Published:Updated:

லயோலா கல்லூரி விஸ்காம் துறையின் முன்னோடி `சக்ஸ் என்கிற சக்கரவர்த்தி' - சில நினைவுகள்

சக்கரவர்த்தி

ஒன்பது வயதுமுதல் தான் சினிமா குறித்து ஆர்வம் கொண்டு பேசிவருவதாக சக்ஸ் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார். உலகளவில் முக்கியமான கலைப்படங்கள், வெகுஜன சினிமா என இரண்டு குறித்தும் தன் கருத்துக்களை அவ்வப்போது பகிர்ந்துள்ளார்.

லயோலா கல்லூரி விஸ்காம் துறையின் முன்னோடி `சக்ஸ் என்கிற சக்கரவர்த்தி' - சில நினைவுகள்

ஒன்பது வயதுமுதல் தான் சினிமா குறித்து ஆர்வம் கொண்டு பேசிவருவதாக சக்ஸ் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார். உலகளவில் முக்கியமான கலைப்படங்கள், வெகுஜன சினிமா என இரண்டு குறித்தும் தன் கருத்துக்களை அவ்வப்போது பகிர்ந்துள்ளார்.

Published:Updated:
சக்கரவர்த்தி
1980 கள். நாங்கள் `நிறப்பிரிகை' இதழ் தொடங்கி `போஸ்ட்மார்டனிசம்’, `பெண்ணியம்’, `தலித் அரசியல்’ என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்த காலம் அது. சோவியத் ருஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சிக்குப் பிந்திய சூழலில்,

இனி இந்த ஒரு துருவ உலகில் புரட்சி, வர்க்க அரசியல் ஆகியவற்றுக்கெல்லாம் காலமில்லை; இனி ‘நாகரிகங்களுக்கு இடையேயான மோதல்கள்தான் சாத்தியம்’ என சாமுவேல் ஹட்டிங்டன் முதலானோர் முழங்கிக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில்தான் நாங்கள் அப்படியான பார்வையை ஏற்காமலும், அதே நேரத்தில் மாற்றுச் சிந்தனைகளின் அவசியத்தை வற்புறுத்தியும் தீவிரமாகப் பேசத் தொடங்கி இருந்தோம்.

அந்தப் பின்னணியிலான எங்களின் உரையாடல்களின் ஊடாகத்தான் இதுகாறும் சாதாரண மக்களின் ரசனையைத் தாழ்வாக நினைக்கும் மேட்டிமைத்தனத்திற்கு மாறாக அடித்தள மக்கள் ஆய்வுகள் (subaltern studies), விளிம்புநிலை மக்களின் அரசியல், பாவ்லோ ஃப்ரெய்ரேயின் கல்வி குறித்த கோட்பாடுகள் என்றெல்லாம் பேசத் தொடங்கினோம்.

அப்போதுதான் ஒருமுறை நண்பர் ராஜன்குறை `வெகுஜன சினிமா' குறித்த சிந்தனையின்பால் கவனம் ஈர்த்தார். தியோடர் பாஸ்கரனின் நூலும் எங்களை இந்தத் திசையில் ஈர்த்திருந்தது.

சக்கரவர்த்தி
சக்கரவர்த்தி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`கலைப் படங்கள் X வெகுஜன சினிமா' என்கிற ஒரு இருமை உருவாக்கப்பட்டு எளிய மக்களின் ரசனை எப்படி கீழ்மைப் படுத்தப்படுகின்றன என விவாதித்த இந்தப் பின்னணியில்தான் வெகுஜன சினிமா குறித்த ஒரு இரு நாள் கூடுகையைக் குடந்தையில் நடத்தினோம். அப்போதுதான் எனக்கு முதன் முதலாக எங்களால் ‘சக்ஸ்’ என அன்புடன் அழைக்கப்பட்ட சக்கரவர்த்தி அறிமுகமானார். இரண்டு நாட்களும் எங்களோடு தங்கி விவாதங்களில் பங்கேற்ற அவரது பங்களிப்பு அதில் முக்கியமானது.

இரண்டாம் நாளில் இறுதி அமர்வைச் சற்றே மாற்றி அமைக்கலாம் எனும் கருத்தையும் அவரே முன்வைத்தார். அங்கு வந்திருந்த எல்லோரையும் அவர்கள் முதன் முதலில் ரசித்துப் பார்த்த வெகுஜன சினிமா அனுபவத்தை அங்கே பேசச் சொல்லலாம் என்றார். எந்த அளவிற்கு அது வெற்றி பெறும் என்கிற தெளிவில்லாமல் தான் அவையில் அதை முன்வைத்தோம். வந்திருந்த எல்லோரும் தொடக்கத்தில் சற்றுத் தயங்கினாலும் தாங்கள் பார்த்த ஒரு popular cinema தங்களை ஏன் ஈர்த்தது, எத்தகைய உணர்வைத் தாங்கள் அதனூடாகப் பெற்றோம் என அங்கே பகிர்ந்து கொண்டது ஒரு அற்புதமான அனுபவம். அங்கே அவர் வாசித்த கட்டுரையும் முக்கியமானது. எது குறித்தும் பேசச் சொன்னால் கூடியவரை எழுதிவந்து தெளிவாகத் தன் கருத்துக்களை முன்வைப்பது சக்சின் வழக்கம். அது ஒரு கட்டுரையை வாசிப்பதுபோன்ற உணர்வைத்தான் கேட்பவர்களுக்கு ஏற்படுத்தும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒன்பது வயதுமுதல் தான் சினிமா குறித்து ஆர்வம் கொண்டு பேசிவருவதாக சக்ஸ் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார். உலகளவில் முக்கியமான கலைப்படங்கள், வெகுஜன சினிமா என இரண்டு குறித்தும் தன் கருத்துக்களை அவ்வப்போது பகிர்ந்துள்ளார். ஒரு கட்டுரைத் தொகுப்பு தவிர பெரிய அளவில் அவரின் பங்களிப்பு நூல் வடிவம் பெற்றதில்லை. எனினும் சினிமா குறித்த அவரது ஆங்கில உரையாடல்கள், ‘கபாலி’ போன்ற திரைப்படங்கள் குறித்த உரைகளின் ஊடாக திரைக்கலை குறித்து அவர் முன்வைத்த கருத்துரைகள், கட்டுரை வாசிப்புகள் முதலியவற்றைத் தொகுத்தால் திரைக்கலை குறித்த அவரது பார்வையைத் தொகுத்துக்குக் கொள்ளவும், அறிந்துகொள்ளவும் இயலும்.

இறுதிக் காலத்தில் அவர் சுமார் இரண்டாண்டுகாலம் நோய்வாய்ப்பட்டுத் துன்புற்று மறைந்ததை அனைவரும் அறிவோம். நிரந்தர வேலையில் அவர் தொடர்ந்து இருந்ததில்லை என்பதையும் அறிவோம். ஆனால் என்றும் அவர் ஒரு நீண்ட காலம் அவருக்குரிய தகுதியான வேலைகளில் அவர் இல்லாமல் இருந்ததும் இல்லை. அந்த வகையில் திரைத் துறை அவருக்கு உரிய மதிப்பை அளித்தது என்றே சொல்ல வேண்டும்.

சக்கரவர்த்தி
சக்கரவர்த்தி
திரைப்படம் ஒரு வகையில் அவரது குடும்பத் தொழில் எனலாம். தற்போது M.G.R. Film Institute of Tamil Nadu என அழைக்கப்படும் `ஃபில்ம் அண்ட் டெலிவி‌ஷன் இன்ஸ்டிடியூட் ஆப் தமிழ்நாடு’ நிறுவனத்தில் இரண்டாண்டுகள் செயல்பட்டதுடன் திரைப்படத் துறையில் முழுமையாக அவர் பணி தொடங்கியது. சென்னை லயோலா கல்லூரியில் ‘விஸ்காம்’ (B.Sc) வகுப்பு தொடங்கப்பட்டபோது அதை வடிவமைத்துத் தந்ததும் சக்ஸ்தான் (Course in Visual Communication in the region at Loyola College, Chennai. 1989).

திரைப்படம் ஒரு வகையில் அவரது குடும்பத் தொழில் எனலாம். தற்போது M.G.R. Film Institute of Tamil Nadu என அழைக்கப்படும் `ஃபில்ம் அண்ட் டெலிவி‌ஷன் இன்ஸ்டிடியூட் ஆப் தமிழ்நாடு’ நிறுவனத்தில் இரண்டாண்டுகள் செயல்பட்டதுடன் திரைப்படத் துறையில் முழுமையாக அவர் பணி தொடங்கியது. சென்னை லயோலா கல்லூரியில் ‘விஸ்காம்’ (B.Sc) வகுப்பு தொடங்கப்பட்டபோது அதை வடிவமைத்துத் தந்ததும் சக்ஸ்தான் (Course in Visual Communication in the region at Loyola College, Chennai. 1989). இன்று அது ஒரு முக்கிய பாடத்துறையாக உருப்பெற்றுத் தொடர்கிறது. அடுத்த பத்தாண்டுகள் அவர் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தொலைக்காட்சித் துறையில் இயக்குனராகவும், எடிட்டர் ஆகவும் பங்களித்தார். 1999-2002 காலகட்டத்தில் பினாங்கில் உள்ள மலேசியப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றினார். அடுத்த சில ஆண்டுகள் சில முக்கிய திரைசார் கலைப் படைப்புகளின் உருவாக்கத்தில் பங்கேற்றார். அவரது முக்கிய பங்களிப்புகளில் ஒன்றான சென்னை குறித்த ’டாகுமெண்டரி’யும் (Chennai: The Split City) இக்காலகட்டத்தில்தான் உருவானது.

2008 இல் ஹைதராபாத்தில் ராம்நாய்டு திரைப்படக் கல்லூரி தொடங்கப்பட்டபோது அதில் `டீன்’ ஆகவும் ‘டைரக்‌ஷன்’, `ஸ்க்ரீன் ரைட்டிங்’ முதலான துறைகளின் தலைவராகவும் ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். 2014 -17 காலகட்டத்தில் எல்.வி.பிரசாத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி அகாடமியில் பணியாற்றினார். அதன் பின் (2018) சென்னையில் எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தில் பணி (Dean in Media Studies) செய்தார். 2018 இல் மீண்டும் ராமாநாய்டு திரைப்படக்கல்லூரியில் ‘டீன்’ ஆனார். ஆக மொத்தத்தில் எந்த்த் துறையை அவர் தீவிரமாக நேசித்தாரோ அந்தத் துறையில் அவர் கடும் நோய்வாய்ப்படும்வரை (2020) தொடர்ந்து நல்ல பதவிகளில் செயல்படுவதற்கும், படைப்புத் திறனுடன் பணி செய்வதற்கும் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புக் கிடைத்துக் கொண்டுதான் இருந்தது. சக்சைப் புரிந்துகொள்வதில் இந்த அம்சம் முக்கியமானது.

தனது எழுத்துக்கள், பங்களிப்புகள் ஆகியவற்றைத் தொகுத்துப் பதிவாக்குவது, பாதுகாப்பான ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்வது ஆகியவற்றில் கவனம் செலுத்தாமை ஆகியனதான் அவரது இறுதிக்காலத் தனிமை, உடல் நலமின்மை முதலானவற்றிற்குக் காரணமானது எனலாம்.
அவருடைய காலகட்டம் (சுமாராக 1960 – 2020) என்பது திரைத்துறையில் பல நுணுக்கமான மாற்றங்களை எதிர்கொண்ட காலம். அவற்றின் ஊடாக அவர் தன் அனுபவங்களைச் சொல்லும் சில நேர்காணல்கள் மிக முக்கியமானவை. திரைத்துறையில் நேர்ந்த தொழில்நுட்ப மாற்றங்களை நுணுக்கமாக அவர் விளக்கி இருப்பது அவரது முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று.

ஃப்ராய்ட், லகான் முதலானோரின் கருத்துக்களை நுணுக்கமாக அவர் கையாள்வதைப் பதிவாகியுள்ள அவரது உரையாடல்கள் சிலவற்றில் காண இயலும். திரைப்பட ஆக்கம் மட்டுமல்ல, திரைப்பட ரசனையும் ஒரு கல்வி மற்றும் பயிற்சி சார்ந்த செயல்பாடு என்பதற்கு அழுத்தம் அளித்து அவர் நடத்திய பட்டறைகள் முதலியவற்றில் அவரது பேச்சுக்களும் (இயன்றால்) தொகுக்கப்பட வேண்டியவை.

ஒரு பாராட்டுக் கூட்டம் ஆன போதிலும், யார் குறித்து அல்லது எது குறித்து அவர் பேச அழைக்கப்படுகிறாரோ அது குறித்த தகவல்களச் சேகரித்துத் தனது துறைசார் புலமை நோக்குடன் அவர் உரையாற்றுவதையும் இங்கு பதிவு செய்தல் அவசியம். அந்த வகையில் அவரது உரைகள் பெரும்பாலும் எழுதி வாசிக்கப்படும் ஒரு கட்டுரை வாசிப்பாக அமைந்துவிடுவதும் கருதத் தக்கது.

சினிமாவைப் பெரிதும் நேசித்த தமிழ்நாடு அதன் வரலாற்றை ஆவணம் ஆக்குவதில் கவனம் குவிக்கவில்லை என்பதைத் தனது நேர்காணல்களில் சக்ஸ் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2019 இல் செஞ்சுயிட் முகர்ஜிக்கு அவர் அளித்துள்ள நேர்கணலில் இப்படியான சில குறிப்புகளை அவர் முன்வைக்கிறார். திரைப்படத் தொழிலுடன் (film industry) தான் வளர்ந்ததாக அவர் சொல்வதும் குறிப்பிடத் தக்கது. தன் தந்தை ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக இருந்ததையும் அவர் நினைவுபடுத்துகிறார்.

தன் ஒன்பது வயதில் சினிமா ஸ்டுடியோக்களிலும், எடிடிங் அறைகளிலும் தான் அலைந்து திரிந்ததை செஞ்சுயிட் முகர்ஜிக்குக் கொடுத்த அந்த நேர்காணலில் பதிவு செய்யும் சக்ஸ் தமிழ் சினிமா வரலாற்றைப் பதிவு செய்வதில் பெரிதாக எதையும் தான் செய்யவில்லை என்கிறார். ’நாம் இருவர்’ படத்தில் வேலை செய்யும் போது ஏவிஎம் ஸ்டுடியோ குறித்த வரலாற்றுத் தரவுகளைச் சேர்க்கத் தொடங்கினாலும் அதைத் தொடரவில்லை என்கிறார். ஒரு சிறு கட்டுரை மட்டுமே எழுத முடிந்தது என்றும் பதிவு செய்கிறார்.

சக்கரவர்த்தி
சக்கரவர்த்தி

தமிழ் சினிமா குறித்துப் போதிய ஆய்வுகள் இதுவரை செய்யப்படவில்லை எனவும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கர்நாடகம் ஆகிய நான்கு மாநிலங்களின் திரைப்படத் தயாரிப்பு மையமாகச் சென்னை விளங்கியபோதும் அந்த வரலாறு ஆவணப்படுத்தப் படவில்லை என்றும் அவர் பதிவு செய்வது குறிப்பிடத் தக்கது. ’தென்னிந்தியத் திரைப்பட வரத்தக அமைப்பு’ (Chamber of Commerce) அவற்றை ஆவணப்படுத்துவதில் சிரத்தை காட்டவில்லை என்கிறார். தென்னிந்திய வர்த்தக சபை, தமிழ்நாடு ஆவணக் காப்பகம் முதலானவற்றில் ஆங்காங்கு சிதறிக் கிடக்கும் வரலாற்றுத் தரவுகளை ஆய்வு செய்தால் ஓரளவு தமிழ் சினிமா வரலாற்றைத் தொகுக்க முடியும் என்கிறார்.

கோடம்பாக்கத்தில் மலிவாக நிலம் வாங்க முடிந்தது, அதனூடாக சினிமா தொடர்பான தொழில்கள் அங்கு குவிய நேர்ந்தது ஆகிய பின்னணியில் கோடம்பாக்கம் திரைப்படத் தொழிலின் மையமாகியது எனவும் ,`கோடா பாக்' எனும் உருதுச் சொல்லில் இருந்துதான் ‘கோடம்பாக்கம்’ எனும் பெயர் அப்பகுதிக்கு வந்தது என்றும் பதிவு செய்கிறார்.

அதேபோல சில உரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகளில் அவர் வாசித்த கட்டுரைகள் மற்றும் அவரது நேர்காணல்கள் ஆகியவற்றையும் முழுமையாகத் தொகுத்தால் பயனுடையதாக அமையும். ஏற்கெனவே அப்படி அவரது தமிழ் நூல் ஒன்று வெளிவந்துள்ளது. அது தவிர அச்சில் வேறு இல்லை. அப்படியான அவரது நேர்காணல்கள், எழுத்துக்கள் ஆகியவற்றைத் தொகுத்தால் பயனுடையதாக இருக்கும்.

சக்ஸ் எளிதில் கோபப்படுபவரும் கூட. ஆனால் எதையும் நிரந்தரமாகத் தொடர்பவரும் இல்லை. அப்படியான அனுபவம் ஒன்று எனக்கும் அவருடன் உண்டு. ஆனால் நானறிந்தவர எதையும் வன்மமாகத் தொடரும் பண்பு அவருக்கு இருந்ததில்லை. சென்னையில் நடந்த ஒரு கருத்தரங்கில் அப்படி ஒரு கடுமையான முரண் எனக்கும் அவருக்கும் இடையே வந்து கூட்டம் ஏற்பாடு செய்தவர்கள் எங்களைச் சமாதானப்படுத்த வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டதும் நினைவுக்கு வருகிறது.

அடுத்த சில மாதங்களில் அவர் சென்னைக்குவந்தபோது ஒரு நல்ல மதுப் புட்டியுடன் பெசண்ட் நகரில் இருந்த என் வீட்டிற்கு வந்தார். அன்றிரவு வெகு நேரம் வரை அவர், நான், ப்ரீதம், வாசு ஆகியோர் பேசிக்கொண்டிருந்ததை நினைத்துப் பார்க்கிறேன். தஞ்சையில் நான் இருந்தபோதும் அப்படி ஒருமுறை அவர் என் வீட்டிற்கு வந்தபோது திடீரென அவர் உடல்நலமில்லாமல் போனார். சிறந்த மருத்துவரும் தமிழில் ஏராளமான மருத்துவ நூல்களை எழுதியவருமான டாக்டர் நரேந்திரனிடம் சற்றே பதற்றத்துடன் அழைத்துச் சென்றேன். சக்சை உடனடியாகப் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்ததோடு வெளியில் காத்திருந்த நோயாளிகளைக் கூட கவனிக்காமல் நரேந்திரன் சக்சுடன் நீண்ட நேரம் உரையாடி அமர்ந்திருந்ததும் நினைவில் வருகிறது.

சக்ஸிற்கு மனமார்ந்த அஞ்சலிகள்.