Published:Updated:

உலக புத்தக தினம்: `எதிர்கால நூலகம்’ என்னும் ரகசிய நூலகம்... இது எப்படிச் செயல்படுகிறது?

எதிர்கால நூலகம்
News
எதிர்கால நூலகம்

எழுதியவரைத் தவிர வேறு யாரும் இதை வாசிக்க வேண்டுமென்றால் அவர்கள் 2115-ல் உயிரோடு இருக்க வேண்டும்!

இன்று உலக புத்தக தினம். ஆற்றல்மிக்க மனிதக்குல அறிவின் ஒட்டுமொத்த சேகரமாக நூலகங்கள் விளங்குகின்றன. வரலாறு தொடங்கிய காலம் தொட்டு, இன்றுவரை மனிதச் சமூகங்களுக்கு நூலகம் ஒரு பண்பாட்டு அடையாளமாகத் திகழ்கிறது. மனிதர்கள் தங்கள் முன்னோர்களின் அறிவைப் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க, தான் கண்டறிந்தவற்றைத் தொகுத்து ஆவணப்படுத்தும் முதன்மை இடமாக நூலகங்கள் விளங்குகின்றன. அலெக்ஸாண்ட்ரியா நூலகம் தொடங்கி அண்ணா நூற்றாண்டு நூலகம் வரை வரலாற்றுச் சிறப்புமிக்க ஏராளமான நூலகங்கள் இன்றைக்கு உலகில் உண்டு.

உள்ளூர் நூலகம் தொடங்கி சர்வதேச நூலகம் வரை அனைத்து நூலகங்களுக்கும் பொதுவான ஒன்று - நூல்களை வாசித்தல்; இதுதான் நூலகச் செயல்பாட்டின் அடிப்படை அம்சமும்கூட. ஆனால், நார்வேயில் புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் ஒரு நூலகத்திலுள்ள நூல்களை வாசிக்க நீங்கள் 2114 வரை காத்திருக்க வேண்டும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஸ்கேண்டிநேவிய நாடுகளில் ஒன்று நார்வே. இதன் தலைநகர் ஆஸ்லோவுக்கு வடக்கே உள்ள நோர்ட்மார்கா பகுதியில் ஸ்ப்ரூஸ், பிர்ச், பைன் மரங்கள் செழித்து வளர்கின்றன. நகரமயமாக்கல் அச்சுறுத்தலால், இப்பகுதி நகர நிர்வாகத்தால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. நகர்ப்புற சுற்றுச்சூழல் முகமையின் கானகவியலாளர்கள் இந்த நிலத்தை 100 ஆண்டுகளுக்கு நகர நிர்வாகத்துக்கு வழங்கியிருக்கின்றனர். இந்த இடத்தில் தான் கடந்த 2014-ம் ஆண்டு, ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு ‘எதிர்கால நூலகம்’ ஒன்று தொடங்கப்பட்டிருக்கிறது. மரங்களின் வளையங்களையும், நூலொன்றின் அத்தியாயங்களையும் தொடர்புப்படுத்தி, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஓவியக் கலைஞர் கேட்டி பேட்டர்சன் இத்திட்டத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த ‘ரகசிய நூலக’த் திட்டம், நகர்ப்புற கட்டிட உருவாக்கத்தை நிர்வகிக்கும் Bjørvika Utvikling-ன் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

எதிர்கால நூலகம்
எதிர்கால நூலகம்

2014-ம் ஆண்டு தொடங்கி 2114-ம் ஆண்டுவரை ஒவ்வோர் ஆண்டும், உலகின் மிகச் சிறந்த எழுத்தாளர்களிடம் படைப்புகளைப் பெற்று, அப்படைப்பின் கையெழுத்துப் பிரதி இந்த நூலகத்தில் பாதுகாக்கப்படும். நூறு ஆண்டுகளின் முடிவில், 2115-ம் ஆண்டு இத்திட்டத்துக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட முதல் படைப்பு அச்சு நூலாக வெளிவரும். இப்படியாக ஒவ்வொரு நூலிலும் 3,000 பிரதிகள் வீதம் 3,00,000 பிரதிகள் அச்சிடுவதற்கான பொருள்கள் நோர்ட்மார்காவில் வளர்க்கப்பட்ட 1,000 மரங்களிலிருந்து பெறப்படும்.

இலக்கியம் அல்லது கவிதைக்கு மிகச்சிறப்பாகப் பங்களித்த, நடப்பு மற்றும் எதிர்கால தலைமுறைகளின் கற்பனையைப் படம்பிடிக்கும் திறனுள்ள படைப்புகளை வழங்கும் எழுத்தாளர்கள் இந்தத் திட்டத்துக்காகப் படைப்புகளை வழங்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இதுதான் இத்திட்டத்தின் அடிப்படை இயங்கு முறை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒவ்வோர் ஆண்டும், இந்த அமைப்பின் உறுப்பினர்கள் கூடி புதிய எழுத்தாளரைத் தேர்வு செய்து கையால் எழுதிய கடிதம் ஒன்றின் மூலம் இந்தத் திட்டத்துக்குப் பங்களிக்கக் கேட்டுக் கொள்ளப்படுவர். இதற்கு இரண்டே விதிகள் தான்: அந்தப் படைப்பு புதிய, வெளிவராத ஒன்றாக இருக்க வேண்டும், அதில் படங்கள் இருக்கக் கூடாது. இவற்றைத் தவிர்த்து எழுத்தாளர்கள் என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம். வார்த்தை அளவுகோல் கிடையாது, அவர்கள் விரும்பும், தேர்ந்தெடுக்கும் எதைக் குறித்தும் அவர்கள் எழுதலாம். இந்தக் காடு முழுவதுமாக வளர்ந்து முடியும் வரை அவற்றை யாரும் வாசிக்கவோ, எடிட் செய்யவோ மாட்டார்கள். படைப்புகளுக்கு எந்த நிதியும் பெற்றுக் கொள்ளாமல், படைப்புகளை அவர்கள் தானமாகவே வழங்குவார்கள். புத்தகத்தின் தலைப்பைத் தவிர வேறு எதையும் அவர்கள் வெளியிடக் கூடாது. ‘உலகின் மிக ரகசியமான நூலகம்’ என்று தி கார்டியன் நாளிதழ் இதை அழைக்கிறது.

திட்டத்தின் முதல் பங்களிப்பாளரான எழுத்தாளர் மார்கரெட் அட்வுட் (இடது) உடன் கேட்டி பேட்டர்சன்
திட்டத்தின் முதல் பங்களிப்பாளரான எழுத்தாளர் மார்கரெட் அட்வுட் (இடது) உடன் கேட்டி பேட்டர்சன்

இப்படியான பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும் இத்திட்டத்துக்கு இதுவரை மார்கரெட் அட்வுட், டேவிட் மிட்செல், எலீஃப் ஷஃபக், கார்ல் ஊவ் நாஸ்ஹார்ட், ஓஷன் யூங் போன்ற எழுத்தாளர்கள் படைப்புகளை வழங்கியுள்ளனர். இந்தப் படைப்புகளின் கையெழுத்துப் பிரதிகளை நாம் இப்போது பார்ப்பதற்கு மட்டுமே வாய்ப்பிருக்கிறது; எழுதியவரைத் தவிர வேறு யாரும் இதை வாசிக்க வேண்டுமென்றால் அவர்கள் 2115-ல் உயிரோடு இருக்க வேண்டும்!

இந்தத் திட்டம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று எழுத்தாளர் பாலசுப்ரமணியன் பொன்ராஜிடம் கேட்டபோது, “ஏற்கெனவே நிகழத் துவங்கிவிட்ட சூழல் பேரழிவுக் காலகட்டத்தில் காலமே உறைநிலையை எட்டும் நாள் தூரத்தில் இல்லை. ஒரு தனிப் பிராந்தியம் அல்லது ஒரு தனி நாடு இனிமேலும் தன்னைக் காத்துக் கொள்ள முடியாது. இயற்கை எவ்வாறு எல்லைகளால் பிளவுபடாமல் இருக்கிறதோ அதைப் போன்றே அதன் அழிவும். நாம் இயற்கையின் வலைப்பின்னலில் நடனமாடும் சிலந்திகள். வலைப்பின்னலின் ஒரு பகுதி சிதைந்தாலும் நாம் நமது சக சிலந்திகளை விழுங்கத் துவங்குவோம். திணை அழிவு தாங்க முடியாதது. எனவே, சூழல் அழிவைத் தடுக்கும் அல்லது முடிந்தவரைத் தள்ளிப்போடும் எந்தவொரு சிறு முயற்சியும் முக்கியத்துவம் வாய்ந்தது.

மனித இயக்கமே மூலதனத்தோடும் பொருளுற்பத்தியோடும் பிணைந்திருப்பதைப் போல அடுத்தகட்டம் மனிதர்களது எல்லா இயக்கமும் சூழல் காப்போடு தொடர்புடையதாக மாறுவதே ஒரே வழி. நார்வேயில் எடுக்கப்படும் இம்முயற்சியைப் போன்று தமிழ்நாட்டிலும் எழுத்தாளர் வனமொன்றை உருவாக்கலாம். மரங்களைவிட எழுத்தாளர்களும், இலைகளை விடவும் கவிஞர்கள் அதிகமாக இருக்கும் நிலமென்பதால் எழுத்து செழிக்கும் வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ வனம் செழிக்கும்” என்றார்.

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

இந்த ரகசிய நூலகத் திட்டம் என்பது டைம் கேப்ஸ்யூல் புதைத்தல், விண்கலங்களில் மனிதக்குலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொருள்களை அனுப்பிவைத்தல் போன்ற ஒன்றுதான். இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைப் போல் தான் நாம் இருக்கிறோமா? இன்னும் ஒரு நூற்றாண்டில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும்? எல்லாமே டிஜிடல்மயமாகிக் கொண்டிருக்கும் நிலையில், நூறு ஆண்டுகள் கழித்து அச்சு நூல்கள் இருக்குமா? அவற்றைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்பங்கள் செயல்பாட்டில் இருக்குமா? மொழி என்னவிதமான நிலையை எட்டியிருக்கும்? அரசியல் ஸ்திரத்தன்மை, காலநிலை மாற்றத்தின் விளைவுகளை தாக்குப்பிடித்து மனிதக்குலம் அடுத்த நூற்றாண்டுக்குச் செல்லுமா? இத்திட்டத்தின் மீதான ஆர்வம் காலப்போக்கில் குறைந்து, பாதியிலேயே கைவிடப்படுமா?

இது போன்ற பல கேள்விகள் இத்திட்டத்தை முன்வைத்து எழுகின்றன. மேலும், ஒரு படைப்பை நூறு ஆண்டுகள் வாசகர்களை அணுகவிடாமல், வாசிக்கவிடாமல் செய்வது சரியல்ல என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.