Published:Updated:

"சாகாவரம் பெற்ற படைப்பு பொன்னியின் செல்வன்" - கல்கியின் `பராக் பராக்’ நிகழ்வில் அமைச்சர் புகழாரம்

தங்கம் தென்னரசு

கல்கி நிறுவனம் சார்பில் பொன்னியின் செல்வன் கதை நிகழ்ந்த இடங்களைக் காட்சிப்படுத்தி காணொலி ஒன்றைத் தயாரித்துள்ளனர். அதன் காணொலியை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.

"சாகாவரம் பெற்ற படைப்பு பொன்னியின் செல்வன்" - கல்கியின் `பராக் பராக்’ நிகழ்வில் அமைச்சர் புகழாரம்

கல்கி நிறுவனம் சார்பில் பொன்னியின் செல்வன் கதை நிகழ்ந்த இடங்களைக் காட்சிப்படுத்தி காணொலி ஒன்றைத் தயாரித்துள்ளனர். அதன் காணொலியை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.

Published:Updated:
தங்கம் தென்னரசு

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாவதைத் தொடர்ந்து தமிழகமெங்கும் அந்த நாவல் குறித்தும் சோழர் வரலாறு குறித்தும் பலரும் பேசிவரும் நிலையில் பொன்னியின் செல்வனின் ஆசிரியரான கல்கி உருவாக்கிய கல்கி குழுமம் சார்பில் காணொலி ஒன்றைத் தயாரித்திருக்கிறார்கள். இதற்கு “பராக்... பராக்... கல்கியின் பொன்னியின் செல்வன்... வந்தியத் தேவன் பாதையில் ஓர் அனுபவப் பயணம்” என்று பெயரிட்டுள்ளனர்.

இந்தக் காணொலி இன்று முதல் (24.9.22) தொடர்ந்து 16 பாகங்களாக 16 நாள்களுக்கு கல்கி யூடியூப் தளத்தில் வெளியாக இருக்கிறது. நேற்று நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் பராக் பராக் ஆவணப்படத்தின் முதல் பகுதியை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.

தங்கம் தென்னரசு, சீதா ரவி, லக்ஷ்மி நடராஜன், காலச்சக்கரம் நரசிம்மா
தங்கம் தென்னரசு, சீதா ரவி, லக்ஷ்மி நடராஜன், காலச்சக்கரம் நரசிம்மா

இந்த நிகழ்வில் கல்கி குழுமத்தின் உரிமையாளர் மற்றும் சியிஓ லக்ஷ்மி நடராஜன், அமைச்சர் தங்கம் தென்னரசு, காலச்சக்கரம் நரசிம்மா ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் பேசிய லக்ஷ்மி நடராஜன், இந்த ஆவணப்படம் குறித்த சிந்தனை எழுந்தவிதம் குறித்துப் பேசினார். பொன்னியின் செல்வனை உலகமே கொண்டாடும்போது அதன் பிறப்பிடமான கல்கி குழுமம் அதை என்ன செய்யப்போகிறது என்கிற கேள்வி மனத்துள் எழுந்தது என்றும் அதற்குப் பதிலாகவே இன்று இந்தக் காணொலி உருவாகியிருக்கிறது என்றும் குறிப்பிட்டார். வரலாற்றின் மீதுள்ள உண்மையான நேசத்துடனும் ஆர்வத்துடனும் ஆழ்ந்த ஆராய்ச்சியுடனும் இந்தப் பயணத் தொகுப்பை வழங்கித் தானே அதை வழிநடத்தியிருக்கும் காலச்சக்கரம் நரசிம்மாவுக்குத் தன் நன்றியைத் தெரிவித்தார்.

காணொலித் தயாரிப்பில் ஆங்காங்கே பத்மவாசனின் ஓவியங்கள் சேர்க்கப்பட்டு பார்வையாளர்கள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளதைக் குறிப்பிட்ட அவர், இதற்கு தன் பின்னணி இசை மூலம் விறுவிறுப்புக் கூட்டியுள்ள மோகன் ராமுக்கு நன்றி தெரிவித்தார். இந்த அரிய காணொலி காலத்தில் நிலைத்து நின்று வரும் தலைமுறைகளுக்கும் பொன்னியின் செல்வனைக் கொண்டு சேர்க்கும் என்று குறிப்பிட்டார்.

அதன்பின் பேசிய காலச்சக்கரம் நரசிம்மா, காணொலித் தயாரிப்பில் தான் எதிர்கொண்ட பல சுவாரஸ்யமான தகவல்களைக் குறிப்பிட்டார். தொடர்ந்து காணொலியின் முதல் பகுதியை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.

நாவலைப் போலவே காணொலியிலும் வீராணம் ஏரியே முதலிடம் இடம் பிடித்துள்ளது. நாவலில் அந்தப் பகுதியில் நடைபெறும் காட்சிகளை விவரிக்கும் நரசிம்மா, அதோடு தொடர்புடைய பல செய்திகளையும் பகிர்ந்துகொள்கிறார். காணொலி மூலம் அவர் பகிரும் பல தகவல்கள் சுவாரஸ்யமாக மட்டுமின்றி பயனுள்ளதாகவும் அமையும் என்பதற்கு எடுத்துக்காட்டாக முதல் காணொலியில் அவர் சொன்ன கூட்டாஞ்சோறு குறித்த தகவல் அமைந்தது.

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

இதைத் தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்புரை நிகழ்த்தினார். இதில் சாகாவரம் பெற்ற நாவல் 'பொன்னியின் செல்வன்' என்று மகுடம் சூட்டினார். மேலும் அவர் பேசுகையில்,

“என் வீட்டில் என் மனைவியும் மகளும் மீண்டும் ஒருமுறை பொன்னியின் செல்வனை வாசிப்பது என்று முடிவு செய்து அதை யார் முதலில் முடிப்பது என்று போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இப்படி எழுபது ஆண்டுகளைக் கடந்தும் பொன்னியின் செல்வன் நாவல் வாசகர்களின் மனதில் நிலைத்து நிற்கிறது. இந்தக் காணொலி மிகவும் அற்புதமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. வளர்ந்துவரும் தலைமுறை நவீன தொழில்நுட்பத்தோடு இணைந்தவர்கள். அவர்களுக்கும் இந்த நாவல் குறித்த ஓர் அறிமுகத்தை, பதிவை, அனுபவத்தைக் கடத்துவதாக அமைகிறது இந்த டிஜிட்டல் பதிவு.

1950களில் சோமலே தென்னாற்காடு மாவட்டம், தஞ்சை மாவட்டம் என்று ஒரு வரலாற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அவற்றைக் கட்டுரையாகவும் எழுதினார். அதில் தோப்புத்துறையில் மணிமேகலையோடு தொடர்புடைய நீராழி மண்டபம் இருந்தது என்று எழுதியிருந்தார். சில ஆண்டுகள் கழித்து அதைப் படித்துவிட்டு நான் சென்று தேடிப் பார்த்தபோது அதைக் காணவில்லை. உடனே சோமலே அவர்களுக்குக் கடிதம் எழுதினேன். அதற்கு அவர், ‘நான் நேரில் பார்த்துத்தான் எழுதினேன்’ என்று பதில் எழுதினார்.

இவ்வாறு பல இடங்கள் மாற்றம் கொண்டிருக்கின்றன. உ.வே.சா தன் ‘என் சரித்திரம்’ நூலில், ‘கும்பகோணத்திலிருந்து பட்டீஸ்வரம் வரும்வழியில் சோழர் மாளிகையில் ஒரு பெரிய கோட்டைச் சுவரைப் பார்த்தோம். அந்தக் கோட்டையைப் பற்றி விசாரித்தபோது அந்தக் காலத்தில் அங்கு மன்னர்கள் இருந்திருக்கிறார்கள் என்று சொன்னார்கள்’ என்று குறிப்பிடுகிறார். உ.வே.சா காலத்தில் அவர் பார்த்த கோட்டைச் சுவர் அதன்பின் அழிந்துவிட்டது. அதற்கு ஆக்கிரமிப்புகளும் சிதைவுகளும் காரணமாக இருக்கலாம்.

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

பொன்னமராவதியில் குலோத்துங்கனின் அரண்மனை ஒன்று இருந்தது. அதன் வாயிலில் இரண்டு பெரிய தூண்கள் உண்டு. நான் முன்பு சென்று பார்த்தபோது அந்த இரண்டு தூண்களும் இருந்தன. ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு பயணம் செய்தபோது அது இல்லை. அதன் முக்கியத்துவம் தெரியாமல் அதை நான்காக உடைத்துப் போட்டுவிட்டார்கள். இனியாவது எஞ்சியிருக்கும் இத்தகைய சின்னங்களைப் பாதுக்கும் பொறுப்பு நமக்கிருக்கிறது.

கல்கி மிகவும் அற்புதமாக 'பொன்னியின் செல்வன்' நாவலை எழுதியிருப்பார். அதில் அவரின் நகைச்சுவை உணர்வு பல இடங்களில் வெளிப்படும். வரலாறு குறித்த ஆர்வத்தை உருவாக்கிய படைப்பு அது. நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் அதைச் சுற்றியிருக்கும் பொன்னியின் செல்வன் நாவல் நடைபெற்ற இடங்களுக்குச் சென்று பார்ப்பேன். சில இடங்களுக்குச் செல்வதில் பல சிரமங்கள் இருக்கும். கல்கி எப்படி இந்த இடங்களுக்கெல்லாம் சென்றிருப்பார் என்று வியப்பாக இருக்கும். வந்தியத்தேவன் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்வெட்டுகளைத் தேடிச்சென்று பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட அற்புதமான நாவலுக்காக உருவாகியிருக்கும் இந்தக் காணொலியை வெளியிடுவதில் பெருமை அடைகிறேன்” என்று குறிப்பிட்டார்.

நிகழ்வில் கல்கியின் சார்பில் இணையம் மூலம் நடைபெற்ற ‘மகுடம் யாருக்கு?’ என்னும் விநாடி வினா போட்டியில் வெற்றிபெற்ற இளைஞர்களுக்கு அமைச்சர் பரிசு வழங்கினார். இந்த நிகழ்வை பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி தொகுத்து வழங்கினார்.

4 முறை பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்த விகடன், இப்போது 5-ம் முறையாக வரும் அக்டோபர் 8, 9, 10 ஆகிய நாள்களில் மீண்டும் நம் வாசகர்களை வந்தியத்தேவன் வழியில் ஒரு வரலாற்றுப் பயணத்துக்கு அழைத்துச் செல்லவிருக்கிறது.

முன்பதிவு விவரங்களுக்கு 97909 90404

முன்பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்.