Election bannerElection banner
Published:Updated:

தினமும் ஒரு புத்தகம் இலவசம்... வாசிப்பை ஊக்குவிக்கும் முயற்சியில் அழிசி மின்னூல் பதிப்பகம்!

மின்னூல் | e-book
மின்னூல் | e-book

அச்சு நூல்களுக்கான வரவேற்பு குறையாமலிருப்பது ஒருபுறம், தமிழில் மின்னூல்களின் வெளியீடும், வாசிப்பும் கடந்த ஆண்டுகளில் அதிகரித்திருப்பது மறுபுறம் எனக் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்ச்சூழலில் வாசிப்பு அதிகரித்திருக்கிறது!

சென்னை புத்தகக் காட்சி கடந்த மாதம் நடந்துமுடிந்திருக்கிறது. கொரோனா பரவலிலிருந்து தமிழகம் முழுவதுமாக விடுபட்டிருக்காத நிலையில், இந்த புத்தகக் காட்சி எப்படி இருக்கப் போகிறது என்பது பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள், வாசகர்கள் என அனைவரின் எதிர்பார்ப்பும் கேள்வியுமாக இருந்தது. என்றபோதிலும், சுமார் 7 லட்சம் பேர் இந்த ஆண்டு புத்தகக் காட்சியைப் பார்வையிட்டு, தமிழகத்தின் அறிவுச் செயல்பாட்டில் முக்கியமான ஒரு நிகழ்வாக கொரோனா சூழலிலும் இதை நிலைநிறுத்தினர்.

தமிழகத்தில் இன்றைக்கு வாசிப்பு குறைந்துவிட்டது; எல்லோரும் செல்பேசிக்கும், இணையத்துக்கும் அடிமையாகிவிட்டனர். குறிப்பாக இளைஞர்கள் புத்தகங்களைத் தொட்டுப் பார்ப்பதுகூட கிடையாது போன்ற குற்றச்சாட்டுக்களை எல்லாம் ஒவ்வொரு ஊர்களிலும், சமூக ஊடகங்களிலும் இயங்கும் வாசிப்புக் குழுக்கள் பொய்யாக்குகின்றன.

சென்னை புத்தகக் காட்சி | Chennai book fair
சென்னை புத்தகக் காட்சி | Chennai book fair

அச்சு நூல்களுக்கான வரவேற்பு குறையாமலிருப்பது ஒருபுறம், தமிழில் மின்னூல்களின் வெளியீடும், வாசிப்பும் கடந்த ஆண்டுகளில் அதிகரித்திருப்பது மறுபுறம் எனக் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்ச்சூழலில் வாசிப்பு அதிகரித்திருக்கிறது; மேம்பட்டிருக்கிறது. இதுவே அச்சு நூல்களுக்கு இணையான மின்னூல்களின் வாசிப்பைத் தமிழ் வாசகர்களிடையே பரவலாக்கியிருக்கிறது.

அச்சுக்குப் போட்டி டிஜிட்டலா? - தளங்கள் மாறும் வாசிப்பு!

தமிழில் மின்னூல்களுக்கான முதன்மைத் தளமாக ‘அழிசி ஈ-புக்ஸ்’ விளங்குகிறது. ஏப்ரல் 2018-ல் தொடங்கப்பட்ட இந்த மின்னூல் பதிப்பகம், இதுவரை நூற்றுக்கணக்கான மின்னூல்களை வெளியிட்டிருக்கிறது. நாட்டுடைமை ஆக்கப்பட்ட பல எழுத்தாளர்களின் நூல்களை மின்னூலாக்கி மிகக் குறைந்த விலையில் அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் பணியை அழிசி மேற்கொண்டிருக்கிறது. எழுத்தாளர்களின் பிறந்தநாள், புத்தகம் வெளியான நாள், முக்கிய நிகழ்வுகள் போன்ற தினங்களில் புத்தகங்களை இலவசமாக வழங்குவது வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

அழிசியின் வெளியீடுகள், 2019-ல் 10,693 இலவசத் தரவிறக்கங்களோடு 13,389 ஆக இருந்த ஒட்டுமொத்த தரவிறக்கங்கள், 2020-ம் ஆண்டில் 61,229 இலவசத் தரவிறக்கங்களோடு ஒட்டுமொத்தமாக 66,403 பதிவிறக்கங்களைக் கண்டிருக்கிறது. கொரோனா பொது முடக்கம் நடைமுறையிலிருந்த காலகட்டத்தில் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் அதிக எண்ணிக்கையிலான புத்தகங்களை இலவசமாக அழிசி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தரவிறக்கங்கள்
தரவிறக்கங்கள்

அச்சில் மட்டுமே இருக்கும் தமிழின் முன்னணி எழுத்தாளர்களின் படைப்புகளை மின்னூலாக்கும் பணியில் பங்கெடுப்பது, இன்றைக்கு எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களின் படைப்புகள், கிண்டிலில் மின்னூலாகவும் வெளிவருவதற்கான பணிகளிலும் அழிசி ஈடுபட்டுள்ளது.

“இலவசமாக வழங்கும் நூல்கள் பெரும்பாலும் நாட்டுடைமை ஆக்கப்பட்டவை. அவற்றில் பாதிக்கும் மேலானவை தற்போது அச்சில் இல்லை. நாட்டுடையாக்கப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகளைப் பல பதிப்பகங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு அதிக விலை வைத்து வெளியிடுகின்றன. இருந்தும்கூட இன்னும் அச்சில் தரமான பதிப்பு வராத முக்கியமான ஆய்வுகள், மொழிபெயர்ப்புகள் எனப் பல படைப்புகள் உள்ளன. கிண்டில் போன்ற மின்னூல்களுக்கான தளங்கள் அவற்றைப் பதிப்பிக்கச் சற்று இலகுவான வாய்ப்பைத் தருகின்றன. அச்சுப் பதிப்பின் செலவினங்கள் இல்லாமல் உலகளாவிய வாசகர்களிடம் ஒரு நூலைக் கொண்டுசேர்க்க முடிகிறது. இந்த முயற்சிக்கு ஏராளமான வாசகர்கள் ஆதரவு தருகிறார்கள். "இலவச நூல்கள் அவர்களுக்கான அன்பளிப்பு” என்று அழிசி தொடக்கப்பட்டதன் நோக்கம் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் கூறுகிறார் அதன் வெளியீட்டாளர் ஸ்ரீநிவாச கோபாலன்.

ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாகக் கொண்டாடப்படும் நிலையில், ஏப்ரல் 1 தொடங்கி 30-ம் தேதி வரை மாதம் முழுவதும் நாளொன்றுக்கு ஒரு புத்தகம் இலவசம் என்ற அறிவிப்பை அழிசி ஈ-புக்ஸ் வெளியிட்டிருப்பது வாசகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இலவச நூல்கள்
இலவச நூல்கள்

தமிழின் முன்னோடி எழுத்தாளர்களான க.நா.சு-வின் ‘சர்மாவின் உயில்’, ஆர். ஷண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’, உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான ஜாக் லண்டனின் ‘கானகத்தின் குரல்’ போன்ற புகழ்பெற்ற நாவல்கள்; வெ.சாமிநாத சர்மா-வின் ’எனது பர்மா வழிநடைப் பயணம்’, தொ. மு. பாஸ்கரத் தொண்டைமானின் ‘இந்தியக் கலைச் செல்வம்’, மயிலை சீனி. வேங்கடசாமியின் ‘கிறித்தவமும் தமிழும்’ போன்ற முக்கியமான கட்டுரைப் புத்தகங்கள்; ‘பாப்பாவுக்கு காந்தி கதைகள்’, ‘பஞ்சதந்திரக் கதைகள்’ என இலவச தரவிறக்க திட்டத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள் ஒவ்வொன்றுமே தனித்துவமானவை!

புத்தகம் இலவசமாக அறிவிக்கப்பட்டிருக்கும் நாளில் மதியம் 1:30 மணியில் இருந்து மறுநாள் மதியம் 1:29 மணிக்குள் அமேசான் தளத்திலிருந்து இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம். இலவச புத்தகங்களைப் பெறுவதற்கான இணையச் சுட்டியை அழிசியின் சமூக வலைத்தளப் பக்கங்களில் காணலாம்.

அழிசி ஃபேஸ்புக்: https://www.facebook.com/AzhisiEbooks/

அழிசி ட்விட்டர்: https://twitter.com/AzhisieBooks

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு