Published:Updated:

மதுரை தெருக்களின் வழியே - 1: தென்னிந்தியாவின் ஏதென்ஸ் மதுரையின் வரலாற்றுத் தடங்கள் ஒரு பார்வை!

பழங்கால மதுரை

மதுரை, காலவெள்ளத்தில் தாக்குப்பிடித்து நிலைத்திருப்பதற்கான காரணங்கள் ஆய்விற்குரியன. பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு அரசியல் பின்புலங்களில் முரண்பாடான மாற்றங்கள் ஏற்பட்டாலும் எல்லாவற்றையும் உள்வாங்கிக்கொண்டு நிமிர்ந்து நிலைத்து நிற்கிறது மதுரை.

மதுரை தெருக்களின் வழியே - 1: தென்னிந்தியாவின் ஏதென்ஸ் மதுரையின் வரலாற்றுத் தடங்கள் ஒரு பார்வை!

மதுரை, காலவெள்ளத்தில் தாக்குப்பிடித்து நிலைத்திருப்பதற்கான காரணங்கள் ஆய்விற்குரியன. பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு அரசியல் பின்புலங்களில் முரண்பாடான மாற்றங்கள் ஏற்பட்டாலும் எல்லாவற்றையும் உள்வாங்கிக்கொண்டு நிமிர்ந்து நிலைத்து நிற்கிறது மதுரை.

Published:Updated:
பழங்கால மதுரை
வரலாறு என்ற சொல்லின் பின்னர் பொதிந்திருக்கிற விநோதங்கள் அளவற்றவை. மனித இருப்பில் சொற்களை முன்வைத்துத் தொடங்கிய தேடுதலும் பயணமும் சுவராஸ்யமானவை. கண் எதிரே விரிந்திருக்கிற நிலவெளியை நினைவுக்குள் தகவமைத்தல் மூலம் ஓவ்வொருவரின் நினைவுகளும் ததும்புகின்றன. 'மதுரை' என்ற சொல், சிறுவனான எனக்குள் ஏற்படுத்திய பிரமிப்பு இன்னும் தொடர்கிறது. காலந்தோறும் மதுரை நகரம் உருவாக்கியுள்ள பிம்பங்களின் வழியாகப் பயணித்த ஈரம் கசிந்திடும் எனது அனுபவங்கள், முடிவற்று நீள்கின்றன. மதுரை என்பது வெறுமனே பிரமாண்டமான கோட்டைகள், மகால்கள், மன்னர்கள், கோயில்கள், கட்டடங்கள், வீதிகள் மட்டுமல்ல. தெருவெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிற மனிதர்கள்தான் முக்கியமானவர்கள். அவர்கள்தான் காலந்தோறும் வரலாற்றைச் சாத்தியப்படுத்துகின்றனர். கடந்த அறுபதாண்டுகளில் எதிர்கொண்ட மதுரை பற்றிய என்னுடைய மனப்பதிவுகள், ஒருவகையில் வரலாறுதான். மதுரை நகரில் கடந்த கால வரலாற்று நிகழ்வுகளும் சமகாலத்தியச் சம்பவங்களும் காற்றில் மிதக்கின்றன. எனது நினைவுத்தடத்தின் வழியாக விரிந்திடும் காட்சிகள், மதுரையைப் பற்றிய புதிய வரலாறு.
ஒளிவள்ளத்தில் மதுரை தெப்பக்குளம்
ஒளிவள்ளத்தில் மதுரை தெப்பக்குளம்

1. மதுரையின் வரலாற்றுத் தடங்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழ் மொழியினால் அடையாளப்படுத்தப்படுகிற தமிழக நிலவெளியில் மதுரை என்ற நகரம், ஒப்பீட்டளவில் தனித்துவமானது. வரலாற்றுப் பழைமையான இந்திய நகரங்களில் மதுரை நகரம் பண்பாட்டுச் சிறப்புடையது. சங்க காலத்திற்கு முன்னரே வைகை ஆற்றங்கரையில் செழிப்பான நாகரிகத்துடன் விளங்கிய மதுரை, தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்று போற்றப்படுகிறது. மதுரையைச் சுற்றியுள்ள பதினான்கு குன்றுகளில் இயற்கையான குகைகளைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்த ஜைனத் துறவியர் வாழ்ந்த இடங்களில் கி.மு. 500 முதல் கி.பி. 300 வரையிலான தமிழிக் கல்வெட்டுகள் (தமிழ் பிராமி) காணப்படுகின்றன.

இன்றைய மதுரை நகருக்கு 13 கி.மீ. தொலைவில் உள்ள கீழடி என்ற இடத்தில் தொல்லியல் துறையினர் அண்மையில் நடத்திய அகழ்வாய்வுகள், வரலாற்றில் புத்தொளியைப் பாய்ச்சியுள்ளன. வைகை ஆற்றங்கரையோரம் செழித்திருந்த கீழடிப் பண்பாட்டின் காலம் கி.மு. 6 முதல் கி.மு. 3 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலம் என்று கரிம மாதிரிகளை ஆய்வுக்குட்படுத்திய அமெரிக்காவிலுள்ள பீட்டா பகுப்பாய்வுச் சோதனை ஆய்வகம் அறிவித்துள்ளது. அகழ்வாய்வில் கண்டறியப்பட்ட செங்கல் கட்டுமானங்களும் உயர் மதிப்புடைய தொல் பொருள்களும் நகரமயமாதல் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் தொடங்கியுள்ளதை உறுதி செய்கின்றன.

கீழடி
கீழடி

கீழடியைப் பண்டைய மதுரை என்று கருதிட இயலுமா? யோசிக்க வேண்டியுள்ளது. வைகை ஆற்றில் இருந்து கீழடி 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கீழடி வரலாற்றுப் பழைமையான மதுரை நகருக்கு அருகில் அமைந்திருப்பது கவனத்திற்குரியது. வைகை ஆறு பெருக்கெடுத்து ஓடியபோது செல்லும் ஆற்றுப் பாதை மாறியிருக்க வாய்ப்புண்டு. ஆற்றங்கரையோரம் இருந்த நகரம் வெள்ளத்தினால் சிதலமாகிட அங்கிருந்து புலம்பெயர்ந்தோர் புதிய நகரத்தைக் கட்டமைத்தல் நடைபெற்றிருக்கும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சங்க இலக்கியப் படைப்புகளான மதுரைக்காஞ்சி, புறநானூறு, சிறுபாணாற்றுப்படை, பரிபாடல் போன்ற நூல்களில் மதுரை என்ற பெயரும் மதுரை நகர் பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. புறநானூறு, சங்க கால மதுரை நகரத்தைத் தமிழ்கெழுகூடல் எனக் குறிப்பிடுகிறது. "தமிழ் நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை" என்று நல்லூர் நத்தத்தனார், சிறுபாணாற்றுப்படை நூலில் மதுரையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் ஓங்குசீர் மதுரை, மதுரை மூதூர் மாநகர், தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரை, மாண்புடை மரபின் மதுரை, வானவர் உறையும் மதுரை, பதிவெழுவறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர் போன்ற அடைமொழிகளால் மதுரையைச் சிறப்பிக்கிறார்.
டேனியல்-கள் வரைந்த மதுரை கோபுரம்
டேனியல்-கள் வரைந்த மதுரை கோபுரம்

கிரேக்க, ரோமானிய வரலாற்றிலும் மதுரை பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. ரோமானிய வரலாற்று ஆய்வாளர்களான இளைய பிளினி (கி. மு. 61- கி.பி. 112), தாலமி (கி.மு.90- கி.பி.68), கிரேக்கப் புவியியலாளர் இஸ்ட்ராபோ (கி.மு. 64- கி.பி. 24) போன்றோர் எழுதியுள்ள வரலாற்றுக் குறிப்புகளில் மதுரை இடம் பெற்றுள்ளது. தமிழக வரலாற்றில் மன்னர்களின் தலைநகராகப் பல்லாண்டுகள் செழித்தோங்கிய முக்கியமான சில நகரங்கள் இன்று அடையாளமற்றுப் போய்விட்டன; சில அழிந்துவிட்டன. ஆனால், மதுரை நகர் 2,600 ஆண்டு கால வரலாற்றில் எதிர்நீச்சல் போட்டுத் தன்னிருப்பைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது. கடந்த காலத்தில் கூடல், நான்மாடக்கூடல், திருஆலவாய் போன்ற பெயர்களால் குறிப்பிடப்படும் மதுரை நகரம், இரண்டாயிரமாண்டுகளைக் கடந்து இன்றளவும் நிலைத்திருப்பது ஒருவகையில் சாதனைதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மதுரை, காலவெள்ளத்தில் தாக்குப்பிடித்து நிலைத்திருப்பதற்கான காரணங்கள் ஆய்விற்குரியன. பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு அரசியல் பின்புலங்களில் முரண்பாடான மாற்றங்கள் ஏற்பட்டாலும் எல்லாவற்றையும் உள்வாங்கிக்கொண்டு நிமிர்ந்து நிலைத்து நிற்கிறது மதுரை.

யோசிக்கும்வேளையில் மதுரையின் முகமானது பன்முகத்தன்மை மிக்கது என்று கண்டறிந்திட முடியும். ஒரு நகரம் என்பது வெறுமனே கட்டடங்களும் தெருக்களும் நிரம்பிய இடமும் வெளியும் சார்ந்தது மட்டுமல்ல, ஆறு தன் பாதையை மாற்றிக்கொள்வது போல, மதுரை போன்ற பழைமையான நகரமும், அவ்வப்போது தனது இருப்பிடத்தை மாற்றி இருந்திருக்க வாய்ப்புண்டு. பழம் பெருமையை மட்டும் முன்னிறுத்திக்கொண்டு புறத்திலிருந்து வரும் அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்வது நடைமுறையில் ஒரு நகரத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். சங்க காலப் பாண்டியர்கள், பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சிகள் மதுரையில் நிலவியதும் பின்னர் சோழப் பேரரசின் ஆதிக்கம் ஏற்பட்டதும் தனி வரலாறு. மதுரையில் ஜைனத் துறவியரின் கல்வி தானம் ஒருபுறமும் அவர்கள் நிறுவிய தமிழ்ச் சங்கத்தின் பணிகள் இன்னொருபுறமும் தனித்து விளங்குகின்றன.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

பிற்காலத்தில் சைவ சமயத்தின் மேலாதிக்கம் ஏற்பட்டபோது இறையனார் அகப்பொருள் விவரிக்கிற மூன்று தமிழ்ச் சங்கங்கள் பற்றிய சொல்லாடல், ஜைன சமயத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட புனைவாகும். அன்பே சிவம் என்று போதிக்கிற சைவ சமயத்தினர், எண்ணாயிரம் ஜைனத் துறவியரைக் கழுவேற்றிக் கொலை செய்தனர் என்ற தகவல், சைவத்தைப் போற்றுவதற்காக மிகையாகப் புனையப்பட்ட கதையாடல். மதுரை நகரில் சிவன் 64 திருவிளையாடல்களை நிகழ்த்தினார் என்று பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணம் மூலம் சித்திரிக்கிற கதைகள் அரசியல் பின்புலமுடையன. மதுரையில் நடைபெற்ற நாயக்க மன்னர்களின் ஆட்சியின்போது ஆட்சியாளர்களின் அதிகாரம் மற்றும் பாளையக்காரர்களின் கூடுதல் வரி வசூலித்தல் காரணமாக மதுரை நகர மக்களிடம் ஏற்பட்ட முரண்களை அமைதிப்படுத்திட திருவிளையாடல் புராணம் எழுதப்பட்டது. அதியற்புதப் புனைவுகள் நிரம்பிய சிவன் பற்றிய புனைவுகள் முழுவதும் மதுரையில் நடைபெற்றன என்ற நம்பிக்கையை ஏற்படுத்திடும்வகையில் அந்தக் கதைகள் இன்றளவும் மீனாட்சியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன.

கி.பி.1333 இல் மதுரை நகரில் டில்லி சுல்தானிய அரசு ஏற்பட்டது என்ற தகவல் பரிசீலனைக்குரியது. அன்றைய காலகட்டத்திலிருந்து பல்வேறு அரசியல் மோதல்கள், போர்கள் மதுரையை மையமாக வைத்து நடைபெற்றன. கி.பி.1370-ம் ஆண்டு விஜயநகரப் பேரரசின் வேந்தன் முதலாம் புக்கரின் மகன் இரண்டாம் கம்பண்ணர், மதுரையில் ஆட்சி செய்த சுல்தானைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினான். கி.பி. 1529-ல் மதுரையில் ஏற்பட்ட தெலுங்கர்களான நாயக்கர்கள் ஆட்சியின்போது, தமிழக நிலப்பரப்பு, பல்வேறு பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. பாளையக்கார முறை என்பது படைமானியத்துடன் தொடர்புடையது. ஒரு குறிப்பிட்ட பகுதிக்குப் பொறுப்புடையவனான பாளையக்காரன், மன்னனைப் போலவே அதிகாரம் செலுத்தினான். மக்களிடமிருந்து வரி வசூலிப்பது தீவிரமானது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

உழவர்கள் கசக்கிப் பிழியப்பட்ட நிலையில், நிலவுடைமையாளர்களான தமிழர்களின் பொருளியல் நிலை, பின்னடைவிற்குள்ளானது. தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற நிலை நிலவியது. தமிழகத்தில் ஏற்பட்ட வேற்று மொழியினரின் ஆட்சியின்போது, வைதிக சநாதன மதம் செல்வாக்குடன் விளங்கியது. சம்ஸ்கிருத மொழியானது நாயக்கர், மராட்டியர் ஆட்சியின்போது அரசின் ஆதரவினால் செழித்தோங்கியது. அன்றைய காலகட்டத்தில் பெரும்பான்மையான மக்கள் தமிழைப் பேசினாலும், வேதக் கல்விக்குத் தரப்பட்ட முன்னுரிமை தமிழுக்குத் தரப்படவில்லை. தமிழகத்தில் வேற்று மொழியினரின் ஆட்சியில் உருது, தெலுங்கு, மராட்டி போன்ற மொழிகள் அரசின் அரவணைப்பினால் வளர்ச்சியடைந்தன; தமிழ் மொழியானது புறக்கணிக்கப்பட்டது. இஸ்லாமியர்கள், நாயக்கர்கள், ஆங்கிலேயர்கள் என வேற்று மொழியினரின் அதிகாரத்தின் கீழ் மதுரைக்காரர்கள் பல நூற்றாண்டுகள் வாழ்ந்திடும் சூழல் ஏற்பட்டது. அப்பொழுது தமிழ் மொழியானது தன்னை நிலைநிறுத்திடப் பெரும் பாடுபட்டது. அந்த நிலை இன்றளவும் தொடர்வது வேதனையானது.

நாயக்க மன்னர்கள் பெரிதும் வைணவக் கடவுள்களுக்கும் கோயில்களுக்கும் முன்னுரிமை தந்தனர். சைவத்தை முன்னிறுத்திச் சிவனைப் போற்றி வழிபட்ட புலவர்கள், தங்களுடைய எதிர்ப்புணர்வினைப் படைப்புகளில் பதிவாக்கியுள்ளனர். குறம், பிள்ளைத்தமிழ், மாலை, அந்தாதி, கலம்பகம் எனப் பல்வேறு சிற்றிலக்கியங்களைப் பாடியுள்ள குமரகுருபரர், அவருடைய சமகாலத்திய மன்னர்களையோ அதிகாரிகளையோ புகழ்ந்து எதுவும் பாடவில்லை. அவர், அரசர் என்ற நிலையில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களைத் தமிழ் வேந்தர்கள் எனக் குறிப்பிடுவதுடன், தமிழ், தமிழ் வளர்த்த மதுரை எனப் பழம்பெருமையினைப் போற்றிப் பாடியுள்ளார். மதுரைக் கலம்பகம், மதுரை மீனாட்சியம்மை குறம், மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரைச் சொக்கநாதர் உலா, திருவிளையாடல் புராணம், மதுரைப் பதிற்றுப் பத்தாந்தாதி, மதுரை இரட்டை மணிமாலை போன்ற பழந்தமிழ் இலக்கியப் படைப்புகள் மதுரை நகரில் எழுந்தருளியிருக்கிற மீனாட்சியையும் சொக்கநாதரையும் முன்வைத்துப் படைக்கப்பட்டுள்ளன.

சித்திரை விழா
சித்திரை விழா

மதுரையில் இன்றளவும் எந்தவொரு மதத்தின் ஆதிக்கமும் மத அடிப்படைவாத அரசியலும் குறிப்பிட்டுச் சொல்லுமாறு இல்லை. கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், இந்துக்கள் அவரவர் மத நம்பிக்கை சார்ந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். என்றாலும் மதுரை என்றால் 'கோயில் நகரம்' என்று குறிப்பிடுவது பொதுப்புத்தியில் உறைந்துள்ளது. மதுரை நகரை ஆட்சி செய்கிறவர் மீனாட்சி அம்மன் என்ற நம்பிக்கை மதுரைக்கார்களிடம் நிலவுகிறது. மதுரையில் எப்பவும் பெண் ஆட்சிதான் என்று பலரும் நம்புகின்றனர். 'எங்க வீட்டில் எப்பவும் மதுரைதான்' என்று சொல்கிற ஆண்கள் மனைவியின் செயல்பாடுகளுக்கு முதலிடம் தந்து ஏற்றுக்கொண்டவர்கள். மீனாட்சியின் இணையரான சொக்கநாதருக்குக் கோயிலில் இரண்டாமிடம்தான்.

சித்திரைத் திருவிழாவின்போது எட்டாம் நாளில் நடைபெறும் முடி சூட்டும் விழாவில் மீனாட்சியம்மன் பட்டத்தரசியாகிறார். மறுநாள் இரவில் திக்விஜயம் எனப்படும் நகர உலாவின்போது வெள்ளிச் சிம்மாசனத்தில் அமர்ந்து காட்சி தருகிற மீனாட்சியம்மன் முன்னர் பெண் குழந்தைகளும் பதின் பருவப் பெண்களும் மீனாட்சி போல வேடமிட்டு உற்சாகத்துடன் நடந்து வருகின்றனர். இளம் பெண்கள் குதூகலத்துடன் கோலாட்டம் அடித்து ஆடுகின்றனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருவிழா
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருவிழா
லட்சக்கணக்கில் பெண்கள் கூடுகிற மீனாட்சியம்மனின் நகரத்து உலா வெறுமனே கடவுள் நம்பிக்கை சார்ந்தது மட்டுமல்ல. மீனாட்சியம்மன் பெருந்தெய்வம் என்ற வரையறையில் வைதிக ஆகம விதிகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும் மதுரைப் பெண்கள், மீனாட்சியை ஆதித்தாய் போலக் கருதி வழிபடுகின்றனர் என்று சொல்லத் தோன்றுகிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism