கும் பொருளை மணமகன் கொடுத்தாக வேண்டும். அஜ்னா தங்கம் வைரம் என எதுகேட்டாலும் கொடுப்பதற்குத் தான் தயாராக இருந்ததாக இஜாஸ் பகிர்கிறார்.

அழைப்பிதழ்
அழைப்பிதழ்

ஆனால், தீவிர வாசிப்பாளரான அஜ்னா கேட்டது என்னவோ நூறு புத்தகங்கள். அதற்காகத் தனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் மற்றும் தான் வாங்க நினைத்த புத்தகங்கள் அடங்கிய பட்டியலை இஜாஸிடம் கொடுத்துள்ளார் அஜ்னா. அவரின் கட்டளையெல்லாம் ``பட்டியலில் அத்தனை புத்தகங்களும் எனக்கு வேண்டும். ஆனால், புதிய புத்தகங்களாக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை" என்பது மட்டுமே.

அஜ்னாவுக்காகப் புத்தக வேட்டையில் இறங்கினார் இஜாஸ். ``அவளுக்காகப் புத்தகங்களைத் தேடிப் பிடித்து வாங்கும் டாஸ்க் கடினமாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. `புதிய புத்தகமாக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை' என்று அஜ்னா கூறினாலும் பெரும்பாலும் புதிய புத்தகமாகவே தேடிப்பிடித்தேன். எப்படியோ எங்கள் திருமணத்தன்று 96 புத்தகங்கள் பரிசாகக் கொடுத்தேன்" என்கிறார் இஜாஸ். டிசம்பர் 29 அன்று மணமுடித்துக்கொண்ட அஜ்னா-இஜாஸ் வீட்டின் புத்தக அலமாரியில் தற்போது 99 புத்தகங்கள் இருக்கின்றன. 100வது புத்தகமான 'இந்திய அரசியலமைப்புச் சட்டம்' ஆர்டர் செய்யப்பட்டு ஆன் தி வேயில் வந்துகொண்டிருக்கிறது.

அஜ்னா
அஜ்னா

``தற்போதைய அரசியல் சூழல் கருதி அரசியலமைப்புச் சட்டப் புத்தகம் வேண்டும் என்பதில் அஜ்னா கறாராக இருந்தார். அதுமட்டுமல்லாமல் கீதை, குரான் மற்றும் பைபிளும் அஜ்னாவின் பட்டியலில் இருந்தன. இவை தவிர மிஷல் ஒபாமா, ஹருகி முரகாமி மற்றும் கலீத் ஹோசினியின் புத்தகங்களும் அஜ்னாவின் பட்டியலில் இருந்தன. மிகவும் எளிதாக நடந்த நிக்காஹ் என்றாலும் எங்கள் நண்பர்கள் இதுபற்றி முகநூலில் பதிவு செய்து வைரலாக்கிவிட்டார்கள்" என்கிறார் இஜாஸ்.

இருவரும் புத்தகங்களைப் படித்ததும் அதைத் தங்களது நண்பர்களுடன் பரிமாற்றம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருக்கிறார்கள். புத்தகங்களை மெகராகக் கொடுப்பதற்கு இஜாஸின் வீட்டில் சம்மதிக்கவில்லை என்றாலும் பெண் எது கேட்கிறரோ அதைத்தான் தரவேண்டும் என்பதால் சம்மதித்துள்ளனர். ``தங்கம் விலையுயர்ந்தது என்றால் புத்தகம் விலைமதிப்பற்றது'' என்கிறார் இஜாஸ்

அஜ்னா-இஜாஸ்
அஜ்னா-இஜாஸ்

படுக்கையறையில் மெத்தைமேல் அத்தனை புத்தகங்களும் குவிந்துகிடக்க புத்தகம் ஒன்றை வாசித்துக்கொண்டிருக்கிறார் அஜ்னா, ``தினமும் சிலநேரம் புத்தகம் படிப்பதற்கு என்று ஒதுக்க முடிவு செய்துள்ளோம். முடிந்தவரை அதைச் செயல்படுத்துவோம். மேலும் இனி எங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டு நிகழ்வுகளிலும் புத்தகங்களையே பரிசளிப்பது என முடிவு செய்துள்ளோம்" என்கிறார்கள். பயணக்காரரான இஜாஸ் நிக்காஹ்வுக்குப் பிறகு அஜ்னாவுடன் முதன்முதலாக வெளியே சென்றது எங்கு தெரியுமா?, கேரள இலக்கியத் திருவிழாவிற்கு. இதுபோன்ற நிறைய திருவிழாக்களுக்குச் செல்லவேண்டும் என்று கூறி ஆதர்சமாகச் சிரிக்கிறார்கள் இருவரும்.

``Love her and Leave her wild" என்கிற அட்டிக்கஸின் வாசகம் அஜ்னாவின் முகநூல் பக்கத்தில் புன்முறுவல் பூக்கிறது.

பின் செல்ல