Published:Updated:

சிந்தனை விருந்து! - `சுந்தரத்தை  அதட்டிய சுந்தரம்!'

சிந்தனை விருந்து
பிரீமியம் ஸ்டோரி
சிந்தனை விருந்து

பாக்கியம் ராமசாமி ஓவியம்: நடனம்

சிந்தனை விருந்து! - `சுந்தரத்தை  அதட்டிய சுந்தரம்!'

பாக்கியம் ராமசாமி ஓவியம்: நடனம்

Published:Updated:
சிந்தனை விருந்து
பிரீமியம் ஸ்டோரி
சிந்தனை விருந்து

ன்மிகக் கூட்டம் எங்கே நடந்தாலும் தவறாமல் சென்றுவிடுவது, நம்ம நண்பர் ஒருத்தரின் வழக்கம். கூட்டம் முடிந்ததும், கையோடு ஒரு மாலையை வாங்கி அந்தப் பிரசங்கியின் கழுத்தில் போட்டு, சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடுவார். அவர் செய்த பிரசங்கத்தில் தனக்குப் புரியாத இடம் என்று ஒன்றைக் குறிப்பிட்டு, (ஏதோ மீதியெல்லாம் புரிந்துவிட்டதுபோல) அதை விளக்கிச் சொல்லும்படி பணிவுடன் கேட்டுக்கொள்வார்.

அன்றைய தினம், பிரசங்கம் செய்தவர் கீதை ஸ்லோகம் ஒன்றை விளக்கினார்:

உத்தரே தாத்மனாத்மானம் நாத்மான

மவஸாதயேத்

ஆத்மைவஹ்யாத்மனோ பந்து

ராத்மைவ ரிபு ராத்மன:

அதாவது, ‘ஒருவன் தன்னைத் தானே உயர்த்திக்கொள்ள வேண்டும். தனக்குத் தானே நண்பன்; தனக்குத் தானே எதிரி’ என்றார். பிரசங்கம் முடிந்தது. வழக்கம்போல் அவரைச் சந்தித்த நம் நண்பர், ‘‘சாமி, எனக்கு ரொம்ப நாளா ஒரு பிரச்னை. நீங்கதான் தீர்த்து வைக்கணும்’’ என்றார்.

‘‘என்ன சந்தேகம்?’’

‘‘சாமி, என் மனைவி சதா என்னை வேலை வாங்குறா. வீட்டைவிட்டு ஓடிப் போய் சாமியாரா யிடலாமான்னு பார்த்தாலும், அதுக்கும் துணிவு இல்லை; வேலை செய்யவும் பிடிக்கலை. நான் என்ன செய்யறது, சொல்லுங்க!’’

இதைக் கேட்டு அந்த ஆன்மிக குரு சிரித்தார். ‘‘இதுக்கு நான் பதில் தரமுடியாது. ஆனா, ஒரு முகவரி தரேன். அங்கே போ. உன் கேள்விக்கான விடை கிடைக்கும்’’ என்று சொல்லி, முகவரியைத் தந்தார்.

மறுநாள்... காலை 6 மணிக்கெல்லாம் அந்த முகவரிக்குப் போய்விட்டார் நண்பர். அவர் தேடிப்போன வீட்டின் வாசல் கதவு இன்னும் திறக்கவேயில்லை. திண்ணையில் பொறுமையாக உட்கார்ந்துகொண்டார். சில விநாடிகளில், உள்ளிருந்து ஓர் அதட்டல் குரல் கேட்டது... ‘‘டேய் சுந்தரம்! எவ்வளவு நேரம்தான் தூங்குவே. எழுந்து போய் பல்லைத் தேய்!’’

சிறிது நேரம் கழித்து, உள்ளிருந்து மீண்டும் சத்தம்... ‘‘டேய் சுந்தரம்... போய் அடுப்பை மூட்டிப் பாலைக் காய்ச்சு.மறுபடி என்னடா உனக்குத் தூக்கம்?’’

நண்பருக்கோ வியப்பு. அந்தச் சுந்தரத்தைப் பார்க்கத்தான் பிரசங்கி இவரை அனுப்பியிருந்தார். அவரையே இப்படி யாரோ அதட்டி உருட்டி வேலை வாங்குகிறார்களே!

சற்று நேரத்தில் கதவு திறந்தது. நண்பர் எழுந்து, கதவு திறந்த ஆசாமியை வணங்கி, ‘‘சுந்தரம் இருக்காருங்களா?’’ என்றார்.

‘‘நான்தான் சுந்தரம்.’’

‘‘உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்.’’

‘‘சந்தோஷம், உள்ளே வாங்க!’’ என்றவர், ‘‘டேய் சுந்தரம்! நாற்காலியை எடுத்துப் போடுடா!’’ என்று ஓர் அதட்டல் போட்டுவிட்டு, பிறகு தானே சென்று நாற்காலியை எடுத்து வந்து போட்டார். நண்பருக்குப் புரியவில்லை. அதற்குள் அடுத்த அதட்டல்... ‘‘டேய் சுந்தரம், காபி கலந்துட்டு வந்து, அவருக்கு ஒரு டம்ளர் கொடுத்துட்டு, நீயும் ஒரு டம்ளர் எடுத்துக்கோ!’’

சிந்தனை விருந்து! - `சுந்தரத்தை 
அதட்டிய சுந்தரம்!'

சுந்தரம்தான் அதட்டினார்; அவரேதான் சமையல் அறைக்கு சென்று, காபி கலந்து கொண்டு வந்தார்.

‘‘வீட்ல யாரும் இல்லீங்களா?’’ - நம்மவர் கேட்டார்.

‘‘மனைவி இருக்கா. தூங்கிட்டிருக்கா!’’ என்றார் சுந்தரம்.

நம்ம நண்பர் எழுந்தார்; கும்பிட்டார். ‘‘நான் கிளம்பறேன் சார். என் சந்தேகம் தெளிஞ்சுடுச்சு!’’ என்று மன நிறைவுடன் புறப்பட்டார்.

பிறத்தியார் கட்டளையிடும்போதுதான் நமக்கு எரிச்சலும் கோபமும் ஏற்படுகிறது. தன்னைத் தானே விரட்டிக் கொண்டால், வேலை செய்ய எரிச்சல் வராது.

‘தானே தனக்கு நண்பன். தானே தனக்கு எதிரி’ என்று கீதை சொல்வதுபோல, தானே தனக்கு எஜமான், தானே தனக்கு வேலையாள் என்கிற மனோநிலையை வளர்த்துக்கொண்டால், பிறத்தியார் தன்னை வேலை வாங்குகிறார்களே என்று எரிச்சலும் எழாது; ஓடிப்போய் சாமியாராகி விடலாம் என்ற எண்ணமும் தோன்றாது!

(28.4.2010 இதழிலிருந்து...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism