Published:Updated:

நிறைபனி - சிறுகதை

நிறைபனி - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
நிறைபனி - சிறுகதை

- சிவபாலன் இளங்கோவன்

நிறைபனி - சிறுகதை

- சிவபாலன் இளங்கோவன்

Published:Updated:
நிறைபனி - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
நிறைபனி - சிறுகதை

“வண்டிய அந்தக் கடையில நிறுத்துயா” என்றான் மனோகர் சலிப்பாக.

குறுகலான கொண்டை ஊசி வளைவில், முன்சென்ற ஒரு டேங்கர் லாரியைத் தாண்டிவிட எத்தனித்த டிரைவர் சந்திரன், மனோகர் சொன்னதைக் கேட்டதும் வண்டியின் வேகத்தைக் குறைத்து இடப்புறமாக சிறிது ஒடித்துத் திருப்பினான். சாலையின் முடிவில் இடப்பட்டிருந்த கருங்கல் திண்டுகளில் அமர்ந்திருந்த குரங்குகள், வண்டி இடப்புறம் வளைவதைப் பார்த்தவுடன் குதித்து அருகில் இருந்த மரங்களில் தாவின. அதைப் பார்த்த சந்திரன் தனக்குள் சிரித்துக்கொண்டே சண்முகம் கடையின் முன் வண்டியை நிறுத்தினான்.மனோகர் வண்டியிலிருந்து இறங்கி, இடுப்பில் சற்று இளகியிருந்த பேன்ட்டைச் சற்றே தூக்கிவிட்டுக்கொண்டு கடையினுள் நுழைந்தான். அரசாங்க ஜீப்பிலிருந்து கிளம்பி வந்த வெண்புகையும், கார்காலப் பனியும், கூரை வேய்ந்த அந்த ஒற்றைக் கடையின் முகப்பிலிருந்து சுழன்று வந்த விறகடுப்புப் புகையும் சேர்ந்து அந்த மலைப்பிரதேசத் தேநீர்க்கடைக்கு ஒரு ரம்மியத்தைக் கொடுத்தது. கிங்ஸை வாங்கிப் பற்றவைத்துக்கொண்டு ஜீப்பின் முன் வந்து நின்றுகொண்டு ஏதோ யோசிக்கத் தொடங்கினான் மனோகர். மஞ்சள் நிற பஜ்ஜி மாவைக் கைகளில் வழித்துக்கொண்டே கடைக்கார சண்முகம் சந்திரனிடம், “என்ன சந்திரா, காலங்காத்தால எங்கல்ல கிளம்பிட்டியவோ?” என்றார்.

“புது டிடி வந்திருக்கார், நேத்துதான் ஜாயின் பண்ணினார். ராத்திரியோட ராத்திரியா மெட்ராஸ்ல இருந்து ஏதோ ஆர்டர் வந்திருக்கு, ‘மோசஸ் ஆஸ்பத்திரிக்கு இன்ஸ்பெக்‌ஷன் போவணும் வாய்யா’ன்னு காலைல போன் போட்டுச் சொன்னார். எதுக்குன்னு தெரியல” எனச் சொல்லிக்கொண்டே மனோகரைப் பார்த்தான். மனோகர் வளர்ந்த யூகலிப்டஸ் மரத்தின் உச்சியைப் பார்த்து சிகரெட் புகையை விட்டுக்கொண்டிருந்தான்.

மனோகர் சென்னையிலிருந்து இரண்டு நாள்களுக்கு முன்புதான் பதவி உயர்வு கிடைத்துக் கொடைக்கானலுக்கு வந்திருக்கிறான். அரசாங்க வேலையில் இடமாறுதல்கள் தவிர்க்க முடியாதவை என்றாலும் நாற்பது வயதிற்குப் பிறகும் ஓர் இடத்தில் நிலையாக இல்லாமல் இருப்பது பலவகைகளில் மனோகருக்குப் பிரச்னையாக இருந்தது.

“டாக்டர்னுதான் கல்யாணம் கட்டிக் கொடுத்தாங்க, ஆனா டாக்டர்மாரியா இருக்கீங்க, ஊசி போட்டமா ஆஸ்பத்திரி கட்டுனமான்னு இல்லாம, வியேவோ மாதிரி எப்ப பாத்தாலும் மீட்டிங், புரோகிராம்னு ஊர் ஊரா சுத்திட்டு இருக்கீங்க, உங்களவிட எங்க டீச்சர் அக்கா பத்தாயிரம் அதிகமா சம்பாதிக்குது தெரியுமா?” என ஏற்கெனவே அலட்சியப்படுத்தும் புவனா அதில் முக்கியமான பிரச்னை.

நிறைபனி - சிறுகதை

சொந்த அக்கா மகள் என்பதால் புவனாவைத் திருமணம் செய்துகொண்ட மனோகர், சென்னையில் நகர சுகாதார மையங்களில் கண்காணிப்பாளராகச் சில வருடம் பணிபுரிந்த பிறகு பணியுயர்விற்காக விண்ணப்பித்திருந்தார். அருகிலேயே எங்காவது துணை இயக்குநர் பணி கிடைக்கும் எனக் காத்திருந்தவருக்கு அதிர்ச்சியாக கொடைக்கானலில் கிடைத்தது.

“வளந்த புள்ளைங்கள எப்படி திடீர்னு பள்ளிக்கூடத்த விட்டு மாத்துறது? அதுவும் இந்தப் பள்ளிக்கூடத்துல சீட்டு வாங்க எவ்வளவு கஷ்டப்பட்டோம், இப்ப திடீர்னு வேற ஊர்னா எப்படிப் போறது? ஒண்ணு புரமோஷன வேணாம்னு கேன்சல் பண்ணுங்க, இல்லனா நீங்க மட்டும் போங்க. நான் எங்கம்மாவ வரச்சொல்லி பாத்துக்குறேன்.”

மனோகர் தீவிரமாக யோசித்த பிறகே செல்வது என முடிவெடுத்தான். அதற்குள் ஆயிரம் சண்டை. எப்போது சண்டை வந்தாலும் மனோகர் எதிர்த்துப் பேசுவதில்லை. கொடைக்கானல் கிளம்பும் முதல் நாள் இரவு புவனா பெரிய ஆர்ப்பாட்டம் செய்துவிட்டாள். “தப்பிச்சிப் போலாம்னுதானே பிளான் பண்ணி டிரான்ஸ்பர வாங்கியிருக்கீங்க, அப்படிலாம் போக முடியாது, இந்தா நீங்க பெத்ததுங்களையும் கூட்டிட்டே போயிடுங்க, நான் வச்சிக்க மாட்டேன்” எனப் பிடிவாதமாய்ச் சொல்லிவிட்ட பிறகு, மாமனாரை அழைத்துப் பேசி “ரெண்டு மாசத்துல எப்படியும் டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்துடறேன், அதுவரைக்கும் பொறுத்துக்கங்க” எனப் பேசி, சமாதானம் செய்துவிட்டு வந்திருக்கிறான்.

பதவியில் சேர்ந்த அடுத்த நாளே டிஎம்எஸ் அழைத்து, “மோசஸ் ஹாஸ்பிட்டல்ல ஏதோ ஒரு டெத்தாம். ரொம்பப் பெரிய இடம்போல, செக்கரட்டரி உடனே ரிப்போர்ட் கேட்கிறாரு, போய்ப் பாத்துட்டு ரெண்டு நாள்ல ரிப்போர்ட்ட கொடுத்துடுங்க” என்றார். மனோகருக்கு சலிப்பாக இருந்தாலும், இந்த ரிப்போர்ட் கொடுத்த பிறகு அதைச் சாதகமாகக் கொண்டு டிஎம்எஸ்ஸிடம் டிரான்ஸ்பர் கேட்டுப் பார்க்கலாம் என்றும் தோன்றவே, அடுத்த நாள் காலையிலேயே கிளம்பிப் போய்க்கொண்டிருக்கிறான்.

“இன்னும் எவ்வளவு தூரம்யா போகணும்?”

“நாலு கிலோமீட்டர் சார்.”

“இந்த ஆஸ்பத்திரிய பத்தி ஏதாவது கேள்விப்பட்டிருக்கியாயா?”

“பேமஸான ஆஸ்பத்திரி சார், கான்வன்ட் ஆஸ்பத்திரின்னு சொல்வாங்க, பெரும்பாலும் பிரசவத்துக்குத்தான் ஜனங்க இங்க வருவாங்க.”

“பிரசவ ஆஸ்பத்திரியா?”

“அப்படினு சொல்வாங்க சார், ஆனா எல்லாப் பிரச்னையும் இங்க பாப்பாங்க.”

“போன வாரம் ஏதோ டெத்தாம்ல, செக்ரட்ரியேட் வரைக்கும் நியூஸ் போயிருக்கு. உனக்கு ஏதும் அத பத்தித் தெரியுமாயா?”

“ஆமா சார், நானும் கேள்விப்பட்டேன். இறந்தது ஒரு பொண்ணு. எந்த ஊரு, என்னன்னு தெரியல. டூரிஸ்ட்னு நினைக்கிறேன். ஆஸ்பத்திரில தான் இறந்திருக்கு. அங்க இருந்து ஜிஎச் மார்ச்சுவரிக்கு அனுப்பிட்டாங்க, அவங்க சொந்தக்காரங்கலாம் ரெண்டு நாள் கழிச்சி வந்து ஆஸ்பத்திரிய அடிச்சி ஒடச்சிட்டதா கேள்விப்பட்டேன். வேற விவரம் தெரியல சார்.”

குறுகலான சாலையில் ஒடிந்து, திரும்பி இன்னொரு தார்ச்சாலையில் வண்டியைத் திருப்பிய சற்று நேரத்தில் அந்த மருத்துவமனை வந்தது.

முற்றிலும் கருங்கல்லால் கட்டப்பட்டு நின்றிருந்தது அந்தப் பழங்கால மருத்துவமனை. சந்திரன் உள்ளே சென்று செவிலியப் பெண்ணை அழைத்து, “டிடி வந்திருக்கார்னு உங்க டாக்டருக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க. அதுக்கு முன்னாடி, போன வாரத்துல ஏதோ டெத்தாமே, அந்த ஃபைல்லாம் எடுத்துட்டு வாங்க. அப்ப டியூட்டில இருந்த டாக்டர், ஸ்டாஃப் நர்ஸ், வார்டு அட்டெண்டர், சானிட்டரி வொர்க்கர் எல்லாத்தையும் உடனே வரசொல்லுங்க. இப்ப டியூட்டில இல்லனாலும் போன் போட்டு உடனே வரச் சொல்லுங்க” என்று சொல்ல, கேஸ் ஃபைல் வந்தது. மனோகர் வாங்கிப் பார்க்கத் தொடங்கினான்.

சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்த மனோகர், கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். உள்ளே வந்த மருத்துவரைப் பார்த்தவுடன் அதிர்ச்சியில் மனோகரின் முகம் மாறியது. நெஞ்சு படபடவென அடிக்கத்தொடங்கியது. அதன் இறுக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் மேலேறித் தொண்டையைக் கவ்விப்பிடித்தது. `அவனா இருக்கக்கூடாது’ என மனோகர் தனக்குள் சொல்லிக்கொண்ட அடுத்த கணம் “மனோ தானே?” என்று அவன் கேட்டான்.

“ஜான்?” எனக் கேட்டபோது மனோகரின் கண்கள் கலங்கின.

நிறைபனி - சிறுகதை

ஜான் வேகமாக வந்து மனோகரைக் கட்டிக்கொண்டான். இறுக்கமான அந்தச் சூழல் உடைந்து நெகிழ்ந்து உணர்வுகளால் நிறைந்து கொண்டிருந்தது. இருவரின் கண்களும் பூரணமாக கண்ணீரால் நிரம்பியிருந்தன.இருவரும் தங்களது கல்லூரிக்காலங்களுக்குத் திரும்பியிருந்தார்கள். தஞ்சை மருத்துவக்கல்லூரியின் மாணவர் விடுதியில் கட்டிப்புரண்ட நாள்கள் எல்லாம் படம்போல விரிந்தன. மனோகரும் ஜானும் அப்படியொன்றும் நண்பர்களெல்லாம் கிடையாது. சுத்தமான எதிரிகள். சென்னை நகரத்திலிருந்து வெடவெடவென வளர்ந்து நின்ற ஜானுக்கும், தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்திலிருந்து கசங்கிய சட்டைகளோடு வந்து நின்ற மனோகருக்கும் ஆரம்பத்தில் இருந்தே பிரச்னை.

ஜானிடம் பேசும் அனைவரும் மனோகருக்குச் சொல்லப்படாத எதிரிகள், ஒருவரைத் தவிர. அவள் பெயர் `ஜென்சி.’ ஜென்சியும் அவர்களின் பேட்ஜ்தான். சென்னை. ஜானிற்குச் சிறு வயதிலிருந்தே பழக்கம். நுங்கம்பாக்கம் குட் ஷெப்பர்டில் ஒன்றாகப் படித்தவர்களாம். பெரும்பாலும் ஜான் எங்கிருந்தாலும் அங்கு ஜென்சியும் இருப்பாள்.

கல்லூரி சேர்ந்த இரண்டாவது வாரம், விடுதியை ஒட்டிய சாலையில் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த பைக்கின் மீது சாய்ந்து கொண்டு நின்றிருந்த ஜென்சியை முதல்முறையாகப் பார்த்தவுடன் மனோகர் நண்பனை அவசர அவசரமாக வண்டியை நிறுத்தச் சொன்னான். “யார்றா அந்தப் பொண்ணு, சீனியரா?” என நண்பனிடம் கேட்டான்.

“சீனியரா, நம்ம பேட்ச்டா. அதுக்குத்தான் கிளாஸ்க்கெல்லாம் வரணும்றது” என்று அவன் சொன்னதைக் கண்டுகொள்ளாமல் ஜென்சியை நோக்கிச் சென்றான்.

வாக்மேன் ஒன்றைக் கைகளில் வைத்துக்கொண்டு ஏதோ ஒரு பாடலைக் கேட்டபடி கண்களை மூடியிருந்த ஜென்சிக்கு மனோகர் வருவது தெரியவில்லை. மனோகர் அவள் அருகில் வந்து “ஹலோ” என்றான். அவள் கண்களைத் திறக்காமல் இருக்கவே அவளது வாக்மேனின் பட்டனைத் தட்டி அணைத்தான். ஜென்சி சட்டென அதிர்ந்து நிமிர்ந்து பார்த்தாள்.

“நான் மனோகர், இந்தக் காலேஜ்தான், சும்மா இண்ட்ரோ பண்ணிக்கலாம்னு” என்று வழிந்தான்.

ஜென்சி எதுவும் பேசாமல் அவனை முறைத்தாள். தூரத்தில் ஜான் வந்துகொண்டிருப்பதையும் பார்த்தாள். அவள் பார்க்கும் திசையில் திரும்பி மனோகரும் பார்த்தான். ஜான் வந்துகொண்டிருந்தான். புரியாமல் மனோகர் முழிக்கவே, அதற்குள் இவன் நண்பன் அங்கு வந்து “நம்ம பேட்ஜ்தான் இவங்க, ஜானோட க்ளோஸ் ஃபிரெண்ட்” எனச் சொல்லிவிட்டு இவனை அவசரமாக இழுத்துக்கொண்டு போனான்.

அதன் பிறகு நான்கைந்து முறை அவனாகவே ஜென்சியிடம் சென்று பேசினான். அவள் இவனைக் கண்டுகொள்ளாத தருணமொன்றில் அவள் கண்களைப் பார்த்து, “எனக்கு உன்ன பிடிச்சிருக்கு, லவ் பண்ணலாமா?” எனச் சொல்லி கண்ணடித்தான்.

“ஜான் கிட்டதான் அதுக்கு பர்மிஷன் கேட்கணும்” என அவள் வம்பாகச் சொல்லும்போது அவள் கண்களில் தெரிந்த குறும்பை அவன் மட்டும் கண்டுகொண்டான்.

அதன் பிறகு ஜென்சியை எங்கு பார்த்தாலும் அவளுக்கு மட்டும் புரியும்படி ரகசியமாக “பர்மிஷன் வாங்கியாச்சா?” என ஜாடையில் கேட்பான். அவள் முதலில் முறைத்து பிறகு தனக்குள் சிரித்துக்கொள்வாள்.

இரண்டாம் வருடம் மத்தியில் கல்லூரித் தேர்தல் வந்தது. கல்லூரி முதல்வர் “தேர்தல் கிடையாது. நீங்களே ஆபீஸ் பியரரை முடிவு பண்ணுங்க” என்று சொல்லியதற்குப் பிறகு மாணவர்கள் கலந்து பேசி மனோகர் பிரசிடெண்ட் கேண்டிடேட் எனவும், மீதிப் பதவிகளுக்கெல்லாம் ஆட்களைப் பட்டியலிட்டு முதல்வரிடம் கொடுத்துவிட முடிவுசெய்தார்கள்.

அன்றைய இரவு பேஸ்கட் பால் கோர்ட்டில் மனோகர் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தான். ஜென்சி ஜானின் வண்டியில் இவர்களைக் கடந்து போகும்போது, இருளிலும் மனோகரைத் தேடினாள். மனோகர் சிரித்துக்கொண்டே அவளைப் பார்த்துக் கையசைத்தான். அவள் தலையைத் திருப்பிக்கொண்டு ஜானின் தோள்களை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள்.

“என்ன மச்சி, உன் ஆள் ஜானதான் லவ் பண்ணுதுபோல.”

“லவ்லாம் இருக்காதுடா, சின்ன வயசிலிருந்து ஃபிரெண்ட்ஸ் அவ்வளவுதான். அவ கண்ணுல நான்தாண்டா இருக்கேன். எனக்குத் தெரியும்.”

“கண்ணுல யார் இருக்கான்னு போய் அவகிட்டயே கேட்டுட வேண்டியதுதானே” எனச் சொல்லிவிட்டு அவர்கள் மொத்தமாகச் சிரித்தார்கள்.

மனோகர் கோபமாக அங்கிருந்து எழுந்து சென்றான். போகும்போது விடுதிக்கு வெளியே நின்றிருந்த ஜானின் பைக்கை எட்டி உதைத்துவிட்டுச் சென்றான். அது அருகே இருந்த கல்திட்டில் விழுந்ததில் அதன் முன்கண்ணாடி உடைந்து சிதறியது. சிறிது நேரத்திலேயே ஜான் மனோகரின் அறைக்கு முன் வந்து கதவைத் தட்டினான். கதவைத் திறந்தவுடன் ஜான் எட்டி மனோகரை அறைந்தான். எதிர்பார்க்காத மனோகரின் கண்கள் சிவந்தன. கோபத்தில் உடல் நடுங்கியது. ஜானின் சட்டையை எட்டிப் பிடித்து முகத்தில் குத்தினான். சத்தம் கேட்ட மற்றவர்கள் வந்து பார்ப்பதற்கு முன்பாக இருவரும் மிகக்கடுமையாகத் தாக்கிக்கொண்டனர்.

அடுத்த நாள் ஜென்சி மனோகரைக் கூப்பிட்டாள். “எதுக்கு நம்மள கூப்படறா, எதுனாலும் அவன்கிட்ட கேட்டுக்க வேண்டியது தானே” என மனதுக்குள் நினைத்துக்கொண்டே கோபம் குறையாமல் கண்ணாடியைப் பார்த்தான். கண்ணிற்குக் கீழே பெரிதாக வீங்கியிருந்தது.

ஐந்து மணிக்கு ஜென்சி இளம்பச்சை நிறச் சுடிதாரில் வெள்ளை நிறத் துப்பட்டா காற்றில் பறக்க வந்துகொண்டிருந்தாள். மனோகர் ஒரு கையால் வீக்கமடைந்த கண்ணை மறைத்துக்கொண்டான். நேராக வந்தவள் மனோகரைப் பார்த்து “வா” எனக் கோபமாகச் சொல்லிவிட்டு ஹாஸ்டலின் பின்பக்கமாக நடக்கத் தொடங்கினாள். மனோகர் அவளின் பின்னால் அமைதியாக நடந்தான். அருகில் இருந்த சிமென்ட் பெஞ்சில் அமர்ந்து கொண்டவள், கண்களை மூடியிருந்த அவனின் கையை விலக்கி வீங்கியிருந்த கண்ணைப் பார்த்தாள். முழுக்கச் சிவந்திருந்தது. அதைப் பார்த்துத் தனக்குள் மெலிதாகச் சிரித்துக்கொண்டாள்.

“அறிவிருக்கா?”

மனோகர் அமைதியாக வேறு எங்கோ பார்த்தான்.

“உனக்கு ஏதாவது எங்கிட்ட பிரச்னைனா, என்கிட்ட கேளு. அவன்கிட்ட எதுக்கு சண்டை போடற?”

“என்ன, சமாதானத்துக்கு வந்திருக்கியா?”

அவள் சிரித்தாள். “ஸ்கூல் பையனா நீ” என்று அவனது தலையில் மெதுவாகத் தட்டினாள்.

“உனக்கு அவனதான பிடிக்கும். அவன்கூட தானே எப்ப பார்த்தாலும் சுத்தற. அப்புறம் எதுக்கு என்ன கூப்பிட்ட, அதச் சொல்லு?”

“எப்ப பார்த்தாலும் கோபம், சண்ட, வெடவெடன்னு ஒல்லிப்பிச்சான் மாதிரி உருவம். உன்ன போயி யாருக்காவது பிடிக்குமா? ரொம்ப நினைப்பு!”

மனோகர் சட்டென எழுந்து, “நான் கிளம்புறேன்” என்றான்.

“சரி, கிளம்பு” எனச் சொல்லிவிட்டு அவனைப் பார்த்தாள். அவன் அங்கேயே அசையாமல் நின்றான்.

“ஜான் உன் மேல ரொம்ப கோபத்துல இருக்கான். எலக்‌ஷன்ல உன்ன எதிர்த்து என்னை நிற்கச் சொல்லியிருக்கான். நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன், கேட்கல. நான் நிற்கறேன். கவலப்படாத நான் ஜெயிக்க மாட்டேன். எலக்‌ஷன் முடியட்டும், நம்ம பிரச்னைய தீர்த்துக்கலாம்.”

அவள் பேசப்பேச மனோகருக்குக் கோபம் தலைக்குள் ஏறிக்கொண்டே சென்றது. திரும்பி அவளைப் பார்த்துக் கடுமையாக “அவன் சொன்னான்னு எனக்கு எதிரா நிற்கிற, அதானே? நீ ஏன் கஷ்டப்படணும், நானே போய் வாபஸ் வாங்கிடறேன்” எனச் சொல்லிவிட்டு விறுவிறுவெனத் திரும்பிப் பார்க்காமல் நடந்தான். ஜென்சி அவன் பின்னால் ஓடி அவன் கைகளைப் பிடித்து நிறுத்தினாள்.

“வாபஸ்லாம் வாங்காத, நான் ஜெயிக்க மாட்டேன். என்னோட ஃபிரெண்ட்ஸ் கிட்டலாம் உனக்குத்தான் ஓட்டு போடணும்னு சொல்லியிருக்கேன்.”

“நீயும் உன் ஃபிரெண்ட்ஸும் எனக்குப் பிச்ச போடறீங்களா?” எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து கோபமும் ஆற்றாமையும் மனதுக்குள் வெதும்ப வேகமாக நடந்து விடுதிக்கு வந்தான்.

சிறிது நேரம் அவன் செல்வதையே வெறுமையுடன் பார்த்துக்கொண்டிருந்த ஜென்சி, அந்த சிமென்ட் பெஞ்சிலேயே நீண்ட நேரம் உட்கார்ந்திருந்துவிட்டு விடுதிக்குக் கிளம்பினாள்.

மனோகர் விடுதி அறைக்குச் சென்று திரும்பவும் பூட்டிக்கொண்டான். யாரிடமும் பேசவில்லை. கதவைத் தட்டிய அவனின் நண்பர்களிடம் “கொஞ்ச நேரம் தனியா விட்டுத் தொலைங்கடா” எனக் கத்தினான். ஜென்சியின் முகம் அவன் மனது முழுவதும் வந்து வந்து போனது. அப்படி வரும்போதெல்லாம் அவள்மீது அளவில்லாக் கோபமும் கூடவே வந்தது. நடுஇரவு. அவனது அறைக் கதவு படபடவெனத் தட்டப்பட, சலிப்பாக எழுந்து வந்து திறந்தான். அவன் நண்பர்கள் முகம் முழுக்க அதிர்ச்சியுடன் நின்றிருந்தார்கள். சிலர் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. மனோகர் ஒன்றும் புரியாமல் “என்னடா?” என்றான்.

யாரும் பேசாமல் அமைதியாக அவனைப் பார்த்தார்கள். ஒருவன் மட்டும் தயங்கித் தயங்கி, “மச்சான், ஜான் பைக் ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சாம். ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ண எடுத்துட்டுப் போயிருக்காங்க.”

மனோகர் முகம் சுருங்கத் தொடங்கியது. மனம் முழுவதும் ஏதோ கனமாய் இறுக்கியது. “ஜான் மட்டும்தானா?” என்றான். கேட்கும்போதே அவன் குரல் உடைந்தது.

அங்கு கனத்த அமைதி நிலவியது. ஒருவன் மட்டும் அந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு “ஜென்சி செத்துட்டாடா மச்சான்” என்று கதறினான்.

மனோகர் தலை சுற்றியது. கண்கள் இருண்டன. அப்படியே நழுவிக் கீழே விழுந்தான்.

அந்த இளம்பச்சை நிறச் சுடிதாரில், வெண்துப்பட்டா காற்றில் அசைய ஜென்சி இன்றும் மனோகரின் நினைவுகளில் இருக்கிறாள், கனவுகளில் வருகிறாள். அன்று அவள் விசேஷமாக அடர்சிவப்பு ரூபிக்கற்கள் பொதிந்த ஜிமிக்கியை அணிந்திருந்தாள். அதற்கு முன்பு அவளிடம் அந்த ஜிமிக்கியை அவன் பார்த்ததில்லை. அது மட்டுமல்ல, அன்றைய நாளில் அவளிடம் தென்பட்ட புதுவித முகபாவனைகள், ஸ்பரிசங்கள், குலைந்த குரல், உதட்டில் தேங்கி நின்ற மெல்லிய புன்னகை என எதையுமே அவன் கவனிக்கத் தவறினான். அதனால்தானோ என்னவோ, அதற்குப் பிறகான காலங்களில் எல்லாம் அன்று பார்த்த ஜென்சியின் உருவம் அவன் நினைவுகளில் பாசியைப்போலப் படிந்திருந்தது. நீரில் அழுத்தப்பட்ட பந்தைபோல நினைவுகளிலிருந்து அது எப்போதும் மேலெழும்பிக்கொண்டேயிருக்கிறது.

ஜானை அதற்குப் பிறகு மனோகர் பார்க்கவேயில்லை. சில நாள்கள் மருத்துவக்கல்லூரியில் இருந்தவன் அதன்பின் எங்கோ சென்றுவிட்டான். எங்கு சென்றான் என யாருக்கும் தெரியாது. ஜானின் நெருங்கிய நண்பர்களுக்குக்கூடத் தெரியாது. படிப்பை முடிக்கும் வரை ஜென்சியின் மரணம் கிட்டத்தட்ட அந்தக் கல்லூரியின் அத்தனை மாணவர்களையும் நிழல்போலத் தொடர்ந்தது.

கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு மனோகரும் ஜானும் இப்போதுதான் பார்த்துக்கொள்கிறார்கள். எதிர்பாராத தருணம். ஒரு பெண்ணின் இறப்பில் பிரிந்து, எங்கோ ஒரு மலைக்காட்டில் நடந்த யாரென்றே தெரியாத இன்னொரு பெண்ணின் இறப்பில் சேர்ந்திருக்கிறார்கள். வெடித்துப் பொங்கும் உணர்வுகளைத் தவிர இருவரிடமும் பேசுவதற்கு எதுவும் இல்லை. ஆத்மார்த்தமாய் அழுதார்கள். இயல்பிற்குத் திரும்ப நேரம் எடுத்துக்கொண்டார்கள். இறந்த பெண்ணின் மருத்துவ அறிக்கைகள் தொடர்பாக இரண்டொரு கேள்விகள் கேட்டுவிட்டு மனோகர் அங்கிருந்து கிளம்பினான். வழியெங்கும் ஜென்சி காற்றைப் போல அவனைப் பின்தொடர்ந்தாள்.

நிறைபனி - சிறுகதை

எதிர்பார்த்தது போலவே ஜான் மனோகரை அழைத்தான். ஆழ்ந்த அமைதியும் நடுவில் இரண்டொரு வார்த்தைகளுமாக அந்த இரவில் நீண்ட நேரம் இருவரும் அமர்ந்திருந்தார்கள். கிளன்ஃபிடிச் நிரப்பப்பட்ட கண்ணாடிக்கோப்பைகள் அடிக்கடி தீர்ந்தன. பற்றவைக்கப்பட்ட காய்ந்த விறகுகளிலிருந்து எழுந்து வந்த நெருப்பு ஜுவாலைகள் பனிபொழியும் அந்த இரவிற்கு ஒரு இளஞ்சூட்டைக் கொடுத்தது. திரண்டு நின்ற மேகங்கள் எப்போது வேண்டுமானாலும் கொட்டிவிடும் மனநிலையில் இருந்தன. கிட்டத்தட்ட இருவரும் அதே நிலையில்தான் இருந்தார்கள். ஏதேதோ பேசினார்கள். கல்லூரிக்குப் பிறகான அவர்களது வாழ்க்கை, திருமணம், இன்னும் என்னென்னவோ... ஆனால், அவர்கள் தெரிந்தே பேசாமல் விட்ட ஒன்றுதான் பேசிய அத்தனை நேரமும் அவர்களின் மனம் முழுவதும் நிறைந்திருந்தது. ஜென்சியின் நினைவுகள் அரூபமாய் அவர்களின் அருகில் எல்லா நேரமும் இருந்தது.

“சரி. நான் கிளம்புறேன்” என மனோகர் எழுந்தவுடன் ஜானும் எழுந்துகொண்டு அவனுடன் கார் வரை நடந்தான். இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மனம் அமைதியற்று இருந்தது. எதையோ கேட்கச் சொல்லியது, எதையோ பேசச் சொல்லியது.

மனோகர் காரின் கதவைத் திறக்க முற்படும்போது ஜான் “மனோ” என மெதுவாக அழைத்தான்.

மனோகர் திரும்பி அவனைப் பார்த்தபோது ஜானின் கண்கள் கலங்கியிருந்தன.

“என்ன மன்னிச்சிடு மனோ” என அவனது கைகளைப் பிடித்துக்கொண்டான். ஏதோ ஒன்றை மனோகரின் உள்ளங்கையில் வைத்து அதனை இறுக்கமாய்ப் பிடித்துக்கொண்டான்.

“அன்னைக்கு நானும் ஜென்சியும் சாப்பிடப் போனோம். ஜென்சிதான் வரச்சொல்லியிருந்தா. ரொம்ப நேரம் அமைதியாவே இருந்தவ எலக்‌ஷன்ல நிற்க மாட்டேன்னு சொன்னா. நான் விடல. நின்னேதான் ஆகணும்னு திரும்பத் திரும்ப அவகிட்ட சொல்லிட்டேயிருந்தேன். நிற்கவே முடியாதுன்னு சொல்லிட்டு அங்கிருந்து பட்டுனு எந்திரிச்சி நடக்க ஆரம்பிச்சிட்டா. சின்ன வயசிலிருந்து அவள பார்க்கிறேன், என்கிட்ட அவ எப்பயுமே அப்படிக் கோபப்பட்டதில்ல. எனக்கும் கோபம் வந்திருச்சி, அவ பின்னாடியே போய் கட்டாயப்படுத்தி அவள பைக்ல ஏறச் சொல்லி ஓட்டினேன். எனக்கிருந்த கோபத்துல மனசு ஒரு நிலைல இல்ல. எப்படிக் காட்டுறதுன்னு தெரியல. வண்டிய வேகமா கன்னாபின்னான்னு ஓட்டினேன். அவ மெதுவா போன்னு கத்துனா. நான் காது கொடுத்துக் கேட்கவேயில்லை. திடீர்னு வளைவுல திரும்பும்போது ஒரு லாரி…”

அதற்குப் பிறகு அவனுக்கு வார்த்தை வரவில்லை. மனோகரின் கையை இன்னும் அழுத்தமாகப் பற்றிக்கொண்டான். “ஜென்சி உன்ன லவ் பண்ணுனா மனோ. அதச் சொல்லத்தான் அன்னிக்கு உன்னக் கூப்பிட்டு அனுப்பினா” எனச் சொல்லிட்டு, தேம்பி அழுதான்.

மனோகர் அப்படியே காரின் மீது சரிந்து கீழே விழுந்தான். ஜான் கொடுத்த ஏதோ ஒன்று அவனது கைகளில் இருந்து கீழே விழுந்தது. ரூபிக்கற்கள் பதிக்கப்பட்ட ஓர் ஒற்றை ஜிமிக்கி. மனோ உடைந்துபோய் அதைப் பார்த்தான். பெருங்குரலில் அழுதான். ‘ஜென்சி’ என வாய்விட்டுக் கத்தினான். அத்தனை நேரம் அமைதியாக இருந்த வானம் திடீரென பைத்தியம் பிடித்ததுபோல பேய்மழையை அவன்மீது கொட்டத் தொடங்கியது.