கட்டுரைகள்
Published:Updated:

இலக்கியமும் பித்துநிலையும்

இலக்கியமும் பித்துநிலையும்
பிரீமியம் ஸ்டோரி
News
இலக்கியமும் பித்துநிலையும்

தொகுப்பு : தமிழ்ப்பிரபா, செந்தில் கரிகாலன் ஓவியம் : ஹாசிப்கான்

இலக்கியம், ஓவியம், நாடகம், இசை, சினிமா எனக் கலையில் இயங்கும் எந்தவொரு படைப்பாளியும், சராசரி வாழ்விலிருந்து அதன் சட்டகங்களுக்கு உள்ளிருந்து வெளியேறி, கனவின் தளத்திலேயே தன் கலைச்செயல்பாட்டை நிகழ்த்துகிறான். படைப்புச் செயல்பாடு குறித்த உரையாடலில் அகத்தூண்டல், மனவெழுச்சி, கனவுநிலை, பித்துமனம், உளச்சிதைவு, நனவிலி மனக்குரல் என உளவியல் சார்ந்த பல சொற்களை, கலையின் தளத்தில் நாம் கேட்கிறோம். சராசரி வாழ்க்கையை ஏற்றுக்கொண்டவனாக ஒரு கலைஞன் இருந்தபோதும், அவனது உளம் பிரத்யேகமானது. அது, சதா மீறலிலும் நிலையற்ற வாழ்வின் புதிர்களிலும் திளைத்துக்கொண்டிருப்பவை. மனித உளத்தின் அற்புதங்களுக்கும் பிரச்னைகளுக்கும் கலைக்கும் அப்படியென்ன தொடர்பு? சில தமிழ் இலக்கிய ஆளுமைகளைக் கேட்டோம்...

எழுத்தாளர்களின் பித்துநிலை

பெருந்தேவி

மனநலத்துக்கும் கலைக்கும் இடையிலான தொடர்பு என்றவுடனேயே, எழுத்துச் சூழலில் நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது கவிஞர் ஆத்மாநாமும் எழுத்தாளர் கோபி கிருஷ்ணனும்தாம். மனச்சிதைவுக்கும் மருத்துவத்துக்கும் ஆளாகி தற்கொலையில் வாழ்வை முடித்துக்கொண்டவர் நவீனக் கவிகளில் முதன்மையானவரான ஆத்மாநாம். கோபி கிருஷ்ணனோ மனச்சோர்வை எதிர்த்து இறுதிவரை போராடியவர். கலை மேதைமைக்கும் மனநலப் பாதிப்புக்கும் தொடர்புண்டு என்ற பரவலான கருத்துக்கு இருவரும் வலுசேர்ப்பவர்கள். இவர்களைப் போலவே, ‘மேற்கிலும்’ மனச்சோர்வால் பாதிக்கப்பட்ட பல எழுத்தாளர்கள் உண்டு. எட்கர் ஆலன் போ, ரைம்போ, சில்வியா ப்ளாத், ஆன் செக்ஸ்டன் ஆகியோர் உடனடியாக நினைவுக்கு வருகிறார்கள்.

பொதுவாக மனச்சோர்வு, சிதைவு போன்றவை ஏற்படுத்தும் பாதிப்புகள் பொருண்மையானவை. அவற்றைக் கற்பனை என நினைப்பது பிழை. அதேநேரத்தில், கலை மேதைமை என்பதற்கும் மனநலப் பிறழ்வுக்குமான நேரடியான தொடர்பு கட்டமைக்கப் பட்டதாகவும் இருக்கிறது. இந்தத் தொடர்பு, ‘மேற்கைப்’ பொறுத்தவரை தொடக்கக்கால கிரேக்க அறிவுப் புலத்திலேயே தத்துவ அறிஞர் ப்ளேட்டோ உள்ளிட்டவர்களால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. என்றாலும், இலக்கியத்தில், குறிப்பாக ரொமாண்டிசிஸ இயக்கத்தால் பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து இது மேலும் வலுப்படுத்தப்பட்டது. இறையருளால் கிடைக்கும் உத்வேகம் (Divine Inspiration) என்ற கருத்தாக்கம் ரொமாண்டிசிஸ இயக்கம் முன்வைத்தவற்றில் ஒன்று. ‘கிறுக்குத்தனம்’ என்பதிலும் சாதாரணமானவர்களின் கிறுக்குத்தனமும் கலைமேதைமையின் கிறுக்குத்தனமும் வேறுபடுத்தப்பட்டது. சாமுவேல் டைலர் கோலரிட்ஜ், அவர்மேல் தாக்கம் செலுத்திய இறையியலாளரும் கவியுமான ‘ஸ்வீடன்பர்க்’ பற்றிக் குறிப்பிடுகையில் ‘தெய்விகமான, இறைமனத்திலிருந்து ஒளிரும் பித்து’ எனப் பாராட்டுகிறார். நம் ஊரிலும் பித்துநிலையை அனுபவித்துப் பாடிப் புகழ்பெற்ற வரகவிகள் உண்டு.

இலக்கியமும் பித்துநிலையும்

ஒருபுறம், காலம்காலமாகக் கலைமேதைமையின் அடையாளமாகப் ‘பித்து’ கருதப்பட்டு வந்திருக்கிறது. இதனால், எழுத்தாளர் என்ற சமூகப் பாத்திரத்தின் ஆதர்ச குணாம்சமாக ஆகிவிட்டிருக்கிற நிலை. இன்னொரு புறம், முன்னெப்போதும் போலின்றி, ஓர்மையான சுயத்துக்கும்

Rationality-க்கும் இன்றைய நவீனக் காலகட்டத்தில் தரப்பட்டிருக்கும் பாரிய முக்கியத்துவம். இந்த முக்கியத்துவத்தை மறுக்கும், எதிர்க்கும் வகையில், எழுத்தாளர்களின் பித்துநிலை இன்று கலக அடையாளத்தைப் பூண்டிருப்பதாகவும் நாம் கருத இடமுண்டு.

உளவியல் நோக்கில் ஆத்மாநாமின் ‘கனவு’

கல்யாணராமன்

‘எஸ்.கே.மதுசூதன்’ என்ற ஆத்மாநாம் (1951-1984), ‘காதல் தோல்வி, வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்பு, தந்தையின் மரணம், சகோதரனின் வெளிமாநிலப் பிரிவு, சிறுபத்திரிகை நடத்திப் பெற்ற மனக்காயங்கள், மணவாழ்வு கூடாமை, நகைப்புக்குரிய உறவுகளின் வெறுமை, புன்னகைக்கும் கையசைப்புக்கும் சிறு மகிழ்ச்சிக்கும்கூட உத்தரவாதமில்லாத உக்கிரமான இருப்பின் கசப்பு, நிஜமும் நிஜமும் நிஜமாக - நிஜத்தைத் தேடியடைந்த ஏமாற்றம்’ என்ற தனிப்பட்ட வாழ்க்கைக் காரணங்களால் மட்டும் தற்கொலை செய்துகொள்ளவில்லை. ஒரு கலைஞனின் வாழ்வை அவ்வளவு தட்டையாகச் சுருக்கக் கூடாது. ஆத்மாநாம் வாழநேர்ந்த இச்சமூகமும், இதிலிருந்த மனித உருவம் மட்டும் பெற்றிருந்த பிராணிகளுமே, அவரின் அகாலச் சாவுக்குப் பொறுப்பேற்க வேண்டும். தற்கொலைக்குப் பின்னால் எவ்வளவோ இருக்கிறது; சொந்தப்போர் மட்டுமில்லை; போராடுவதற்கு வழியற்ற சமூக நெருக்கடிகளும் சேர்ந்தே ஆத்மாநாமைக் கொன்றன. சூழலில் சிறிய அதிர்வன்றிப் போதிய ஆதரவும் வரவேற்பும் எதிர்வினையும் முனைப்பும் இல்லாததால், அகப்புறச் சிக்கல்களால் விழுங்கப்பட்டுச் ‘சும்மாயிருக்கும் மனச்சுகத்தில் மயங்கித் தொடர்விளைவாய்ச் சுய அதிருப்திக்கு ஆளாகித் தம்மைத் தாமே அழித்துக்

கொள்ளும் வீழ்நிலைக்குத் தள்ளப்பட்டார் என்றும் இதனை அவதானிக்கலாம்.

“என்னுடைய கனவுகளை

உடனே அங்கீகரித்து விடுங்கள்

வாழ்ந்துவிட்டுப் போனேன்

என்ற நிம்மதியாவது இருக்கும்

ஏன் இந்த ஒளிவுமறைவு விளையாட்டு

நம் முகங்கள் நேருக்குநேர் நோக்கும்போது

ஒளி பளிச்சிடுகிறது

நீங்கள்தான் அது

நான் பார்க்கிறேன் உங்கள் வாழ்க்கையை

அதன் ஆபாசக் கடலுக்குள்

உங்களைத் தேடுவது சிரமமாக இருக்கிறது

அழகில் நீங்கள் இல்லவே இல்லை”

ஒரு கவிஞனின் அல்லது மனிதனின் கனவுகளைப் பொருட்படுத்தாத அறிவுச் சமூகம், அவனைக் கண்டுகொள்ளாத நூலோர் கூட்டம், அவனது உயிர்வாழ்வின் கணங்களை மேலும் மேலும் சிக்கலுக்கு உள்ளாக்குகிறது. ‘என்னுடைய கனவுகளை உடனே அங்கீகரித்து விடுங்கள்‘ என்பதிலுள்ள ‘உடனே’ என்ற சொல், ஆத்மாநாமின் ஆழ்மன ஏக்கத்தைத் தத்ரூபமாகப் புலப்படுத்துகிறதல்லவா! வாழுஞ்சூழலின் அங்கீகாரம் உடனே கிடைத்துவிட்டால், அற்பாயுளில் போனாலும், ‘வாழ்ந்துவிட்டுப் போனேன் என்ற நிம்மதியாவது இருக்கும்’ என்று ஆத்மாநாம் நினைப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த அங்கீகாரம் கிடைக்காது போனதுதான், அவரின் தனிமைத்துயரை மேலும் ஆழப்படுத்தி

விட்டது. நேருக்குநேரே சந்திக்கும்போது, முகம் ஒளிர்ந்து அங்கீகரிப்போர், பின் ஏன் ஒளிவுமறைவாகக் கவிஞனின் இருப்பைப் புறக்கணிக்கின்றனர்? ஆபாசக் கடலுக்குள் மூழ்கிக் கிடப்போரிடமிருந்து இக்கபடத்தை எதிர்பார்ப்பது இயல்பானதுதான் என்பதை ஆத்மாநாம் நன்கறிந்திருந்தும், ‘அழகில் நீங்கள் இல்லவே இல்லை’ என, அக்கபட வேடதாரிகளுடனும் தொடர்ந்து உரையாடவே செய்தார்.

“உங்கள் கனவு உலகத்தைக் காண்கிறேன்

அந்தக் கோடிக்கணக்கான ஆசைகளுள்

ஒன்றில்கூட நியாயம் இல்லை

தினந்தோறும் ஒரு கனவு

அக்கனவுக்குள் ஒரு கனவு

உங்களைத் தேடுவது சிரமமென்று

நான் ஒரு கனவு காணத் துவங்கினேன்

உடனே அங்கீகரித்து விடுங்கள்”

இலக்கியமும் பித்துநிலையும்

நாள்தோறும் நியாயமற்ற கனவுகள் கண்டு, மேன்மேலும் கனவுக்குள் குட்டிக்கனவுகள் கண்டு, ஆசைமீது ஆசை வளர்த்துத் தம்மைத்தாமே வியக்கும் போலிகளுக்குள் உண்மையானவரைத் தேடிக் கண்டுபிடிப்பது சிரமம் என்கிறார். ‘அந்தக் கோடிக்கணக்கான ஆசைகளுள் ஒன்றில்கூட நியாயம் இல்லை’ என்றாலும், இப்படிப்பட்டவரே, இச்சூழலில் எங்கும் உள்ளார்கள்! நியாயமான நடைமுறை ஆசைகளுள்ள எளிய மக்களும், யாவருக்குமான சமூகத்தைக் கனவு காணும் லட்சியவாதிகளும், போலிகளின் கூட்டத்தில் அங்கீகாரமற்றுப் போகிறார்கள். சூழலின் இந்த அபத்தத்தைக் கடைசி வரையிலும் ஏற்க மறுத்துதான், ‘நான் ஒரு கனவு காணத் துவங்கினேன், உடனே அங்கீகரித்துவிடுங்கள்’ என்கிறார். உடனடி அங்கீகாரம் என்பது, தொடர்ந்து உயிர் வாழ்தலுக்கான ஒரு சிறிய நம்பிக்கையைத் தக்கவைப்பதாகும். உலகப் பெரும் படைப்பாளிகள் பலரையும் உந்துவது இந்நம்பிக்கைதான். எவ்வளவு பெரிய துன்பங்களுக்கிடையிலும், இதை அவர்கள் கைநழுவவிடுவதில்லை. ஆத்மாநாம் தற்கொலை செய்துகொண்டவர் என்பதை, அவர் கவிதைகள்வழி மட்டும், யாராலும் எளிதாக யூகித்துவிடமுடியாது. அவநம்பிக்கையிலிருந்தும் பெரும் நம்பிக்கையையே அறுவடை செய்தார். இது அவரின் அபூர்வமான ஓர் உளநோக்கின் ஆக்க விளைவாகும். அழிவிலிருந்தும் ஆக்கத்தையே நோக்கும் ஆத்மாநாமின் நம்பிக்கை விழியைப் பல கவிதைகளிலும் காணலாம். ஓர் அனுபவத்தை அதன் அடியாழத்திற்குச் சென்று அலசிக் கவிதையாக்கவே ஆத்மாநாம் விரும்பினார்; மேலோட்டமான நழுவும் சித்திரிப்புகளைச் செய்ததில்லை! ஒரு Playing Object என்பதாக அல்லாமல், Very Serious Communication என்பதாகவே கவிதையை அணுகினார். இத்தொடர்பாடல் நிகழாதபோது, கலைஞனின் சுய இருப்பு நீர்க்கிறது. இது அவன் ஆளுமையில் சரிசெய்யமுடியாத ஒரு மனப்பிளவை உருவாக்குகிறது.ஹெமிங்வே முதல் ஆத்மாநாம் வரை கலைஞர்கள் தற்கொலை செய்வதற்குச் சொந்தக் காரணங்களுடன் இம்மனப்பிளவின் உக்கிரத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது ‘கனவு’ சார்ந்த Psychoanalysis இல்லை; ஒரு மென்மையான கவிஞனின் நிஜ வாழ்க்கை!

தமிழிலக்கியத்தில்

மனநோய் பற்றிய பதிவுகள்

சஃபி

சங்க இலக்கியக் காலந்தொட்டே மனச்சமனிலை குலைந்த அதிதீவிரமான உணர்வுநிலைகளைக் குறித்த பதிவுகள் உண்டு. அகத்திணையில், காதல்வயப்பட்ட பெண்ணொருத்தியின் உடல் வதங்கிய வேறுபாட்டைக் கண்டு, அவளைப் பேய் தாக்கியிருக்கிறது என்று நினைத்து அவளது தாய், பூசாரியைக் கூப்பிட்டு அவனை ஆவேசம்கொண்டு வெறியாடவைத்த ‘வேலன் வெறியாட்டு’ நிகழ்வுகள் இதற்கு ஓர் உதாரணமாகும். முந்நூறு நூற்றாண்டு களுக்கு முன்னால், மனநலத் துறையானது அறிவியல் பூர்வமாக உருக்கொள்ளும்வரை, மேற்கிலும் மனநோய்களுக்கான காரணம் பேய் பிசாசு ஒருவரைப் பிடித்தாட்டுகிறது என்று நம்பப்பட்டு வந்திருக்கிறது.

இலக்கியமும் பித்துநிலையும்

அடுத்து மடலேற்றம். சங்கப்பாடல்களில் ஒரு துறையாகவே அது வளர்ந்திருக்கிறது. காதலுணர்வு மிகுந்து, தான் விரும்பிய தலைவியை அடைய முடியாத ஒருவன், மடலூர்ந்தாயினும் அவளைப் பெறுவேன் என்று சொல்லுவதாக அத்துறை அமையும். அவன் மடலூரத் துணிந்த நிலையில், பனை மடல்களால் குதிரை வடிவத்தைச் செய்து, அதன்மேல் ஏறி, பித்தன்போல் ஊரறிய தன் காதலை வெளிப்படுத்தலே அதன் நோக்கமாகும். மடலூர்தல் என்பது கிட்டத்தட்ட ஒரு தற்கொலை முயற்சியே என்பது இலக்கிய ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது. ஆண்களை அனுமதித்த இடத்தில், காமம் மிகுந்து பெண்கள் மடலேறக் கூடாது என்ற அனுமதி மறுப்பும் தொல்காப்பியச் சூத்திரத்தில் காணப்படுகிறது. பக்தி இலக்கியங்களிலும் உளவியல் ரீதியாக ஆராயப்பட வேண்டிய ஏராளமான அம்சங்கள் இருக்கின்றன.

தமிழ் நவீனங்களில் மனநோய் பற்றி மிகச்சிறப்பான படைப்புகள் இருக்கின்றன. விமர்சனக் கலையின் முன்னோடியான க.நா.சுப்பிரமணியம் அவர்களுக்குப் பைத்தியக்காரத்தனத்தைப் பற்றி தனிக்கவனம் இருந்திருக்கிறது. அவரது இரு குறுநாவல்களான ‘அசுரகணம், பித்தப் பூ’ ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இரண்டும் பைத்தியங்களைப் பற்றிய கருவைக் கொண்டதுதான்.

அசுரகணத்தில் ‘பைத்தியக்கார உலகில் மாறுபட்டவனாக இருப்பதும், பைத்தியம் அல்லாத உலகில் மாறுபட்டவனாக இருப்பதும் முடிவில் ஒன்றுதானே?’ போன்ற வரிகள் பைத்தியத்தினை பதிவதோடு மட்டுமல்லாமல், பைத்தியநிலையின் மீதான விமர்சனப் பார்வையாகவும் அமைவது மறக்கமுடியாத பகுதிகளாகும்.

எம்.வி.வெங்கட்ராமின் ‘காதுகள்’ நாவல், பிறழ்வான மனநிலையில் மனதில் ஒலிக்கும் ‘மாய அசரீரிக் குரல்களைப்’ (Auditory

Hallucination) பற்றிய மிக நுணுக்கமான, அரிதான இலக்கியப் பதிவாகும். தனக்கு நேர்ந்த உக்கிரமான பிறழ்வான அனுபவங்களில், கணிசமான பகுதியைத் தணிக்கை செய்துவிட்டுத்தான் ‘காதுகள்’ நாவலைப் படைத்ததாகச் சொல்லியிருக்கிறார் எம்.வி.வெங்கட்ராம். இழப்பு நமக்குத்தான். பிறழ்வு உளவியலில் ஆர்வம் கொண்டவர்களுக்கான அரிதான ஆவணம் காதுகள்.

லா.ச.ராமாமிர்தத்தின் ‘பாலா’ என்ற சிறுகதை, மனநோயாளியான மகளை வைத்துப் பராமரித்துக்கொண்டிருக்கும் ஒரு தகப்பனைப் பற்றிய குறிப்பிடத் தகுந்த கதை. பாதசாரி எழுதிய ‘காசி’,

கி.ராஜநாராயணனின் ‘பேதை’ போன்றவை அதிதீவிர உணர்வுநிலையைப் பதிவுசெய்த சிறுகதைகளாகும்.

கோபி கிருஷ்ணனின் எழுத்துகள் பிறழ்வுநிலை எழுத்துகளில் தனித்த இடத்தில் வைக்கவேண்டியவை. குறிப்பாக, அவரது ‘உள்ளேயிருந்து சில குரல்கள்’ என்ற நாவல் ஒரு மனநலக் காப்பகத்துக்குள் புகுந்து வெளியேறும் அனுபவத்தைத் தரக்கூடியது. அவ்வளவு பிறழ்வான நிலையைக்கொண்ட மனிதர்கள். ‘மினி டெக்ஸ்ட் ஆப் சைக்கியாட்ரி’ என்றே அந்த நாவலைச் சொல்லலாம். குறிப்பாக ஒருத்திக்கு ‘வாழ்வு’ என்ற ஒரு வார்த்தை மனதில் தோன்றினால், அதன் எதிர் இணையான ‘சாவு’ என்ற வார்த்தை அவள் மனதில் தோன்றி அவளுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தி அவளை அலைக்கழிக்கும். அப்படி எதிர்மறையான வார்த்தைச் சுழலுக்குள் மாட்டிக்கொண்டு தினசரி வாழ்வின் ஒவ்வொரு செயலையும் மேற்கொள்ள அவதிப்படும் ஒருத்தியின் அப்சஷனை மிக நுட்பமாக அந்த நாவலில் சித்திரித்திருப்பார் கோபி கிருஷ்ணன்.

மனநலத்துறை வரலாற்றில் ஒரு மனநோயாளி எழுதிய நூலுக்கு மிகுந்த மதிப்புண்டு. மனநோய்கள் பற்றிய பார்வையை விசாலப்படுத்தியதாக, ஓர் ஆசானாக, அந்த நூல் மனநல மருத்துவர்களால் கருதப்படுகிறது. டேனியல் பால் ஷ்ரபர் (Daniel Paul Shreber) என்பவர் ஒரு ஜெர்மானிய ஜட்ஜ். தனது வாழ்நாளில் மூன்று தடவை தீவிரமான மனநோயால் பாதிக்கப்பட்டு மனநலக் காப்பகத்தில் சேர்ந்து சிகிச்சை பெற்றிருக்கிறார். தனக்கு நேர்ந்த பிறழ்வான அனுபவங்களைப் புத்தகமாக வெளிப்படுத்தினால், மதம் மற்றும் விஞ்ஞானத்தின் குறுகிய எல்லைகள் விரிவடையும் என்று தான் கருதுவதாகச் சொல்லி, தனது நோய் பற்றிய நினைவுக் குறிப்புகளை ‘Memoirs of my nervous Ilness’ என்ற நூலாக 1903-ல் பிரசுரித்தார்.

உளப்பகுப்பாய்வு சிந்தனைகளைத் தோற்றுவித்த சிக்மண்ட் ஃப்ராய்டும், ஷ்ரபரின் நூலிலிருந்த தீவிர மனநோய்

(Psychoses) பற்றிய விவரணைகளைப் படித்து ஆர்வமுண்டாகி, ஷ்ரபர் மனநலத்துறையில் பேராசிரியராகவும், ஒரு மனநலக் காப்பகத்தின் இயக்குநராகவும் செயல்பட அனைத்துத் தகுதியும் உடையவர் என வெகுவாக அந்நூலைப் பாராட்டியிருக்கிறார்.

‘பைத்தியங்கள் உளறும், அவர்களின் பேச்சைப் பொருட்படுத்தத் தேவையில்லை’ என்ற பொதுப்புத்தி சார்ந்த கருத்தை ஒதுக்கிவிட்டு, சமகாலத்தில் ராய் பார்ட்டர் (Roy Porter) என்ற மனநலத்துறை வரலாற்றாய்வாளர், மனநோயாளிகள் எழுதிய குறிப்புகள், மனநோயைப் பற்றி சிந்தித்த எழுத்தாளர்கள், கலைஞர்களின் கருத்துகளையெல்லாம் திரட்டி ‘மேட்னஸ்’ (Madness, Faber and Faber, 1993) என்ற நூலைக் கொண்டுவந்திருக்கிறார். மனநோயாளிகளின் பார்வையிலிருந்த மனநோயைப் பார்க்கும் அந்தத் தொகுப்பு, மனநோய் பற்றிய நமது புரிதலை ஆழப்படுத்துவதாக இருக்கிறது. மேற்குறிப்பிட்ட எழுத்தாளர்களின் படைப்புகளும் மனநோய்கள் குறித்த மேம்பட்ட புரிதலை நமக்குத் தரவல்லனவாக இருக்கின்றன.

இலக்கியமும் பித்துநிலையும்

இலக்கிய வாசிப்புகள் குறைவாயுள்ள தமிழ்ச்சூழலில், அதிகம் பேரைச் சென்றடையும் வெகுஜன திரைப்படங்களில் காட்டப்படும் மனநோய் பற்றிய சித்திரிப்புகள் பலவீனமாக இருக்கின்றன.இத்தனைக்கும் தமிழ்ப்படம் பேச ஆரம்பித்து பத்தாண்டுகள் கழித்து வெளிவந்த, ‘மணிக்கொடி’ ஆசிரியர் பி.எஸ்.ராமையா கதைவசனம் எழுதிய, ‘மதனகாமராஜன்’ படம் (1941) முதற்கொண்டே மனநோய் கதாபாத்திரங்கள் திரையில் வர ஆரம்பித்து

விட்டன. மனநோயின் சிக்கல்களை ஆராயாமல் கதைப்போக்கிற்குத் தேவைப்

படும் ஓர் உத்தியாகத்தான் பைத்தியக்காரத்

தனம் பயன்படுத்தப் படுகிறது. உதாரணமாக, கதாநாயகன் தனது பழைய காதலை மறந்து புதுக்காதலைத் துவக்குவதற்குப் பைத்தியம் என்ற ‘மறதி நிலை’ கதைக்குத் தேவைப்படுகிறது. இதே கதைச்சூத்திரம்தான் இன்றுவரை பைத்தியம் பற்றிய சித்திரிப்பாகத் தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலும் தொடர்கிறது.

நிசப்தத்தில் கேட்கும் நகுலனின் தனிமொழி

ராணிதிலக்

‘நான் வேறு, இந்தச் சற்றே சாய்வான நாற்காலி வேறு என்ற பேதமில்லாமல் நாற்காலியும் நானுமாக இருக்கும் இந்நிலையில் மரமும் மண்ணும், புல்வெளியும், நிழலும் வெயிலும் எல்லாம் எல்லாம் அவை அவையாக, நிலை பெயராத மரம் என்றென நான்’

‘மழை, மரம், காற்று’ -நகுலன்

சென்ற நூற்றாண்டின் கடைசியில் நகுலனைப் பார்த்தேன். அவரைப் பார்த்து வந்ததை இப்போது நினைக்கும்போதும், மனதில் அந்தப் பச்சை மாறவில்லை. தமிழில் குறிப்பிட்ட படைப்பாளிகள் என்றால் நகுலன் பெயர் வந்துவிடும். தமிழில் ‘நகுலபாஷை’ என்ற ஒன்று இப்போதும் இருக்கிறது. வாசிப்பின் நிலத்தில், நகுலனின் விஸ்தாரமான நிலத்தைக் கடந்து, உழன்று, எழுந்து வெளியேற முடியாமல் வாழ்பவர்களும் இல்லாமல் இல்லை. நகுலன் படைப்புகளை வாசிக்கும்போது, நாம் ‘வேறு’ ஒன்றாக மாறிவிடுகின்ற நிலை ஏற்பட்டுவிடுவதைத் தவிர்க்கமுடியாது.

நகுலன் ‘சுருதி’ தொகுப்பின் அட்டையில் கண்ணாடி முகத்தில் இல்லாமல், கீழே சாய்ந்து, ஒரு கண் தெளிவாக, ஒரு கண் சிதறலுற்று அணியாமல் கிடப்பதுபோன்ற ஓவியம் எனக்குள் கொஞ்சம் வேறுமாதிரியான தோற்றம் தந்தது. அங்கிருந்துதான் நகுலன் நுழைகிறார் எனக்குள்.

சின்னச் சின்னப் பிறழ்வுகளும் சமூக மீறல்களும் நம் வாழ்க்கைக்கு அவசியமாக இருக்கின்றன.

மனப்பிறழ்வுகொண்ட எழுத்தை எழுதுபவர்களாகப் பலர் இருந்தாலும், சட்டென்று நினைவுக்கு வருபவர்கள் கோபி கிருஷ்ணனும் நகுலனும். நகுலன் முன்னோடி; முன்மாதிரியும்கூட. அறிவியல்பூர்வமாக மனதின் கோளாறுகளை, விரிசல்களைப் பிறழ்வு என்பார்கள். எனக்குத் தெரிந்து படைப்பாளர்கள் எல்லாருமே மனப்பிறழ்வானவர்கள்தான். நகுலன் அதைத்தான், ‘வேறு’ என்கிறார். இன்னும் சொல்லப்போனால், நான் எனக்குள் பேசுவதையே எழுதுகிறேன் என்று நகுலன் குறிப்பிடுவதும் இதைத்தான். தன் எழுத்தை ‘ஆட்டோமெடிக் ரைட்டிங்’ என்று நகுலன் குறிப்பிட்டதாகவும் ஒரு மயக்கம்.

நகுலன் பாத்திரங்கள் என்று சிலபேரைக் குறிப்பிடலாம். மஞ்சள் நிறப் பூனை, மரம், கேசவமாதவன், எறும்பு, சுசீலா, சாம்பசிவன், நவீனன், ஒரு மரங்கொத்தி. இப்பாத்திரங்களின் வழியே சேதனத்திலிருந்து அசேதனத்திற்குச் சென்று வெளியேறுகிறார். திணைகளில் மயக்கம் இருப்பதுபோல் எழுத்தில், வரிகளில், வடிவத்தில், உரையாடலில்கூட, ‘எழுத்து மயக்கம்’ ஒன்றைத் தருபவராக நகுலன் இருக்கிறார். “ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் என் பேனா தானாகவே ஓட ஆரம்பிக்கிறது. அதை நான் சாக்ஷிபூதமாகப் பின்தொடர்கிறேன்.” என்கிற தானியங்கி எழுத்தை முன்னிறுத்தியவராகத் திகழ்பவர் நகுலன்.

நகுலன் எழுத்தை வாசிக்கும்போது, நாம் தனியனாகிறோம். பல்வேறு இடங்களில், நகுலன் அதைத்தான் கூறிவருகிறார். உண்மை, பொய், நிஜம், உருவம், நிழல், நனவு, நனவிலி, அர்த்தம், அர்த்தமின்மை என்பவற்றின் எல்லைக்கோட்டின்மேல் நின்றபடி, தன் வாலினைச் சுழற்றி, உடல் பம்மி, சீறி, கண்களில் மஞ்சள் பரவ, எல்லைகளைக் கடந்தபடி நகுலன் என்ற பூனை சென்றுகொண்டிருக்கிறது. லக்ஷ்ய-அலக்ஷ்ய பாவம், ஒன்றையும் பொருட்படுத்தாது தன்னிடமிருந்தே போய்விடும் வித்தையை நகுலன் நமக்குக் கையளிப்பவராக இருக்கிறார்.

தமிழ்ப் புனைகதைகளில் நகுலனின் மொழி தனிமொழியாகும். நகுலனைப் புரிந்துகொள்ள – அது முடியாது என்றாலும்- ‘ஐந்து’ கவிதையில் வரும் வீடணனின் தனிமொழி போதுமானது. அதில் கடைசிவரியை இங்கே பதிவுசெய்ய விரும்புகிறேன்: ‘அறிந்தவர்கள் சொல்கிறார்கள் - நிசப்தத்தில்தான் வீடணன் தனிமொழி அதிகமாகக் கேட்கிறது.’ நகுலன் நம்மிடம் இல்லை. நகுலனை வாசிக்கும்போது, ஒரு மாதிரியான ஆள்கள்வழி நம்முடன் உரையாடிப் போகிறார். மஞ்சள்நிறப்பூனை தரைமீது தாவும்போது, மரங்கொத்தி மரத்தில் கொத்தும்போது, நாற்காலி சாய்ந்தாடும் போது சப்த-ரேகைகள் தெரிகின்றன. அவை நகுலபாஷையின் வரிகள் தவிர வேறு எதுவுமில்லை. ஊர்ந்துகொண்டிருக்கும் எறும்பை மணிக்கணக்காகப் பார்த்துக் கொண்டிருக்கும் தியானம்தான் நகுலன்.

படைப்பூக்கம் எங்கிருந்து வருகிறது?

ஆர்.அபிலாஷ்

எழுத்தாளர்கள் உலகம் முழுக்க சற்றே கோணலாக, எதிர்பாராத கோணங்கி சுபாவங்கள் படைத்தவர்களாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள். அத்தகைய சித்திரிப்புகள் பிரசித்தமாகின. ஐரோப்பாவைப் பொறுத்தமட்டில் கற்பனாவாதக் கவிதை மரபுடன் (கூல்ரிட்ஜ், கீட்ஸ், ஷெல்லி) இது துவங்கியதாகச் சொல்கிறார்கள். படைப்பாளிகள் மையத்தை விடுத்து, விளிம்பை விரும்புகிறவர்கள். எதையும் தலைகீழாகச் சிந்திப்பவர்கள் எனும் நம்பிக்கை தோன்றியது. சமூகம் எளிய சாமானியர்களுக்கு அனுமதிக்காத காரியங்களைப் படைப்பாளிகள் தமதுரிமையாகக் கருதிக்கொள்வார்கள்; ஒரு கட்டத்தில் சமூகம் தனது அடக்கப்பட்ட விழைவுகளை வெளிப்படுத்தவும் சித்திரித்துப் பரிசீலிக்கவும் படைப்பு வெளியைப் பயன்படுத்துவதாக ஒரு நம்பிக்கை தோன்றி, ஆஸ்திரிய உளவியலாளர் சிக்மண்ட் பிராயிடின் ஆய்வுக் கருத்துகளால் வலுப்பட்டது.

இதன் பொருள், உலகமெங்கும் படைப்பாளிகள் பித்தர்களாக, பொருந்தா பிரகிருதிகளாக மட்டும் காணப்பட்டார்கள் என்றல்ல. பிரஞ்சுத் தத்துவ அறிஞரும் விமர்சகருமான ரொலாண்ட் பார்த் தனது (1957-ல் வெளியான) ‘Mythologies’ நூலில் ‘The Writer on Holiday’ எனும் கட்டுரையில், எழுத்தாளனை சாமான்யனாகக் காட்டுவதும் பிரசுரத் தொழிற்துறையின் நோக்கமாக இருந்தது என்கிறார். ஐரோப்பாவில் தொழில்மயமாக்கல் மும்முரமான பின்னரே எழுத்தாளனின் பிம்பமும் பிரசித்தமாகிறது; எழுத்தாளனும் எழுத்தும் ஒன்று எனும் நம்பிக்கை பிறக்கிறது; எழுத்தாளனை முன்னிறுத்தி புத்தகங்களை விளம்பரப்படுத்துகிறார்கள். இப்போது எழுத்தாளன் சமூகத்துடன் பொருந்தாத மற்றமையாக மட்டுமே இருக்க முடியாது எனப் புரிந்துகொள்ளும் தொழிலதிபர்கள், அவனை சாமான்யனாகவும் காட்டும் நோக்கில் அவன் தட்டச்சு எந்திரத்தின் முன் அமர்ந்து ‘வேலை பார்க்கும்’, அவன் தன் குமாஸ்தாக்களைப்போல விடுமுறை நாள்களில் ஊர்சுற்றும் படங்களை நாளிதழ்களில் பிரசுரித்து ஒருவித கலவையான பிம்பத்தை உண்டு பண்ணுகிறார்கள். இன்றும் பத்திரிகை பேட்டிகள், விமர்சனக் கட்டுரைகளில் (பஷீர் துவங்கி ஜெயமோகன் வரை) படைப்பாளிகளை முன்னிறுத்துகையில், ஊடகங்கள் இதே பாணியைப் பின்பற்றுவதைத்தான் பார்க்கிறோம். அதாவது, இவர்கள் முழுக்க சமூக மையவாதப் போக்குகளுடன் பொருந்திப் போகாதவர்கள், அதேநேரம் எல்லாரையும் போல மத்திய வர்க்க வாழ்க்கைக்குள் இருப்பவர்கள் (ஆனால் சினிமா மாஸ் ஹீரோக்களுக்கு இத்தகைய பிம்பங்கள் கட்டமைக்கப்படுவதில்லை, அவர்களுக்குள் பல கோணல்கள் இருந்தாலும் - உதாரணம்: ரஜினியின் ஆன்மீகக் குழப்பத்தை யாரும் பிறழ்வாகச் சித்திரிப்பதில்லை; கமலின் முன்பின்னான பேச்சுகளை உளவியல் பூர்வமாக அலசுவதில்லை).

தமிழில் ஐம்பதுகள் துவங்கி சுமார் தொண்ணூறுகளின் முற்பகுதி வரை சிறுபத்திரிகை மரபு, எழுத்தாளனின் மீறலை ஒரு முக்கியப் பண்பாக முன்னிறுத்தியது. புதுமைப்பித்தன், ஜி.நாகராஜன், பிரமிள், ஆத்மாநாம் (கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துகொண்டார்) துவங்கி, பிரேம்-ரமேஷ் ஜோடி, லஷ்மி மணிவண்ணன், ஜெயமோகன் வரை பல்வேறு சர்ச்சைகள், வாய்வழி மிகைச்சித்திரிப்புகள் மூலம் எழுத்தாளனை ஒரு பித்தனாக, முரண் பிம்பமாகக் கட்டமைப்பது தொடர்ந்தது. கோணங்கி தன் பெயரையே அவ்வாறு அமைத்துக்கொண்டார். எழுத்தாளர்கள் தமது இலக்கியக் கூடுகைகளில் மிகுதியாக மது அருந்தி பரஸ்பரம் அடித்துக்கொள்வது குறித்த சில புரணிகளும் இதற்கு உதவின (அர்ப்பணிப்புடன் நடந்த பல தீவிரமான அறிவார்ந்த இலக்கிய விவாதங்கள் இங்குக் கவனம்பெறவில்லை உதாரணம்: ‘நிறப்பிரிகை’ விவாதங்கள், ஜெயமோகனின் ஊட்டி இலக்கிய முகாம்கள்).

புதுமைப்பித்தன் பற்றி

தொ.மு.சி ரகுநாதன் எழுதிய வாழ்க்கைக் கதை, சுந்தர ராமசாமி பிரமிள் குறித்து எழுதிய நூல், சாகித்ய அகாடமியின் வெளியீடாக வந்த ஜி.நாகராஜன் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை இங்கு குறிப்பிடலாம். எழுத்து இங்கு ஒரு வெற்றிகரமான வணிகம் ஆகாததால், பித்தனை சாமான்யனாகவும் காட்ட வேண்டிய அழுத்தம் தீவிர இலக்கியப் பரப்பில் இங்கு தோன்றவில்லை. ஆனாலும், சுதந்திர தாகம் உச்சத்தில் இருந்த காலத்தில், தனது தேசபக்தி பாடல்களால் பிரசித்தம் பெற்ற பாரதியார், அவரது மறைவுக்குப் பின்னர் தேசியக் கவியாக அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் முன்வைக்கப் பட்டபோது, அவரது பிறழ்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 2000-ல் வெளியான படமான ‘பாரதி’ கவிஞரை ஒரு முழுப் பித்தனாகவே சித்திரித்தது. ஆனாலும், அவரது தேசபக்தியின் லட்சியவாதமும் செல்லம்மா மற்றும் குழந்தைகள் மீதிருந்த அபாரமான பாசமும் அவரை சாமான்யனாக்க உதவின எனலாம்.

இலக்கியமும் பித்துநிலையும்

எழுத்தாளனைப் பொறுத்தமட்டில், பித்தும் ஆளுமைப் பிறழ்வுகளும் எப்படி மிகைப்படுத்தப்பட்டன, அதன் வணிக நோக்கம் என்ன எனப் பார்த்தோம். அடுத்து ஒரு கேள்வி, எழுத்தாளனுக்குப் படைப்பூக்கம் மனப்பிறழ்வில் இருந்தே வருகிறது எனும் உளவியல் கூற்றில் உண்மையில்லையா?

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், நேன்ஸி ஆண்டிரியாசென் முப்பதே கலைஞர்களைப் பேட்டி கண்டு, அதன்மூலம் படைப்பாற்றலுக்கும் மன அழுத்தத்துக்கும் தொடர்பு உண்டு எனக் கூறினார். பின்னர், கேய் ரேட்பீல்ட் ஜேமிசன் தனது ஆய்வில், படைப்பாற்றலுக்கும் ‘Bipolar Disorder’ உளநோய்க்கும் தொடர்பு உண்டு எனச் சொன்னார். இவர்கள் இருவருமே பைத்திய மேதை எனப் படைப்பாளிகள் சித்திரிக்கப்படுவதற்கான கோட்பாட்டு பலத்தை அளித்தவர்கள். ஆனால், இவர்களின் ஆய்வுமுடிவுகள் மிகையானவை மற்றும் ஆபத்தானவை என இன்றைய அறிஞர்கள் கருதுகிறார்கள். மனவியாதி வந்தவர்களுக்கே தெரியும் அதை வைத்துக்கொண்டு தொடர்ந்து தீவிரமாக எழுத முடியாது எனும் உண்மை. ஆனாலும், ஏன் இந்த தொன்மம் தொடர்ந்து பிரசித்தமாக உள்ளது என நாம் கேட்க வேண்டும். சின்னச் சின்னப் பிறழ்வுகளும் சமூக மீறல்களும் நம் வாழ்க்கைக்கு அவசியமாக இருக்கின்றன. அன்றாட வாழ்வில் கண்ணுக்குப் புலப்படாத பல்வேறு பைத்தியக்காரத்தனங்கள் வெளிப்பட்ட படியே இருக்கின்றன.

சின்ன வயதில் நான் நாய்க்குட்டியைத் தெருவிலிருந்து எடுத்து வளர்த்தேன். வீட்டுக்குள் வைக்க அனுமதி இல்லாததால், சோறு போட்டு அதனோடு நான் விளையாடும் வேளை தவிர, அது பெரும்பாலும் தெருவில்தான் திரியும். விடுமுறையில் அதனோடு நான் வெளியே போனால் அது என்னை உற்சாகமாகப் பல்வேறு புதிய தெருக்களுக்கு அழைத்துப் போகும். ஒரே நாளில் இவ்வளவு இடங்களுக்குப் போகிறாயா நீ என வியந்து போவேன். ஒவ்வொரு தெருமுனையிலும் அதற்கு சில தோழமைகள் இருந்தனர். அந்த நாய்களுடன் வாலால் சம்பாஷித்துவிட்டு சற்று நேரம் மண்மேடுகளிலும் வறண்ட ஓடைகளிலும் ஓய்வுகொண்டுவிட்டு சில தேநீர்க் கடைகளில் பிஸ்கட் வாங்கித் தின்னும். மாலை நான்கு மணிக்கு நான் பள்ளிவிட்டு வரும் வேளையில், சரியாக வீடு திரும்பிவிடும். பின்னர் நாங்கள் வீடு மாறிச் சென்றபோது, நாயைப் பழையபடி ஊர்சுற்ற விடமுடியவில்லை. கட்டிப்போட்டால், அது ஒப்பாரிவைத்து பெரிதாய் ஆர்ப்பாட்டம் பண்ணியது. வெளியே விட்டால் தன் பழைய இடங்களைத் தேடிப்போய் மூன்று நாள்கள் கழித்தே வீட்டுக்கு வரும். அதற்குப் பிறகு, நான் வளர்த்த நாய்கள் எளிமையான, ‘சமூக விதிகளுக்கு’ ஏற்ப ஒழுகும் பிராணிகள். வீடே அவற்றுக்கு உலகம். திறந்துவிட்டால்கூட வெளியே எட்டிப் பார்த்துவிட்டுத் திரும்ப உடனே ஓடி வந்துவிடும்.

ஜி.நாகராஜன் குறித்து சுந்தர ராமசாமி ஓரிடத்தில் சொல்லும்போது, ஜி.நாகராஜனின் இரவு அலைச்சல்களைக் குறிப்பிடுகிறார். இரவானால் ஜி.நாகராஜனை யாரும் கட்டுப்படுத்த முடியாது. அவர் வேட்டையாடக் கிளம்பி விடுவார். போதையை ஏற்றிக்கொண்டு ரயில் நிலையம், இருட்டான பிரதேசங்கள் என விலைமகளிரை நாடி அலைவார். அவர்களை அடைவதில்லை, அவர்களுக்காகக் காத்து நிற்பது, அவர்களைத் தேடி அலைவதே அவருக்கு மிகப்பெரிய கிளர்ச்சியை அளிக்கும். விடிகாலையில் அரைகுறையான ஆடைகளுடன் மோசமான கோலத்தில் ரயில் நிலையத்தில் கிடப்பார். பகலில் மீண்டும் நல்ல தோற்றத்தில் இயல்புநிலைக்கு மீண்டுவிடுவார். சமீபத்தில் ஒரு இளம்பெண் நிர்வாணமாக ஸ்கூட்டி ஓட்டிச்சென்ற காணொளி, சமூகவலைத்தளங்களில் பரபரப்பை உண்டுபண்ணியது. (காவல்துறை அவருக்கு எதிராக வழக்கும் தொடுத்தது.) இதுபோன்ற ஏராளமான மீறல் சம்பவங்கள் அனுதினமும் நடக்கின்றன; மிகச்சில மட்டுமே நம் பார்வைக்கு வருகின்றன. எனக்கு இந்த இருட்டுச் சாகசங்களைக் காணும்போது, என் முதல் நாயின் தெருவாழ்க்கை நினைவுக்கு வரும். நமது அன்றாட வாழ்க்கை எவ்வளவு பெரிய சிறைவாழ்க்கை என்பது நமக்குப் பெரும்பாலும் புலனாவதில்லை. சுதந்திரம் உள்ளதாக ஒரு தோற்றம் நம்மை ஆறுதல்படுத்துகிறது. ஆனால், ஒரு ‘காரணம்’ இல்லாமல் நம்மால் பொதுவெளியில் சத்தமாகச் சிரிக்கக்கூட முடியாது என்பதே உண்மை. எழுத்தாளன் மீறல் என்பதைக் கலைக்குள் தொடர்ந்து நிகழ்த்த எத்தனிப்பவன்; ஒரு எல்லைக்கு உட்பட்ட மீறலே சுவாரஸ்யமான வாசிப்பனுபவம் ஆகிறது. சில படைப்பாளிகள் அன்றாட வாழ்விலும் மீறலை நிகழ்த்தும் உரிமை தனக்குள்ளதாகக் கருதலாம். அதைச் சமூகம் அனுமதிக்கையில் அவன் கொண்டாடப் படுவான் (கேரளாவில் பஷீருக்கு நடந்ததைப் போல) அல்லது பரிகசிக்கப்படுவான் (பிரான்சிஸ் கிருபாவுக்கு இங்கு நடந்ததைப் போல).

நாம் புரிந்துகொள்ள வேண்டியது இதைத்தான்: பைத்தியக்காரத்தனங்களே நம் அன்றாடத்தை மகிழ்ச்சியாக்குகின்றன; ஆழமும் அர்த்தமும் கொண்டதாக்குகின்றன. ஓர் எழுத்தாளனின் வாழ்விலும் அப்படித்தான், ஒரே வித்தியாசம், பித்து அவனுக்கு ஒரு Selling Point-ஆகவும் இருக்கிறது.