Published:Updated:

"இரங்கல் சொல்வதற்கு பதில், இப்போதே நலம் விசாரிக்க முடியாதா!" - சித்தலிங்கய்யாவுக்கு கண்ணீர் அஞ்சலி!

கன்னட எழுத்தாளர் சித்தலிங்கய்யா
கன்னட எழுத்தாளர் சித்தலிங்கய்யா

சமுதாய எதிர்மறைகளை, வாழ்க்கையின் முரண்களை, அவலங்களை நகைச்சுவை உணர்வுடன் சொல்லக் கூடிய தனிச் சிறப்புப் பெற்றவர். யார் மனதையும் புண்படுத்தாதவர், எதிரிகளே இல்லாதவர்.

''சன்னதம் வந்து ஆடிக்கொண்டிருந்த ஒருவனைப் பார்த்து இளைஞன் ஒருவன் கேட்டான். 'மாரியம்மா, நம் மக்களின் ஏழ்மை ஒழிய வேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும்... நீ அதை எப்படிப் போக்குவாய்?' இந்தக் கேள்வியைக் கேட்டதும் அம்மனின் உற்சாகத்திற்கு பங்கம் ஏற்பட்டது. அம்மன் செவிடியைப் போல முகத்தை மறு பக்கம் திருப்பிக் கொண்டாள். மக்களுக்கும் இந்தக் கேள்வி பயமூட்டியது. ஆடிக்கொண்டே அம்மன் ஓடத் தொடங்கினாள்.”
சித்தலிங்கய்யா

இப்படி அதிரடியான வரிகளை எழுதும் கன்னட எழுத்தாளர் சித்தலிங்கய்யா, மிகவும் அமைதியானவர். இவருக்கு முன்பும் பின்பும் பலர் தலித் கவிதைகளைப் படைத்திருக்கிறார்கள். ஆனால், ஒளிவு மறைவின்றி நேரடியாக, எதார்த்தமாகச் சொல்லப்பட்ட இவர் கவிதைகள் தனித்துவமிக்கவை. பிரபல எழுத்தாளராகவும், தலித் மக்களின் குரலாகவும் இருந்த சித்தலிங்கய்யா நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவருக்கு வயது 67. கொரோனாவிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர், சில நாள்களுக்குப் பிறகு மரணம் அடைந்திருக்கிறார்.

‘ஊரு கேரி’ இவரின் சுயசரிதை. தலித் சுயசரிதைகளில் மிகவும் முக்கியமான நூல். இதைத் தமிழில் ‘ஊரும் சேரியும்’ என்ற தலைப்பில் பாவண்ணன் மொழிபெயர்த்துள்ளார். இது தமிழ் வாசகர்கள் மீது அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஊரும் சேரியும்
ஊரும் சேரியும்

1954-ம் ஆண்டு, பிப்ரவரி 3-ம் நாள் மாகடியில் பிறந்தவர் சித்தலிங்கய்யா. 1976-ல் கன்னட எம்.ஏ.ஹானர்ஸ் பட்டத்தை தங்கப் பதக்கக்துடன் பெற்று தேர்ச்சியடைந்தவர். 1989-ல் முனைவர் பட்டம் பெற்றார். கன்னட ஆய்வு மையத்தின் தலைவராகவும், பெங்களூர் ஞான பாரதி பல்கலைக்கழகத்தின் தலைவராகவும், கன்னடப் பேராசியராகவும் பணியாற்றியவர். அம்பேத்கர் ஆய்வு மையத் தலைவராகவும் இருந்தவர். இவர் கர்நாடக மாநில அவையில் இருமுறை உறுப்பினராக இருந்திருக்கிறார்.

சித்தலிங்கய்யாவின் ‘ஊரு கேரி’ – உணவு மற்றும் அறிவின் வளர்ச்சியின் மாறுபட்ட வழிகளின் சுயசரிதை. மனித வரலாறு, உணவைத் தேடுவதிலிருந்து தொடங்கி அறிவை வளர்த்துக்கொள்வதில் முழுமையடைகிறது என்ற கருத்தை முன்வைக்கிறது.

சித்தலிங்கய்யா கவிதை, நாடகம், கட்டுரை, விமர்சனம், ஆய்வு, சுயசரிதை இப்படி பல இலக்கிய வடிவங்களில் செயல்பட்டவர்.
ராஜ்யோத்சவ விருது, கர்நாடக சாகித்ய அகாதமி விருது, ஜானபத அறிஞர் விருது, சத்யகாம பிரதிஷ்டான விருது, டாக்டர் அம்பேத்கர் நூற்றாண்டு விழா சிறப்பு விருது, பாபு ஜகஜீவன்ராம் விருது, ஹம்பி பல்கலைக் கழக ‘நாடோஜா’ விருது, பம்ப விருது போன்ற பல விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவர்.
கன்னட எழுத்தாளர் சித்தலிங்கய்யா
கன்னட எழுத்தாளர் சித்தலிங்கய்யா

ஓர் இனத்தின் அவமானம், ஆதங்கம், வலி, சீற்றம் இவற்றை கவிதையில் ஓடவிட்டு கவிதைக்கு ஒரு திருப்பம் தந்த தலித் இலக்கியவாதி சித்தலிங்கய்யா. எழுபதுகளின் மத்தியில் கன்னட இலக்கியத்தில் ஒரு பெரும் எழுச்சியை ஏற்படுத்தியவர். கன்னட முற்போக்கு இலக்கிய வட்டத்திலிருந்து பேரிலக்கியங்கள் தோன்றாத சமயமது. அப்போது இவருடைய, ‘பறையரின் பாட்டு’ என்ற குரல் ஓங்கி ஒலித்தது. அது பட்டி தொட்டிகளில் எதிரொலித்தது.

“எங்கே வந்தது, யாருக்கு வந்தது,

நாற்பத்தேழின் சுதந்திரம்?

பசியாலே செத்தவரும், பட்டைக் கல் சுமந்தவரும்,

உதைபட்டு உறங்கியவரும் எங்க ஜனங்க”

- என்று தீர்மானமாகவே அரசியலை முன்வைத்தவர் சித்தலிங்கய்யா. இப்பாடல் கர்நாடகாவில் அன்றைய காலகட்டத்தில் நடந்த பொதுக்கூட்டங்களிலும், ஊர்வலங்களிலும் பாடப்பட்டது.

சமுதாய எதிர்மறைகளை, வாழ்க்கையின் முரண்களை, அவலங்களை நகைச்சுவை உணர்வுடன் சொல்லக் கூடிய தனிச் சிறப்புப் பெற்றவர். யார் மனதையும் புண்படுத்தாதவர், எதிரிகளே இல்லாதவர். தன்னை ‘தலித் கவிஞன்’ என்று அழைக்கவேண்டாம், ‘கவிஞன்’ என்று சொன்னால் போதும் என்று பணிவுடன் தன் எண்ணங்களை முன்வைத்தவர்.

கர்நாடக அரசு இவருக்கு தேசியக்கொடி போர்த்தி முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்தது. இலக்கியவாதிகளை மரியாதையுடன் நடத்தும் அரசை பாராட்டத் தோன்றுகிறது. சித்தலிங்கய்யாவின் நினைவாக ஓர் ஆய்வு மையத்தை நிறுவுவதாக கர்நாடக அமைச்சர் அறிவித்திருக்கிறார். இது மற்ற மாநிலங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமையலாம்.

கன்னட எழுத்தாளர் சித்தலிங்கய்யா இறுதி அஞ்சலி
கன்னட எழுத்தாளர் சித்தலிங்கய்யா இறுதி அஞ்சலி

அவர் இறந்தபோது –

கார்முகில் சூழ்ந்திருந்தது

கடும் இருள் சிதறியிருந்தது

கடும் ரௌத்திரம் நிறைந்திருந்தது வானில்...

(இது அவருடைய ஒரு கவிதையின் சில வரிகள்)

அன்று வானம் இயற்கையாகவே இருந்திருந்தது அதிசயம்.

இன்னும் வாழ்வதற்கான காரணங்கள் நிறையவே இருந்தாலும், தான் வாழ்ந்ததற்கு ஓர் அர்த்தத்ததைக் கொடுத்துச் சென்ற சிறந்த மனிதர் சித்தலிங்கய்யா.

ஓர் எழுத்தாளன் மறைந்தால், விண்ணில் ஒரு புதிய நட்சத்திரம் தோன்றும்.

கட்டுரை: கே.நல்லதம்பி

***

சித்தலிங்கய்யாவின் ஒரு கவிதை – இந்தச் சூழ்நிலைக்கு எப்படிப் பொருந்திப்போகிறது பாருங்கள்:

நான் இறந்தால் நீங்கள் அழுவீர்கள்

உங்கள் கதறல் எனக்குக் கேட்காது

என் வலிக்கு இப்போதே வருந்த முடியாதா

நீங்கள் பூமாலை சாத்துவீர்கள்

என்னால் முகர முடியுமா என்ன

அழகான பூவொன்றை இப்போதே

கொடுக்க முடியாதா

என்னைப் புகழ்வீர்கள்

எனக்குக் கேட்குமா சொல்லுங்கள்

ஓரிரு வார்த்தை இப்போதே

புகழ்ந்தால் குறைந்தா போவீர்கள்

என் தவறுகளை மன்னிப்பீர்கள்

நான் உணராமலே போவேன்

ஜீவன் இருக்கும் போதே

மன்னிக்க முடியாதா

நான் இல்லாத குறைக்கு வருந்துவீர்கள்

எனக்குத் தெரியாமலே போகும்

இப்போதே சந்திக்கலாமே

என் மரணச் செய்தி கேட்டவுடன்

வீட்டுக்கு ஓடி வருவீர்கள்

இரங்கல் சொல்வதற்கு பதில்

இப்போதே நலம் விசாரிக்க முடியாதா

பறந்து போகும் முன்னே

பகிர்ந்து வாழ்வது மேலல்லவா..?

- சித்தலிங்கய்யா

அடுத்த கட்டுரைக்கு