பிரீமியம் ஸ்டோரி

டந்த பத்தாண்டுகளில் அதிகம் உச்சரிக்கப்பட்ட, சர்ச்சைக்குரிய வார்த்தைகளில் ஒன்று ‘தலித் சினிமா.’ யார் தலித், எது தலித் சினிமா, அதற்கான கோட்பாட்டு வரையறைகள் என்ன, சினிமாவில் இப்படியொரு புதிய வகைமை உருவாகக் காரணமான அரசியலும் அதன் நீண்ட பின்புலமும் எப்படியானது எனப் பல்வேறு நுட்பமான கேள்விகளின் வழியாகத் தொடங்கும் இந்தப் புத்தகம், ‘இந்திய சினிமா’ எனும் பரந்த வெளியில் தலித் சினிமாவுக்கான வேர்களை, வரலாற்றை எழுதித் தொகுக்க முயல்கிறது.

படிப்பறை

இந்திய அளவில், தலித் பாத்திரத்தைப் பிரதானமாகக்கொண்டு 1923-ல் வெளியாகிய முதல் படமான ‘நந்தனாரி’லிருந்து கடந்த ஆண்டு வெளியான ‘ஆர்ட்டிகள் -15’ வரை சினிமாவில் தலித் பாத்திரங்களின் உடல் - நிலம் - வாழ்க்கை எவ்வாறு சித்திரிக்கப்பட்டிருக்கின்றன என்பதை மிகக் கறாரான விமர்சனப் பார்வையுடன் முன்வைக்கிறது நூல். ‘இந்திரா, பாரதி கண்ணம்மா, பேராண்மை, காலா, பரியேறும் பெருமாள், அசுரன் ஆகியவை சாதிக்கு எதிராகப் பேச முயன்ற படங்கள் என்றாலும், ஒவ்வொரு படமும் முன்வைத்த பாத்திரப் படைப்பும் கருத்தியலும் வெவ்வேறானவை. அதில், சில ஆபத்தானவையும்கூட’ என்கிறார் நூலாசிரியர்.

‘சோமன துடி, சம்ஸ்காரா - கன்னடம்’, ‘பாப்லியோ புத்தா-மலையாளம்’, ‘தாமுல், பார், பாண்டிட் குயின், சத்கதி, ‘சூத்ரா: த ரைசிங் - இந்தி’, ‘பன்றி, சாய்ரத் - மராத்தி’, `அந்தர்ஜாலி ஜாத்ரா - பெங்காலி, ‘பாவ்னி பவாய் - குஜராத்தி’, ரஞ்சித் சினிமாக்கள், ‘பரியேறும் பெருமாள்’, ‘மனுசங்கடா’ போன்ற பல்வேறு மொழிகளில் வெளியான படங்களின் வழியே நிலம் - வர்க்கம் - சாதி - பண்பாடு - தொன்மம்/வரலாறு என்கிற தலைப்பின் கீழ் ‘இந்திய’ தலித் சினிமாவை அலசுகிறது நூல். சினிமா எனும் கலையின் அழகியல், தொழில்நுட்பம், காட்சிப் பிம்பங்களின் வழியான குறியீடுகள் குறித்தும் இலக்கியம் குறித்தும் தொட்டுச் செல்வதன் வழியே ஒரு ‘சினிமா நூலு’க்கு நியாயம் செய்கிறார் ஜமாலன்.

‘கலையின் வேலை, புதிய மக்களைக் கண்டடைவது; காணாமல்போன மக்களைக் கண்டுபிடித்துத் தருவது’ என்கிறார் தெல்யூஸ் கத்தாரி. தலித் சினிமாவுக்கான எளிய விளக்கமாக இது அமைகிறது எனறு சொல்லலாம்.

தலித் சினிமா

அழகியல் - அரசியல் - அறவியல்

ஜமாலன்

வெளியீடு : நிழல்

31/48, ராணி, அண்ணா நகர், கே.கே நகர், சென்னை - 78.அலைபேசி: 94444 84868.பக்கங்கள் : 196, விலை : ரூ.200

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு