Published:Updated:

மணவாழ்க்கை உங்கள் சாய்ஸ்: காதல் திருமணமா... வீட்டுத் திருமணமா... எது நல்லது?

மணவாழ்க்கை
பிரீமியம் ஸ்டோரி
News
மணவாழ்க்கை

ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

1980-களின் தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனும் கதாநாயகியும் ஒரு பூச்செடிக்குப் பின்னால் அணைத்தபடி மறைவார்கள்.

சில விநாடிகள் பூவை க்ளோஸ் அப்பில் காட்டிய பிறகு, அவர்கள் செடிக்குப் பின்னாலிருந்து உதட்டைத் துடைத்துக்கொண்டு வந்தால் அதற்குப் பெயர்தான் காதல் என்று சிறுவனாக இருக்கும் வரையில் நினைத்துக்கொண்டிருந்தேன்.

பின்னர் காதல் என்றால் என்ன என்று தெரிந்த பிறகும்கூட அக்காலகட்டத்தில் நேரிடையாக காதலர்களை அவ்வளவு எளிதில் பார்த்துவிட முடியாது. அப்போதெல்லாம் ஊர்ப்பக்கத்தில் உறவினரல்லாத வயசுப்பையனும் வயசுப் பெண்ணும் சந்தித்துக்கொள்ள ஒரு பொது இடம் கிடைப்பதே அபூர்வம். வயசுப் பெண்களை விடியற்காலையில் பால் வாங்க வரும்போதோ… இல்லை, பைப்படியில் தண்ணீர் பிடிக்க வரும்போதோ பார்க்கலாம். அப்போது அவர்கள் குளிக்காமல், தூங்கி வழிந்த முகத்துடன் கலைந்த தலையுடன்தான் வருவார்கள். அந்த நேரத்தில் அவர்கள்மீது காதல் கொள்வது கடினம். சில பெண்கள் தங்கள் அம்மாக்களுடன் ஆற்றுக்குக் குளிக்க வருவார்கள். அப்போது குளிப்பதற்கு முன்பு பார்த்து காதல் வராவிட்டாலும், குளித்த பின்பு பார்த்து வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். இருப்பினும் கூடவே அம்மாக்களும் வருவதால் அவள் நம்மை அரைப் பார்வை பார்க்கும்போதே, அம்மாக்கள் முழுப் பார்வையில் மகளை முறைத்து அடக்கிவிடுவார்கள்.

மணவாழ்க்கை உங்கள் சாய்ஸ்: காதல் திருமணமா... வீட்டுத் திருமணமா... எது நல்லது?

எனவே, இதெல்லாம் வேலைக்காகாது என்று ஆண்கள் கட்டுப்பாடாக இருந்தாலும், வெள்ளிக்கிழமையில் காதல் ஆசை மீண்டும் துளிர்க்கும். ஏனெனில், வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் தலைக்குக் குளித்துவிட்டு, கூந்தலுக்கு எண்ணெய் வைக்கமாட்டார்கள். தலைமுடி தளர்வாக, காற்றில் அலைந்தபடி நடமாடுவதால் அப்போது கூடுதல் அழகுடன் தோற்றமளிப்பார்கள். தலைமுடியைப் பின்னாமல் காதோர முடிகளை இழுத்து முடிந்து, முடிச்சின் நடுவில் ரோஜாப்பூவை வைத்திருப்பார்கள். அது இன்னும் அழகை ஏற்றும்.

சில வெள்ளிக்கிழமை தேவதைகள் பட்டுப் பாவாடை, தாவணியுடன் கோயிலுக்கு வருவார்கள். அவர்கள் சுவாமி சந்நிதியில் தங்கள் மையிட்ட கண்களை மூடிக்கொண்டு, முணுமுணுப்பாக, `கடவுளே… கணக்கு பரீட்சைல என்னை பாஸாக்கிடுப்பா…' என்று அவ்வளவு அழகாக வேண்டிக்கொண்ட பிறகும் கணக்கில் ஃபெயிலானால் கடவுளே இல்லை என்று அர்த்தம். பின்னர் அவர்கள் மெலிதாக கொலுசு சப்தம் ஒலிக்க, லேசாகக் குதித்து மேல் கண்ணால் பார்த்தபடி கோயில் மணியை அடிப்பார்கள். இதைக் காணும் ஆண் மகனின் பார்வையில் பூத்த காதலை புரிந்துகொண்டு அவளும் பதிலுக்கு புன்னகையால் காதல் தீபம் ஏற்றுவாள். அடுத்த விநாடியே அம்மாக்கள், `வர வர உன் நடவடிக்கையே சரியில்லை’ என்று தலையில் ரெண்டு மொத்து மொத்தி காதல் தீபத்தை இரண்டே விநாடிகளில் ஊதி அணைத்துவிடுவார்கள்.

மணவாழ்க்கை உங்கள் சாய்ஸ்: காதல் திருமணமா... வீட்டுத் திருமணமா... எது நல்லது?

இது 2020. உலகம் மிகவும் மாறி, இப்போது ஆண் பெண் பழகுவது எல்லாம் மிகவும் சகஜமாகிவிட்டது.

பக்கத்து ஃப்ளாட்டுக்குப் புதிதாக குடிவந்த பூஜாவிடம் பழகிய தினேஷுக்கு ஒரே வாரத்தில் அவளை மிகவும் பிடித்துப்போய் பூஜாவிடம், “நான் உன்னைக் காதலிக் கிறதுக்கான அறிகுறியெல்லாம் தெரியுது” என்றான்.

“என்ன அறிகுறி?”

“ராத்திரி படுத்தா ஒரு காதுல நீ பேசுற சத்தமும், மறு காதுல நீ சிரிக்கிற சத்தமும் கேட்டுக்கிட்டேயிருக்கு. என்னோட ஒரு கண்ணுல நீ சிரிக்கிற. இன்னொரு கண்ணுல வெட்கப்படுற. இந்த உலகத்துல இருக்கிற அத்தனை ரோஜாப்பூவையும் பறிச்சு உன் காலடில கொட்டணும்னு தோணுது. உன்ன பார்த்த பத்தாவது செகண்டுல கண்ணு, உடம்பெல்லாம் ஒரு மாதிரி சூடாகி, அனலா கொதிக்குது. இப்ப நான் உன் டிரஸ்ஸைத் தொட்டன்னா ஹீட்டுல அது எரிஞ்சுடும்.”

“எங்க தொடு…. எரியுதான்னு பார்ப் போம்” என்று அவனை நெருங்கினாள் பூஜா.

“வேண்டாம். ரொம்ப காஸ்ட்லி டிரஸ்” என்றவுடன் சில விநாடிகள் அவனைக் குறுகுறுவென்று பார்த்துவிட்டு, “எப்பவும் இந்த மாதிரிதான் எல்லா பொண்ணுங்ககிட்டயும் பேசுவியா?” என்றாள்.

“உலகத்துலயே ரொம்ப அழகான ஒரே ஒரு பொண்ணுகிட்ட மட்டும் இப்படி பேசுவேன்” என்றவுடன் முகம் சிவந்த பூஜா, “இந்த மாதிரி எத்தனை பேருகிட்ட சொல்லியிருக்க?” என்றாள்.

“ம்… ஸ்வேதா, ஜெஸ்ஸி, தீபிகா… அப்புறம்… தெரியல… கணக்கே இல்ல. உனக்கு ஓகேன்னா சொல்லு. இல்லன்னா அந்த பிங்க் கலர் மாஸ்க் பொண்ணு என்னை ரொம்ப நேரமா உத்து உத்துப் பார்த்துக்கிட்டிருக்கு… அந்தப் பொண்ணோட மாஸ்க்கை அவிழ்த்துப் பார்த்துட்டு ஓகேன்னா உன்கிட்ட சொன்ன டயலாக்கையெல்லாம் அவகிட்ட சொல்லிடுவேன்…”

“நாயே” என்று அவன் வயிற்றில் குத்தி விட்டு, “ஐ லவ் யூடா” என்றாள் பூஜா.

காதல்... காதல்... காதல்... காதலைப் போல இனிக்கும் வேறு ஓர் உணர்வு இந்த உலகில் இல்லை. காமம் எல்லாம்கூட காதலோடு சேரும்போதுதான் இனிக்கும். வெறும் காமம் சிறிது காலத்தில் சலித்துவிடும். எனவே, காதலித்து திருமணம் செய்துகொள்வதில் பல ப்ளஸ்கள் உள்ளன.

காதலில் பல்வேறு ஆண்கள்/பெண்களை உங்கள் வாழ்க்கையில் சந்தித்து அவர்களிடம் பழகி, அவர்களின் நிறைகுறைகளை எல்லாம் அறிந்து, ஏதோ ஒரு கட்டத்தில் யாரோ ஒருவர் மீது காதல் ஏற்படுகிறது. அவரைத்தான் நீங்கள் திருமணம் செய்துகொள்வீர்கள். ஆனால், இந்த வாய்ப்பு வீட்டில் ஏற்பாடு செய்யப்படும் திருமணங்களில் இல்லை. திருமணத்துக்கு முன்பு பேசி ஓரளவு புரிந்துகொண்டாலும், அப்போது அவர்கள் எந்தளவு உண்மையாக இருக்கிறார்கள், எந்தளவு உண்மையைப் பேசுகிறார்கள் என்றெல்லாம் உறுதியாகக் கூறிவிட முடியாது.

அடுத்து, வீட்டில் ஏற்பாடு செய்யப்படும் திருமணங்களில், கடைசி வரையிலும் காதலே இல்லாமலேகூட இருட்டில் அணைத்து, பிள்ளைப்பெற்றுக்கொண்டு வாழ்ந்து விட முடியும். இயல்பாக காதலித்து திருமணம் செய்துகொள்ளும்போதோ அவர்களுக்கிடையே அன்பு, நெருக்கம், காதல், வேடிக்கை, விளையாட்டுகள் என்று எல்லாமே நிச்சயம் கூடுதலாகத்தான் இருக்கும்.

காதலர்கள் நீண்ட காலமாக பழகி வருவதால் அவர்களின் விருப்புவெறுப்புகள், நல்ல குணங்கள், பலவீனங்கள், கெட்ட குணங்கள்... ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அவர்கள் எப்படி ரீஆக்ட் செய்வார்கள், ஒருவரையொருவர் எப்படி அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் நன்கு அறிந்திருப்பார்கள். எனவே திருமணம் நடக்கும்போது, ஏற்கெனவே நீங்கள் பலமுறை ரிகர்சல் செய்த காட்சியை அரங்கேற்றப்போகிறீர்கள். அவ்வளவுதான். நன்கு ஒத்திகை பார்க்கப்பட்ட காட்சி சிறப்பாக அரங்கேற்றப்படவே வாய்ப்புகள் அதிகம். வீட்டில் ஏற்பாடு செய்யப்படும் திருமணங்களில் நேரடியாக அரங்கேற்றம்தான். அங்கு சொதப்பல்களுக்கு வாய்ப்பு இருக்கிறது.

நீங்கள் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் நபர் உங்களுக்கு அந்நியர் கிடையாது. ஏராளமாகப் பேசி நன்கு பழக்கமானவர் என்பதால் திருமணமான ஆரம்ப காலத்தில் ஏற்படும் எல்லாவித பிரச்னைகளையும் எவ்வித தயக்கமுமின்றி உங்களால் பேசி தீர்வு காணமுடியும்.

காதலிக்கும்போது ஒருவேளை பல விஷயங் களில் சரிபட்டு வராமல், அடிக்கடி சண்டை ஏற்பட்டால், `இந்தக் காதல் சரிப்பட்டு வராது' என்று எப்போது வேண்டுமானாலும் எளிதாக விலகிக்கொள்ளலாம். வீட்டில் ஏற்பாடு செய்யப்படும் திருமணங்களில் இதற்கு வாய்ப்பில்லை.

இதையெல்லாம் படிக்கும்போது வீட்டில் ஏற்பாடு செய்யப்படும் திருமணத்தைவிட, காதல் திருமணம்தான் நல்லது என்று உங்களுக்குத் தோன்றலாம். ஏனெனில், நானும் காதல் திருமணம் செய்துகொண்ட என் நண்பர்கள் சிலரின் வாழ்க்கையைப் பார்க்கும் வரையிலும், காதல் திருமணம் செய்துகொண்ட அனைவரும் ஓர் அற்புதமான காவிய வாழ்க்கையை வாழ்வார்கள் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன்.

ஆனால், நிஜம் அதுவல்ல. இன்று விவாகரத்து கோருபவர்களில் பலரும் காதல் திருமணம் செய்தவர்கள் என்று கேள்விப்பட்டபோது அதிர்ச்சியாக இருந்தது. அதனால் காதல் திருமண ஜோடிகள் அனைவரும் இப்படித்தான் என்று கூறவில்லை. ஆனால், ஒரு சில காதல் ஜோடிகள்கூட விவாகரத்து வரைச் செல்வதை ஒரு காதல் கதை எழுத்தாளனாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்தச் சூழ்நிலையில் காதல் திருமணம்தான் நல்லது என்றோ, வீட்டில் ஏற்பாடு செய்யப் படும் திருமணம்தான் நல்லது என்றோ யாரும் உறுதியாகக் கூற முடியாது. எந்த வகைத் திருமணமாக இருந்தாலும், அந்த ஆண் மற்றும் பெண்ணின் இயல்புகளைப் பொறுத்துதான் அவர்களுடைய மணவாழ்க்கையின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.

காதல் திருமணம் செய்துகொள்ளும் இருவரும் ஏற்கெனவே நன்கு அறிந்தவர்கள். அப்படியிருந்தும் விவாகரத்து அளவுக்குச் சிலர் செல்கிறார்கள். சில காதல் திருமண ஜோடிகளுக்கிடையே அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது என்றால், அடிப்படையிலேயே அவர்கள் காதலில் ஏதோ கோளாறு இருக்கிறது. என்ன கோளாறு?

அடுத்த இதழில் விவாதிப்போம்.

(தொடரும்)