Published:Updated:

``பாகுபலியில் பயன்படுத்திய கிளிக்கி மொழி முழுசா ரெடி!" - மதன் கார்க்கி ஷேரிங்ஸ்

Madhan Karky
Madhan Karky

`உலகத்தோட ஈஸியான மொழி' அப்படிங்கிறதுதான் கிளிக்கி மொழியோட அடிப்படை கான்செப்ட்.

புதிய மொழி ஒன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நிறைய பேருக்கு இருக்கும். புதிய மொழி ஒன்றை உருவாக்க முடியுமா என்றால், `சாத்தியமே இல்லை பாஸ்' என்ற பதில்தான் வரும். ஆனால், முற்றிலும் புதிதாக ஒரு மொழியை உருவாக்கியிருக்கிறார் பாடலாசிரியர் மதன் கார்க்கி. பாகுபலி படத்தில் காளகேயர்கள் பயன்படுத்தும் `கிளிக்கி' மொழியை இலக்கண விதிகளோடு முழுவதுமாக உருவாக்கியிருக்கிறார்.

மதன் கார்க்கி
மதன் கார்க்கி

ஹாலிவுட்ல இந்த மாதிரிப் படங்கள் அல்லது சீரிஸ்க்கென்றே தனியா மொழி உருவாக்கியிருக்காங்க. இந்தியாவுல பாகுபலியிலதான் முதன்முதலாக அப்படி ஒரு முயற்சி முன்னெடுக்கப்பட்டது. தற்போது அதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் இருக்கிறார்கள் மதன் கார்க்கி அன்ட் கோ.

"பாகுபலி படம் பண்றப்போ அந்தப் படத்துக்குத் தேவையான அளவுல 700 வார்த்தைகள், 40 இலக்கண விதிகள் மட்டும் உருவாக்கினேன். அந்தப் படத்தைப் பார்த்துட்டு நிறைய பேர் இந்த மொழிய கத்துத்தர முடியுமானு கேட்டாங்க. அதற்கப்புறம் தான் இந்த மொழி மேற்கொண்டு உருவாக்கலாமேனு யோசனை வந்துச்சு. நிறைய மொழிகள் கத்துக்கிறதுக்குக் கடினமா இருக்கும். அப்படி கடினமான விஷயங்கள் நிறைய இருக்கும் போது, கத்துக்கிறத பாதியிலேயே கைவிடுறவங்களும் நிறைய பேர் இருப்பாங்க. அதுனால நாமே இருக்கிறதுலையே சுலபமான மொழிய உருவாக்கக் கூடாதுனு யோசனை பண்ணேன். அதுனால மற்ற மொழியில நாம எதை எல்லாம் கஷ்டம்னு நினைக்கிறேமோ அது எதுவும் இல்லாம கிளிக்கிய வடிவமைச்சேன்.

மீண்டும் பாகுபலி!

ஆங்கிலம் கத்துக்கணும்னா 52 ஸிம்பல் தெரியணும், ஒரே எழுத்துக்கு இடங்களைப் பொறுத்து ஒலி வடிவமும் மாறுபடும். தமிழ்னு எடுத்துக்கிட்டா 110 ஸிம்பல்ஸ் தெரியணும். கிளிக்கி கத்துக்க வெறும் 22 ஸிம்பல்ஸ் தெரிஞ்சா போதும். கிளிக்கிய முழுசா எழுத படிக்க முடியும்."

கிளிக்கிக்கென்று தனியாக எண் வடிவங்களும் உருவாக்கியிருக்கிறார்கள். கிளிக்கி எண்களைக் கற்றுக்கொள்ள 2 நிமிஷம் போதும், கிளிக்கி எழுத்துகளை முழுமையாகக் கற்றுக் கொண்டு எழுத ஒரு மணிநேரம் போதும் என தம்ஸ் அப் காட்டுகிறார் கார்க்கி. இதில் இருக்கின்ற இலக்கணங்களும் மிகவும் எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ளும்படிதான் வடிவமைத்திருக்கிறார்.

"எழுத படிக்கறது கஷ்டமா இருக்குனு சிலருக்கு இயல்புலேயே இருக்கும். அவங்களும் சுலபமா கத்துக்கிற மாதிரிதான் இதை வடிவமைச்சிருக்கேன். `உலகத்தோட ஈஸியான மொழி' அப்படிங்கிறதுதான் கிளிக்கி மொழியோட அடிப்படை கான்செப்ட்.

Kiliki Language
Kiliki Language

கிளிக்கிய நிறைய பேர கத்துக்க வெச்சு எவ்ளோ நேரத்துல கத்துக்கிறாங்கனு சோதனை பண்ணோம். குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் நிறைய பேர வெச்சு டெஸ்ட் பண்ணதுல எல்லாராலையும் ஒரு மணி நேரத்துல இந்த மொழிய கத்துக்க முடிஞ்சது. அப்புறம் கிளிக்கி மொழிய கத்துக்க விருப்பப்படுறவங்களுக்காக 'Kiliki.in' அப்படிங்கிற பேர்ல ஒரு வலைதளத்தை உருவாக்கியிருக்கோம். அந்த வலைதளத்துல எழுத்துகளை எப்படி உச்சரிக்கணும், ஆங்கிலத்துல இருந்து கிளிக்கி மொழிக்கு ஒரு சொல் அல்லது வரியை மாத்துறதுக்கான கருவி, அப்புறம் இந்த மொழிய சுலபமா கத்துக்கிறதுக்கான விளையாட்டுகள்னு நிறைய விஷயங்களைச் சேர்த்திருக்கோம். கிளிக்கி மொழிக்கான அகராதியும் அந்த வலைதளத்துல இருக்கும். அவை தவிர, கிளிக்கி சம்பந்தமான காணொலிகளையும் நீங்க அங்க பார்க்கலாம்."

ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்ற மாதிரி மொழிகளும் தம்மைத் தாமே தகவமைத்துக்கொள்ள வேண்டும். தற்போது நம்ம இருப்பது டெக்னாலஜிக்கல் எரா. இந்தக் காலத்துக்கு ஏற்றவாறு தம்மைத் தகவமைத்துக் கொள்ளாத மொழிகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. இதன் காரணத்தினாலேயே கிளிக்கி மொழியைக் கணினியிலும் கொண்டு வந்திருக்கிறார்கள்.

"கிளிக்கிய மற்ற மொழிகள் மாதிரி கணினிலயும் டைப் பண்ண முடியும். அதுக்கேத்த மாதிரி மூன்ற விதமான ஃபான்ட்கள் வடிவமைச்சிருக்கோம். கிளிக்கி மொழியிலேயே ஆண்ட்ரியா ஒரு பாடலும் பாடியிருக்காங்க. அதுவும் கூடிய சீக்கிரம் வெளியிடுவோம்" என்றார் நம்பிக்கையாக.

rajamouli and madhan karky with kiliki
rajamouli and madhan karky with kiliki

மேலும், "அந்த வலைதளத்தையும் கிளிக்கி மொழியையும் இன்று (பிப்ரவரி 21) இயக்குநர் ராஜமௌலி வெளியிடுகிறார். அதன்பிறகு எல்லாருமே அந்த வலைதளத்தைப் பயன்படுத்தலாம்" என்ற அவரின் முயற்சிக்குப் பாராட்டுகள் கூறி விடை பெற்றோம்.

அடுத்த கட்டுரைக்கு