Published:Updated:

`மரியாதை மறுக்கப்பட்ட மக்களுக்கு நான் தரும் மரியாதைதான் என் எழுத்து!' - எழுத்தாளர் பாக்கியம் சங்கர்

தனது 'நான்காம் சுவர்' கட்டுரைக் தொகுப்பில் கவனிக்கப்படாத பல மனிதர்களின் கதையைக் கட்டுரையாக்கியுள்ளார் பாக்கியம் சங்கர்.

பாக்கியம் சங்கர்
பாக்கியம் சங்கர்

அசலான மனிதர்களின் வாழ்வைப் பேசும் படைப்புகளுக்கு எப்போதுமே பெரும் வரவேற்பு உண்டு. சமீபத்தில், அப்படி பெருவாரியான வரவேற்பைப் பெற்ற நூல் பாக்கியம் சங்கரின் 'நான்காம் சுவர்.' வடசென்னை மனிதர்களின் கதைகள் அடங்கிய கட்டுரைத் தொகுப்பு. ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது.

வடசென்னைத் தமிழ்ச்சங்கம் சார்பில், 'நான்காம் சுவர்' நூலுக்குப் பாராட்டு விழா நடைபெற உள்ளது. பிணவறைகளில் பிணம் அறுக்கும் ஊழியர்கள், மலக் குழிக்குள் இறங்கி சுத்தம் செய்பவர்கள், மீனவர்கள், நாடோடிகள், தொல்குடிகள் உள்ளிட்ட பலரின் வாழ்வை அவர்தம் மகிழ்ச்சியை, துயரத்தை கட்டுரைகளாக்கியிருந்தார் பாக்கியம் சங்கர். சமீபத்தில், அந்தப் பகுதி மக்களே அவருக்குப் பாராட்டு விழா நடத்தியிருந்தார்கள் அந்த அனுபவம் குறித்து அவரிடம் பேசினோம்.

நான்காம் சுவர்
நான்காம் சுவர்

"'நாயக பிம்பம்' என்று சொல்லப்படுகிற எல்லாருமே அரசர்களாகவும் மாபெரும் புஜங்களைக் கொண்ட வீரர்களாக மட்டுமே தொடர்ச்சியாகச் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. ஒரு கட்டத்துக்கு மேல் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜி.நாகராஜன், தஞ்சை ப்ரகாஷ் போன்ற பலரின் வருகை நாயக பிம்பங்களைத் தகர்த்து எளிய மக்களைக் கதையின் மைய கதாபாத்திரமாக்கினார்கள். எனக்கு பிணம் அறுப்பவர் கதாநாயகனாகத் தெரிகிறார். அவரின் கதையைப் பதிவு செய்யவே விரும்புகிறேன். குட்டகையன் மணவாளன் என்பவரைப் பற்றி நான்காம் சுவரில் எழுதியிருந்தேன். அவரது நினைவு அஞ்சலி போஸ்டரில் நான்காம் சுவரின் பெயரையும் அவரது படையலில் நான்காம் சுவர் புத்தகத்தையும் வைத்தது எனக்குக் கிடைத்த பெரிய விருதாக நினைக்கிறேன்.

நான்காம் சுவர்
நான்காம் சுவர்

யசோதா அம்மா, என் நூல் வெளியீட்டு விழாவுக்கு வந்து ஆசீர்வதித்தார். ஆறுமுகத்தைப் பற்றி எழுதுகையில் அவர் என்னைப் பார்த்து பேசுகிறார். விளிம்பு நிலை, அடித்தட்டு என்பதைத் தாண்டி கணக்கிலெடுத்துக் கொள்ளப்படாதவர்கள் அவர்கள். நாம் நறுமணமாக வாழ நாற்றத்தைச் சுமப்பவர்கள். நாம் தூசியின்றி வாழ குப்பைகளைச் சுமப்பவர்கள். மரியாதை மறுக்கப்பட்ட அந்த மக்களுக்கு நான் தரும் மரியாதைதான் என் எழுத்து. இதற்கு அவர்கள் சார்பில் பாராட்டு விழா நடப்பது மகிழ்ச்சியானது'' என்றார் நெகிழ்வாக.