Published:Updated:

''பாடுகளின் இறுதியில் ஒரு கதவிருந்தது!'' - லூயி க்ளக்கின் கவிதைகள் பேசியது என்ன? #LouiseGluck

அனோரெக்ஸியா என்ற உணவு உண்பதில் குறைபாட்டை ஏற்படுத்தும் மன நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் லூயி களக். அதற்காக தொடர்ந்து ஏழு வருடங்கள் உளவியல் சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார். இதனால் கல்லூரி படிப்பை பட்டம் பெறுவதற்கு முன்பே இடையில் நிறுத்தியுள்ளார்.

'தனிமனித இருப்பின் கூறுகளை பொதுவானதாக்கக் கூடிய அலங்காரங்கள் அற்ற தெளிவான , தவிர்க்கமுடியாத கவிதையின் குரல்' என்று பாராட்டப் பெற்ற Louise Glück இந்த ஆண்டின்‌ இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றிருக்கிறார். இந்தச் செய்தியும் அவரது கவிதைமொழியைப் போலவே பெரிய சலசலப்பில்லாமல் அமைதியான எதிர்வினையைப் பெற்றிருக்கிறது.

இவர் ஏப்ரல் 22, 1943-ம் ஆண்டு நியுயார்க் நகரத்தில் பிறந்தவர். பள்ளி காலத்தில் இருந்தே அனோரெக்ஸியா என்ற உணவு உண்பதில் குறைபாட்டை ஏற்படுத்தும் மன நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் லூயி க்ளக். அதற்காக தொடர்ந்து ஏழு வருடங்கள் உளவியல் சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார். இதனால் கல்லூரி படிப்பை பட்டம் பெறுவதற்கு முன்பே இடையில் நிறுத்தியுள்ளார்.

'பதின் பருவத்தில் தாயின் ஆதிக்கத்தை எதிர்த்து, தன் உடலோடும் மனதோடும் சேர்ந்து நடத்திய போராட்டம்' இந்த கடினமான காலத்தை பற்றி பின் நாளில் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

1968-ல் வந்த First born என்ற முதல் கவிதை தொகுப்பில் தொடங்கி ஐந்து தசாப்தங்களாக இயங்கிக்கொண்டிருக்கும் இவர் இதுவரை பன்னிரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

Louise
Louise

மோலோட்டமான முதல் வாசிப்பிற்கு இவருடைய கவிதைகள் மிகவும் எளிமையானதாக தோன்றினாலும் மீள் வாசிப்புகளில் துல்லியமான சொற்களின் ஆழமும் , அதன்‌ வீச்சும் கச்சிதமும் நம்மை வசீகரிக்கும். சிறு கயிறுகளால் கட்டப்பட்ட உறுதியான இறுக்கமான முடிச்சுகளைப் போல வார்த்தைகளை கோர்த்திருக்கும் பாங்கில் ஒரு அழகியல் வெளிப்படும் . ஆர்பாட்டங்கள் இல்லாத மென்மையான மொழியாலேயே குழந்தைகளின் மரணம் முதலான எல்லாவற்றையும் வெளிப்படுத்தியிருக்கும் விதம் வியப்பளிப்பதாக இருக்கும்.

1993-ல் ' The Wild Iris' என்ற தொகுப்பிற்காக Pulitzer பரிசை வென்றவர். இந்த தொகுப்பு அமெரிக்காவின் William Carlos William பரிசையும் பெற்றது. இந்த கவிதைகளின் களம் ஒரு பூந்தோட்டம்தான் என்றாலும் பூக்களை பற்றிய அழகான கவிதைகள் அன்று. வாடி வதங்கி உதிரும் காட்டு ஐரிஸ் பூக்களைக்கொண்டு வாழ்வின் அநித்யத்தை சொல்பவை.

"என் பாடுகளின் இறுதியில் ஒரு கதவிருந்தது.... என் வாழ்வின் உள்ளிருந்து ஒரு மகத்தான நீருற்று எழுந்தது அடர் நீல நிழல்கள் நீலப்பச்சை கடல் நீரின் மேல்''
லூயி க்ளக்

உயிர்ப்புள்ள உருவகங்களை கண் முன் விரியச் செய்யும் இசைமை நிறைந்த கவிதை மொழி இவருடையது.

தன்னுடைய கவிதைகள் சுயசரிதத்தன்மை கொண்டவை மற்றும் அகவயமானவை போன்ற விமர்சனங்கள் தனக்கு தீராத எரிச்சலைத்தருவதாக பல பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார். "யாவர்கும் பொதுவான உணர்வுகளை உள்ளீடாக வைத்து வீடொன்று சமைக்கிறேன் . இந்த கட்டுமானத்துள் அகம் புறம் எல்லாம் கரைந்து , கலைந்து எனக்கே உரித்தான மொழியையும் சொலல் வகைமையும் கண்டடைகிறேன் " என்கிறார் தன் பிரத்தியேகமான மொழியைப்பற்றிய ஒரு கேள்விக்கு பதிலாக.

எளிமையான வார்த்தைகளாலான சொற்சிக்கனம் கொண்டு கறாராகப் புனையப்பட்ட இவருடைய கவிதைகள் பல தளங்களில் பொருள்படும் . உரையாடல் மற்றும் கதைசொல்லல் முறைகளே இவர் பெரும்பாலும் பயன்படுத்தும் உத்திகள். ஒரு கவிதையில் பல குரல்களைக் கேட்கும் வகையிலும் பல அடுக்குகளை ஒரு மலர்‌ அவிழ்வது போல் ஒவ்வொன்றாக விரிந்து பின் உதிரும் தன்மையையும் தன்‌ கவிதைகளில் வெகு இயல்பாக க் காட்டிச் செல்லும் உத்தி அறிந்தவர்.

சில வேளைகளில் உறுவ மாறிகள் போல சட்சட்டென்று வெவ்வேறு குரல்கள் மாறி மாறி ஒலித்து நிகழ்த்து கலையின் அனுபவத்தை அளிக்கக் கூடியவை. காலம், இறப்பு, இறப்பின் நிமித்தம் மாறும் காலம் போன்றவையே மீள மீளத் தோன்றும் பேசு பொருளாக இருக்கிறது. கிரேக்க தொன்மங்களும் கடவுளர்களும் கூட பெரும் அளவில் அவருடைய படைப்புகளில் காணக்கிடைக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

' இறப்பை மறுத்தல் ' என்ற அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட கவிதையில்

"பழைய வாழ்விற்கு திரும்ப உனக்கு விருப்பமில்லை போலும். காலம் நம்மைப் பணிப்பதைப் போல நேர் கோட்டில் நகர விருப்பமில்லை போலும் . மாறாக ( இப்போது குளத்தைச் சுட்டிக்காட்டுகிறான் ) வட்டமாக சுற்றுவதே உன் நோக்கம் என்று புரிகிறது. ஒவ்வொன்றின் நடுவிலும் குடியிருக்கும் அமைதியை நோக்கியே நீ பயணிக்க விரும்புகிறாய். இந்த பயணவழியை ஒரு கடிகாரத்தின் முகமாக விளங்கிக் கொள்ளவே நான் ஆசைப்படுகிறேன் "
லூயி க்ளக்

காலமும் அது செல்லும் மார்க்கமும் எப்படி நம் வயதைப்பொருத்து மாறுபடுகிறது என்பதை இருவருக்குமான உரையாடல் வழியே சொல்லக்கூடிய கவிதை.

இவரது படைப்புகள் பேச்சு மொழிக்கு மிக சமீபத்தில் இருந்தாலும் மிக நுட்பமான கவிமொழி காணக்கிடைக்கிறது.

'மாக் ஆரஞ்சு' பூக்கள் என்ற கவிதை பெண்ணிய செயற்பாட்டாளர்களின்‌ தேசிய‌கீதமாகவே கருதப்பட்டு பல இடங்களில் கூட்டாக பாடப்பட்ட கவிதை.

''எங்கள் வாய்களை எக்காரணத்தினாலும் எதனாலும் அடைக்காதீர்கள் . மாக் ஆரஞ்சு மலர்களின் சுகந்தம் எங்களை மயக்காதிருக்கட்டும் ...'' என்று வேண்டிக்கொள்ளும் தொனியில் இருந்தாலும் இழையோடும் உக்கிரம் தெரியும் வகையில் கவிதையின் போக்கு இருக்கும்

''மாக் ஆரஞ்சு

நம் முற்றத்தை வெளிச்சமாக்குவது நிலவல்ல இந்த ' மாக் ஆரஞ்சு ' மலர்களே..

நான் அவற்றை வெறுக்கிறேன்

நான் அவற்றை ஒரு கலவியை வெறுப்பதைப் போல வெறுக்கிறேன்

ஆணின் வாய் என் வாயை இறுக மூடி

என்னை நகரவியலாமல் சிறைப்படுத்தும் அவன் உடல்...

உங்களுக்கெல்லாம் புரிகிறதா?

நாம் முட்டாளாக்கப்படுகிறோம்

இந்த மலர்களின் சுகந்தம் வேறு ஜன்னல் வழி உள்ளே வீசுகிறது

என்னால் எப்படி இளைப்பாற முடியும்?

என்னால் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்?

இந்த மாக் ஆரஞ்சுகளின் நாற்றம் உலகத்தில் உள்ளவரை''

இப்படி இரு வேறு எதிர்மறைகளுக்கு நடுவில் சிக்கிக்கொண்டு அலைக்கழிக்கப்படும் பெண்ணின்‌குரலாக இந்த கவிதை ஒலிக்கிறது. வெளிப்படையான அரசியலும் புறம் சார்ந்த கூப்பாடுகளும் நிறைந்த சூழலில் க்ளக்கின் உள்ளார்ந்த சன்னமான குரலுக்கு கிடைத்த இந்த அங்கீகாரம் மிக முக்கியமானது. இலக்கிய உலகம் பெண்களின் பிரத்யேகமான வெளிப்பாடுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று காலம் தாழ்த்தி யேனும் உணர்ந்ததன் நேர்மறை விளைவாகவே இதை கருத வேண்டும்

தத்துவார்த்த கூறுகளுடனும் சில இடங்களில் ஆன்மீக தொனியுடனும் இவரது வரிகள் இருக்கின்றன.

இதனாலேயே ராபர்ட் லொவெல் , ரேய்னர் மாரியா ரில்கே, மற்றும் எமிலி டிக்கின்ஸனின் தாக்கம் இவரது படைப்புகளில் இருப்பதாக சில விமர்சனங்கள் முன்‌வைக்கப்பட்டாலும் மிகவும் தனித்துவமான , சன்னமான அதே நேரத்தில் உறுதியான பிடிவாதமான பெண்ணிய‌க் குரலாகவே ஒலிக்கிறார் Louise Gluck .

''உறுதியாக தொலைந்து போகக் கூடியதை எதற்கு விரும்ப வேண்டும்?

அதைவிட விரும்பத் தக்கது வேறோன்றும் இல்லாததால்.''

என்னை வெவ்வேறு நிலைகளில் பாதித்த கவிஞர்களுள் இவர் மிக முக்கியமானவர். Louise Gluck இன் 4 கவிதைகளை மொழிபெயர்த்துள்ளேன்.

1) மகிழ்ச்சி

2) எல்லாம் புனிதம்

3) தொன்மையான துண்டு

4) நீரில் மூழ்கி இறந்த பிள்ளைகள்

'விகடன் தடம்' செப்டம்பர் 2017 இதழில் 'மகிழ்ச்சி' கவிதை பிரசுரமாகியுள்ளது.

அதை இங்கே மறுபடி பதிவு செய்கிறேன்.

மகிழ்ச்சி ஒரு வெள்ளை படுக்கையில் ஆணும் பெண்ணும் படுத்திருக்கிறார்கள். அது காலை வேளை சீக்கிரமாகவே எழும்பி விடுவார்கள் என்று நினைக்கிறேன் பக்க மேசையில் அல்லி பூக்கள் கொண்ட ஜாடி உள்ளது. வெயில் அவர்களின் கழுத்தில் குளம் கட்டி நிற்கிறது. அவன் அவளை நோக்கித் திரும்புவதைப் பார்க்கிறேன். அவள் பெயரைச் சொல்பவனைப் போல வாயசைக்கிறான் ஆனால் சத்தமில்லாமல் வாயின் அடியாழத்தில். திறந்திருக்கும் ஜன்னல் ஓரத்தில் ஒரு பறவை கடத்துகிறது. ஒரு முறை , இரு முறை பின் அவள் சிறிது அசைகிறாள். அவள் உடம்பு அவனுடைய மூச்சுக்காற்றால் நிறைகிறது. நான் என்‌ கண்களைத் திறக்கிறேன் நீ என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறாய். அறையெங்கும் வெயில் சறுக்கி வந்துக்கொண்டிருக்கிறது. கண்ணாடியைப்போல் உன் முகத்தை எனதருகில் வைத்து உன்‌முகத்தைப் பார் என்கிறாய் எவ்வளவு அமைதியாயிருக்கிறாய் நீ எரியும் உருளை நம் மேல் மெதுவாக நகர்ந்து செல்கிறது.
லூயி க்ளக்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு