"ஆ.மாதவன்... மலையாள மொழியின் செழுமையைத் தமிழுக்குக் கொண்டுவந்தவர்!" - நாஞ்சில் நாடன்

2016-ம் ஆண்டு ஆ.மாதவனின், 'இலக்கியச் சுவடுகள்' நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. அதை மிகவும் தாமதமான அங்கீகாரம் என்று இலக்கிய உலகம் கருதியது.
ஒரு சாலை... அதில் உலவும் மனிதர்கள். வாழ்வில் பெரும்பான்மையாக தான் கண்ட அந்த மனிதர்களையே தன் படைப்புகளின் மையமாக்கி மானுட வாழ்வின் நுட்பமான தருணங்களைப் பதிவு செய்த எழுத்தாளர் ஆ.மாதவன்.
திருவனந்தபுரம் சாலைத் தெரு என்னும் இடத்தில் பாத்திரக் கடை நடத்தி வந்த மாதவன் தமிழ் நவீன இலக்கியத்தில் மிகவும் முக்கியமான பங்களிப்பைச் செய்தவர். சமகால மலையாள இலக்கியவாதிகளோடு தொடர்பிலிருந்தவர். மொழிபெயர்ப்புக் கொடையாக சில முக்கியமான மலையாளப் படைப்புகளை மொழி மாற்றமும் செய்து தந்திருக்கிறார். அவற்றுள், 'இனி நான் உறங்கட்டும்' என்னும் பி.கே.பாலகிருஷ்ணனின் நாவலும் ஒன்று. பெரும் எதிர்பார்ப்புகள் இன்றி எழுத்தையும் வாசிப்பையும் மட்டுமே தன் வாழ்வின் பயனாகக் கருதி வாழ்ந்த எளிய மனிதரான எழுத்தாளர் ஆ.மாதவன் இன்று காலமானார்.
1934-ம் வருடம் திருவனந்தபுரத்தில் தமிழ்க் குடும்பம் ஒன்றில் பிறந்த ஆ.மாதவன் பள்ளி இறுதியுடன் படிப்பை விட்டுவிட்டு வியாபாரத்துக்குச் சென்றுவிட்டார். தொழிலில் கிடைக்கும் வருமானத்தில் எளிய வாழ்க்கையைக் கைக்கொண்டு வாழ்ந்தாலும் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எனத் தமிழ் இலக்கிய உலகுக்கு மிகவும் செழுமையான படைப்புகளை வழங்கினார்.

'மோகபல்லவி', 'கடைத்தெருக்கதைகள்', 'காமினிமூலம்', 'மாதவன் கதைகள்', 'ஆனைச்சந்தம்', 'அரேபியக்குதிரை' ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும், 'புனலும் மணலும்', 'கிருஷ்ணப்பருந்து', 'தூவானம்' ஆகிய நாவல்களும் இவரின் படைப்புகளாகும். படைப்பாளராக மட்டுமல்லாமல் தன் முதுமை வரையிலும் தலைசிறந்த வாசகராக சம கால இலக்கியங்களை அறிந்துகொள்வதில் ஆர்வம் உள்ளவராக இருந்தார்.
2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் விஷ்ணுபுரம் விருது ஆ.மாதவனுக்கே வழங்கப்பட்டது. அப்போது ஜெயமோகன் எழுதிய ஆ.மாதவன் படைப்புகள் குறித்த 'கடைத்தெருவின் கலைஞன்' என்னும் நூல் வெளியிடப்பட்டது. அதன் பின் 2016-ம் ஆண்டு ஆ.மாதவனின், 'இலக்கியச் சுவடுகள்' நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. அதை மிகவும் தாமதமான அங்கீகாரம் என்று இலக்கிய உலகம் கருதியது. அங்கீகாரங்களுக்காகத் தொடர்ந்து இயங்கியவர் இல்லை அவர் என்னும் உண்மையையும் அது அறிந்தே இருந்தது. பெரும் வெளிச்சங்கள் படாமல் தன் படைப்புகளோடும் வாசிப்போடும் வாழ்ந்து மறைந்திருக்கிறார் ஆ.மாதவன். அவரோடும் அவரின் எழுத்துகளோடும் தொடர்ந்து தொடர்பில் இருந்தவர் நாஞ்சில் நாடன். அவரிடம் ஆ.மாதவனின் நினைவுகள் குறித்துப் பேசினேன்.
"கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்து எனக்கு அவரோடு நெருங்கிய தொடர்பு உண்டு. அவரின் படைப்புகள் அனைத்தையும் ஒருவரி மிச்சமில்லாமல் வாசித்திருக்கிறேன். என் இளம் வயதில் என்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் என்றால், புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, நீல.பத்மநாபன், ஆ.மாதவன் ஆகியவர்களைச் சொல்லலாம். ஆ.மாதவன் பழகுவதற்கு எளிமையான மனிதர். இலக்கியவாதிகள் பலருக்கும் இருக்கும் தோரணை எதுவும் இல்லாதவர். திருவனந்தபுரம் சாலைத் தெருவில் அவரின் பாத்திரக் கடை இருந்தது. எப்போது வேண்டுமானாலும் அங்கு செல்லலாம். தேநீர் அருந்திக்கொண்டே இலக்கியம் குறித்து உரையாடலாம்.
அவரிடம் இலக்கியம் குறித்து உரையாடுவது மிகவும் சுவாரஸ்யமானது. காரணம் அவர் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் வெளியாகும் படைப்புகளையும் உடனே வாசித்துவிடுவார். அந்தக் காலத்தில் மலையாள இலக்கியம் குறித்த புரிதல்களோடு இருக்கும் படைப்பாளர்களின் தேவை இருந்தது. அந்த வகையில் நீல பத்மநாபனும் ஆ. மாதவனும் முக்கியமானவர்களாக இருந்தார்கள்.நாஞ்சில் நாடன்
இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு, 'கடைத்தெருக் கதைகள்.' இந்தக் கதைகள் அனைத்துமே மிகவும் சிறப்பானவை. சாலை வட்டார தமிழும் மலையாளமும் கலந்த மொழிச் செழுமையின் உன்னதங்களைத் தொட்ட படைப்புகள். மலையாளச் சொல்லாடல்களின் செழுமையைத் தமிழ் உரைநடைக்குக் கொண்டுவந்தார். சாலைத் தெருவில் தான் கண்ட மனிதர்கள் குறித்த நுட்பமான அவதானிப்புகளைச் செய்தார்.
அவரது 'புனலும் மணலும்' மிகவும் முக்கியமான நாவல். வாசகர் வட்டம் அந்த நாவலை வெளியிட்டது. ஆனால் அந்த நாவல் பெரிய அடையாளமாக மாறவில்லை. ஆனால் சிறு இடைவெளிக்குப் பிறகு எழுதிய 'கிருஷ்ண பருந்து' நாவல் பெரும் கவனம் பெற்றது. தமிழின் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்றாக இதைக் கருதலாம்.

தி. ஜானகிராமன் வரிசையில் வைத்துக் கொண்டாடப்படவேண்டிய எழுத்தாளர் மாதவன். காமம் சார்ந்த மொழியை சற்றும் ஆபாசம் இல்லாமல் எழுதியவர். ஆனால் அவருக்கு சாகித்ய அகாடமி விருதுகூட மிகவும் தாமதமாகவே வழங்கப்பட்டது. இது தமிழ் எழுத்தாளர்களுக்கே ஆன சாபம். வியாபாரம் செய்தார் என்றுதான் பெயர், சொந்த வீடுகூடக் கிடையாது. ஆனால் அவை குறித்த எந்த கசப்புணர்வும் இன்றித் தொடர்ந்து படித்தும் எழுதியும் பேசியும் வந்தவர். உடல் நலக்குறைவாக இருந்தவரின் மரணச் செய்தியை இன்று கேள்விப்படும்போது பெரும் அதிர்ச்சி ஏற்படவில்லையே தவிர வருத்தம் மிகுகிறது. தமிழில் அதிகம் படிக்கப்பட வேண்டிய படைப்பாளர் அவர். அடுத்த தலைமுறை வாசகர்கள் அவரை வாசிப்பதன் மூலம் மாறுபட்ட ஓர் உலகத்தை அறிந்துகொள்ளலாம்" என்றார் நாஞ்சில் நாடன்.
தமிழ்ச் சூழலில் எழுத்தையும் வாசிப்பையும் தன் சுவாசிப்பாகக் கொண்டிருந்த மனிதர் இன்று மறைந்தார். அவரின் சிறுகதைகளை நற்றிணைப் பதிப்பகம் முழுத் தொகுப்பாகக் கொண்டுவந்துள்ளது. மொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்பவன் எழுத்தாளன். அவனுக்கு வாசகன் செய்ய முடிந்த உயர்ந்த அஞ்சலி அவர் எழுத்துகளை வாசிப்பதும் பேசுவதுமே!
ஆ. மாதவனுக்கு விகடனின் அஞ்சலி!