Published:Updated:

தலை நிமிர்வோம்! - வாசகி பகிர்வு #MyVikatan

சில நினைவுகளெல்லாம் எத்தனை வருடங்கள் ஆனாலும் மனதை விட்டு நீங்காமல் அந்த நாள்களெல்லாம் திரும்பவருமா என்று நம்மை ஏங்கவைக்கும்.

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மதுரையிலிருந்து பெங்களூருவை நோக்கி இரவுநேரப் பேருந்தில் பயணம். தூக்கம் வராமல் ஜன்னலை திறந்து வைத்து வேடிக்கை பார்க்கின்றேன். அங்கே என்னைப் பின்தொடர்ந்து வந்தது நிலா. எனக்கு அப்போது ``அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவின்" என்ற பாரிமகளிரின் பாடல்வரிதான் நினைவுக்கு வந்தது. பாரிமகளிர் தம் குன்றை நினைத்து கலங்கியதைப்போல எனக்கும் எங்கள் ஊரைப்பற்றிய நினைவு வந்தது. அடிமனதில் பசுமரத்தாணியாய் பதிந்த பால்யகால நினைவுகளெல்லாம் அப்போது என் மனதை வருடியது. ஊரில் சொந்தபந்தங்களோடு வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து என் எண்ணங்கள், ஓடும் பேருந்தில் இருந்து இறங்கி வைகை ஓடும் என் ஊரை நோக்கிச் சென்றது.

Representational Image
Representational Image

சில நினைவுகளெல்லாம் எத்தனை வருடங்கள் ஆனாலும் மனதை விட்டு நீங்காமல் அந்த நாள்களெல்லாம் திரும்பவருமா என்று நம்மை ஏங்கவைக்கும். தொலைக்காட்சியெல்லாம் கிராமங்களுக்குள் வருவதற்கு முன்னால் எங்கள் ஊரிலெல்லாம் இரவு உணவை சீக்கிரமாகவே முடித்துக்கொண்டு வீட்டின் வாசலில் பாயை விரித்து எல்லோரும் கதை பேசிக்கொண்டு இருப்பார்கள். அப்போது வீசும் குளிர்காற்றை ரசித்துக்கொண்டே அண்ணாந்து வானை பார்த்தோமென்றால் நட்சத்திரங்கள் நம்மைபார்த்து கண்சிமிட்டுவதுபோலவே இருக்கும்.

குழந்தைகளெல்லாம் நட்சத்திரங்களை ஒவ்வொன்றாய் எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் வயதானவர்கள் அமாவாசை, பௌர்ணமி வர இன்னும் எத்தனை நாள் இருக்கிறது என்று வானில் நிலவையும், நட்சத்திரங்களையும் வைத்து கணித்துக்கொண்டிருப்பார்கள். மேலும், எங்களுக்கு துருவ நட்சத்திரத்தை எப்படி கண்டுபிடிப்பது என்றும் அது எந்த திசையில் இருக்கும் என்றும் அருந்ததி நட்சத்திரம் பற்றிய கதையெல்லாம் சொல்லி புராணக்கதைகள் வழியே பால்வெளியைப்பற்றி எங்களுக்குப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்கள். அதெல்லாம் ஓர் அழகிய காலம்.

Representational Image
Representational Image

அந்த நினைவுகள் மனதுக்குள் ஓடிக்கொண்டிருக்கும்போதே எனக்குள் நானே கேள்வி கேட்கிறேன். சமீபகாலமாக நான் வானத்தை எப்போது ரசித்தேன் என்று. விடை தெரியாமல் விழிக்கின்றேன். வாழ்க்கை ஓட்டத்தில் இயற்கையின் அழகை ஆராதிக்கக்கூட நேரமில்லாமல் மனித உருவில் உள்ள இயந்திரமாய் மாறிப்போனதை நினைத்து கலங்குகின்றேன். ஆம், இப்போதெல்லாம் குனிந்த தலை நிமிராமல் இயந்திரங்களோடுதான் நாம் அதிக நேரத்தை செலவிடுகின்றோம், இயற்கையோடு அல்ல.

இந்த நகர வாழ்க்கையில் நமக்கு வானத்தைப் பார்க்கவும் நேரமில்லை, பூமியைப் பார்க்கவும் (விவசாயம்) நேரமில்லை. வாழ்க்கைப் போட்டியில் எப்படி முந்துவோம் என்ற சிந்தனையிலேயே வேலை வேலையென்று விடிந்தது முதல் அடைவது வரை பதற்றமாக ஓடுவதன் விளைவால் மனச்சோர்வு, மனக்கவலை, தூக்கமின்மை போன்ற எல்லா விதமான நோய்களும் நம்மிடம் ஒட்டிக்கொள்கிறது. எல்லோருக்குமே வாழ்க்கையில் பதற்றமில்லாமல் சுகமாக வாழத்தான் ஆசை. ஆனால், மனதுக்குள்ளேயே வேலைபாரம், குடும்பப்பொறுப்பு எல்லாவற்றையும் போட்டு அழுத்தி மனவேதனையில் தவிக்கின்றோம். உடல் சம்பந்தப்பட்ட நோய்கள் என்றால் மருந்து மாத்திரையில் சரிசெய்ய முயல்கின்றோம். மனம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருத்துவரை நாடத் தயங்குகின்றோம்.

Representational Image
Representational Image

டென்ஷனைக் குறைப்பதற்கு ஏராளமான சிகிச்சைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இயற்கையை ரசிப்பது. இயற்கையை ரசிப்பதால் நம் மனப்பதற்றம் குறைந்து மன அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழலாம் என்று பல ஆராய்ச்சிகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

நம் அனைவருக்கும் இயற்கையை ரசிப்பது என்றால் பிடிக்கும் தானே. ஒரு நாளைக்கு எவ்வளவு மணிநேரம் இயற்கையை ரசிக்கிறீர்கள் என்று கேட்டால் நகரத்தில் வசிப்பவர்களின் பதில், அதற்கெல்லாம் எங்கேதான் நேரமிருக்கின்றது, நேரமிருந்தாலும் எங்கே இங்கு பசுமையிருக்கின்றது, வீட்டைச்சுற்றி கட்டடங்கள் தான் இருக்கின்றது. இதில் இயற்கையை எங்கே ரசிக்க என்று அலுத்துக்கொள்பவர்கள்தான் ஏராளம். பச்சைப்பசேலென்ற மரங்களும், செடிகளும், அருவியும், நதியும், கடலும்தான் இயற்கை என்பதில்லை. இவையெல்லாம் ஐவகை நிலத்தில் குறிப்பிட்ட நிலத்துக்கு மட்டுமே சொந்தம். ஆனால், எல்லா நிலங்களுக்கும் பொதுவானதாய் என்றுமே மாறாத அழகை கொண்டு, பரந்துவிரிந்து என்றும் நிலையானதாய், எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது வானம் ஒன்றுதான்.

Representational Image
Representational Image

தினமும் வானத்தைப் பார்ப்பீர்களா என்ற கேள்வியை நம்மிடம் கேட்டால் இன்று மழை வருமா, வராதா என்று உறுதிப்படுத்த மட்டும்தான் பார்ப்பேன் என்றும், விமானம் பறக்கும் சத்தம் கேட்டால் மட்டும்தான் பார்ப்பேன் என்பதும்தான் நம்மில் பெரும்பாலானவர்களின் நேர்மையான பதிலாக இருக்கும்.

நமக்குதெரியவில்லை விரிந்தவானமும் அவ்வானில் விளங்கும் மேகமும் கதிரவனும் நமக்கு அருமையாக அள்ளித்தரும் அற்புதங்கள் ஏராளம் என்று. அவற்றையெல்லாம் வானத்தைப்போல என்னால் விரிவாக விளக்க இயலாமல், நம் கண்களுக்குத்தெரியும் விண்மீன்களைப்போல சுருக்கமாக விளக்கவே இந்தக் கட்டுரை.

Representational Image
Representational Image

வானம்:

வண்ணங்களைப்பற்றிய உளவியலில் நீல வண்ணம் மன அழுத்தத்தையும் ரத்தக்கொதிப்பையும் குறைக்கும் தன்மை கொண்டது என்பதை நாம் அறிவோம். நீலவண்ண வானத்தை உற்றுநோக்குவதால் மன அழுத்தம் குறைந்து மூளை புத்துணர்ச்சி பெறுகிறது. நாள்தோறும் நெருக்கமான கணினித்திரைகளையும், மொபைல் திரைகளையும் பார்த்துப் பார்த்து பழகுவதால் தசைகள் இறுகி கண்கள் அயர்கின்றன. மேலும் கழுத்துவலி, முதுகுவலி, தலைவலி போன்ற உடல் உபாதைகளும் ஏற்படுகிறது. நெடுந்தூரம் இருக்கும் வானத்தைப் பார்ப்பதால் கண்களுக்கு சற்று ஓய்வு கிடைக்கிறது. எப்போது பார்த்தாலும் கிடைமட்ட தூரத்திலேயே பார்வையை செலுத்தும் நமக்கு தூரத்தில் உள்ள பொருள்களைப் பார்ப்பதற்கான கண்ணுக்க்கான சிறந்த பயிற்சியாகவும் அமைகின்றது.

கதிரவன்:

நாம் கதிரவனின் கீற்றுகளைப் பார்க்க அதிகாலையிலேயே எழும்போது இயற்கையான சூழலில் ஆழ்ந்து சுவாசிக்கின்றோம். இதனால் நம் உடலில் ஆக்ஸிஜன் அளவு அதிகரித்து ‌மனதில் ஊக்கமும் உற்சாகமும் பிறக்கின்றது.

Representational Image
Representational Image

கதிரவன் உதயமாகும்போது உருவாகும் இதமான வெப்பத்தை முகம்மலர்ந்து உணர்ந்தோமென்றால் நாம் நாள் முழுவதும் தன்னம்பிக்கையுடனும் புத்துணர்ச்சியோடும் இருக்கலாம். உலகத்தில் பல பில்லியன் மக்கள் வைட்டமின் D பற்றாக்குறையுடன் வாழ்கின்றனர். சூரியக் கதிர்கள் நம் உடம்பில் படுவதால் நாம் வைட்டமின் Dயை இலவசமாகவே பெறுகின்றோம். சூரியோதத்தையோ, சூரியன்மறைவதையோ பார்ப்பதால் நம் உடல், மனம் இரண்டும் பலப்படுகிறது.

சூரியன் அஸ்தமனத்தைப் பார்க்கும்போது, எவ்வாறு அதன் நிறமும் ஒளியும் மாறுகிறது என்பதை நாம் கூர்ந்து கவனிக்கும்போது, நம் மனம் ஒருமுகப்பட்டு தியானம் செய்யும்போது கிடைக்கும் அமைதியைப் பெறுகிறது. இதனால் மனதில் தெளிவு ஏற்பட்டு வாழ்வின் கடினமான பரபரப்பான சூழ்நிலைகளிலும் நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களில் உள்ள அழகை ரசிக்கத் தொடங்கிறோம். அதனால் நமக்குள் ஒரு உத்வேகம் ஏற்பட்டு நம்மைக் கவிஞர்களாகவும் படைப்பாளியாகவும் கூட கதிரவன் உருவாக்குவான் என்பது தெரியுமா!

Representational Image
Representational Image

தத்துவம் போதிக்கும் மேகங்கள்:

மேகத்தைப்பற்றி எழுதாத கவிஞர்களே இல்லை எனலாம். காளிதாசரின் `மேக தூதம்' நல்லதொரு எடுத்துக்காட்டு. அந்த காலத்திலெல்லாம் வானத்தில் உள்ள மேகத்தைப் பார்த்துதான் காலநிலையைத் துல்லியமாக கணித்தனர். இப்போதெல்லாம் டெக்னாலஜி வளர்ந்துவிட்டது என்று சொல்லி மொபைல் போன் தான் நமக்கு சர்வமுமாகிவிட்டது.

எதற்கெடுத்தாலும் Mobile app பதிவிறக்கம் செய்து அதைச் சார்ந்துதான் காலநிலையை (Weather) அறிகின்றோம். மேகங்களின் தன்மை, அதன் இயக்கத்தைத் தொடர்ந்து கவனித்தோமென்றால் மழை வருமா, வராதா போன்றவற்றையெல்லாம் துல்லியமாக நாமே கணிக்கலாம்.

Representational Image
Representational Image

வானில் உள்ள மேகங்களை உற்று நோக்கினால் அவை ஒரே இடத்தில் என்றும் நிலையாக இருக்காது. சில மேகங்கள் மெதுவாக போகும் சில மேகங்கள் விரைவாகப்போகும். அவை கலைந்துகொண்டே இருக்கும். இந்த நிகழ்வுகள் ``இதுவும் கடந்து போகும்" என்ற வலிமையான தத்துவத்தை எளிமையான முறையில் நமக்கு விளக்கும். நம் பிரச்னைகள் எல்லாம் மேகங்கள்போல விலகிவிடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் (நமக்கு நாமே தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்).

மேலும், நாம் குழந்தைகளோடு வானத்தைப் பார்க்கும்போது பஞ்சு பொதி போன்றும், பனிப்படலம் போன்றும் உள்ள பல்வேறு வகையான மேகங்களைப் பார்த்து குழந்தைகள் தானாகவே கற்பனைக் கதைகளை உருவாக்கத் தொடங்குவார்கள். இதனால் அவர்களின் கற்பனைத்திறனும் கவனிப்புத்திறனும் அதிகரிக்கும்.

Representational Image
Representational Image

குழந்தைகள் வானத்தைப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள் என்றால் ஆயிரம் கேள்விகள் கேட்பார்கள். எழுத்தாளர் பி.எஸ்.ராமையாவின் `நட்சத்திரக்குழந்தைகள்' கதையின் குழந்தைபோல. அந்தக் கேள்விகளை எதிர்கொள்ள நம்மை நாமே தயார்படுத்திக்கொள்வதால், புதிதாய் நிறையவற்றை நாமும் கற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் வானியல் பற்றி நமக்கு தெரிந்தவற்றை நம் குழந்தைகளுக்குச் சொல்லி அவர்களோடு நன்முறையில் நேரத்தை செலவிட நல்லதொரு வாய்ப்பாகவும் அமைகிறது.

மேலும், எத்தனையோ ஆய்வுகள் நாம் குறைந்தது 20 நிமிடங்கள் இயற்கையுடன் செலவிட்டோமென்றால் நமக்குள் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோனின் அளவு குறைகிறது என்கின்றன. நாம் தொலைக்காட்சியிலும், மொபைலிலும் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டுமணி நேரமாவது செலவிடுகின்றோம். அந்த நேரத்தைக் குறைத்துக்கொண்டு வானத்தைப்பார்க்க செலவிடுவதனால் எண்ணற்ற பயன்களை அடையலாம்.

Representational Image
Representational Image

எப்போது பார்த்தாலும் கணினியிலும், அலைபேசியிலும் தலை கவிழ்ந்திருக்கும் நமக்கு ஒரு சிறிய மாறுதலாகக்கூட இருக்கலாம். எனவே, கணிணித்திரைக்கு சற்று ஓய்வு கொடுத்து வானத்திரையை நோக்க நேரத்தை ஒதுக்குவோம். காலையிலோ மாலையிலோ நாம் தேநீர் அருந்தும் இடைவெளியிலாவது சற்று நேரம் வானத்தை தலைநிமிர்ந்து பார்ப்போம். அந்தக் குறைந்த நேர முயற்சியில், நிச்சயமாக நிறையவற்றை வானம் நமக்கு கற்பிக்கும். பிறகென்ன `வானம் எனக்கொரு போதிமரம், நாளும் எனக்கது சேதி தரும்" என்று நாமும் உற்சாகத்துடன் பாட ஆரம்பிப்போமா!

-அனிதா மோகன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/