சினிமா
Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

லட்சம் பேர் வேலை பார்த்தாலும் நாம் எல்லோரும் இங்கு தனித்தனியான உதிரிகள்’’ என்று நாவலில் ஓர் இடத்தில் வரும் வாக்கியம் இந்த ஒட்டுமொத்த அலைக்கழிப்புகளுக்கான காரணத்தையும்.

தி காலம் தொட்டு இன்றைய டிஜிட்டல் யுகம் வரையிலும் மனித இனம் கடந்துவந்த நிச்சயமற்ற தன்மையை, ஐ.டி.ஊழியர்களின் வாழ்வை முன்வைத்துப் புனையப்பட்ட ஒரு நாவலே நட்சத்திரவாசிகள்.

தன் சொந்த ஊர்ப் பள்ளியில் பியூனாக வேலைபார்த்த ராமசுப்பு, தன் ஓய்வுக்காலத்தில் தூக்கம் தொலைத்து மாநகரப் பெருநிறுவனமொன்றில் செக்யூரிட்டியாக வேலை பார்ப்பதில் தொடங்கி, 15 வருடம் ஓயாமல் உழைத்து, பல சவால்களைச் சமாளித்து நிறுவனத்தைத் தூக்கி நிறுத்திய வேணுகோபால் சர்மா, பின் அதே நிறுவனத்தால் எந்தவித பதில் விளக்கத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டு, வேலையிலிருந்து தூக்கியெறிப்படுவதில் வந்து முடிகிறது நாவல்.

படிப்பறை

நித்திலன் - மீரா வழியாக வீட்டில் பார்த்து நடத்தி வைக்கும் திருமணத்தில் இருக்கின்ற போதாமையை, திருமண உறவுகள் சார்ந்து சந்திக்கின்ற சிக்கல்களை, அர்ச்சனா - அருணின் வழியாக துரோகத்தின், ஏமாற்றத்தின் வலியை, சாஜூ - பூஜா வழியாக திட்டமிடலுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும், எதார்த்தத்துக்கும் இடையேயான அலைக்கழிப்புகளை, விவேக்கின் வழியாக பொருள் நோக்கி ஓடியதன் பொருட்டு இழந்த காதலின் அவஸ்தையைப் பேசுகிறது நாவல்.

மனிதனின் அடிப்படை ஆதாரமான பொருளீட்டலுக்கான வழிமுறைகள் காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. பெரும்பான்மையான மக்களின் அடிப்படை ஆதாரமாக விளங்கிய வேளாண்மை வீழ்ந்த காலத்தில், ஆங்கிலேயர்களால், இங்கிருந்த பெரு முதலாளிகளால் தொடங்கப்பட்ட தொழிற்சாலைகளில் இணைந்து தங்களின் பொருளாதார நிலையை உயர்த்திக்கொண்ட குடும்பங்கள் பல உண்டு. பின்பு அதன் வீழ்ச்சியின்போது அவர்கள் நிலைகுலைந்துபோனதும் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிய துயரங்களையும் காலம் பதிவு செய்திருக்கிறது.

இதில் கார்த்திக் பாலசுப்ரமணியன் கையில் எடுத்திருக்கும் ஐ.டி துறையை, அந்தத் துறை சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையைக் கச்சிதமாகப் பதிவு செய்திருக்கிறார். ஆனால், வாசகர்களாகிய நமக்கு, பொறியியல் கல்லூரி ஆசிரியர் வேலையைத் தொலைத்த ஆனந்தும், தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலையைத் தொலைத்த சதீஷும் இன்னும் இன்னும் தங்களின் கனவு வேலைகளைத் தொலைத்த பலரும் நினைவுக்கு வந்து போகிறார்கள்.

‘`லட்சம் பேர் வேலை பார்த்தாலும் நாம் எல்லோரும் இங்கு தனித்தனியான உதிரிகள்’’ என்று நாவலில் ஓர் இடத்தில் வரும் வாக்கியம் இந்த ஒட்டுமொத்த அலைக்கழிப்புகளுக்கான காரணத்தையும், ‘வாழ்தல் மனிதனின் ஆதாரவிதி, இருத்தலே பிரதானம், இம்மையே பூரணம்’ என சாஜுவுக்கு அலெக்ஸா தரும் பதிலில், அனைவருக்குமான நம்பிக்கையையும் விதைக்கிறது இந்நாவல்.

படிப்பறை

நட்சத்திரவாசிகள்

கார்த்திக் பாலசுப்ரமணியன்

வெளியீடு:

காலச்சுவடு பதிப்பகம்

காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்.,669,கே.பி.சாலை, நாகர்கோவில் - 629001 Email : Publicaions@kalachuvadu.com

பக்கங்கள்: 264

விலை: ரூ.290