Published:Updated:

மணவாழ்க்கை உங்கள் சாய்ஸ்: காதல் திருமணங்களிலும் கசப்பு ஏன்?

ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

பிரீமியம் ஸ்டோரி
என்னுடன் திருச்சி கல்லூரியில் படித்த நெருங்கிய நண்பன் அருண் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

தான் ஐந்தாண்டுகள் உயிருக்குயிராகக் காதலித்த பெண்ணை பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டான். திருமணமான சிறிது காலத்திலேயே பிரச்னைகள் ஆரம்பித்தன. சென்னையில் வேலை செய்யும் எனக்கு அவ்வப்போது போன் செய்து சொல்வான். நான் எல்லா குடும்பங்களிலும் இது சகஜம்தான் என்பேன்.

திருமணமான மறு வருடம், அவனுக்குக் குழந்தை பிறந்து மூன்று மாதங்கள்தாம் ஆகியிருந்தன. அந்த சந்தர்ப்பத்தில் நான் திருச்சி சென்றிருந்தபோது இரவு என் வீட்டுக்கு வந்தான் அருண். அப்போது இரவு மணி 11. முகம் மிகவும் வாட்டமாக இருந்தது.

“என்னடா…. இந்நேரத்துல வந்துருக்க?”

“வாழ்க்கையே வெறுப்பா இருக்கு மாப்ள….” என்றான்.

“என்னடா…. வீட்டுல ஏதாச்சும் சண்டையா?”

“ம்… தினம் தினம் சண்டைதான். நீ காதல் தோல்வியைப் பத்தி உருகி உருகி கதையா எழுதுற. ஆனா, உல்டாவா ஏண்டா இவளைக் காதலிச்சோம்... ஏண்டா இவளைக் கல்யாணம் பண்ணோம்னு தினம் தினம் ஃபீல் பண்றேன். இன்னிக்கி ஒரு பெரிய சண்டை. கோபமா வந்துட்டேன்” என்று ஆரம்பித்தவன் திருமணமானதிலிருந்து நடந்த சண்டைகளை எல்லாம் சொல்ல சொல்ல…. எனக்குத் தலைசுற்றியது. இரண்டு பேருக்கும் நடுவே இவ்வளவு கருத்து வேறுபாடுகளா?  

“நீ இப்படியெல்லாம் இருப்பே… உன் வொய்ஃப் இப்படியெல்லாம் இருப்பாங்கன்னு உங்களுக்கு முன்னாடியே தெரியாதா?” என்றேன்.

மணவாழ்க்கை உங்கள் சாய்ஸ்: காதல் திருமணங்களிலும் கசப்பு ஏன்?

“தெரியாது”

“அப்புறம் இத்தனை வருஷம் என்னத்தடா காதலிச்சீங்க...” என்றேன் கடுப்புடன். பிறகு அவனுக்கு சில ஆலோசனைகள் சொன்னேன். வீட்டுக்குப் போகமாட்டேன் என்றவனை “வீட்டுல கைக்குழந்தையோட தனியா இருப்பாங்க. போ” என்று அனுப்பி வைத்தேன்.

பத்து நிமிடங்களில் எனக்கு போன் செய்த அருண், “என் வொய்ஃபை வீட்டுல காணோம்டா… பக்கத்து வீட்ல எல்லாம் கேட்டுட்டேன். தெரியலைங்கிறாங்க. வீடு சும்மா சாத்திதான் இருக்கு. போன் பண்ணா ஸ்விட்ச் ஆஃப்ன்னு வருது… எனக்கு பயமா இருக்குடா.”

“நீ பயப்படாதே… நான் இப்ப வரேன்.”

அவன் வீட்டுக்குச் சென்றபோது இரவு மணி 12.30. அந்தப் பெண்ணின் நெருங்கிய தோழிகளுக்கும் பெற்றோருக்கும் போன் செய்து விசாரித்தோம். `தெரியாது' என்றார்கள்.

“அவங்க ஊருக்கு ஏதும் கிளம்பிப் போயிருப்பாங்களா?” என்றேன்.

“அவங்க ஊருக்கு ராத்திரி பத்தரைக்கு மேல பஸ் கிடையாதுடா.”

அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் பதற்றத்துடன் திருச்சி நகரின் உறையூர், புத்தூர், தென்னூர், தில்லைநகர் வீதிகளில் அந்த ராத்திரி வேளையில் தேடினோம். எங்கும் கண்ணில்படவில்லை. ஒருகட்டத்தில் மிகவும் உடைந்துபோன அருண், “டேய்…. எனக்கு பயமாயிருக்குடா… எங்கேயாச்சும் போய் ஏதாச்சும் தற்கொலை…” என்று கூற… “சீ…..” என்று ஒற்றை வார்த்தையில் அந்த உரையாடலை கட் செய்தேன். ஆனால், உண்மையில் உள்ளுக்குள் எனக்கும் அந்த உதைப்பு இருந்தது. சரி… எதற்கும் திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டு சென்று பார்க்கலாம் என்று சென்றோம். அருணுடைய மாமனாரின் ஊருக்குச் செல்லும் பேருந்துகள் நிற்குமிடத்தில் ஒரு பேருந்துகூட இல்லை. ஆனால், அங்கு அருணின் மனைவி இருந்தாள். அந்த நள்ளிரவு இரண்டு மணி குளிரில், தனது மூன்று மாத கைக்குழந்தையுடன் அழுதுகொண்டே உட்கார்ந்திருந்தவளைப் பார்த்தவுடன் கண்கள் கலங்கிவிட்டது.

 ஜி.ஆர்.சுரேந்தர்நாத்
ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

இது நடந்து எத்தனையோ வருடங்கள் ஆகிறது. இப்போது நல்லபடியாக இருக்கிறார்கள். ஆனால், இன்னும் என்னால் திருச்சி நகரில் வீதி வீதியாகத் திரிந்த அந்த டிசம்பர் மாத நள்ளிரவை மறக்கவே முடியவில்லை. காதல் திருமணம் என்றால் எல்லையில்லா சந்தோஷம்தான் என்ற எனது நம்பிக்கை தூள் தூளாக உடைந்த இரவு அது. எல்லா காதல் திருமணங்களிலும் இவ்வாறு நடப்பதில்லை. ஆனால், என்னைப் பொறுத்தவரையில் ஒரு காதல் திருமணத்தில் கூட இது நடக்கக் கூடாது. ஏனெனில், காதலை நான் அவ்வளவு உன்னதமான விஷயமாகப் பார்க்கிறேன். அந்த இரவு அனுபவம் எனக்குள் ஏராளமான கேள்விகளை எழுப்பியது. காதல் திருமணங்களில் ஏன் பிரச்னை ஏற்படுகிறது?

முதலாவதாகப் பெரும்பாலானவர்களிடம் காதல் உருவான விதத்திலேயே சிக்கல் இருக்கிறது. இங்கு பெரும்பாலான காதல்கள் நீண்ட நாள்கள் நட்புடன் பழகி, ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு… காலப்போக்கில் அந்த நட்பு காதலாக மலர்வதில்லை. பெரும்பாலும் இங்கு புறக்கவர்ச்சியிலும், தன்னையும் ஒருத்தி காதலிக்கிறான் அல்லது காதலிக்கிறாள் என்ற பெருமிதத்துக்காகவும்தான் காதலிக்கிறார்கள். இவ்வாறு அடிப்படையான புரிதலற்று உருவாகும் காதலில் பிற்காலத்தில் பிரச்னைகள் ஏற்படத்தான் செய்யும்.

வீட்டில் ஏற்பாடு செய்யப்படும் திருமணங் களில் பரஸ்பரம் பெரிய எதிர்பார்ப்புகள் இருப்பதில்லை. எப்படி வேண்டுமானாலும் அந்த உறவு இருக்கலாம் என்ற மனநிலையில்தான் திருமணம் செய்துகொள்கிறார்கள். அது முன்பின்னாக இருந்தாலும், பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாததால் பெரிய ஏமாற்றங்களும் இல்லை. ஆனால், காதல் திருமணங்களில் தங்கள் இனிமையான காதல் காலத்தைக் கருத்தில்கொண்டு, தங்கள் மணவாழ்க்கையும் இனிமையான ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், ஒரே வீட்டில் இருவரும் ஒரு வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ளும்போதுதான், மணவாழ்க்கையில் என்னென்ன பிரச்னைகள் வரும் என்று தெரியும். அப்போது ஏற்படும் சிறிய ஏமாற்றங்களைக்கூட அவர்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. காதல் காலத்தில் நல்லவர்போல் நடித்து தங்களை ஏமாற்றிவிட்டதாக நினைக்கிறார்கள். எனவே அந்த ஆத்திரத்தில் சிறிய பிரச்னைகளைக்கூட ஊதி பெரிதாக்குகிறார்கள்.

அடுத்து… காதல் காலத்தில் தினமும் இரண்டு மணி நேரம் பழகுவதற்கும், திருமணமாகி 24 மணி நேரம் சேர்ந்து வாழ்வதற்கும் ஆயிரம் வித்தியாசங்கள் உள்ளன. உதாரணத்துக்கு… ஒருவன் தூங்கும்போது ஏதேனும் சத்தம் வந்தால், நாய் மாதிரி வள்ளென்று விழுவான். ஆனால், இது காதலிக்கும்போது காதலிகளுக்குத் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் காதல் காலத்தில் இனிக்க இனிக்க பேசிய காதலன் மட்டும்தான். அதேபோல் ஒரு பெண் அவள் செய்யும் வேலைகளில் குறை சொல்வதை விரும்பமாட்டாள். இதுவும் காதலனுக்குத் தெரியாது. திருமணத்துக்குப் பிறகுதான் தெரியவரும். இது மாதிரியான சிறு சிறு விஷயங்களில் ஏற்படும் மனக்கசப்புகள் சண்டையாகி, கோபமாக வார்த்தைகளைப் பரிமாறிக்கொள்கின்றனர்.

இவ்வாறு கோபமாகப் பேசுவது தொடர்பாக, அனைவரும் சொன்ன ஒரு விஷயம்… `அவன்/அவள் இவ்வளவு கோபமாக ரீஆக்ட் செய் வான்/ள் என்று எதிர்பார்க்கவில்லை' என்பதுதான். அடப்பாவிகளா... திருமண வாழ்க்கை என்றால் எப்போதும் டி.வி விளம்பர கணவன் - மனைவிபோல் மாறாப் புன்னகையுடன் இருக்கமுடியுமா... என்னதான் கணவன் - மனைவி என்றாலும் நாம் எல்லோரும் தனித்தனி மனிதர்கள்தானே... இரண்டு தனி மனிதர்கள் சேர்ந்து ஓர் அலுவலகத்தில் அல்லது பிற இடங்களில் இயங்கும்போது ஏற்படும் அனைத்து கோபதாபங்களும் இந்த உறவிலும் ஏற்படுவது இயற்கைதான். ஆனால், இவர்கள் இவ்வாறு நினைப்பதில்லை. ஏனெனில் காதல் காலம் அவ்வளவு இனிமையாக இருந்தது.

அடுத்து பெரிய பிரச்னை… காதலிக்கும் போது காதல் மயக்கத்தில் பேசிய வார்த்தைகள். அப்போது தங்கள் காதலரைத் தவிர வேறு யாரும் தனக்கு முக்கியம் இல்லை என்பது போல் பேசிக்கொள்வார்கள். காதலிக்கும் அந்த குறிப்பிட்ட மாலை ஆறு டு எட்டு மணிக்குள் அவர்களைத் தவிர வேறு யாரும் முக்கியம் இல்லைதான். ஆனால், பிற நேரங்களில் அவர்களுக்கு அலுவலகம், குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் போன்றவர்கள் முக்கிய மானவர்களாக இருப்பார்கள். அவர்களுடன் இவர்களுக்கு நெருக்கம் இருக்கக்கூடும்.

அது திருமணத்துக்குப் பிறகு, மிகப்பெரிய உறுத்தலாக இருக்கும். தனது காதல் துணை தன்னோடு மட்டுமே நெருக்கமாக இல்லாமல், பிறருடனும் நெருக்கமாக இருப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதனால் சண்டைகள் வருகின்றன. இதையெல்லாம் அவர்கள் முன்கூட்டியே, `நீ என் வாழ்வில் ஒரு முக்கியமான அங்கம். ஆனால், நீ மட்டுமே என் வாழ்க்கை அல்ல' என்று தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். ஆனால், காதலிக்கும்போது, ‘நீ மட்டும்தான் என் வாழ்க்கை’ என்பது போல் பேசிவிட்டு, பிறகு அதற்கு மாறாக நடந்து கொள்ளும்போது, அதை ஒரு நம்பிக்கை துரோகமாக நினைக்கிறார்கள். எப்போதும் நம்பிக்கை துரோகங்கள் ஏற்படுத்தும் காயங்கள் அவ்வளவு சுலபமாக ஆறுவதில்லை.

காதல் திருமணங்களில் பெரும்பாலும் வேறு சாதி அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களைத் தான் திருமணம் செய்துகொள்கிறார்கள். எனவே இருவருடைய குடும்பங்களின் பழக்கவழக்கங்கள், நல்லது கெட்டது சம்பிரதாயங்கள் எல்லாம் வேறு வேறாக இருக்கும். அப்போது எங்கள் வீட்டு முறையைத்தான் பின்பற்ற வேண்டும் என்று இருவீட்டுப் பெற்றோரும் வற்புறுத்தும்போது அது பிரச்னைக்கு வழிகோலுகிறது. இது அவர்களுடைய பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பது வரை நீள்கிறது. இது போன்ற விஷயங்களில் எல்லாம் பெரியவர்களைத் தலையிட அனுமதிக்காதீர்கள். தம்பதியரே கலந்து பேசி ஒரு முடிவுக்கு வரவும்.

இவ்வாறு காதல் திருமணங்களால் ஏற்படும் பிரச்னைகளை எப்படி கடந்து வருவது... இதற்கான பதில் மிகவும் எளிது.

காதல் வாழ்க்கை வேறு… திருமண வாழ்க்கை வேறு என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் முதலில் அந்த காபி ஷாப் க்யூட் சந்திப்புகளின் ஹேங்க் ஓவரிலிருந்து விடுபடுங்கள். அப்போது நடந்துகொண்ட முறையை, இப்போது நடக்கும் முறையோடு ஒப்பிடாதீர்கள். அப்போது பேசியவற்றை எல்லாம் கணக்கிலேயே எடுத்துக்கொள்ளாதீர்கள். ஏனெனில் அப்போது நடந்தது எல்லாம் பரஸ்பரம் ஒருவரையொருவர் ஈர்ப்பதற்காக நடந்தது. இப்போது ஈர்க்கப்பட்டு இணைந்தாகிவிட்டது.

எனவே, அவற்றையெல்லாம் திருமணம் முடிந்த பிறகும்  எதிர்பார்க்காதீர்கள். மேலும், காதல் திருமணம் முடிந்து வாழ்க்கையைத் தொடங்கும்போது, காதலுக்காக இது வரையிலும் மறைத்துவைத்திருந்த உங்களுடைய பலவீனங்களையும் குறைகளையும் பற்றி வெளிப்படையாகச் சொல்லிவிடுங்கள். அது சற்று ஏமாற்றமளித்தாலும், பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

எல்லாவற்றுக்கும் மேல்,

உங்கள் திருமண வாழ்க்கை சந்தோஷமாக அமையும்போதுதான் உங்கள் காதல் வெற்றி பெற்றதாக அர்த்தம் என்பதை எப்போதும் மறவாதீர்கள்.

(தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு