Election bannerElection banner
Published:Updated:

`அம்மை என்று அழைத்தபோது..!' - வாசகியின் நெகிழ்ச்சிப் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image

பெயர்..! நாம் ஒவ்வொருவருக்கும் மிக நெருக்கமான நம் வாழ்நாளின் இறுதிவரை ஒலித்துக்கொண்டிருக்கக்கூடிய மந்திரச்சொல்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கடந்த தலைமுறை வரை சில வகையான pattern அல்லது template என்று கருதப்படும் பெயர் சூட்டும் முறைகள் அல்லது காரணங்கள் இருந்தன. அதிகபட்சமாக பரம்பரைப் பெயர்கள் பரிமாறப்பட்டன. அதாவது தாத்தா, பாட்டியின் பெயர் எந்தவித சலனமும் இல்லாமல் இடம்பெற்றன. முதல் பையனுக்கு கணவனின் தகப்பனார் பெயர் என்றால் இரண்டாம் பெண்ணுக்கு மனைவியின் தாயார் பெயர் சூட்டப்படும்.

Representational Image
Representational Image

சில சமயங்களில் தெய்வங்களின் பெயர் சூட்டப்படும். குழந்தை வரம் வேண்டி வணங்கிய தெய்வமோ, குலதெய்வமோ, இஷ்டதெய்வமோ அல்லது சொந்த ஊரின் கோயிலில் குடிகொண்டிருக்கும் பிரதான ஸ்வாமியின் பெயரோ இடம்பெறும். இதனால் ஒரே ஊரில் அந்தப் பெயரில் பலர் இருப்பது வழக்கம். உதாரணமாக மதுரை என்றால் மீனாட்சி. இந்தப் பெயரை வைத்தே எந்த ஊர் என்பதை அடையாளம் கண்டுவிடலாம்.

சில சமயங்களில் தெய்வ ஸ்தலங்களின் பெயரே பெயராக சூட்டப்பட்டது. உதாரணமாக பழனி, சிதம்பரம் என்று. நாட்டுப்பற்று கொண்ட சிலரோ தேசத்தலைவர்களின் பெயரை சூட்டுவதில் பெருமை கொண்டிருந்தனர். சிலரோ சில உன்னத தலைவர்களின் வாயால் பெயர் சூட்டிக்கொள்ள எத்தனையோ நாள்கள் காத்திருந்தனர்.

Representational Image
Representational Image

நம் மாநிலம் தவிர இன்ன பிற இந்திய ஊர்களில் பெயரோடு சேர்த்து சாதியின் அடையாளமோ குடும்பத்தின் அடையாளமோ பின்னால் ஒட்டிக்கொண்டிருக்கும். நான் பிற மாநில நண்பர்களை சந்தித்துப் பேச நேர்ந்தால் என் பெயரைக் கூறிய அடுத்த கணமே, `உங்களது லாஸ்ட் நேம் என்ன?' என்று மறுகேள்வி கேட்பார்கள். சில சமயங்களில் சினிமா பிரபலங்களின் பெயர்கள் வீட்டில் பரிந்துரைக்கப்படும்.

பிடித்த நடிகரோ, இயக்குநரோ எவரேனும் ஒருவரது பெயர், குறிப்பாக சிலர் அவ்வப்போது திரைப்படங்களில் பிரபலமான பெயரை வைக்க ஆசைப்படுவார்கள். சில நேரங்களில் பொதுத்துறையில் உச்சம் தொட்ட நபரின் பெயர் வைத்தால் குழந்தையும் அவ்வாறே ஜொலிக்கும் என்று அந்தப் பெயர்கள் சூட்டப்படும். சிலருக்கோ முதல் காதலின் பெயர் நினைவுக்கு வரும். சிலர் தமிழ்ப் பெயர் சூட்ட வேண்டும் என்று விரும்பித் தேர்வு செய்வார்கள்.

Representational Image
Representational Image

நம்மில் சிலருக்கு ஆபத்து காலத்தில் தமக்கு உதவிய ஒரு நபரின் பெயரை மதம், இனம் ஆகியவற்றைக் கடந்து குழந்தைக்கு வைக்கத் தோன்றலாம். எடுத்துக்காட்டாக 2015 சென்னை வெள்ளத்தில் தனக்கு உதவிய முஹம்மது என்ற பெயரை தன் குழந்தைக்கு சூட்டினார் ஒரு தாய். சில நேரங்களில் நம்மை வாழ்வில் வழிநடத்திய நமது ஆசிரியர் பெயரோ அல்லது ஒரு பெரியவரின் பெயரோ நினைவுக்கு வரலாம். எண் கணிதம் சில இடங்களில் சிலரை ஆட்கொள்கிறது.

இன்று காலங்கள் மாறிவிட்டன. தன் குழந்தைக்கு இதுவரை யாரும் வைக்காத பெயராக அதாவது Unique ஆக இருக்க வேண்டும் என்று வாயில் நுழையாத அர்த்தம் புரியாத பெயர்களைத் தேர்வு செய்கின்றனர். என்னதான் பெயர் என்று ஒன்று இருந்தாலும் நம் அனைவருக்கும் செல்லப்பெயர் ஒன்று கண்டிப்பாக இருந்திருக்கும்.

Representational Image
Representational Image

தங்கம், அம்முக்குட்டி, ராசா, சக்கரக்கட்டி என்று கொஞ்சல் மொழி நமக்குப் பிடித்துப் போயிருக்கும். இல்லையென்றாலும் எருமை, குரங்கு என்று விலங்குகளின் பெயராவது நமக்கு பழகிப் போயிருக்கும். இன்று அந்தக் கொஞ்சல் மொழிகூட மேற்கத்திய வார்த்தைகளால் நிரப்பப்பட்டு வருகின்றன. munchkin, cutie -pie , candy, sweetie -pie என்று. இந்த வார்த்தைகளால் கொஞ்சும் நமக்கும் கொஞ்சல் மொழி கேட்கும் மழலைக்கும் அவ்வளவாக நெருக்கத்தை ஏற்படுத்தி விடுவதில்லை.

திருநெல்வேலியைப் பின்புலமாக கொண்ட எனக்கு இச்சமயம் நினைவுக்கு வரும் கொஞ்சல் மொழி `அம்மை'. என் அப்பா, தாத்தா, சித்தப்பா என்று எங்கள் வீட்டில் பெண் குழந்தைகளை அம்மை என்றே அழைப்பர். நெல்லையில் சில பெண்களுக்கு இந்த வார்த்தை மிக நெருக்கமாக இருந்திருக்கக் கூடும். பெண் பிள்ளைகளை மரியாதையாக செல்லமாக சற்று கண்டிப்பாக அன்பாக அழைக்க இந்த வார்த்தை எங்கள் வாழ்வியலோடு பயணித்திருக்கும்.

Representational Image
Representational Image

என்னதான் பெரியவள் ஆகிப் போயிருந்தாலும் இன்றும் நெருக்கமாக உறவுகள் என்னை, `அம்மை' என்று அழைக்கும்போது என்னையறியாமல் கண் கலங்கிவிடும். பெயர்காரணம் என்ற ஒரு இலக்கணமே அமைந்திருக்கக் கூடிய தமிழ் மண்ணின் மைந்தர்கள் நாம். மேற்கத்திய நாகரிகம் முழுதாக ஒட்டிக்கொள்ளாமல் நமக்கும் நம் வாழ்வியலுக்கும் நெருக்கமான பெயர்களோடு பயணிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

-நாக சரஸ்வதி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு