கட்டுரைகள்
ஆன்மிகம்
சினிமா
பேட்டிகள்
Published:Updated:

கவிதை : புன்னகை வெளிச்சம்

கவிதை
பிரீமியம் ஸ்டோரி
News
கவிதை

கண்களின் மொழி புரியாத வாடிக்கையாளர்களுக்கு உன் இனிமையை எப்படித் தெரிவிப்பாய்?

ட்சத்திர விடுதியில்

வரவேற்பாளினியாக இருக்கும்

சிநேகிதியிடம் கேட்டேன்

‘‘உன் வேலைகள் எப்படிப் போகின்றன?’' என்று

முகக்கவசத்திற்குப் பின்னே

அவள் பிரகாசமான கண்களால் சிரித்தாள்

லாக் டௌனுக்குப்பிறகு

அவள் கண்கள்

மிகவும் பிரகாசமாக இருப்பதை

அப்போதுதான் கண்டேன்

‘‘எப்படி உன் கண்கள் திடீரென

இவ்வளவு பிரகாசமாக இருக்கின்றன?’’

என்றேன் வியப்புடன்

இப்போது அவள்

முகக்கவசத்திற்குப் பின்னே

வாய்விட்டுச் சிரித்தாள்

கவிதை : புன்னகை வெளிச்சம்

‘‘எங்கள் நிறுவனம்

வரவேற்பாளினிகளின் கண்களுக்கு

விசேஷப் பயிற்சி அளிக்கின்றன

ஒரு ரிஷப்சனிஸ்ட்

தன் புன்னகையால்தான்

இந்த மொத்த வணிகத்தையும் கையாள்கிறாள்

எல்லாவிதமான மனிதர்களுக்கும்

அவளிடம் விதவிதமான கச்சிதமான

புன்னகைகள் இருக்கின்றன

களைப்புடன் அவளது மேசைக்குமுன்

வரும் மனிதர்களுக்கு

அவள் ஒரு தேநீரைப்போல

புன்னகையைத் தருகிறாள்

அந்தப் புன்னகைதான்

இந்த இடத்தில் நாம் இளைப்பாறமுடியும் என்ற

முதல் நம்பிக்கையை விதைக்கின்றன

ஆனால் கொள்ளை நோய்க்கால முகமூடிகள்

எங்கள் புன்னகைகளை மறைத்துவிட்டன

கவிதை : புன்னகை வெளிச்சம்

ஆகவே நாங்கள்

இப்போது கண்களை மகிழ்விக்கும் கருவிகளாகப்

பயன்படுத்தப் பயிற்றுவிக்கப்படுகிறோம்

கண்களில் விருந்தோம்பலின்

மிகையுணர்ச்சிகளை வெளிப்படுத்த

எங்களுக்குக் கற்றுத்தரப்படுகின்றன

கண்களால் வாடிக்கையாளர்களை

இது உங்களுக்கான இடம் என்பதை

நம்ப வைக்கிறோம்

புன்னகையுடன் கண்கள் சிரிக்கும்போது

கண்களுக்குக் கூடுதல் பணிச்சுமை ஏதுமில்லை

ஆனால் புன்னகைகள் மறைக்கப்பட்டுவிட்டபிறகு

கண்கள் உதடுகளாகவும் மாறவேண்டியிருக்கிறது

புன்னகைகள் பேசும் வார்த்தைகளையும் சேர்த்து

கண்கள் பேச வேண்டியிருக்கின்றன

கண்களில் செயற்கை வானவில்களையும்

மின்னல்களையும் உருவாக்க வேண்டியிருக்கிறது

வீடு திரும்பும்போது

கண்கள் மிகவும் களைத்துவிடுகின்றன’’

என்றாள் ஆயாசத்துடன்

‘‘கண்களின் மொழி புரியாத வாடிக்கையாளர்களுக்கு

உன் இனிமையை எப்படித் தெரிவிப்பாய்?’’

என்றேன் வேடிக்கையாக

கவிதை : புன்னகை வெளிச்சம்

‘‘அதற்கும் பயிற்சிகள் உண்டு

பொதுவாக ஒரு ரிஷப்ஷனிஸ்ட்

அதிகம் பேச வேண்டியதில்லை

ஆனால் இப்போது

முகக்கவசங்களுக்குப் பின்னே

கூடுதலாக வார்தைகள் தேவைப்படுகின்றன

மேலும் புன்னகையில்லாத சூழலில்

தோள்களை எப்படி அசைக்கவேண்டும் என்பதிலும்

கரம் கூப்பி எப்படி வணங்கவேண்டும் என்பதிலும்கூட

சில கூடுதல் பயிற்சிகள் தரப்படுகின்றன

முன்பெல்லாம் புன்னகை என்பது

சூரியனைப்போல ஒரு மையக்கோளாகவும்

கண்களும் கைகளும் சொற்களும்

துணைக்கோள்களாகவும் இருந்தன

புன்னகை இல்லாத உலகில்

இப்போது எல்லாவற்றையும் மிகையாகப்

பயன்படுத்த வேண்டிருக்கிறது’’ என்றாள் அலுப்புடன்

ஒரு புன்னகை அவ்வளவு எளிதாக

ஒருவரை ஒரு கணம் அணைத்துக்கொள்கிறது

ஒரு புன்னகை அவ்வளவு நேர்த்தியாக

ஒருவரை ஆசுவாசப்படுத்துகிறது

ஒரு புன்னகை காலகாலமாக

சொற்களற்ற அன்பின் நிமித்தமாக

மலர்ந்துகொண்டிருக்கிறது

ஒரு புன்னகையின் நிலவு

உதிக்காதபோது

இந்த இருளில்

எத்தனை எத்தனை சிறிய மெழுகுவத்திகளை

ஏற்றி வைக்கவேண்டியிருக்கிறது