Published:Updated:

நாணயம் லைப்ரரி : வெற்றியைத் தேடித் தரும் திறன் மேம்படுத்தல்! - இலக்கை அடையும் வழி!

மனோதத்துவ ரீதியான விஷயங்களைப் புரிந்துகொண்டு அதற்கு இணங்க செயல்படும்போது புதிய உத்வேகம் நமக்குக் கிடைக்கும்!

பிரீமியம் ஸ்டோரி
ப்போதாவது நீங்கள், ஒரு சிலர் மட்டும் எப்படித் தொடர்ந்து வெற்றியை அடைந்து கொண்டே இருக்கிறார்கள் என ஆச்சர்ய மடைந்திருக்கிறீர்களா? அப்படி ஆச்சர்யப் பட்டு அவர்களுடைய செயல்பாட்டைக் கூர்ந்து கவனித்திருந்தீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்திருக்க வாய்ப்புள்ளது.

எப்போதுமே அவர்கள் இலக்குகளை அடைவதற்கான முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டே இருப்பதாலும், கையில் இருக்கிற குறைவான வசதிகளைக்கொண்டு அதீத சாதனைகளைச் செய்யத் தெரிந்தவர்களாக இருப்பதாலுமே அவர்களால் தொடர்ந்து வெற்றியை எட்டிப்பிடிக்க முடிகிறது என்பதுதான் அது.

நாணயம் லைப்ரரி : வெற்றியைத் தேடித் தரும் திறன் மேம்படுத்தல்! - இலக்கை அடையும் வழி!

‘‘நம்முடைய இலக்கை அடையத் தேவையானவை அனைத்தும் நம்மிடம் இருக்கிறது என நம்புவதாலேயே அவர்களால் அந்த வெற்றியை அடைய முடிகிறது என்றாலும், கையிலிருக்கும் வசதிகளைக்கொண்டு அவர்களுடைய இலக்கை அடையும் வழியை அவர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை’’ என்று சொல்லி ஆரம்பிக்கிறார் `எலிவேட்’ புத்தக ஆசிரியர் ராபர்ட் க்ளேசர்.

திறன் மேம்படுத்துதல்..!

“திறன் மேம்படுத்துதல் (capacity building) என்றால் என்ன? ஒருவர் தன்னுடைய இயல்பான திறன்களைத் தாண்டி அதிக திறனுடன் செயல்படுவதற்காகத் தானாகவே முயன்று தன்னுடைய திறனை மேம்படுத்துதலையே ‘கெப்பாசிட்டி பில்டிங்’ என்கிறோம். அதிவேக திறன் மேம்படுத்துதலே தொடர் வெற்றிக்குக் காரணமாக அமைகிறது. இன்னமும் தெளிவாகச் சொன்னால், ‘கெப்பாசிட்டி பில்டிங்’ என்பது வெறுமனே அதிக விஷயங்களைச் செய்வதைக் குறிப்பிடுவதில்லை. சரியான விஷயங்களை அதிக அளவில் செய்வதையே குறிக்கிறது.

‘கெப்பாசிட்டி பில்டிங்’ என்பது ஓரிரவில் நடக்கக்கூடிய விஷயம் இல்லை. ‘நீங்கள் அதிக எடையைத் தூக்க ஆசைப்படலாம். உங்கள் மனதில் ஓர் உத்வேகமும் தோன்றலாம். ஆனால், அந்த எடையைத் தூக்க பல வாரங்கள் நீங்கள் பயிற்சி எடுக்க வேண்டியிருக்கும். உத்வேகம் என்பது அவசியம் தேவைப்படும் ஒன்று என்றாலும், அந்தக் காரியத்தை முடிக்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுப்பதும் அர்ப்பணிப்பும் மிகமிக அவசியம். ‘கெப்பாசிட்டி பில்டிங்’ என்பது மனோதத்துவம், அறிவு, உடல்வலிமை, உணர்ச்சி என்ற நான்கு விஷயங்களை உள்ளடக்கியது. இந்த நான்கு விஷயங்களும் ஒருவரின் முன்னேற்றத்துக்கான படிநிலைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறன.

‘கெப்பாசிட்டி பில்டிங்’ என்பது இந்த ஒன்றுடன் ஒன்று இணைந்த நான்கு விஷயங்களையும் தனித்தனியாகவும் அவை எப்படி ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுகிறது என்பதையும் புரிந்து கொண்டு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். இந்த நான்கையும் தேவையான அளவுக்கு அதிகரித்துக் கொள்ளுதல் என்பது ஒரு கலையாகும். இவை நான்கும் ஒன்றுக்கொன்று உதவிக்கொள்ளும் வகையில் இருப்பதால், ஒரு விஷயத்தை நீங்கள் ஆரம்பித்தாலே மற்றவை கொஞ்சம் கொஞ்சமாக கைகூடிவர ஆரம்பிக்கும்” என்கிறார் ஆசிரியர்.

“தனிநபர் என்றாலும் சரி, நிறுவனம் என்றாலும் சரி, இந்த நான்குமே ‘கெப்பாசிட்டி பில்டிங்’குக்கு வழிவகை செய்பவையாகும்” என்கிறார் ஆசிரியர்.

எங்கே செல்ல நினைக்கிறோம்..?

“மனோதத்துவரீதியான விஷயங்கள் என்பதே மனித வாழ்வின் அடிப்படை இயக்கமாகும். நாம் அறியும் வண்ணமோ, நம்மை அறியாமலேயோ இவை நம்மை வழிநடத்திச் செல்பவையாகும். நிறுவனங்களைப் பொறுத்தவரை, இவை தீர்க்கமான விஷயங்களாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கும். எதற்காக இந்த நிறுவனம் இருக்கிறது, எங்கே செல்ல நினைக்கிறது, கொள்கைகள் என்னென்ன என்பவற்றைப் பற்றியெல்லாம் தெளிவு நிறுவனத்துக்கு இருக்கவே செய்யும். பலபேர் இணைந்து செயல்படும் நிறுவனத்தில் இதைப் புரிந்துகொள்வது சுலபம் என்றால், தங்கள் வாழ்க்கையில் தனிமனிதர்களால் இதை இலகுவாக அடையாளம் கண்டுகொள்ள முடியும்” என்கிறார் ஆசிரியர்.

நாணயம் லைப்ரரி : வெற்றியைத் தேடித் தரும் திறன் மேம்படுத்தல்! - இலக்கை அடையும் வழி!

“மனோதத்துவ ரீதியான விஷயங்களைத் தெளிவாகப் புரிந்துகொண்டு அதற்கு இணங்க நாம் செயல்பட ஆரம்பிக்கும்போது ஒரு புதிய உத்வேகம் நமக்குக் கிடைக்கும். அந்த உத்வேகமே வெற்றிக்கு வழிவகை செய்யும். உங்களால் உங்களுடைய வாழ்வின் அடிப்படை மதிப்பீடுகள் குறித்துத் தெளிவாக விளக்க முடியவில்லையென்றால், நீங்கள் ஜி.பி.எஸ் இல்லாமல் ஆளில்லாத தெரியாத சாலையில் ஒரு ஊருக்கு வழி கண்டுபிடித்துப் பயணிப்பது போலாகும். உங்களுடைய அறிவுசார்ந்த திறமையை வளர்த்துக்கொண்டீர்கள் என்றால், நாம் செய்யும் செயல்களில் குறைந்த அளவிலான சக்தியைச் செலவிடுதலே போதுமானது. அறிவுசார் திறமை எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ, அந்த அளவுக்கு குறைந்த சக்தியை நாம் செய்யும் காரியங்களில் செலவழித்தால் போதும் என்பதால், அறிவுசார் வளர்ச்சி என்பது சக்தியைச் சேமித்து மற்ற விஷயங்களில் பயன்படுத்திக் கொள்ள உதவுவதாக இருக்கிறது” என்கிறார் ஆசிரியர்.

நாணயம் லைப்ரரி : வெற்றியைத் தேடித் தரும் திறன் மேம்படுத்தல்! - இலக்கை அடையும் வழி!

இலக்கு என்பது..!

“அறிவுசார் விஷயங்களை வளர்த்துக்கொள்ள முதலில் தேவையானது நம்மால் அதை வளர்த்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையே. வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதும் அறிவுத்திறன் வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக இருப்பதால், வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். ‘எனக்கு எல்லாம் தெரியும், அதனால் எனக்கு எந்தப் பயிற்சியும் தேவையில்லை’ என்று நினைப்பவர்கள் சராசரி நபராகவே வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கிறார். நீங்கள் உங்களுடைய இலக்குகள் என நிர்ணயித்த அனைத்தையும் அடைந்து விடுகிறீர்கள் என்றால், நீங்கள் பெரிய இலக்குகள் எதையும் நிர்ணயித்துக் கொள்வதில்லை என்றே நான் சொல்வேன். இலக்குகளை அடைய ஒரு நடப்புத் திட்டத்தை வரைவு செய்து வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும். ஏனென்றால் உங்களுடைய நடப்புத் திட்டங்களே உங்களுக்கு எது முக்கியம் என்பதைத் தெளிவுபடுத்தி காட்டவல்லது” என்கிறார் ஆசிரியர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெற்றி என்பது...

“ஒரு குழுவாக எதிராளியுடன் போட்டி போடும்போது அந்தக் குழுவுக்குள் சிறப்பாக யார் இயங்குகிறார்கள் என்ற போட்டியும் இருக்கும். சிறந்த குழுவில் இந்தப் போட்டி என்பது ஆரோக்கியமானதாக இருக்கும். வெற்றி என்பதை அடைவதற்கு முன்னால் பல சோதனைகளையும் தோல்விகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் எப்படி சோதனைகளையும் தோல்விகளையும் கையாளுகிறீர்கள் என்பதிலேயே உங்களுடைய வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது” என்கிறார் ஆசிரியர்.

நாணயம் லைப்ரரி : வெற்றியைத் தேடித் தரும் திறன் மேம்படுத்தல்! - இலக்கை அடையும் வழி!

“ஒரே மாதிரியான உடல்வலிமையும் புத்திசாலித்தனமும் கொண்ட இருவர் எடுத்த காரியத்தில் வெற்றி மற்றும் தோல்வி என்ற இருவேறு மாறுபட்ட முடிவை எட்டுவதைப் பார்த்திருப்பீர்கள். இது எதனால் என்று ஆராய்ந்தால், இந்த இருவருக்கும் இடையே உள்ள உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறனில் உள்ள வித்தியாசம்தான் காரணமாக இருக்கும். நீங்கள் மனச்சோர்வில் இருந்தால், கடந்த காலத்தில் இருக்கிறீர்கள். ஏக்கத்துடன் இருந்தால் எதிர்காலத்தில் இருக்கிறீர்கள். மன அமைதியுடன் இருந்தால் மட்டுமே நிகழ்காலத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். நிகழ்காலத்தில் வாழ்ந்தால் மட்டுமே முன்னேற்றத்துக்கான அடிகளை நாம் எடுத்து வைக்க முடியும்” என்று சொல்லி புத்தகத்தை நிறைவு செய்கிறார் ஆசிரியர்.

வெற்றி பெறுவதற்கான பாதை குறித்து தெரிந்துகொள்ள நினைக்கும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது!

- நாணயம் விகடன் டீம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு