Published:Updated:

“எனக்கு இலக்கிய தாகம், லட்சியம் கொஞ்சமும் கிடையாது!”

ஆர்.தணிகைத்தம்பி - படங்கள்: புதுவை இளவேனில்

பிரீமியம் ஸ்டோரி

29.12.91 ஆனந்த விகடன் இதழில்...

இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கும் கி.ராஜநாராயணனுக்கு நமது வாழ்த்துகளைக் கூறினோம். ரசிகமணி டி.கே.சி-யின் கடைசிக் காலத்து சீடரான கி.ராவின் முழுப் பெயர், ராயங்கலஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புதுவைப் பல்கலைக்கழகம் நாட்டுப்புறக் கதைகளைத் தொகுத்துக் கொடுக்கச் சொல்லி அழைக்க - அதற்காகப் புதுவை வந்தவர் அப்படியே தங்கிவிட்டார். எழுபது வயதிலும் தனது அறுபது வயது மனைவி கணவதி அம்மாளுடன் புதுவை நேரு வீதியில் கலகலப்பான மூடில் ஷாப்பிங் வருவார் கி.ரா.!

“எனக்கு இலக்கிய தாகம், லட்சியம் கொஞ்சமும் கிடையாது!”

‘‘இனிமேல் பாண்டிச்சேரியிலேதான் எங்களோட வாசம். அதாவது ஹனிமூனுக்கு வந்த பொண்ணு - மாப்பிள்ளே வந்த ஊரிலேயே தங்கிட்டாப்போல... இதோ என்னோட மகன் மூத்தவன் திவாகர் (வயது 34). திருநெல்வேலியிலே போலீஸிலே இருக்கான். பொங்கலுக்கு ஊருக்குக் கூப்பிட வந்திருக்கான். இவனுக்கு ஒரு மகன் - தீபன். எங்களோட இன்னொரு மகன் பிரபாகர் (வயது 31) எங்க சொந்த ஊரான இடைச்செவலில் விவசாயம் பார்க்கிறான். அவனுக்கு ஒரு மகள். `அம்சா'ன்னு பேரு. இவங்கெல்லாம்தான் எங்களை இங்கே வந்து அடிக்கடி பார்க்கிறாங்க. என்னால அங்கே அடிக்கடி போக முடியலே. ஏன்னா... பயணம்னாலே எனக்கு ஒரு பயம் - தயக்கம் - அலுப்பு - சலிப்பு!

முந்தா நாள் (18.12.91) ராத்திரி ஏழரைக்கு டி.வி தமிழ் நியூஸ்லே எனக்குச் சாகித்ய அகாடமி பரிசு கிடைச்சிருக்குன்னு சொன்னவுடனே - பெரிய குதூகலம் ஏதும் இல்லே. மாறா, அவ்ளோ தூரம் - டெல்லிக்குப் போய்ப் பரிசை வாங்கணுமேங்கிற மலைப்புதான் ஏற்பட்டுச்சு!

“எனக்கு இலக்கிய தாகம், லட்சியம் கொஞ்சமும் கிடையாது!”

இந்தப் பரிசு எனக்கு, விகடனில் நான் எழுதின ‘கோபல்லபுரத்து மக்க'ளுக்காகக் கிடைச்சதுலே திருப்திதான் என்றாலும், 1978-லே சத்தியமூர்த்தியோட மகள் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட, என்னோட நாவலான ‘கோபல்ல கிராம'த்துக்கே நியாயமா கெடச்சிருக்கணும். ஏன்னா அப்போ அதுக்குக் கிடைக்கும்னு நான் மட்டுமில்லே - நிறைய இலக்கிய அன்பர்கள் எதிர்பார்த்தாங்க - பாராட்டினாங்க. ஆனா, இப்போ கிடைச்சதிலே ஒரு சந்தோஷம் என்னான்னா – அப்போ அந்த சாகித்ய அகாடமி பரிசுத் தொகை ஐயாயிரம் ரூபாய்... இப்போ இருபத்தைந்தாயிரம்ங்கறதுதான்!

ஆந்திராவிலிருந்து இருநூறு வருஷங்களுக்கு முன்னாலே வந்து, எங்களோட கரிசல் பாலைவனத்துலே தங்கி, அதை ஊராக்கிய கம்மா நாயுடு பரம்பரையினரைப் பத்தின இந்த நாவல்ல அந்த மக்களின் பிரச்னைகள் - வாழ்க்கை முறைகளைச் சொன்னாலும், எனக்கும் முந்தி இப்படிக் கரிசல் மக்களைச் சொன்னவர் எழுத்தாளர் கு.அழகிரிசாமிதான்.

அழகிரிசாமி கரிசல் இலக்கியம் தொடங்கினார். 'இதோ - இதுதான் கரிசல் இலக்கியம்' என அதற்கு ஒரு முழுமை கொடுத்தவன் நான்தான். மேலும் அழகிரிசாமி கரிசல் மட்டும் சொல்லாமல் எல்லாவற்றையும் எழுதினார். ஆனால், நானோ அதை மட்டுமே சொன்னேன் - சொல்கிறேன்- சொல்வேன்.

“எனக்கு இலக்கிய தாகம், லட்சியம் கொஞ்சமும் கிடையாது!”

நாற்பது வருஷத்துக்கும் முன்னாடி, அப்போ என்னோட வயசு 29. அப்போதான் எங்க ஊர் பொண்ணான இவங்களை (மனைவியைக் காட்டி) கல்யாணம் பண்ணிக்கிட்டேன். கல்யாணத்துக்கு அப்புறம்தான் நிறைய படிக்கவும் எழுதவும் ஆரம்பிச்சேன். ‘கணையாழி காலம்’ங்கற மாதிரி - அப்போ ‘சரஸ்வதி' (இதழ்) காலம். விஜயபாஸ்கரன் அதோட ஆசிரியர். ஜெயகாந்தன், சுந்தர ராமசாமியெல்லாம் அதிலேயிருந்துதான் பொறந்தாங்க. நானும் அப்போ கம்யூனிஸ்ட்டா - அதால - ஜெயகாந்தன் மூலமா ‘சரஸ்வதி’க்கு நான் அறிமுகம் ஆனேன். அதுல எழுதத்தொடங்கினேன். நானும் அங்கேதான் பொறந்தேன். முன்னே 1971-ல் தமிழக அரசின் ஆயிரம் ரூபாய் பரிசு எனக்குக் கிடைச்சுது. அதற்கு அப்புறமும் ஒரு முறை தமிழக அரசோட மற்ற பரிசுகளும் கிடைச்சிருக்கு.

ஆனா, இப்போ அப்போன்னு எப்பவுமே - எந்தக் காலத்திலுமே எனக்கு இலக்கிய தாகம், லட்சியம் என்கறதெல்லாம் கொஞ்சமும் கிடையாது...பார்க்கிறேன், கேட்கிறேன், சிந்திக்கிறேன், எழுதறேன்... அவ்ளோதான்.

அப்படி என் மக்களைப் பற்றி எழுத ஆசைப்பட்டேன் எழுதுகிறேன். அவை பிரசுரமாகின்றன. அவ்ளோதான். இதற்குப் பணமும் கிடைக்கிறதே அப்புறமென்ன..?!’’ என்றெல்லாம் மகிழ்ச்சியாய் ராஜநாராயணன், தொடர்ந்தார்.

“அப்போ இலக்கியப் பிழைப்பு என்பது ரொம்பவும் சவுகர்யமானதுன்னு சொல்றீங்களா?" நாம்.

“அப்படியில்லே... இன்னும் சொல்லப்போனா இதை மட்டுமே பிழைப்பாக வைத்துக்கொள்வது ரொம்ப ஆபத்து. என்னைக்கூட எடுத்துக் கொள்ளுங்கள். எங்கப்பா விவசாயி - நானும் விவசாயி, இது எனக்குப் பார்ட் டைம். என்னைக் கேட்டா யாருமே இதை முழு நேர வேலையா வெச்சுக்கக் கூடாது! சாண்டில்யன், சுஜாதான்னு சில பேர் வேணும்னா இதுல ரொம்ப ஜெயிச்சு ஏராள வசதி ஆகியிருக்கலாம். அதுலகூட பாருங்க... சுஜாதா ஒரு இன்ஜினீயர். ஜாக்கிரதையா இருக்கார் பாருங்க. இந்த எழுத்து வேலை சில நேரம் கை கொடுக்கும், பல நேரம் கஷ்டத்தையே கொடுக்கும். ஒரு நல்ல இலக்கியப் படைப்பாளி வேறு ஏதாவது ஒரு மெயின் தொழிலை, வேலையை வைத்துக்கொள்வதே நல்லது. அப்படி வைத்துக்கொள்ளும்போது அவனின் படைப்பும் மெருகேறும், சிறப்பாகும். பணத்துக்காகச் சும்மாவேனும் எழுதிக் குவிப்பது கொட்டுவதிலெல்லாம் எனக்கு உடன்பாடில்லை.

நிதானமா எழுதணும் அதனால் அது சிறப்பா இருக்கணும்னு கருதறேன் - விரும்புறேன்.

இப்படிப்பட்ட எண்ணம் புதுவைப் பல்கலைக்கழகத்துக்காக நான் இங்கே வந்த பிறகு ரொம்ப ஆழமாயிருக்கு. முதல்ல நிறைய நாட்டுப்புறக் கதைகளைத் திரட்டி - சேகரிச்சுப் பின்னால எழுதப்போறேன். அதுலயே இனிமே முழுசா கவனம் பண்ணணும்னு தெனச்சிக்கிட்டிருக்கேன். இந்த நிதானத்துக்குக் காரணம், சின்ன வயசிலிருந்தே எனக்கு இசையிலே ஏராள ஈடுபாடு. அதுதான் பாட்டு கத்துக்கிட்டேன் - தொண்டையிலே கட்டி வந்து நின்னுபோச்சு. பின்னாலே வயலின் கத்துக்கப்போனேன் - அதுவும் ரொம்ப நாள் நீடிக்கலை! விளாத்திகுளம் சுவாமிகள், குருமலை பொன்னுசாமி பிள்ளை, காருகுறிச்சி அருணாசலம்னு எனக்கு ஏகப்பட்ட இன்ஸ்பிரேஷன்கள்!

சின்ன வயசிலே இடைச்செவலில் என் வீட்டுக்கு எதிர் வீட்டில்தான் காருகுறிச்சி அருணாசலம் மாப்பிளெ ஆனார். அவர் நாகஸ்வர வித்வான் என்கிறதைவிட, ரொம்பவும் சிறந்த பாடகர். மாமனார் வீட்டுக்கு வந்து, அங்கே சட்டையைக் கழற்றிப் போட்டுவிட்டு நேரே எங்க வீட்டுக்கு வந்து உட்கார்ந்து பாட ஆரம்பித்துவிடுவார் மாப்பிளெ. நான் அவரோட பாட்டுக்கு பரம ரசிகன்.

எட்டாவது வரை ஸ்கூலுக்குப் போனேன், ஆனா படிக்கல. ஸ்கூல்ல எதுவுமே படிக்கல. நான் படிச்சதெல்லாம் வெளியிலே இந்தப் பரந்த உலகத்திலேதான். எல்லாத்துக்கும் ஆசைப்பட்டேன், எல்லாத்திலேயும் லயிச்சேன், கடைசியிலே எதுவுமே நிக்கலே. அதான் எழுத ஆரம்பிச்சுட்டேன். நாற்பது வருஷமா எழுதறேன். நிதானமா எழுதறேன். கடுதாசியைக்கூட இலக்கியம் ஆக்குறேன். எனது படைப்புகள்தான் கரிசல் இலக்கியம் என்ற ஒன்றை உருவாக்குறதென்றால் அதில் எனக்கு ஒரு நிறைவுதான்.

தண்ணீர் இல்லாக் காட்டிலேயிருந்து நீர் வளம் நிரம்பிய இந்தப் புதுவை மண்ணுக்கு வந்திருக்கேன். நல்ல மனிதர்கள், அமைதியான கிராமிய நகரம். எனக்கு இங்கே இருக்கத்தான் விருப்பம் - அது எதுவரை இயலுமோ அதுவரை!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு