Published:Updated:

`நண்பேன்டா' - சிறுகதை #MyVikatan

விகடன் வாசகர்

அம்மா அப்பா எல்லோர் முன்னிலையிலும் ஒரு பெண்ணைப் பார்க்க வேண்டும். அப்பொழுது, மொத்த குடும்பமும் என்னைத்தான் பார்த்துக்கொண்டிருக்கும்.

Representational Image
Representational Image

நாடறிந்த ஒரு கம்பெனியில் Project Leader ஆகிய எனக்கு நாலு கழுதை வயதாகிவிட்டதால், திருமண ஏற்பாடு நடந்தது. நாளை பெண்பார்க்கும் படலம். நல்ல குடும்பம், அழகான, அறிவான வரன்...என்னைத்தான் சொல்கிறேன்?! யாருக்குத்தான் என்னைப் பிடிக்காது! பெண்ணின் தகப்பனார் வங்கியில் மேலாளராக இருக்கிறார். பார்க்கவிருக்கும் பெண்ணின் போட்டோகூட தரவில்லை. கேட்டதற்கு, "நாங்க Orthodox family" எனப் பதில் வந்தது. "Orthodox Family"- ல் இருப்பவர்களை போட்டோ எடுத்து whatsapp-ல் அனுப்பினால், whatsapp crash ஆகிவிடுமா என அதை இதைக் கேட்டு என் திருமணத்தை நிறுத்திவிடாதீர்கள் ப்ளீஸ். இதுதான் முதல் முறை. எனக்கு என்னவோ மாதிரி இருந்தது. அம்மா அப்பா எல்லோர் முன்னிலையிலும் ஒரு பெண்ணைப் பார்க்க வேண்டும். அப்பொழுது, மொத்த குடும்பமும் என்னைத்தான் பார்த்துக்கொண்டிருக்கும். நாளை என்ன நடக்கும்... ஏன்டா பொண்ணைத்தான பாக்குற? ஏதோ Zoo ல காண்டாமிருகத்த பாக்குற மாதிரி திகிலோட பாக்குறியே... கொஞ்சம் Romance ஆ பாருடா என தாய்மாமா சொல்வாரோ? பல சிந்தனைகள், பயங்கள், நெருடல்கள். இதற்கு ஒருவழி இருக்கிறது. என்னுடைய நெருங்கிய நண்பன் பட்டாபி உடன் இருந்தால் கொஞ்சம் தெம்பாக இருக்கும். பட்டாபி என்னுடைய பால்ய சிநேகிதன். மிக நல்லவன், வெகுளி. எப்பொழுதும் பேசிக்கொண்டே இருப்பான். நாளை இவனும் இருந்தால், ஏதாவது பேசிக்கொண்டே இருப்பான்.

Representational Image
Representational Image

எல்லோர் கவனமும் இவன்மீதே இருக்கும். நான் நிம்மதியாக பெண்ணைப் பார்க்கலாம், பேசலாம். பட்டாபி விஷயத்தை அம்மாவிடம் சொன்னேன். நானே சொல்லணும்னு நெனச்சேன். கண்டிப்பா வரசொல்லு என்றார். மறுநாள் காலை... 9:05 மணி. இராகு காலம் முடிந்து புறப்பட்டோம். வழியெல்லாம் பெண்ணைப் பற்றியே சிந்தனை. அழகாக இருப்பாளா, எந்த சினிமா நடிகை மாதிரி இருப்பாள்... கண்கள் எப்படி இருக்கும்? புதிய அனுபவமாக இருந்தாலும் நன்றாகவே இருந்தது! பெண் வீட்டை அடைந்துவிட்டோம். வாசலில் வெளிநாட்டு நாய் ஒன்று கட்டிப்போடப்பட்டிருந்தது. அது, எங்களைப் பார்த்தும் பார்க்காதது மாதிரி முகத்தை திருப்பிக்கொண்டது. காலிங் பெல்லை அழுத்தினார் அப்பா. உள்ளே இருந்து ஒரு ஐந்து ஆறு தலைகள் திபுதிபுவென வெளியே வந்தார்கள். வாங்க வாங்க பிரயாணம் எல்லாம் நல்லபடியா இருந்ததா... வாங்க உள்ள வாங்க என்றார்கள். உள்ளே நுழைந்தோம். ஹாலில் ஒரு போட்டோவை Frame செய்து மாட்டி வைத்திருந்தார்கள். அதில் ஒரு பெண்ணும், வெளியில் கட்டிப்போட்டிருக்கும் நாயும் இருந்தார்கள். அப்பா சொன்ன அடையாளம் எல்லாம் வைத்து பார்த்தால், இவள்தான் நான் பார்க்கப்போகும் பெண்ணாக இருக்கவேண்டும். அடடா என்ன அழகு... நான் என் மனத்தைப் பறிகொடுத்தேன். உடனே என் மனத்தில் டூயட். 'ஏதோ சொல்ல நெனச்சிருந்தேன், ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்'.

பாட்டுப் பாடி முடிக்கவில்லை... அதற்குள் பட்டாபி வாயெடுத்தான். ''அந்த போட்டோ-ல இருக்கிற ரெண்டு நாயும் அழகா இருக்குல்ல..?'' என்றான். ''டேய் அதுல ஒண்ணு எனக்கு பார்த்து இருக்கிற பொண்ணுடா.'' ''சாரி சாரி ஹேர் ஸ்டைல் ஒரே மாதிரி இருந்ததா... நான் Confuse ஆயிட்டேன்'' என்றான். ''என்னடா பதில் இது. டேய் வேற யார்கிட்டயாவது இப்படிச் சொல்லிடாத.'' இந்த நேரத்தில், ஒரு நடுத்தர வயது பெண் என்னருகில் வந்தார். ''hai, How is Your job?'' என்றார். ''நல்லா இருக்கு.'' ''ஆமா நீங்க யாரு?'' என்றேன். ''நான் பொண்ணோட சித்தி, US ல இருக்கேன். நடராஜ் நாளைக்கி வருவார்.'' ''நடராஜ் உங்க பையனா?'' ''No No, He is my Husband'' என்றவர், என்னிடம் ''Is there any Onsite opportunity?'' எனக் கேட்டார். ''No Onsite, Only Offshore Site Opportunity'' என இல்லாத புது வார்த்தையைச் சொன்னேன். ''Oh That is also very good naa?'' என்றார். நான் இன்னும் offshore ல் உள்ள பெண்களை மட்டும்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் எனச் சொன்னது அந்தப் பெண்ணுக்கு புரிந்தமாதிரி தெரியவில்லை.

Representational Image
Representational Image

''நல்ல நேரம் முடியிறதுக்குள்ள பொண்ண கூப்பிடுங்க'' என்றார் என் அப்பா. ''பெண் தயாராகிவிட்டாள். இதோ கூப்புடுறேன்'' என்ற பெண்ணின் தகப்பனார், பெண்ணை அழைத்தார். பெண் ரூமில் இருந்து வெளியில் வர வெட்கப்பட்டுக்கொண்டிருப்பது அப்பாவின் முகபாவனைகளில் தெரிந்தது. 'வாம்மா ரொம்ப சாது, ஒண்ணும் பண்ணாது' என்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இவர் யாரைச் சொல்கிறார். 'அட வாம்மா, கடிக்காதுனு சொல்றேன்ல...' என்னைத்தான் சொல்லி இருக்கிறார். நாய் வளர்ப்பவர் என்று தெளிவாகக் காட்டினார் அந்த மனுஷன். ஒரு வழியாக பெண் வெளியில் வந்தாள்.

போட்டோவில் பார்த்ததைவிட அநியாயத்திற்கு வித்தியாசமாக இருந்தாள். அடப்பாவிங்களா போட்டோவ எடிட் பண்ணி பிரின்ட் போட்டுடீங்களா எனத் தோன்றியது. ஒல்லியாக, லட்சணமாக இருந்தாள். எனக்கு பிடித்துதானிருந்தது. பெண்ணை உள்ளே அழைத்துச் சென்றுவிட்டார்கள். பெண்ணின் தகப்பனார் பேச ஆரம்பித்தார். ''இந்த சம்பந்தம் எங்களுக்கு ரொம்ப திருப்தி. ஆனா, இதுல ஒரு விஷயத்த நான் சொல்லணும். பொண்ணுக்கு ஆயில்ய நட்சத்திரம். அத கொஞ்சம் பார்த்துக்கோங்க'' என்றார். உடனே பட்டாபி, ''ஆயில்ய நட்சத்திரத்துல என்ன சார் பிரச்னை?'' ''அதுக்கு இல்லை, பெண்ணுக்கு ஆயில்ய நட்சத்திரம்னா, மாப்பிள்ளைக்கு அம்மா இருக்கக் கூடாது'' என்றார். அய்யய்யோ என தோன்றியது எனக்கு. ஆனால், பட்டாபி அசராமல் சொன்னான். ''அதுக்கென்ன சார், இன்னைக்கி சாயங்காலமே மாப்பிள்ளையோட அம்மா கதைய முடிச்சிவிட்டுடறோம்.

Representational Image
Representational Image

நாளைக்கே உங்களுக்கு சேதி அனுப்பிடறோம். அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம் வச்சிடலாம். என்னம்மா நான் சொல்றது'' என என்னுடைய அம்மாவையே கேட்டான். என் அம்மா சாமி வந்ததுபோல உட்கார்ந்திருந்தார். ''சார், அதுல எல்லாம் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மனசு ஒத்துப்போச்சினா கல்யாணத்த முடிச்சிடலாம்'' என்றார் என்னுடைய அப்பா. வெத்தலை இடித்துக்கொண்டிருந்த பெண்ணின் பாட்டி, ''ரொம்ப சந்தோஷம், அப்போ பையனோட கடைசி ஆறு மாச Salary Slip அப்புறம் ஆறு மாச Bank Statement குடுத்துவிடுங்க'' என்றார்! உடனே பட்டாபி, ''பாட்டி நாங்க பொண்ணு பாக்க வந்தோம். Housing Loan வாங்க வந்தோம்னு நெனச்சிட்டீங்க போல'' என்றான்.

பெண்ணினுடைய அப்பா இடைமறித்தார். ''இல்லை இல்லை, அவுங்க சரியாதான் கேக்குறாங்க. அவுங்க கேட்ட documents அப்புறம் உங்க கம்பெனியோட அஞ்சி வருஷ Balance Sheet, உங்க கம்பெனி முதலாளி யாரு, இப்போ எங்க இருக்கார். எல்லா detail-ம் குடுத்து அனுப்புங்க'' என்றார். அதற்கு பட்டாபி, ''அதையெல்லாம் குடுக்குறது பத்தி இல்லை சார், இவனோட கம்பெனி முதலாளி பத்தி எல்லா detail ம் விசாரிச்சிட்டு, இவனைவிட அவரு better ஆ இருக்காருன்னு நீங்க அவருக்கு பொண்ண குடுத்துடக் கூடாதேனு பாக்குறோம்'' என்றான். ''பொண்ண குடுக்குறதுன்னா சும்மாவா'' என்றார் பெண்ணின் தகப்பனார். ''அட நீங்க வேற சார், எங்க பக்கத்து தெருல இருக்க ஒருத்தர், அவரோட பொண்ணை கல்யாணம் செஞ்சி குடுக்குறப்போ, நீங்க கேட்ட கேள்வி எல்லாம் கேட்டுதான் கட்டிக் குடுத்தாரு. ஆனா பாருங்க, கல்யாணத்துக்கு அப்புறம்தான் தெரிஞ்சது, மாப்பிள்ளைக்கு ஏற்கெனவே ஒரு கல்யாணம் ஆன சேதி. அதனால, எது தேவையோ அத கேளுங்க சார். ''டேய் உனக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆயிடுச்சாடா'' என்றான் என்னைப் பார்த்து. ''டேய் நீ கொஞ்சம் சும்மா இருக்கியா'' என்றேன்.

சுதாரித்துக்கொண்ட என் அப்பா, பெண்ணின் அப்பாவிடம், ''நீங்க கேட்டது எல்லாம் குடுத்து அனுப்பறோம். நாங்களும் அப்படியே கிளம்பறோம்'' என்றார். ''ரொம்ப சந்தோஷம். ஒரு வாரத்துல சொல்லி அனுப்பறோம்.'' இது பெண்ணின் தகப்பனார். ''ஏதாவது குழந்தை இருந்தா குடுங்க, பேர் வச்சிட்டு கிளம்பறேன்'' என்றான் பட்டாபி. ''குழந்தை எதுவும் இல்லை. அடுத்த வாரம்தான் எங்க நாய், குட்டி போடப்போகுது. போட்ட உடனே சொல்லி அனுப்பறோம்'' என்றார் அந்த US பெண். ''அப்படியா, என்ன குட்டின்னு ஸ்கேன் பண்ணி பார்த்தீங்களா?'' இது பட்டாபி. ''இல்லை. pregnant ஆன அஞ்சாவது மாசத்துல ஸ்கேன் பண்ணா என்ன குட்டின்னு தெரிஞ்சிடும்'' என்றான். எனக்கு ஐயோ என கத்த வேண்டும் போல இருந்தது.

அடப்பாவி பட்டாபி, இப்படி என்னோட வாழ்க்கைல விளக்கு ஏத்திட்டியேடா!.. இப்பொழுது விரக்தியோடு அடுத்த வரனுக்காகக் காத்திருக்கிறேன்!!

டேய் பட்டாபி கிளம்புடா என்றேன். வீடு திரும்பும்போது அம்மா, அப்பாவை பார்த்துக் கேட்டார், ''ஏங்க, வழக்கமா பையன் வீட்லதான தகவல் சொல்லி அனுப்பரோம்னு சொல்வாங்க. இங்க என்ன பொண்ணோட அப்பா சொல்றாரு?'' ''எனக்கும் அதுதான் யோசனையா இருக்கு. பார்க்கலாம் விதின்னு ஒண்ணு இருக்குல'' என்றார். ஒரு வாரம் ஆகியும் தகவல் வரவில்லை. நாங்களே தொலைபேசியில் அழைத்து விசாரித்ததில், அவர்களுக்கு இந்த சம்பந்தத்தில் விருப்பம் இல்லையாம். அவர்கள் சொன்ன காரணம் : "பையனுக்கு சேர்க்கை சரி இல்லை!" அடப்பாவி பட்டாபி, இப்படி என்னோட வாழ்க்கைல விளக்கு ஏத்திட்டியேடா. இப்பொழுது விரக்தியோடு அடுத்த வரனுக்காகக் காத்திருக்கிறேன்! பி.கு. : உங்களுக்குத் தெரிஞ்ச நல்ல குடும்பத்துல ஏதாவது பொண்ணு இருந்தா எனக்கு சொல்லுங்க. பெண் பார்க்க கண்டிப்பா பட்டாபிய கூட்டிகிட்டு வரமாட்டேன். இது சத்தியம்!

- அசோக். மு