Published:Updated:

ஊர்க்குருவி! - சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image

தன் கணவனிடம் தான் விரும்பிய வாழ்வுபற்றியும் இந்தக் கிராமத்தில் வந்து சிக்கிக்கொண்டதாகவும் சொல்லி புலம்புவாள். அவனும் கண்டும் காணாமலும் சென்றுவிடுவான்.

சரோஜா தனது செல்போனில் வந்திருந்த `வாட்ஸ்அப்’ படத்தை பார்த்து ஒருகணம் அதிர்ந்தாள். அவள் மகள் ஸ்ரீஜா, தான் மணக்கோலத்தில் இருக்கும் படத்தை அனுப்பியிருந்தாள். சில நிமிடங்கள் அதே அதிர்ச்சியில் இருந்தவள் மகளுக்கு உடனே போன் செய்தாள். மறுமுனையில் பதில் இல்லை. தொடர்புகொள்ள முடியாத நிலையில் இருந்தது. சிலமுறை முயன்று பார்த்தவள், பின் அமைதியாகிவிட்டாள். வயது நாற்பதைக் கடந்த, சற்றே பூசிய உடல்வாகு. மாநிற தேகம்.. அடிக்கடி செய்துகொண்ட ஒப்பனையின் தயவால் முகம் செயற்கை பொலிவில் சற்று ஊதியிருந்தது.

ஒருநாள் இவ்வாறு நடக்கும் என்பதை உணர்ந்திருந்தாலும் இந்தக் கணம் அவளுக்கு ஒரு அசாதாரணமாக கடந்தது.

Representational Image
Representational Image

செல்போனில் படத்தை மீண்டும் பார்த்தாள். மணமக்கள் இருவரும் ஏதோவொரு கோயிலினுள் மணக்கோலத்தில் முகமலர்ந்து சிரித்தார்கள். சுற்றிலும் நான்கைந்து பேர். அது அவனுடைய நண்பர்களாக இருக்க வேண்டும். அவன் சிரிப்பில் ஒரு வசீகரம் தெரிந்தது. சற்றே வெளிர்ந்த நிறம். முகத்திலும், உடலிலும் ஒருவித வளமை தெரிந்தது. செழிப்பான குடும்பத்தை சேர்ந்தவன்போல் இருந்தான். இந்த அதிர்ச்சியிலும் சரோஜாவின் மனது ஒரு ஓரமாய் குளிர்ந்தது.

சுமார் இருபது வருடங்களுக்கு முன்...

சரோஜா அவளது ஊருக்கு அருகில் உள்ள நகரத்துக்குச் சென்று பத்தாம் வகுப்புவரை படித்திருந்தாள். அங்கு அவளோடு பயின்ற தோழிகள் பலரும் அந்த நகரத்தைச் சேர்ந்தவர்கள்தாம். அவ்வப்போது அவர்களின் வாழ்வு முறையை கிராமத்திலிருந்து வரும் தன் வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்ப்பாள். உடையில் சிறு அழுக்கும் படாமல் அவர்கள் வருவதும், ஒருவித மேம்பட்ட தொனியில் அவர்கள் பழகுவதும் இவளிடம் நகரத்து வாழ்க்கை மீதான ஒருவித ஏக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அதன் காரணமாகவே தான் திருமணம் செய்தால் ஒரு நகரத்து ஆளையே செய்துகொள்ள வேண்டும் என ஏங்கியிருந்தாள்.

எனினும் காலம் புதிர்போட்டது. பத்தாம் வகுப்பு வரையே படித்திருந்த அவளுக்கு பக்கத்து கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்தார்கள். இதன் மூலம் இதுநாள் வரையிலான தனது ஏக்கத்துக்கு முடிவுரை எழுதப்பட்டு விட்டதை நினைத்து வருந்தினாள். கணவன் குமரேசன் பள்ளிப் படிப்போடு விட்டிருந்தான். சுய சிந்தனையற்றவன். திருமணம் நடந்ததும் தனது நிலத்தில் கொஞ்சம் பொறுப்புடன் விவசாயம் பார்த்து வந்தான். சில வருட இடைவெளியில் ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆணும் பிறந்தன. போதுமான வருமானத்தோடு மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தனர். எனினும் சரோஜாவுக்கு நகரத்து வாழ்வு மீதான ஏக்கம் குறையவில்லை. அவ்வப்போது தன் கணவனிடம் தான் விரும்பிய வாழ்வுபற்றியும் இந்தக் கிராமத்தில் வந்து சிக்கிக்கொண்டதாகவும் சொல்லி புலம்புவாள். அவனும் கண்டும் காணாமலும் சென்றுவிடுவான்.

Representational Image
Representational Image

ஒருமுறை நகரத்திலிருந்து தன் ஊருக்கு வந்த பள்ளித்தோழியுடன் பேசிவிட்டு வந்த அவள், கணவனிடம் இனிமேல்தான் இந்த கிராமத்தில் வாழ முடியாது என்று அதிர்ச்சி கொடுத்தாள். நகரத்தில் மட்டுமே தன்னால் வாழ முடியும், இல்லையெனில் தன் தாய்வீட்டுக்கே சென்றுவிடுவதாக கூறி பிரச்னையை கிளப்பினாள். சில நாள்கள் சமாளித்த அவனும் அதற்குமேல் அவள் போராட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவளின் இழுப்புக்குத் தலையசைத்தான்.

தனக்கென இருந்த நிலத்தை குத்தகைக்குக் கொடுத்துவிட்டு நகரத்தில் வாடகைக்கு ஒரு சிறிய வீட்டைப்பார்த்து குடியேறினான். அங்கு கிடைக்கும் சிறுசிறு வேலைகளை செய்துகொண்டு பிழைப்பு நடத்திவந்தான்.

Representational Image
Representational Image

சரோஜாவுக்கு தான் ஏங்கிய வாழ்வு கிடைத்துவிட்டதால் மகிழ்ச்சியில் திளைத்தாள். தன் தோழிகளுடன் சேர்ந்து ஒப்பனை செய்துகொண்டு ஊர் சுற்றி கண்டபடி செலவு செய்து பொழுதைக் கழித்தாள். நாளடைவில் கொண்டுவந்த பணம் தீர்ந்துவிடவும், இவளின் உண்மை நிலையைப் புரிந்துகொண்ட தோழிகளால் தனித்து விடப்பட்டாள். எனினும் தான் எப்படியாயினும் சம்பாதித்து அவர்களைப் போல வாழ வேண்டும் என உறுதிகொண்டாள்.

சிலகாலம் அவள் தோழிகள் அறிவுரைப்படி எளிதில் சம்பாதிக்கும் சில முறைகளை முயன்று தோற்றாள். அதன்பின் காய்கறி சந்தையில் கீரை வியாபாரம் பற்றி யாரோ சொல்ல, அதில் இறங்கினாள். பக்கத்து ஊர்களிலிருந்து வரும் கீரைக்கட்டுகளை மொத்தமாக வாங்கி அவற்றைப் பிரித்து தனக்கேற்ற அளவில் மீண்டும் கட்டுகளாக்கி சாலையோரத்தில் சாக்குகளை விரித்து அவற்றில் பரப்பி விற்று வருகிறாள். அவளுடைய கணவன் குமரேசன் அங்குள்ள ஒரு காய்கனி அங்காடியில் சிறு வேலையுடன் பகுதி நேரமாக தெருக்களில் மீன் வியாபாரமும் செய்துவருகிறான்.

எது எப்படியாயினும் இன்றுவரை தன்மீது துளிகூட கிராமத்து வாடை படாதவாறு பார்த்துக்கொண்டாள். தனது வாழ்வுக்கு அது இழுக்கு என நினைப்பாள். உறவினர் விசேஷங்களுக்குக் கூட முடிந்தவரை சொந்தக் கிராமத்துக்கு வருவதைத் தவிர்ப்பாள். பிச்சை எடுத்து பிழைத்தாலும் நகரத்தில் எடுப்போம்.. ஊருக்கு திரும்பி வரமாட்டேன் என்பதை தன் கணவன் மனதில் பசுமரத்தாணிபோல் பதிய வைத்திருந்தாள்.

Representational Image
Representational Image

தன் பிள்ளைகளையும் தன்னைப் போலவே நகரவாசிகளாக வளர்க்க வேண்டும் என்று படாதபாடு படுவாள். அதற்காகவே எவ்வளவு முக்கிய நிகழ்வுகளாக இருந்தாலும்கூட தன் குழந்தைகளை கிராமத்துக்குச் செல்ல விடமாட்டாள். எவ்வளவு நாள் விடுமுறை இருந்தாலும் இரு அறை கொண்ட அந்த நகரத்து வாடகை வீட்டிலேயே கழிக்க நிர்பந்திப்பாள். இப்படியாக அவர்களை சுய சிந்தனையற்றவர்களாகவே வளர்த்திருந்தாள். வெளி நபர்களிடமோ, உறவினர்களிடமோ அதிகம் பழகாத அவர்களும் உலகம் தெரியாத குழந்தைகளாகவே வளர்ந்திருந்தார்கள்.

தவிர்க்க முடியாத சில முக்கிய விசேஷங்களுக்கு வரும் அவள் உறவினர்களிடையே தன் உண்மை நிலையை மறைத்துதான் பகட்டான வாழ்வு வாழ்வதைப் போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்துவாள். விழா முடிந்து செல்லும் வரை எப்பாடு பட்டாவது அந்த பிம்பத்தை தக்க வைக்க போராடுவாள். சிலர் இவள் படும் பாட்டை உணர்ந்து தள்ளிச் சென்றுவிடுவதும் உண்டு. வயது நாற்பதைக் கடந்துவிட்டாலும் தான் இளமையாகவே தோன்ற வேண்டும் என அபத்தமாக ஒப்பனை செய்துகொள்வாள். சரோஜா என்ற தனது பெயரையும் சுருக்கி `சரோ’ என அழைக்கச் சொல்லி எல்லோரிடமும் மன்றாடுவாள்.

இடைவிடாது வேலை செய்துவரும் குமரேசனுக்கு ஏற்படும் உடல் அலுப்பை போக்க மாலை வேளைகளில் மதுவை நாட ஆரம்பித்தான். அதற்கென வீட்டிலேயே மது பாட்டில்களை வைத்திருப்பான். அவற்றை தினமும் காண்பதாலோ அல்லது சிலவகை மது அருந்துவதால் உடல் பொலிவு பெற்று பளபளப்பு கூடும் என்று யாரோ சொல்லியதாலோ என்னவோ அவளுக்கும் மதுவின் மேல் ஈடுபாடு வந்தது. இந்த நகரத்தில் அக்கம்பக்கத்தினர் எவரும் இவளது நடவடிக்கைகளை கண்டுகொள்ளாதது வசதியாகிப்போனது அவளுக்கு. நாளடைவில் அதுவே தொடர்ந்தது. அதனாலேயே திருமணத்தின் போது மாநிறத்தில் மெலிதாக இருந்த அவள் இப்போது மதுவின் தயவால் முகமும் உடலும் சற்று ஊதிவிட்டாள். அதன் காரணமாக சில உடல்நலக் கோளாறுகளும் வர ஆரம்பித்தன. அவ்வப்போது சிகிச்சையும் பெற்று வந்தாள். பிள்ளைகள் வளர்ந்து விட்டபின்னும் அந்த மதுப் பழக்கத்தைவிட முடியாமல் தொடர்ந்தாள். இவர்கள் வீட்டிலேயே மது பாட்டில்களை வைத்திருப்பது பிள்ளைகளுக்கு முதலில் அசெளகரியத்தை கொடுத்திருந்தாலும் பின் அதுவும் அவர்களுக்குப் பழகிவிட்டது.

Representational Image
Representational Image

மகள் ஸ்ரீஜா பள்ளிப்படிப்பை முடித்ததும் அவளை சேலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்த்து விட்டிருந்தாள். பள்ளியில் சுமாராக படித்து ஓரளவுக்கு தேரிய அவள் கல்லூரி சென்றதும் அங்கு கட்டுப்படுத்த ஆள் இல்லாமல் படிப்பதை மறந்து சுதந்தரமாக பொழுதைக் கழித்தாள். ஸ்ரீஜாவின் இயற்பெயர் சிவசங்கரி. தனக்கு அப்பெயர் நாகரிகமாக இல்லையென தன்னை ஸ்ரீஜாவாக மாற்றிக்கொண்டாள். சரோஜா தனக்கு கிடைக்காத சொகுசு வாழ்க்கையை தன் பிள்ளைகள் அனுபவிக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு தான் சிரமப்பட்டு கீரை விற்று சம்பாதிக்கும் பணத்தில் சிறிதும் சேமிக்காமல் அவர்களுக்கு தேவைப்படும் பணத்தைவிட அதிகமாகவே செலவழிப்பாள். அதை மற்றவரிடமும் சொல்லி புளங்காகிதம் அடைவாள்.

ஸ்ரீஜா தான் கல்லூரிக்கு எதற்கு வந்தோம் என்பதை மறந்து கண்டபடி செலவு செய்துகொண்டு சுற்றிவந்தாள். அவ்வப்போது விடுமுறையில் அவள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் அவளுடைய படிப்பைப் பற்றி கேட்பதைவிட அவள் எப்படியெல்லாம் சுற்றினாள் என்பதைக் கேட்டறிந்து உளமகிழ்வாள் சரோஜா. அத்தோடு வகுப்பில் நடக்கும் காதல் சமாசாரங்களை மகளிடம் கேட்டறியும் சரோஜா, அவளிடம் காதலித்தால் யாராவது செல்வ செழிப்பான பணக்காரப் பையனைப் பார்த்து காதலிக்க வேண்டும் என்று அடிக்கடி கூறி அந்தப் பிஞ்சு மனதில் நஞ்சை விதைப்பாள். அதைக் கேட்டும் கேட்காததுபோல திரிந்த ஸ்ரீஜாவின் நடவடிக்கைகளில் சில மாதங்களுக்குப் பிறகு மாற்றம் தெரிந்தது.

அடிக்கடி செல்போனில் தனிமையில் பேசி சிரிப்பாள். இரவில் நெடுநேரம் கண்விழித்திருப்பாள். இவற்றைக் கவனித்த சரோஜா அவளிடம் காரணத்தை ஓரிரு முறை வினவினாள். அதற்கு அவள் தான் வருண் என்னும் ஒரு பையனை விரும்புவதாகக் கூறி அவன் தினமும் விதவிதமான உடைகளில் பல உயர்ரக பைக்குகளில் வருவான் என்றும் கூறுவாள். கண்டிப்பாக அவன் பணக்கார வீட்டுப் பையனாகதான் இருப்பான் என்று நினைத்தவள் அதன்பின் அதைக் கண்டும் காணாததுபோல விட்டுவிட்டாள். அவளுடைய கணவன் முருகேசனுக்கு காய்கறிக் கடை வேலையும் மீன் வியாபாரமும் முழு நேரத்தையும் விழுங்கிவிடுவதால் அவனுக்கு இந்த சமாசாரங்களை அறிந்துகொள்ளவோ, கண்டிக்கவோ நேரமில்லை. அவனுக்கு அதற்குத் தைரியமும் இல்லை.

Representational Image
Representational Image

அடிக்கடி செல்போனில் தனிமையில் பேசிச் சிரிப்பாள். இரவில் நெடுநேரம் கண்விழித்திருப்பாள். இவற்றைக் கவனித்த சரோஜா அவளிடம் காரணத்தை ஓரிரு முறை வினவினாள். அதற்கு அவள் தான் வருண் என்னும் ஒரு பையனை விரும்புவதாகக் கூறி அவன் தினமும் விதவிதமான உடைகளில் பல உயர்ரக பைக்குகளில் வருவான் என்றும் கூறுவாள். கண்டிப்பாக அவன் பணக்கார வீட்டுப் பையனாகதான் இருப்பான் என்று நினைத்தவள் அதன்பின் அதைக் கண்டும் காணாததுபோல விட்டுவிட்டாள். அவளுடைய கணவன் முருகேசனுக்கு காய்கறிக் கடை வேலையும் மீன் வியாபாரமும் முழு நேரத்தையும் விழுங்கிவிடுவதால் அவனுக்கு இந்த சமாசாரங்களை அறிந்துகொள்ளவோ, கண்டிக்கவோ நேரமில்லை. அவனுக்கு அதற்கு தைரியமும் இல்லை.

இப்படியாக தொடர்ந்த ஸ்ரீஜாவின் காதலின் முடிவு இன்று சரோஜாவின் செல்போனுக்கு திருமண ஆல்பமாக பதிவிறங்கியிருக்கிறது. மாலை ஐந்து மணியைக் காட்டியது செல்போன். சாலையோரக் குழாய் தண்ணீரில் முகத்தை கழுவிவிட்டு துண்டினால் துடைத்தபடி வந்து மரப்பெட்டியின் மீது அமர்ந்தாள். முன்னால் பாதி விற்றும் விற்காமலும் கீரைக்கட்டுகள். தன் மகளுக்கு தனக்குத் தெரியாமல் திருமணம் நடந்துவிட்ட செய்தியை அறிந்தும் சிறிதும் தன் தினசரி நடவடிக்கைகளில் இருந்து மாறாமல் கீரைகளை முழுதும் விற்றுவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டாள்.

மணி ஒன்பதைக் கடந்திருக்கும் முருகேசன் வீட்டுக்கு வந்தான். சில நிமிடங்களுக்குப் பிறகு தனது அன்றாட பணியை துவங்கினான் சில பாட்டில்களோடு. சில நாள்களாக அவற்றை மறந்து இருந்த சரோஜா இன்றைய திருமண நிகழ்வால் அவற்றை நாடினாள். இருவரும் அந்த அறப்பணியை மேற்கொண்டு அரைமணி நேரத்துக்குப் பிறகு போதை மயக்கத்தில் பேசிக்கொண்டார்கள்.

முருகேசன் தனது அன்றாட உளறல்களைத் தொடங்கவும், சரோஜா அவனை தடுத்து நிறுத்தி தனது செல்போன் போட்டோவைக் காட்டினாள். சில விநாடிகள் அதை உற்றுப் பார்த்தவன் முகத்தில் கோபம் வெடித்தது. சரோஜாவின் முகத்தில் படாரென அறைந்தான். அதைச் சற்றும் எதிர்பார்க்காத சரோஜா சாய்ந்து விழுந்தாள். பின் மெதுவாக எழுந்து அவனிடம் சத்தம் போடவும், அவன் திரும்பவும் அவளைத் தாக்கிவிட்டு கோபமாக கத்தினான்.

தான் இவ்வளவு நாள்கள் எதையுமே கண்டுகொள்ளாமல் இருந்ததினால் பிரச்னை இந்த அளவுக்குச் சென்றுவிட்டதாகவும், சரோஜாவை நம்பி தன் பிள்ளைகளை விட்டுவிட்டு நேரம்காலம் பார்க்காமல் உழைத்ததின் விளைவு இது என்று வெடித்தான். சரோஜா அவனிடம் எவ்வளவோ ஆறுதல் கூறிப்பார்த்தாள். தமது மகள் என்றும் தவறான பாதையில் செல்லமாட்டாள் என்றும், அவள் ஒரு நல்ல வாழ்க்கையைத் தான் தேர்ந்தெடுத்திருப்பாள் என்றும் பலவாறு அவனுக்கு எடுத்துரைத்தாள். அதற்கு முருகேசன் அவளுக்கு ஒரு அம்மாவாக இருக்கவே தகுதி இல்லை எனவும், தன் குடும்பத்தை அடியோடு அழித்துவிட்டாள் என நெடுநேரம் கத்திவிட்டு உறங்கிவிட்டான்.

சுமார் ஆறு மாதங்களுக்குப்பிறகு…

ஸ்ரீஜாவின் திருமணம் பற்றி அறிந்து சில நாள்கள் பதற்றத்தில் இருந்த முருகேசனின் குடும்பம் அதன்பின் மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பியது. முருகேசனுக்கு கொஞ்சமும் விருப்பமில்லாத அந்தத் திருமணத்தை முறித்து ஸ்ரீஜாவை தன் வீட்டுக்கு அழைத்து வந்துவிட வேண்டுமென முயன்றான். எனினும் சரோஜாவின் எதிர்ப்பால் அப்படியே விட்டுவிட்டான்.

Representational Image
Representational Image

கடந்த ஆறு மாதங்களில் பல முறை ஸ்ரீஜாவின் செல்போனுக்கு முயன்று பார்த்தும் பலனில்லாமல் போனது. அதன்பின் அவளைத் தொடர்புகொள்வதையே விட்டுவிட்டாள் சரோஜா. இரு நாள்களுக்கு முன் ஸ்ரீஜாவின் கல்லூரித் தோழி ஒருத்தியை காய்கறிச் சந்தையில் சந்தித்த சரோஜா அவளிடம் நலம் விசாரித்தாள். அவளுக்கு தன் மகளின் திருமணம் பற்றி தெரியாது என நினைத்து அதை அவளிடம் மறைக்க நினைத்தாள். ஆனால், அவள் மட்டுமின்றி அனைவருக்குமே அந்த திருமணம் பற்றி தெரியும் என்றும் சிலநாள்களுக்கு முன்புகூட ஸ்ரீஜாவிடம் பேசியதாகவும் கூறினாள்.

அவசரமாக அவளிடம் தொடர்பு விவரங்களைக் கேட்டுக்கொண்ட சரோஜா மறுநாளே தன் கணவனை அழைத்துக்கொண்டு சேலத்துக்கு விரைந்தாள். சில மணிநேர பயணத்துக்குப் பின் ஸ்ரீஜாவின் தோழி கூறிய பகுதியை அடைந்திருந்தார்கள்.

பேருந்திலிருந்து இறங்கி நடந்தார்கள். அது ஒரு நகர்ப்புற எளிய மனிதர்களின் பகுதி. நகரத்தின் தாழ்வான பகுதியும்கூட. நெரிசலாக அமைக்கப்பட்ட சிறுசிறு வீடுகள். சிலவற்றில் கான்கிரீட் கூரைகளும் சிலவற்றில் சிமென்ட் தகடுகளும். பல சந்துகளின் வழியே நுழைந்து உள்ளே சென்றனர். இறுதியில் ஒரு வளைவைக் கடந்து நிமிர்ந்து பார்த்து அமைதியாக நின்றார்கள்.

அங்கே ஒரு சிறு வீட்டின்முன் ஸ்ரீஜா பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருந்தாள். மெலிந்த உடலில் ஓர் அழுக்கு சேலையைச் சுற்றியிருந்தாள். முகம் வெளிர்ந்து சற்று சோர்வடைந்து இருந்தது. கண்கள் உள்வாங்கியிருந்தன. சரியாக பராமரிக்கப்படாத தலைமுடி, ஒப்பனை செய்து பல மாதங்களாகியிருக்கும் முகம் என அவளைப் பார்த்த சரோஜா ஒருகணம் தளர்ந்துவிட்டாள். பேச்சேதும் வராமல் தடுமாறினாள். கண்ணில் நீர் ததும்பியது. அந்த வீட்டின் சுவரில்

‘S. வருண் பிரசாத் - AC மெக்கானிக்’

என நீல நிற பெயின்ட்டில் கோணலாக எழுதி அடியில் செல்போன் எண்ணும் இருந்தது.

சில விநாடிகளில் மெதுவாக இவர்களை நிமிர்ந்து பார்த்த ஸ்ரீஜாவின் முகத்தில் ஒருவித சோகமும் இயலாமையும் வெளிப்பட்டது. சட்டென கண்ணில் நீர் பெருக்கெடுக்க வீட்டினுள் சென்றுவிட்டாள். இருவரும் மெதுவாக வீட்டினுள் சென்றனர். வீட்டின் கூரை தலையில் இடிக்க உள்ளே நுழைந்தாள் சரோஜா.. கையால் தேய்த்தபடி.

-தியாகராஜன்

MyVikatan
MyVikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

பின் செல்ல