Election bannerElection banner
Published:Updated:

"அரிதாரம் பூசிய முகங்களில் ததும்பும் சோகம்!" 'திரெளபதியின் துயில்' நாடகம்- ஒரு பார்வை

Folk Artist
Folk Artist

முழுக்கதையும் பாடலும் உரையாடலுமாக ஆர்மோனியம், தவில், சிங்கி இசையுடன் நிகழ்த்தப்பட்டது. 

தெருக்கூத்து என்றவுடன் நம் மனத்திரையில் சில காட்சிகள் விரியும். கிராமத்தில், புறநகர்ப் பகுதியில் திருவிழாக் கால இரவு நேரத்தில் மக்கள் சிலர் அமர்ந்திருக்க, அடவு கட்டி ஆடிக்கொண்டிருக்கும் சித்திரம் நமக்குள் எழும். விடிய விடிய பாடியும், ஆடியும் கூத்து அரங்கேறும். சற்று வெளிறிப்போன துணிகளை அணிந்து அரிதாரம் பூசிக்கொண்டு கலைஞர்கள் கம்பீரமான குரலில் நாட்டுப்புறக் கதைகள், ராமாயணம், மகாபாரதக் கதைகளைக் கூத்தாக நிகழ்த்திக்கொண்டிருப்பர். அதற்கென தனி ரசிகப் பட்டாளங்களும் உண்டு. கால மாற்றத்தில் தெருக்கூத்து மிகச் சொற்பமான இடங்களிலேயே நிகழ்த்தப்படுகிறது.

Therukoothu
Therukoothu

அந்தக் கூத்துக் கலைஞர்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பது வெளிச்சத்துக்கு வராத கதை. `அடவு' குழுவினர் மற்றும் `தியேட்டர்' இருவரும் இணைந்து முற்றிலும் மாறுபட்ட தளத்தில் `திரௌபதி துயில்' கூத்தை முன்வைத்து நாடகம் ஒன்றை அரங்கேற்றினர். தர்மன், திரௌபதியை வைத்துச் சூதாடிய கதையைக் கூத்தாக நிகழ்த்தும் கூத்துக் கலைஞன், கூத்தை நிகழ்த்துவதற்குப் படும் சிரமம்தான் நாடகத்தின் கதை.

இருள் நிறைந்த அரங்கின் முன்பகுதியை மஞ்சள் விளக்கின் ஒளி மெல்ல நிறைக்கிறது. மேடைக்குப் பின்னணியிலிருந்து மேள, தாளங்களுடன் கட்டியங்காரன் பாடிக்கொண்டே ஓடிவர கூத்து தொடங்குகிறது. வந்தனம்... வந்தனம்... என்று வரவேற்று, விநாயகனுக்காகத் துதிப் பாடல்களையும் பாடினான் கட்டியங்காரன். "விநாயகா! நாட்டுல ஒரே தண்ணிப்பஞ்சம், பஞ்சத்த மட்டும் தீர்த்து வச்சேன்னா. காட்ட அழிச்சு உனக்கொரு சிலை வைக்கிறேன்" எனக் கட்டியங்காரன் கூற அரங்கம் சிரிப்பால் நிறைந்தது.

Modern Play on Therukoothu
Modern Play on Therukoothu

திடீரென கரென்ட் கட்... கொஞ்சம் டெக்னிக்கல் ப்ராப்ளம். யாரும் கலைந்து போக வேண்டாம் என்று ஒருங்கிணைப்பாளர் கூறுகிறார். வெளியிலிருந்து `டிரான்ஸ்ஃபார்மர் வெடிச்சிடுச்சு, கரன்ட் வராது' எனக் குரல் கேட்டது. நாடகத்தின்போது நடக்கும் இடையூறுகளையும் கதையோடு இணைத்திருந்தினர். நாடகக்காரர்களுக்கும் அந்த ஆளுக்கும் சண்டை வர, "நாடகம் இனி நடக்காது. எல்லாரும் கிளம்புங்க"னு சொல்லி பைகளை எடுத்துக்கொண்டு கிளம்பினர் நாடகக்காரர்கள். அறை இருளில் மூழ்கியது. நாடகங்கள் நிகழ்த்துவதில் உள்ள சிரமங்களை பார்வையாளர்களுக்கு எளிமையாக உணர வைத்தனர். மீண்டும் மெல்ல மஞ்சள் விளக்கு எரியத் தொடங்குகிறது.

துச்சாதனன் காவல்காரருடன் திரௌபதியை அழைத்து வரச் செல்கிற காட்சியுடன் கூத்து மீண்டும் தொடங்குகிறது. திரௌபதி, "ஏன் வரவேண்டும்?" என்று காரணம் கேட்க. கதை தொடங்குகிறது. காவல்காரன் தர்ம மகாராஜாவை புதிய அரண்மனைக்குப் பார்வையிட அழைத்துவருகிறார். சகுனி தர்மனிடம் தமாசாக ஒரு சூது விளையாடலாம் என அழைக்க முதலில் தர்மன் மறுக்கிறான். "சூது தவறு! அதை நாமே செய்யலாமா!" என்று மறுக்கிறான். "தமாசாக..." எனக் சொற்களில் வஞ்சம் வைத்து அழைக்கிறான் சகுனி.  தர்மனும் முத்துமாலையை வைத்து விளையாடித் தோற்கிறான். தோற்றவன் எழுந்து கிளம்ப,  "இன்னொருமுறை விளையாடு மருமகனே. இம்முறை அதிர்ஷ்டம் உன் பக்கம் இருக்கலாம் அல்லவா" எனச் சொல்ல. நாட்டையும் நாட்டு மக்களையும் வைத்து விளையாடித் தோற்கிறான். உனக்கு அதிர்ஷ்டமான திரௌபதியை வைத்து விளையாடு வெல்வாய் எனக் சகுனி அழைக்கத் திரௌபதியை வைத்து விளையாடி  மீண்டும் தோற்கிறான். தர்மன் தோற்ற காரணத்தைச் சொல்லி திரௌபதியைத் துச்சாதனன் அழைக்க, திரௌபதி மறுக்கிறாள்.

Dharman Character
Dharman Character

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்ற, துச்சாதனன் கோபத்தில் அவளைத் துன்புறுத்தி அவமானப்படுத்தச் சேலையை உருவுகிறான். கிருஷ்ணனின் செயலால் சேலை வந்துகொண்டே இருக்கத் துச்சாதனன் சோர்ந்து போகிறான். கதை நிகழ்ந்து முடிக்கையில், துச்சாதனன் போன்று அரிதாரமிட்டவர் தூங்கி விழிப்பது போன்ற காட்சி அரங்கேறுகிறது.  கூத்து நடக்குமிடம் இருள் சூழ்ந்து கிடக்கிறது. 

உடன் வந்த கலைஞர்கள் எல்லாம் சென்றுவிட்டதாக அருகிலிருப்பவர் சொல்ல, கனவில் எல்லாம் நடந்து முடிந்ததை உணர்ந்துகொள்கிறார் துச்சாதனன் அரிதாரமிட்டவர். அரிதாரம் பூசிய முகம் சோகத்தில் நிரம்ப தெருக்கூத்துக் கலைஞன் நகர்ந்து செல்வதாக நாடகம் நிறைவடைந்தது.

Artists Who Participated   in Play
Artists Who Participated in Play

முழுக்கதையும் பாடலும் உரையாடலுமாக ஆர்மோனியம், தவில், சிங்கி இசையுடன் நிகழ்த்தப்பட்டது.  நாடகக் கலைஞர்களின்  நடிப்பைப் பார்வையாளர்கள் கைதட்டிப் பாராட்டினர். எல்லா காலத்திலும் கலைஞர்களுக்குக் கிடைக்கும் ஒரே சன்மானம் அதுமட்டும்தான் என்பதை உணர்த்துவதாக அமைந்தது அந்தத் தருணம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு