கட்டுரைகள்
ஆன்மிகம்
சினிமா
பேட்டிகள்
Published:Updated:

சிறுகதை : கொஞ்சம் சிரிங்க

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

கஞ்சிப்பாட்டுக்கு சம்பாதிக்கிறார்களோ இல்லையோ, தினசரி கடன் அடைக்க சம்பாதித்தே ஆக வேண்டும்.

ன்றைக்கும் ஒரு ஆள் வந்து மோகனின் வீட்டுக் கதவைத் தட்டினான். எல்லோரையும்போலவே சத்தம் குறைவாக எழும்படியே தட்டினான்.

‘‘தட்தட் தட்தட்...’’ - உள்ளிருந்து ஏதும் சத்தம் வருகிறதா எனக் கதவில் காதுவைத்துக் கேட்டான் (அந்த நேரம் திடுமென பக்கத்து வீட்டுக் கதவு திறந்தால் அல்லது தெருவுக்குள் யாராவது நுழைந்துவிட்டால், உடனே கதவைத் தட்டுபவன் செல்போனை எடுத்து காதில் வைத்துக்கொள்வதும், கூடவே அக்கம்பக்கத்தார் தன்மீது சந்தேகம்கொண்டுவிடக் கூடாது எனும் பாதுகாப்பு உணர்வோடு முகத்தைத் திருப்பிக்கொள்வதுவும் எல்லோரும் நடத்தும் நாடக நடவடிக்கைதான்).

சரசு, தனது வீட்டின் சன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தாள். பக்கத்துப் பக்கத்து வீடு, ஒரு சுவர் தடுப்பு. அடுப்படி சன்னலில் நின்று பார்த்தால், மோகன் வீட்டு வாசல் அச்சுத் துணுக்காய்த் தெரியும்.

வந்த ஆள் தண்ணி போட்டிருப்பான் போலத் தெரிந்தது.

கதவைத் தட்டும் ஒவ்வோர் அசைவுக்கும் அவனது முகத்தில் அணிந்திருந்த கறுப்பு நிற மாஸ்க்கின் ஒரு பக்கம் அவிழ்ந்து அவிழ்ந்து ஊசலாடியது. தவிர, இதுவரை யாரும் கதவை இரண்டு முறைக்கு மேல் தட்டியது கிடையாது. மூன்றாவது முறையாக யாரோ ஒரு சிலர் தட்டுவது உண்டு. அடுத்தகணம் யாரிடமும் விசாரிக்காமல் அப்படியே திரும்பி விடுவர்.

இந்த நபர், தொடர்ச்சியாய் பலமுறை தட்டிக்கொண்டே இருக்கிறான். விரல்களை விரித்து மடக்கி எதோ கணக்கிடுவதுபோல தனக்குள் பேசிக்கொள்வதும், யாருக்கோ போன் செய்வதுமாக இடத்தைவிட்டு நகராதிருக்கிறான்.

மோகன், வீட்டைக் காலி செய்துவிட்டுப் போனது அவனுடைய வாடிக்கையாளர்கள் பலபேருக்குத் தெரியாதுபோலிருக்கிறது. இன்னும் எத்தனை பேர் வந்து அலையப் போகிறார்களோ?

அந்த நபர்மீது பரிதாபம் கொண்டு வெளியில் வந்தாள் சரசு.

அந்நபர், மறுபடி கதவில் காதுவைத்துக்கொண்டிருந்தான்.

‘‘இந்தாங்க . . . ஏங்க..?’’ - சரசு கைதட்டி அந்நபரை அழைத்தாள்.

சரசுவின் அழைப்பு கேட்டு கண்களைச் சுருக்கி, விழித்துப் பார்த்த அந்நபர், தவறு நடந்துவிட்டதாக எண்ணி வாரிச்சுருட்டிக்கொண்டு சரசுவிடம் வந்தான்.

கஞ்சிப்பாட்டுக்கு சம்பாதிக்கிறார்களோ இல்லையோ, தினசரி கடன் அடைக்க சம்பாதித்தே ஆக வேண்டும். எந்த ஒரு கடனுமே முழுசாகத் தவணைக் காலத்துக்குள் அடைபடுவதில்லை.

‘‘சாரி, வீடு மாறிட்டேனா ஹி... ஹி...’’ என்று இளித்தபடி, ‘‘நா இன்னிக்கி முந்நூறுதான் குடுப்பேன்’’ என்று சட்டைப்பைக்குள் கைவிட்டான்.

‘‘மோகனு வீடு மாறிப் போய்ட்டார்ணே’’ அந்நபர் நீட்டிய பணத்தைக் கண்டு எகிறி, பின்னகர்ந்தாள்.

சரசுவின் பதட்டம் கண்ட அந்நபர், கையைச் சுருக்கிக்கொண்டான்.

‘‘இதும் மோகனு வீடு இல்லியா...’’ கண்களைச் சுருக்கி, விரித்துக் கேட்டான்.

‘‘அவுக வீடு மாறிப்போயிட்டாக.’’

சிறுகதை
சிறுகதை

‘‘சாரி தங்கச்சி, சாரி’’ என்றவன், ‘‘போனு போட்டா, இளிச்சவாயெ எடுத்துப் பேச மாட்டேங்கிறான்’’ யாருக்கோ சொல்வதுபோல் சொன்னவன், அங்கிருந்து கிளம்பினான்.

சரசுவுக்கு உடம்பு படபடவென ஆடிப்போனது. நெஞ்சுக்குழியில் இன்னமும் பதற்றம் அடங்கவில்லை. ‘படக் படக்’கென துடித்துக் கொண்டிருந்தது.

‘என்னா வேகமா அந்தாள் வீட்டுக்குள்ள நொழைய வாரான்?’ அந்நபரது அச்செய்கையைக் காட்டிலும் சரசுவுக்கு அவன் நீட்டிய மூன்று புத்தம் புதிய நூறு ருபாய்த் தாள்கள்... அவற்றின் மொடமொடப்பு கண்ணைக் குத்தியது. நூறு ரூபாய்த் தாளைக் கைதொட்டு ரொம்ப நாள் ஆகிப்போனது. ஆனாலும், அது விரலில்பட்ட நிமிஷம் அருவருப்பாக உணர்ந்தாள்.

மோகன் பக்கம் திரும்பினாலே மாடசாமிக்குப் பற்றி எரியும். சரசு, மோகனிடம் பேச மாட்டாள். சரசு மட்டுமல்ல, அந்தத் தெருப் பெண்கள் யாருமே மோகனிடமோ, அவன் மனைவி விஜயாவிடமோ முகம் கொடுத்துப் பேச மாட்டார்கள். அவர்களாகத்தான் தெருவாசிகளிடம் வலிய வந்து பேச்சுக்கொடுப்பதும், உறவாடத் துடிப்பதும்... எல்லாம்.

இப்படி ஒரு குடும்பம் தெருவுக்குள் வந்து குடியிருக்க யாரும் கண்டதில்லை. வீட்டை ஒத்திக்கு விட்டுவிட்டு, வீட்டுக்காரர் சென்னையில் போய் உட்கார்ந்துகொண்டார்.

‘உங்க வீட்ல பொம்பளைகள வச்சுப் பொழைக்கிறான்’ எனும் சேதியைச் சொல்ல தெருவில் யாருக்கும் துணிச்சலில்லை. சொன்னாலும் இப்படிப்பட்டவர்கள் மாறிவிடுவார்களா என்ன... பத்திரத்தில் எழுதிய காலம் வரை காலி செய்ய முடியாது எனத் தெம்பாகச் சொல்வார்கள். எதற்கு வம்பு என்றபடி காலம் ஓடிவிட்டது. ஒப்பந்தக் காலம் இரண்டு வருடங்கள் வீட்டில் வசித்தே காலி செய்தார்கள். தெருவாசிகள் பாடுதான் கடப்பாரை விழுங்கியவன் போல கண்ணுமுழி பிதுங்க நிற்க வேண்டியிருந்தது. தினசரி ஆணும் பெண்ணும் தினுசு தினுசாக தெருவுக்குள் வந்து போய்க் கொண்டேயிருந்தால்?!

மோகன் ரொம்பவே ஈசியாக இந்தப் பிரச்னைக்குப் பதில் சொல்லி முடித்தான். ‘‘குடுக்கல் வாங்கல் நடக்குற இடத்துக்கு ஆளுக வந்து போகத்தானே செய்வாக...’’

மேல்வீட்டில் குடியிருக்கும் ஐசக், போதைவயப்பட்ட ஒருநாளில் மோகனின் முகத்திரையைக் கிழித்துவிட்டார்.

அவ்வளவுதான், புருஷனும் பொண்டாட்டியும் வீதியில் இறங்கிவிட்டார்கள். தெருவிலிருக்கும் சகல குடியிருப்புகளுக்கும் அறிவிக்கும் விதமாக ஓங்கிக் குரல் சிலம்பம் ஆடத் தொடங்கினர். முதல் வார்த்தையே அத்தனை பேரின் காதுகளையும் பூட்டிக்கொள்ளச் சொன்னது. அடுத்தடுத்த வார்த்தைகளை நின்று கேட்க, தெருவில் ஆளில்லை.

‘‘நீ எத்தினிவாட்டி காசு குடுத்து எவ்வீட்டுக்கு வந்திருக்க... எங்கனால எந்த வீட்டுக்கு என்னா நட்டம்? வீரியமான ஆம்பளனா சொடக்குப் போட்டுச் சொல்லு!’’ மோகனின் அந்த சொடக்குச் சத்தம் அவனைப் பார்க்கும்போதெல்லாம் கேட்டுக்கொண்டேயிருந்தது.

நல்லவேளையாக ஒப்பந்தகாலத்தை நீட்டிக்காமல் குறிப்பிட்ட நாளில் வீட்டை காலி செய்துகொண்டு போனதில் தெருவாசிகள் நிம்மதியாகினர்.

கொரனோ பயத்தால் வீட்டில் துணி துவைக்க, பாத்திரம் கழுவவும் யாரும் கூப்பிடவில்லை. பெரிய வீடுகளில் வீட்டு வாசலைத் தாண்டி யாரையும் நிற்கவிடுவதே இல்லை.

முதல் வீட்டில் குடியிருக்கும் மலைக்காரம்மாளுக்கு வரும் சந்தேகம் உலகத்தில் யாருக்குமே வராது. ‘‘தன் கையவெச்சே மூக்கைத் தொடக் கூடாது, நாக்கைத் தொடக் கூடாதுங்கற காலத்துலயும் விசயா, வீட்டுக்கு வாரவங்ககிட்ட என்னா சொல்லி ‘குடுக்கல் வாங்கல்’ செய்றான்னு தெரியலியே!?’’

தெருவே சிரித்துத் தவிப்பாறும். வேறென்ன செய்ய? சரசுவும் சிரித்து வைப்பாள். முதன்முறை அடைத்த ஊரடங்கிலேயே, மாஸ்க் போடாமலேயே மூச்சடைப்பதாக மாடசாமி மேல்மூச்சு வாங்கினான்.

பின்னே... போஸ்டர் அடிக்கவும் ஆளில்லை; நோட்டீஸ் போடவும் கம்பெனியில்லை. ஏதாவது பஜாரில் -கடைவீதியில் கடை திறந்திருந்தால்தானே மாடசாமியைக் கூப்பிட்டு போஸ்டர் ஒட்டச் சொல்வார்கள் அல்லது தெருத் தெருவாக, வீடு வீடாக நோட்டீஸ் விநியோகம் செய்யச் சொல்வார்கள்! நல்ல நாளிலேயே பல பேர் விளம்பர நோட்டீஸ்களை உள்ளூர் தினசரிகளுக்குள்வைத்து, விநியோக நடவடிக்கைகளை முடித்து விடுவார்கள். மாடசாமிக்கு உள்ளூரென்றால் எண்ணிக்கைக்கு தக்கபடி கூலி தர வேண்டும். வெளியூர் சேர்த்து விநியோகிக்க, தினக்கூலி. சாப்பாட்டுச் செலவுக்கு என கேட்பான். சில நிறுவனங்களில் ஒவ்வொரு தெருவிலும் சிலபேர்களிடம் கையொப்பம் வாங்கிவரச் சொல்லி கணக்கு நோட்டும் தந்துவிடுவார்கள். அதற்கெல்லாம் சளைக்க மாட்டான் மாடசாமி.

சரசு, தேனியில் ஒரு ஓட்டலில் வேலை பார்த்தாள். மேசை துடைப்பதும், சமையற்கட்டில் பாத்திரங்கள் கழுவிக் கொடுப்பதுமாகப் பொழுது ஓடியது. கடன்தான் ஓடித் தொலைவேனா என வருஷமெல்லாம் துரத்திக்கொண்டே வருகிறது. தினசரி, வாரக்கந்து, மகாசேமம் என தெருவுக்குள் வந்து நுழைகிற கடன்வலை அத்தனையிலும் மாடசாமியும் சரசுவும் விழுந்து கிடப்பார்கள்.

இத்தனைக்கும் உலகத்திலுள்ள எல்லா தெய்வங்களுக்கும் நேர்த்திக்கடன் போட்டுவிடுகிறாள். குலதெய்வம் வீருசின்னுவுக்கு வருசக் கொடை… தெருமுக்கில் வீற்றிருக்கும் வீரநாகம்மாவுக்கு இருபத்தியோரு நாள் விரதமிருந்து மாவிளக்கேந்தி முளைப்பாரி தூக்குகிறாள். ஊர்த்தெய்வம் வீரய்யனுக்கு, மாடசாமி ஜென்மக்காவடி – இளநீர்க்குலை ஏந்திப் போகின்றான். வீரபாண்டி மாரியம்மனுக்கு சரசு தீச்சட்டி எடுக்க, பிள்ளை, சேத்தாண்டி வேஷமும் ஆயிரங்கண் பானையும் எடுத்துவருவான். இவையெல்லாம் கழிய, வருஷா வருஷம் ஐயப்பனுக்கு அறுபது நாள்கள் விரதமிருந்து மலையேறுவதும், அப்படியே பழநி முருகனுக்கு, மாடசாமி பாதயாத்திரையும் நடக்கிறான். சரசுவும் மேல்மருவத்தூருக்கு சிவப்புச் சேலை உடுத்தி விரதமிருந்து பஸ் பிடித்து அம்மாவுக்காக இருமுடி சுமக்கிறாள். கடன்தான் ஆகிறதே தவிர, எந்தச் சாமியும் கண்பார்க்கவில்லை..

கஞ்சிப்பாட்டுக்கு சம்பாதிக்கிறார்களோ இல்லையோ, தினசரி கடன் அடைக்க சம்பாதித்தே ஆக வேண்டும். எந்த ஒரு கடனுமே முழுசாகத் தவணைக் காலத்துக்குள் அடைபடுவதில்லை. ஒன்று முடிவதற்குள் அதைக் கழித்துவிட்டு புதிதாக வாங்க நேரிடுகிறது. அதனால் எப்போதுமே வீட்டில் பள்ளிக்கூடப் புத்தகங்களைவிட, கடன் பற்றுவரவு புத்தகங்களே அதிகம்

‘‘என்னாடி சரசு, என்னா... கஸ்டமர் வந்தானுகளாக்கும்?’’ மலைக்காரம்மாள் தனது வீட்டிலிருந்தவாறு கேட்டார்.

‘‘அவெம்பாட்டுக்கு தண்ணிப்பாம்பு நொழஞ்ச மாதரி சரசரனு வீட்டுக்குள்ள நொழையிறான்க்கா, மானங்கெட்டபய’’ பதைபதைப்பு மாறாமல் பேசினாள் சரசு.

‘‘நமக்கு கஞ்சித்தண்ணிக்கு பட்டமொளகா வாங்க பத்துக் காசக் கண்ணுல காங்க முடியலை. இவனுகளுக்குனு எங்கிட்டுதே பணங்காசு காய்க்கிதோ?'’

கஞ்சித்தண்ணியை நினைவுபடுத்தியதும் சரசுவுக்கும் பசி கிள்ளியது. சரசு வேலைபார்க்கும் ஓட்டலில் இன்னமும் இயல்பான வியாபாரம் தொடங்கவில்லை. வெறும் பார்சல் மட்டும் கட்டி விற்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அதனால், ஒரேயொரு மாஸ்டரை வைத்துக்கொண்டு பொட்டலங்கள் போட்டுத் தருகிறார்கள். வாடகை, கரன்ட் பில்லுக்கே ஓட்டம் இல்லையென முதலாளி புலம்பினார். இரண்டு தரம் ஐந்நூறு ஐந்நூறாகப் முன்பணம் வாங்கி வந்தாள். அதற்குமேல் பார்சல் வாங்கப் போகவும் மனசில்லை.

கஞ்சிப்பாட்டை சமாளிப்பதைவிட கடன்காரர்களைச் சமாளிக்கத்தான் தெம்பு வேண்டியிருந்தது. முதல் இரண்டு ஊரடங்குக்கு யாரும் எட்டிப் பார்க்கவில்லை. மூன்றாவதிலிருந்து லச்சை தாங்க முடியவில்லை.

கொரனோ பயத்தால் வீட்டில் துணி துவைக்க, பாத்திரம் கழுவவும் யாரும் கூப்பிடவில்லை. பெரிய வீடுகளில் வீட்டு வாசலைத் தாண்டி யாரையும் நிற்கவிடுவதே இல்லை. ஒரே ஒருநாள், வடக்குத் தெருவில் `பாத்ரூம் கழுவ முடியுமா?' எனக் கேட்டார்கள். முனிசிபல் சீப்பர்கள் இப்போது தூய்மைப் பணியில் இருப்பதால், வர முடியாதெனச் சொல்லிவிட்டார்களாம். ஒரே ஒரு கோப்பை ஆசிட் போட்டுக் கழுவினால், முந்நூறு ரூபாய் தருவதாகச் சொன்னார்கள்.

ஆசிட் நெடி, மயக்கத்தையும் கண் எரிச்சலையும் உண்டு பண்ணியது. நல்லவேளை, அங்கே கொடுத்த துண்டால் மூக்கை மறைத்துக் கட்டிக்கொண்டாள். வீட்டுக்கு வந்தும் கண்ணெரிச்சலும் வயிறு உமட்டலும் தாங்க முடியவில்லை. கைவிரல்கள் ஒருவாரத்துக்குச் சுரணையற்றுக் கிடந்தன. மாடசாமி ரெம்பவே கடிந்து கொண்டான்.

சின்னப்பயக, வேல கேக்கத்தான போனாங்கெ... பஸ் ஓடுனா ஏறிப் போயிருப் பானுகள்ல... பஸ்ஸு ஓட்டாதது ஆரு குத்தம்?

அவனும் குப்பை பொறுக்கியும், சாராயக்கடை வீதிகளில் குடிமகன்கள் வீசியெறிந்த பாட்டில்களைச் சேகரித்தும் ஐந்து பத்து கொண்டுவந்தான்.

‘‘சரசு, வடிதண்ணி கேட்டவ? வேணும்னா சட்டிய எடுத்து வா'' - ஐசக் வீட்டிலிருந்து மாமி சத்தம் கொடுத்தார்.

எவர்சில்வர் குண்டான் ஒன்றை எடுத்துக்கொண்டு வேகமாய் நடந்தாள். முன்னெல்லாம் மலைக்காரம்மா வீட்டிலும் வடிதண்ணி கிடைக்கும். இப்போதெல்லாம் குக்கரில் பொங்குவதாகச் சொல்லிவிட்டார். சட்டியில் சோறு வடித்தால் அதிகமாய் கேஸ் செலவாகிறதாம்.

சிறுகதை
சிறுகதை

கோழிக்குழம்பு வாசனை வாசலில் நின்றவளை கிறுகிறுக்கச் செய்தது. மூச்சை நன்றாக இழுத்து வாங்கிக்கொண்டாள்.

‘‘நாட்டுக்கோழியா மாமி?’’

‘‘வாட வந்திருச்சா...’’ - பெருமிதத்தில் புன்னகைத்த மாமி, ‘‘பிராய்லர்தே’’ என்றார்.

‘‘தெனத்துக்கும் நீச்சத்தண்ணி குடிக்கிறீகளே... சளிப்பிடிக்காதா?’’

‘‘பழகிப்போச்சு மாமி.’’

‘‘ஒர் நாள் ஆசைக்கி மோர் ஊத்தித் தின்டா, `உர்ரு உர்ரு’ன்னு மூக்க உறிஞ்சித் திரிய வேண்டியிருக்கு.’’

நீச்சத்தண்ணி கூட்டிவெக்க வடிதண்ணி வாங்குவதாய்ச் சொல்லியிருந்தாள் சரசு.

வடிதண்ணி அரைக்குண்டான் இருந்தது. மேலாக தெளிந்த நீரை இன்னொரு சட்டியில் சாய்த்து வடித்தாள். பாதிக்குமேல் கொஞ்சம் கொழகொழப்புடன் மாவு கலக்கியது போல் வெண்மை ஒளியுடன் தெரிய, அதை அடுத்தொரு செம்பில் சரித்தாள். அடியில் சோற்றுப் பருக்கைகள் புரண்டுவரக் கண்டதும் கரண்டிவிட்டுக் கிண்டினாள். ஒருகைச் சோறு இருக்கும். மாமி வேணுமென்றே அள்ளிப்போட்டிருப்பார். வாயில் அள்ளிப்போட கைதுடித்தது. தொண்டையும் கெஞ்சியது. குண்டானையும் செம்பையும் மூடிபோட்டு ஒதுக்கினாள். முதலில் வடித்த நீரில் கொஞ்சம் உப்பு சேர்த்துக் கலக்கி இரண்டு டம்ளர் குடித்தாள். காய்ந்த வயிற்றில் கடகடவென இறங்கியதும் சொல்லவொண்ணாத ஓர் உணர்வு உண்டானது. படபடவென உடம்பு துடித்தது. மலைப்பாம்பாய் வாய்திறந்த வயிறு, இரை போதாமையால் இரைந்தது.

நேற்று இதேநேரம் உண்டது. சுவரில் சாய்ந்து வயிற்றைக் குறுக்கி உட்கார்ந்து பசியியைக் காபந்து செய்த சரசு, சிறிது நேரக் கண்மூடலில் ஒரு நிதானத்துக்கு வந்தாள். சட்டென அடுத்த வேளைக்கான சிந்தனை அலைமோத, லேசான தள்ளாட்டத்துடன் வெளியில் வந்தாள்.

சாதிக்கலவரம் வந்த தெருபோல கடைகளெல்லாம் பட்டப்பகலிலேயே அடைத்துக்கிடந்தன. தெருவில் மக்கள் நடமாட்டம் அருகிப்போய், நடமாடும் ஒரு சிலரும் நாடிக்கட்டு போட்டு செத்த பிணங்களாய் உயிரற்று நடந்து போய்க்கொண்டிருந்தனர். சின்னச் சின்னத் தெருவிலும் தடுப்புக் கட்டைகள், தகரங்கள் அடைக்கப்பட்டு சைக்கிள் போவதற்கும் வழியில்லாதிருந்தது.

வடக்குத் தெரு - மச்சால் தெருவில் தடைசெய்யப்பட்ட பகுதியாக ஃபிளெக்ஸ் ஒட்டப்பட்டிருந்தது. நாக்யரம்மா வீட்டு அழைப்புமணியை அழுத்திவிட்டு தள்ளி நின்றுகொண்டாள் சரசு.

‘நாங்கல்லாம் ரேசன் கார்டை அடகுவெச்சதுனால, இந்த நேரத்துல கைப்பிடி அரிசிக்கும் விதியில்ல சார். எங்களுக்கும் ஒரு பை தரலாம்ல...

‘‘ஆரூ?’’ வீட்டுக்குள்ளிருந்து கவசமணிந்த ஒரு முகம் கேட்டது.

‘‘வேல இருக்கதாச் சொன்னீகளாம்?’’ கல்லெறிந்தாள்.

‘‘நா எப்பச் சொன்னே?’’

போன வாரம் இங்கேதான் கக்கூஸ் கழுவினாள். பக்கத்து வீட்டில் கேட்டுச் சொல்வதாகவும் சொல்லியிருந்தார்கள். பக்கத்து வீட்டு மணியையும் அழுத்தினாள். ‘‘அப்பப்ப நாங்களே கழுவிக்கிறோம்டி. தேவப்பட்டா கூப்புடுறோம்’’ என்ற வீட்டம்மா, ‘‘யார்ட்டப் பேசுனாலும் மொகத்த மூடிட்டுப் பேசுடி’’ என கடிந்துவிட்டு கதவைச் சாத்தினார்.

சோர்ந்த முகத்துடன் வீட்டுக்கு வந்தாள். அங்கே வீட்டை தலைகீழாய்ப் புரட்டிக் கொண்டிருந்தான் மாடசாமி.

என்னத்தை இப்படி வெறித்தனமாகத் தேடுகிறான் என்று புரியாமல் வாசலில் நின்று பார்த்த சரசு, அடுப்படியில் ஈயச்செம்பு கவிழ்ந்து கிடப்பதைக் கண்டதும் பதறிப்போய் ஓடி, செம்பை நிமிர்த்திப் பார்த்தாள். அடித்தூரில் ஒரு சிரங்கைக் கஞ்சி, நெய்யாய் படர்ந்துகிடந்தது.

‘‘அட பாவி மனுசா... ஒரு செம்புக் கஞ்சியக் கவுத்திட்டியே! மாடே... மாடே...’’ குனிந்து தேடிக்கொண்டிருந்தவனின் முதுகில் இரண்டு கைகளையும் பரத்தி துணி துவைத்தாள். எங்கிருந்துதான் அப்படியொரு வெலம் வந்ததெனத் தெரியவில்லை. அந்தக் கஞ்சியை சரசு, அவனுக்காகத்தான் ஒதுக்கி வைத்திருந்தாள். குண்டானில் பருக்கைகளோடு இருப்பதைத் தன் பிள்ளை வந்து பசியாற நினைத்திருந்தாள்.

‘‘பட்டினி கெடந்து சாவுடா...’’ சொல்லிச் சொல்லி அடித்தாள்.

‘‘நாங் கொட்டலடி, காத்துக்கு சாஞ்சிருக்கு’’ அடியைத் தாங்க முடியாமல் கீழே உட்கார்ந்தான் மாடசாமி.

‘‘இன்னிக்கி ஒனக்கு கஞ்சி கிடையாது. பட்டினியாக் கெடந்து சாவு’’ - மறுமுறை சபித்து, மேல்மூச்சு வாங்கினாள்,

‘‘பவுன்ராசு இன்னம் வர்லியா?’’ என மகனைக் கேட்டாள். கரட்டுப் பள்ளிக்கூடத்தில் ஒம்பதாம் வகுப்பு பரீச்சை எழுதி இருக்கிறான். பள்ளிக்கூடம் திறந்தால் பத்தாம் வகுப்பில் உட்காருவான். வீட்டின் நிலைமை கண்டு சித்தாள் வேலைக்கும், அவ்வப்போது சிமின்டு மூடை ஏற்றி இறக்கவும் போகிறான். இப்போதுகூட எங்கேயோ கலியாண மண்டபத்தில் பந்தி பரிமாறும் வேலைக்கு அச்சக்காரம் வாங்கப் போயிருக்கிறான்.

‘‘ஒரு எரநூறு ரூவா வேணும்’’ - கீழே மல்லாந்தவாக்கில் கிடந்த மாடசாமி கேட்டான்.

அவனை எரித்துவிடுபவள்போலப் பார்த்த சரசு, ‘‘இப்பத்தே ஒர்த்தே கண்ல காமிச்சான். சித்த மிந்தி வந்திருந்தா வாங்கிக் குடுத்திருப்பேன்ல’’ எகத்தாளம் மிகப் பேசினாள்.

‘‘நா நெசமாவே கேக்கறேன்’’ எழுந்து உட்கார்ந்தான்.

‘‘பத்து ரூவாய்க்கி அரிசி வாங்க வக்கில்லாம வவுத்துல ஈரத்துணியக் கட்டிட்டிருக்கே... ஒனக்கு எரநூறு முந்நூறுனு எகத்தாளம் போடுது?’’

பதிலெதுவும் பேசாமல் மாடசாமி தரையில் சிந்திய நீரைத் தொட்டுக் கோலம் வரைந்தான். அதை கவனித்த சரசு, ‘‘ஏற்கனவே வீடு கீழ்பூழ்னு ஓடிட்டிருக்கு, இதுல நீர்க்கோலம் போடு.’’

அப்போதும் அவன் பேசவில்லை ஏதோ யோசனையில் இருந்தான்.

‘‘எரநூறு ரூவா எதுக்கு... எதும் யாவாரங் கீவாரம் பாக்கப்போறியா?!’’

இப்போது சரசுவை நேருக்கு நேராய்ப் பார்த்தான்.

‘‘என்னா, அறுக்கப்போற ஆடுமாதிரி முழிக்கற, எதும் புது வீடு வெல பேசியிருக்கியா அட்டுவான்ஸு போட?’’

கொஞ்சங் கொஞ்சமாய் மாடசாமியின் முகம் வெளிறி, குபுக்கென கண்களிலிருந்து தண்ணீர் வெளிக் கிளம்ப, கோவென அழுதான். சரசுவுக்கு சிவுக்கென போனது. நெஞ்சுக்குழி படபடவெனத் துடிக்கலானது.

‘‘என்னாய்யா, ஏ மாடே! என்னாச்சு? சனியனே! வாய் தொறந்து சொல்லுய்யா?’’ பக்கத்தில் வந்து அமர்ந்து அவனைக் கட்டிக்கொண்டாள்.

‘‘பவுன்ராச... மகன போலீஸ் புடிச்சிட்டுப் போயிருச்சு’’ - தலையில் அடித்துக்கொண்டு அழுதான் மாடசாமி.

சரசு திக்பிரமை பிடித்தவளாக ஒருகணம் ஸ்தம்பித்து நின்றாள். அடுத்த நிமிசம் அவனை உலுப்பி விஷயத்தைக் கறந்தாள்.

சமையல் வேலை கேட்க ஒரு பைக்கில் மூன்று பேர் உட்கார்ந்து பயணித்திருக்கிறார்கள். ஊரடங்கு விதியை மீறியதாக மூவரையும் பிடித்து, பைக்கோடு போலீஸ் ஸ்டஷனுக்குக் கொண்டுபோய்விட்டார்களாம். ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டினால், வண்டியைத் தருவார்களாம். அதில் பவுன்ராசு பங்கு இருநூறு ரூபாயாம்.

‘‘எவனோ வண்டியோட்ட இவெ எதுக்கு தெண்டங் கட்டணும்?

ரோட்ல அல்லாரும் சரியாத்தே நடந்து போறாகளா?

சின்னப்பயக, வேல கேக்கத்தான போனாங்கெ... பஸ் ஓடுனா ஏறிப் போயிருப்பானுகள்ல... பஸ்ஸு ஓட்டாதது ஆரு குத்தம்?

அவுக புள்ளகுட்டிகளப் பெக்கலியா?'' – தவளையாய்க் கூச்சலிட்டவள், ‘‘பச்சப் பயல டேசன்ல ஒக்காரவச்சுப்பிட்டு நீ எதுக்கு இங்கே வந்தே?’’ எனக் கேட்டாள்.

நடந்ததைப் பூராவும் சொன்னான் மாடசாமி. விஷயம் கேள்விப்பட்டு ஸ்டேசஷனுக்குப் போனது, அங்கே யாரையும் பேசவிடாமல் போலீஸ் அதட்டி விரட்டியது, மிரட்டியது.

‘‘எத்தன போலீசு? யாத்தாடி, ஒரு வார்த்த பேச முடீலடி. கம்பெடுத்து அடிக்க வாராங்க. பேன்ட்டு சட்ட போட்டவங்களையே மண்டிக்கால் போடவச்சுத்தே பேசச் சொல்றாங்க...’’ சொல்லும்போதே கண்களில் போலீஸ் பயம் ஒட்டியிருந்தது.

‘‘கால்ல விழுந்திருக்க வேண்டிதான?’’

அவன் விழுந்ததைச் சொல்லவில்லை. வெட்கமாய் இருந்தது.

‘‘யார்ட்டயும் ரூவா கேக்க மிடியாதா?’’

யாரிடம் கேட்க... கேட்டவுடன் கொடுக்கும் நிலையில் இருப்பது யார். ஐசக் வீட்டில் ஏழெட்டு பாக்கி நிற்கிறது. மலைக்காரம்மாளிடம் அஞ்சு, பத்து என்றால் வாங்கலாம். ஓனரிடம் பொய் சொல்லி நிறைய வாங்கியாயிற்று. இனி உண்மை சொன்னாலும் நம்பவே மாட்டார்.

‘‘நேரமாகுது சரசு.’’

‘‘முந்தீலவெச்சிருக்க மாதிரில்ல சடைக்கிற...’’

‘‘விக்கிற மாதிரி எதுவுமில்லியா?’’

‘‘இப்பதக்கி நாந்தே இருக்கே. தூக்கிட்டுப் போயி வித்துட்டு வா!’’

இரண்டு பேரும் மௌனம் காத்த நேரம் மோகன் வீட்டுக் கதவு இப்பவும் தட்டப்பட்டது.

சரசுவின் காதுகள் சிலிர்த்து வேட்டைநாயின் காதுகளைப்போல விடைத்தன.

வாசலுக்கு வந்தாள்.

மலைக்காரம்மாள் நின்றிருந்தார்.

கூடுதலாய் கையில் ஒரு பட்டியலோடு இரண்டு தோழர்கள் தெருவில் இறங்கி வந்தனர்.

‘‘அம்ம தெருவில ஆட்டக்கார மாரியப்பெ யாருடி?’’

சரசுவுக்கும் சட்டென அடையாளம் சொல்ல முடியவில்லை. மலைக்காரம்மாளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘‘கிராமியக் கலைஞர்மா, தெருவுல கரகாட்டம் ஆடுவாங்கள்ல...’’ தேடி வந்தவர்களில் பிராயமானவர் கூடுதலாய் விளக்கம் கொடுத்தார்.

‘‘ஆட்டக்காரவகளுக்கு சங்கத்துல இருந்து கொரனா அரிசி, பருப்பு தாராகளாம்’’ - மலைக்காரம்மாளின் வார்த்தையில் ஏக்கம் ஒலித்தது.

சட்டென ஞாபகம் வந்தவளாய், ‘‘ஆமா! நம்ம சீதையக்கா வீட்டுக்காரரு’’ என்று பதிலளித்தாள்.

‘‘அவரு, மேளக்காரருல்ல...’’

‘‘மொதல்ல பொம்பள வேஷம் போட்டு ஆடுனாராம். வயசானதும், கொட்டடிக்க வந்துட்டாராம்’’ விளக்கமளித்த சரசு, ‘‘அவங்க இப்ப கீரக்கல் தெருவிலல்ல இருக்காங்க.’’

அடையாளம் சொன்னவளை கையோடு வந்து காட்டச் சொன்னார்கள்.

‘‘நிறைய பேரைப் பார்க்க வேண்டியிருக்கு. தயவு பண்ணுங்கம்மா.’’

நிவாரணப்பொருள் ஏற்றிய ஆட்டோ பின்னால் வர, சரசு அவர்களோடு நடந்தாள். மாடசாமியும் அவயம் போட்டபடி பின்தொடர்ந்தான். மாரியப்பன் வீட்டைக் காண்பித்தவள், ‘‘நாங்கல்லாம் ரேசன் கார்டை அடகுவெச்சதுனால, இந்த நேரத்துல கைப்பிடி அரிசிக்கும் விதியில்ல சார். எங்களுக்கும் ஒரு பை தரலாம்ல...’’ என இடம்பார்த்து கோரிக்கைவைத்தாள்.

அவளது அந்தப் பேச்சில் அதிர்ந்துபோனவர், ‘‘இப்பிடியெல்லாம் செய்யலாமாம்மா... அதும் இந்த நேரத்துல...’’ என்றவர், ‘‘அதாருனு சொல்லுமா. பேசி, கார்டை வாங்கித்தாரோம்’’ என்றார்.

‘‘கைநீட்டி காசுவாங்கிட்டோம் சார். துரோகம் செய்யக்ககூடாதுல்ல... ஒரு பை மட்டும் குடுங்க.’’

‘‘இதுல முடியாதும்மா. நிச்சயமா தோழர்கள் கிட்ட பேசி எத்தன பேர் இது மாதிரி பாதிக்கப் பட்டிருக்கீங்கனு பார்த்து, எல்லாருக்குமே சீக்கிரமா உதவி செய்றோம்’’ என விடைபெற்றனர்.

கழற்றிவிடப்பட்ட ரயில்பெட்டிகளாய் இருவரும் கீரைக்கல்லில் வாயடைத்து நின்றனர். அருகிலிருந்த அடைத்த காய்கறிக்கடை ஒன்றில் சம்மணம்போட்டு ஏவாரியைப்போல அமர்ந்துகொண்டாள் சரசு. அவளுக்குப் பக்கமாய் வந்து நின்ற மாடசாமிக்கும் என்ன செய்வதென விளங்கவில்லை. எது ஒன்றும் புரியாமல் பின்னால் கைகட்டி காவலாளிபோல நின்றான். பலநூறு மக்கள் வந்துபோகக்கூடிய காய்கறிச் சந்தை. இப்போது ஈ காக்காய்கள் எதுவுமின்றி காத்தாடிக் கிடந்தது.

‘‘ஒன்னாலதே அவெ வேலைக்கே போறான். படிக்கிற பயல கட்டிப்போட முடியல, நிய்யெல்லா ஆம்பள!’’

‘‘நானா வேலைக்கிப் போகச் சொன்னேன்...? எல்லாத்தியும் எம்மேலயே பழியப்போடு.’’

‘‘ஒன்ட்ட வாக்கப்பட்ட நாள்லருந்து ஒருநா ஒரு பொழுதாச்சும் நிம்மதியாப் படுத்து எந்திருச்சிருப்பேனா...’’

‘‘அதப் பத்திப் பெறவு ஓசிக்கலாம்டி... டேசன்ல லேட்டாக லேட்டாக ஆளாளுக்கு வந்து புள்ளைய அடிச்சுக்கிட்டிருப்பாங்க.’’

‘‘சாவட்டும், எவ் வகுத்துல பொறந்த கொடுமைக்கு ஊர்பயலுவகிட்ட அடிபெத்தே சாவட்டும்’’ - முகத்தை மூடாமல்கூட அப்படியே தேம்பித் தேம்பி அழுதாள்.

அந்தநேரம் சைக்கிளில் வந்த பால்காரர், ‘‘ஏண்டா அழ வச்சிட்டிருக்க...’’ - ஒரு காலைத் தரையில் ஊன்றியபடி நின்று கேட்டார். விஷயத்தைச் சொன்னான் மாடசாமி.

‘ஊய் ஊய்’ என்றபடி வந்த போலீஸ் பைக்குகள் பிரேக் அடித்து நின்றன.

‘‘மாஸ்க் போடு, மாஸ்க் போடு.’’

பால்காரர் நாடிக்குக் கீழ் இறக்கிவிட்டிருந்ததை ஏற்றிவிட்டுக்கொண்டார். சரசு, கண்களைத் துடைத்து முந்தானையை எடுத்து முகத்தை மறைத்தாள். மாடசாமி வெறுங்கைகளால் மூக்கை மூடினான்.

‘‘இங்க எதுக்கு நிக்கிறீக... வீட்டுக்குப் போ. வீதில நிக்காத’’ - ஒருத்தர் லத்தியை ஆட்டியபடி விரட்டினார்.

‘‘வீட்டுக்குள்ளவே இருந்தா கஞ்சி கெடைக்குமா சார். மாசத்துக்கு ஏதாச்சும் ஒரு அமௌன்ட் குடுங்க சார். அதுக்குமேல வெளீல வந்தா துப்பாக்கியக் கொண்டி சுட்டுப் போடுங்க சார்..! சும்மா, ஒக்காராத, நிக்காதன்னுட்டு’’ - பால்காரர் முனங்கியபடி சைக்கிளை நகர்த்தினார்.

‘‘லூசாயா அவெ!’’ பால்காரரைப் பார்த்து தமக்குள் கேட்டபடி போலீஸ்காரர்களின் பைக்குகள் நகர...

தோழர்கள் மறுபடியும் வந்தனர்.

‘‘நீங்க இங்கதே நிக்கிறீகளா... ஒரு சின்ன உதவி பண்ணணும். மாரியப்பெ வீட்ல ஆள் இல்லை. அவங்க வந்தவிட்டி இந்தப் பொருளை ஒப்படைச்சிட முடியுமா? ஒங்கமேல நம்பிக்கவெச்சுத் தாரோம்.’’

நிவாரணப்பொருள்கள் அடங்கிய பையைக் கொடுத்த தோழர், புகைப்படம் எடுக்கும் போது ஐநூறு ரூபாய்த்தாள் ஒன்றையும் சேர்த்துக் கொடுத்தார், ‘‘இதையும் மறக்காமக் குடுத்துருங்க ப்ளீஸ்...’’ என்றார்.

‘‘கொஞ்சம் சிரிங்கம்மா’’ என்றார் போட்டோகிராபர்.

சரசுவும் மாடசாமியும் கண்கள் விரிய நின்றனர்.