Published:Updated:

மணவாழ்க்கை உங்கள் சாய்ஸ் : நிச்சயதார்த்தம் டு திருமணம் இடைப்பட்ட நாள்கள் இதற்காகத்தான்!

ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

பிரீமியம் ஸ்டோரி
நிச்சயதார்த்தத்துக்கும் திருமணத்துக்கும் இடைப்பட்ட காலமானது, மணமக்கள் தங்களை மணவாழ்க்கைக்குத் தயார் செய்வதற்கான காலம். இந்த விஷயத்தில் தற்காலத்தில் இந்தியாவில் என்ன நடக்கிறது...

இந்தியாவுக்குள் நுழையும்முன், அமெரிக்கா போன்ற நாடுகளில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அங்கு திருமணத்துக்கு முன்பே ‘சகலத்தையும்’ முடித்திருக்கும் காதலர்கள், திடீரென்று திருமண மூடுக்கு வந்தவுடன், ஒருவன் ஒரு பாரிலோ, பார்க்கிலோ முழங்காலிட்டு, `ஐ வான்ட் டூ மேரி யூ…' என்று பெண்ணின் கையில் எங்கேஜ்மென்ட் மோதிரத்தை அணிவிப்பான். அதன்பிறகு அவர்கள் செய்யும் முதல் காரியத்தை படித்தவுடன் எனக்குப் புல்லரித்துவிட்டது.

மணவாழ்க்கை உங்கள் சாய்ஸ் : நிச்சயதார்த்தம் டு திருமணம் இடைப்பட்ட நாள்கள் இதற்காகத்தான்!

முதலில் அவர்கள் இதுகுறித்து தங்கள் பெற்றோருக்குத் தகவல் தெரிவிப்பார்கள். ``இந்தப் பொண்ணுக்கு நான் எங்கேஜ்மென்ட் ரிங் போட்டுட்டேன்” என்று சொல்ல… பெற்றோர் சந்தோஷத்துடன், ``வாவ்… ஹௌ ஸ்வீட்... வீ ஆர் வெரி ஹேப்பி…” என்று ஷாம்பெய்ன் பாட்டிலை ஓப்பன் செய்வார்கள்.

அதற்குப்பிறகு அந்த எங்கேஜ்மென்ட் மோதிரத்தை ஒரு நல்ல இன்ஷூரன்ஸ் கம்பெனியில் இன்ஷூயூர் செய்வார்கள். அந்த ரிங்குடன் செல்ஃபி எடுத்து இன்ஸ்டாகிராமில் போட்டு சமூகத்துக்குத் தகவலைத் தெரிவிப்பார்கள்.

திருமணத்துக்கு அழைப்பதற்காக கெஸ்ட் லிஸ்ட் தயாரிப்பது, ஒரு `ஷார்ட் டைம் மேரேஜ் பிரிப்பரேட்டரி கோர்ஸ்' சேர்வது, அன்பளிப்புப் பொருள்களுக்காக ரிஜிஸ்டர் செய்வது என்று முன்பு நாம் முற்றிலும் கேள்விப்படாத ஏகப்பட்ட சமாச்சாரங்கள் உள்ளன, திருமண விஷயத்தில்.

நம்மூரில் கதையே வேறு. நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் முதலில் பையனும் பெண்ணும் காது சுடச்சுட மொபைலில் பேசிக்கொண்டே ………………… இருப்பார்கள். குறிப்பாக நள்ளிரவில் பெண்கள், `சீ…', `ம்…' என்ற இரண்டே எழுத்துகளை மட்டும் பயன்படுத்தி விடிய விடிய பேசுவதெல்லாம் ஒரு தனிக் கலை.

இது போரடித்தால் அதிகபட்சம், `ஏய்…', `ம்ஹூம்…' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள். இடையிடையே சலங்கைமீது கண்ணாடி விழுந்து உடைந்தாற் போல் `க்ளிங்…. க்ளிங்' என்று சிரிப்பார்கள்.

மணவாழ்க்கை உங்கள் சாய்ஸ் : நிச்சயதார்த்தம் டு திருமணம் இடைப்பட்ட நாள்கள் இதற்காகத்தான்!

இவ்வாறு மாப்பிள்ளையும் பெண்ணும் ஒரு பக்கம் ரொமான்ஸை வளர்த்துக்கொண்டு செல்ல... பெரியவர்களுக்கிடையே பஞ்சாயத்துகள் ஆரம்பமாகும். அதிலும் பெண்ணுக்குத் திருமணப் புடவையை எந்த பிரச்னையுமின்றி நல்லபடியாக எடுத்துவிட்டால், நீங்கள் மிகப்பெரிய கண்டத்தை கடந்துவிட்டீர்கள்.

மாப்பிள்ளை வீட்டில், “எங்க பாட்டி காலத்துலேருந்து கல்யாணப் புடவைன்னா காஞ்சிபுரத்துலதான் எடுப்போம்” என்று கூற, பெண் வீட்டில் திருபுவனத்துலதான் எடுப்போம் என்று அடம்பிடிக்க... கடைசியில் பையன் தலையிட்டு, ``ரெண்டு பேருக்கும் வேண்டாம். சென்னையிலேயே எடுக்கலாம்” என்று கூற… அரைமனத்துடன்தான் ஜவுளிக்கடைக்கு வருவார்கள்.

மாப்பிள்ளை வீட்டில் கல்யாணப் புடவை பட்ஜெட், `ஐம்பதாயிரம் ரூபாய்' என்று சொன்னால், பெண் வீட்டில், ஐம்பதாயிரத்துக்கு மேல் உள்ள புடவைகள் மட்டுமே ஏன் பிடிக்கிறது என்பதற்கான காரணத்தை இன்றுவரையிலும் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

மாப்பிள்ளையின் அம்மா, இந்த பிராண்டு சேலைதான் பெஸ்ட் என்று சொல்வார். உடனே பெண், அந்த பிராண்டுதான் பெஸ்ட் என்பார் என்று நான் சொல்லாமலே உங்களுக்குத் தெரியும்தானே?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தப் பஞ்சாயத்தெல்லாம் முடிந்து மாமியார் கத்திரிப்பூ கலர் புடவையை வலியுறுத்த, பெண் லெமன் க்ரீனில் பிடிவாதமாக நிற்பார். நடுவே மாட்டிக்கொள்ளும் பையன் வெறுத்துப்போய் இனிமேல் ஜென்மத்துக்கும், கத்திரிக்காயும் எலுமிச்சையும் சாப்பிடவே கூடாது என்று வெளியே சென்று உட்காருவான்.

மணவாழ்க்கை உங்கள் சாய்ஸ் : நிச்சயதார்த்தம் டு திருமணம் இடைப்பட்ட நாள்கள் இதற்காகத்தான்!

அப்பா பின்னாலேயே சென்று, ``இதுக்கே அசந்துபோய் உக்காந்துட்டா எப்படி?” என்பார். அதற்கு பையன் ‘தேவர் மகன்’ கமல், சிவாஜியிடம் சொல்வதுபோல், ``என்னை விட்டுருங்கய்யா… நான் போறன்ய்யா… 200 வருஷம் பின்தங்கியிருக்கிற இந்த ஊர்ல நான் இருக்க விரும்பலங்கய்யா…” என்பான்.

உடனே அப்பாவும், ``200 வருஷம் பின்தங்கிதான் போயிட்டோம். ஒப்புக்கறேன். ஆனா, இந்த மாமியார் - மருமகள் பிரச்னை 2,000 வருஷமா இருக்கிற பிரச்னைய்யா... திடீர்னு அதையெல்லாம் தூக்கிப்போட்டுட்டு ஒத்துமையா வான்னா அவங்க எப்படி வருவாங்க... நீ படிச்சவனாச்சே… கூட்டிட்டு வா… ஆனா, நம்ப வீட்டுப் பொண்ணுங்க மெதுவாத்தான் வருவாங்க” என்பார் சிவாஜி ஸ்டைலில்.

“மெதுவான்னா எம்புட்டு மெதுவாய்யா? அதுக்குள்ளாட்டியும் நான் செத்துருவன் போலிருக்கு.”

“போ… செத்துப் போ… எல்லா பயபுள்ளையும் ஒரு நாளைக்கி சாகவேண்டியதுதான். இதுக்கே சாவறேன்னா எப்படி... இந்த மாதிரி கல்யாணத்துக்குப் பிறகு நீ நிறைய பார்க்க வேண்டியிருக்கும். நேத்து நான் பார்த்தேன். இன்னிக்கி நீ பார்க்குற. நாளைக்கு, உன் மவன் பார்ப்பான்… இதெல்லாம் என்ன பெருமையா... ஒவ்வொரு ஆம்பளையோட கர்மா…” என்று அப்பா முற்றிலுமாக சிவாஜியாக மாறியிருக்க… பையன் சைலன்ஸ் மோடுக்குச் சென்றுவிடுவான்.

இப்படி ஏற்படும் பல பிரச்னைகளைச் சமாளிப்பதே பையனுக்கும் பெண்ணுக்கும் பெரும் வேலையாக இருக்கும். உண்மையில், நிச்சயதார்த்தத்துக்கும் திருமணத்துக்கும் இடைப்பட்ட காலம், ஒரு காதல் காலம். இப்போதெல்லாம் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு பையனும் பெண்ணும் நன்றாக பேசிப் பழக, வெளியே சென்று வர அனுமதிக்கிறார்கள்.

மணவாழ்க்கை உங்கள் சாய்ஸ் : நிச்சயதார்த்தம் டு திருமணம் இடைப்பட்ட நாள்கள் இதற்காகத்தான்!

எனவே, வெட்டிப் பஞ்சாயத்துகளில் வீணடிக்காமல் பையனும் பெண்ணும் மனதளவில் நெருங்கி வர வேண்டும். அதற்கு இருவரும் தொடர்ச்சியாக, `சங்கீத ஸ்வரங்கள்… ஏழே கணக்கா?' பாட்டு போல் விடிய விடிய பேசித்தான் நெருங்கி வர வேண்டும்.

வீட்டில் ஏற்பாடு செய்யப்படும் திருமணமாக இருந்தால் மணமக்கள் இக்காலகட்டத்தில் காதலர்கள் போல் மாறிவிட வேண்டும். ஆனால், அப்போது வெறுமனே காதலாகவோ, ரொமான்டிக்காகவோ மட்டும் பேசிக்கொண்டிராமல் பின்வருமாறு பேசி, விவாதித்து சில விஷயங்கள் குறித்து தெளிவான ஒரு முடிவுக்கு வந்துவிட்டால், திருமணமான புதிதில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

 • இரு வீட்டினருக்கும் இடையே ஏற்படும் பிரச்னைகள் தொடர்பாக பையனும் பெண்ணும் பரஸ்பரம் ஒருவர் குடும்பத்தைப் பற்றி மற்றொருவர் குறைகூறுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் உங்களுக்குத்தான் அவர்கள் குடும்பம் புதிது. தற்போதைக்கு அவர்கள்மீது பெரிய அன்போ, பந்தமோ இருக்காது. ஆனால், பையனுக்கோ அல்லது பெண்ணுக்கோ அவர்களுடைய குடும்பம்தான் இத்தனை ஆண்டுக் காலம் அவர்களுடைய வாழ்க்கையின் அச்சாணியாக இருந்தது. உண்மையாகவே அவர்கள்மீது ஏதும் தவறு இருந்தால்கூட அதை எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே, மிகப் பெரிய பிரச்னையாக இருந்தால் தவிர, கூடுமான வரை இதுபோன்ற சிக்கலான உரையாடல்களைத் தவிர்க்கவும்.

 • இப்போது பெரும்பாலும் ஆண், பெண் இருவரும் வேலை செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். எனவே, அந்த மாப்பிள்ளை / பெண் இருவரும் திருமணத்துக்குப் பிறகும் அவர்களுடைய குடும்பத்துக்கு நிதி உதவிகள் செய்வதாக இருந்தால், அது குறித்து முன்கூட்டியே பேசிவிடுங்கள். இதனால் திருமணத்துக்குப் பிறகு திடீரென்று தெரிந்து மனக்கசப்புகள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

 • குழந்தை எப்போது பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதைக் குறித்தெல்லாம் இப்போதே பேசி ஒரு முடிவுக்கு வரலாம். இந்த விஷயத்தில் பர்சனல் அட்வைஸ்... மிகவும் அவசியமான காரணங்களின்றி குழந்தைப் பிறப்பை தள்ளிப்போடாதீர்கள். ஏனெனில் இக்காலத்திய வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் உடல்நலக் கோளாறுகள் காரணமாக `குழந்தையின்மை’ இன்று பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

 • ஹனிமூன் எங்கு செல்லலாம் என்று முன்கூட்டியே முடிவு செய்து, அதற்காக புக் செய்து எல்லா ஏற்பாடுகளையும் பக்காவாக இந்தக் காலகட்டத்திலேயே முடித்துவிட்டால், நீங்கள் கூர்கில் சென்று இறங்கிய அரை மணி நேரத்திலேயே அறைக்கதவைச் சாத்திவிடலாம்.

 • நீங்கள் ஏற்கெனவே காதலித்திருந்தால் தேவையில்லாமல் அதைப் பற்றியெல்லாம் கூறாதீர்கள். அவர்களிடமும், ‘நீங்கள் யாரையாவது காதலித்திருக்கிறீர்களா?' என்றெல்லாம் நோண்டித் துருவாதீர்கள். ஏனெனில், அப்போதைக்குச் சிலர் அதைப் பெருந்தன்மையாக எடுத்துக்கொண்டாலும், பின்னர் பிரச்னை செய்வது குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன்.

 • அதேநேரத்தில் அவர்கள் இந்த விவரம் பற்றி தெரிந்து கேட்டால், உண்மையைக் கூறிவிடுங்கள். அதுதான் எதிர்காலத்துக்கு நல்லது. மேலும், இக்காலகட்டத்தில் பையனை அல்லது பெண்ணை தனது எக்ஸ் லவ்வருடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். ஏனெனில் ஒவ்வொரு மனிதரும் தனித்தனி மனிதர்கள்.

 • உங்களுக்குச் சில சிறிய உடல்நலக் கோளாறுகள் இருந்து, அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தால் அதுகுறித்து இந்தச் சந்திப்புகளில் சொல்லிவிடலாம். பெரிய உடல்நலக் கோளாறுகள் இருந்தால் கண்டிப்பாக நிச்சயதார்த்தத்துக்குமுன்பே சொல்லிவிட வேண்டும்.

 • ஆண்களின் கவனத்துக்கு... எப்போதும் ஓவராக உங்கள் அம்மாவைப் பற்றியே பேசிக்கொண்டிருக்காதீர்கள். ஏனெனில் ஓர் இந்தியப் பெண்ணின் மனத்தில் சிறு வயதிலிருந்தே மாமியார் குறித்த எதிர்மறையான எண்ணங்களே விதைக்கப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில் நீங்கள், உங்கள் அம்மாவைப் பற்றி அதிகம் பேசுவது அவர்கள் மனத்தில் ஒரு பாதுகாப்பற்ற உணர்வை உருவாக்கும். உங்கள் அம்மா மீதுள்ள பாசம் அப்படியே இருக்கட்டும். அதை உங்கள் செயல்களில் காட்டலாம்.

 • பெண்களின் கவனத்துக்கு... திருமணத்துக்கு முன்பே தனிக்குடித்தனம் பற்றிய பேச்சை எடுக்கக் கூடாது. ஏனெனில், அது ஆரம்பத்திலேயே உங்களைப் பற்றிய தவறான எண்ணத்தை ஏற்படுத்தும். திருமணமாகி வாழத்தொடங்கிய பிறகு, குடும்பத்தில் நிலவும் சூழலே கூட்டுக்குடும்பமா... தனிக்குடித்தனமா என்ற முடிவை எடுக்க பையனைத் தூண்டும். இப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் எடுத்ததுமே தனிக்குடித்தனம் வைத்துவிடுகிறார்கள், அதி புத்திசாலி பெற்றோர் சிலர்.

 • கண்டிப்பாக உடல்ரீதியாக முழுமையாக இணைந்துவிடாதீர்கள். ஏனெனில், எப்போதும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், சின்ன சின்ன அத்துமீறல்கள்… அதாவது, கைகோத்துக்கொள்ளுதல் மற்றும் எச்சில்படாத முத்தங்களை அனுமதிக்கலாம்.

(தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு