பிரீமியம் ஸ்டோரி

ஊஞ்சலின் நடுவில்

அமர்த்தலாக சாய்ந்திருந்தது பூனைக்குட்டி

குரலுயர்த்தி விரட்டினேன்

ஒரு சிறுகுச்சியைத் தரையில் தட்டி அச்சுறுத்தினேன்

முறைத்துப் பார்த்தேன் எதற்கும் மசியவில்லை

எனக்கு ஊஞ்சலாட வேண்டும் ஓரமாக அமர்ந்துகொண்டேன்

பூனை அசையாமல் கிடந்தது

அதன் கண்களைத் தவிர்த்தேன்

அதன் இருப்பையும் தவிர்த்தேன்

கிர்ரிக்க்

கிர்ரிக்க்

கிர்ரிக்க்

பூனைக்கொன்று... கள்ளிக்கொன்று...

ஊஞ்சலாடும் சத்தம் மட்டும்தான்

பிரபஞ்சத்தின் சத்தமாக இருந்தது

தவழ்ந்து வந்து மெல்ல

என் மடியில் படுத்துக்கொண்டது பூனைக்குட்டி

வெள்ளையும் பழுப்புமாய்

அதன் ரோமத் தீண்டலில்

திக்கித்துப்போய்

வெடித்து அழுதுவிட்டேன்.

பிறந்தநாளுக்கு

தங்கை

சப்பாத்திக்கள்ளியைப்

பரிசளித்தாள்

முதலில்

சமையலறை சன்னலில்தான் வைத்தேன்

தனிமையில் இருக்கிறதோவென வருந்தி

தோட்டத்திற்கு இடம் மாற்றினேன்

அங்கும் வாடலாகவே இருந்தது

என் படுக்கையறை மேசைக்கு

மாற்றிவைத்தேன்

ஆனாலும் ஏக்கத்துடனே

என்னைப் பார்த்தது

காப்பி நிற மண்தொட்டிக்கு

நீல நிற வண்ணமடித்தேன்

கூழாங்கற்களை

சிறிதும் பெரிதுமான

மேகத் துண்டுகளென

செதுக்கி

சுற்றி அடுக்கினேன்

வானில் பூத்த பச்சைபோலக் காட்சியளித்த கள்ளியை

கொஞ்சம் அணைத்துவிட்டேன்

உறங்கி எழுந்த மறுநாள்

என் கைகளில்

முளை விட்டிருந்தது கள்ளிமுள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு