பிரீமியம் ஸ்டோரி

சாதாரண மனிதர்கள் எவரும் நெருங்காத உண்மைகளை நோக்கிப் பயணிக்கும் கலைஞர்கள், அறிவியலாளர்கள் போன்ற அசாதாரண மனிதர்கள் ஏன் தனது லௌகீக வாழ்க்கையில் ‘தோல்வி’யுற்றவர்களாக இருக்கிறார்கள்? அசாதாரணமாக இருப்பதன் சுமைகள் குறித்த அவர்களின் பதில்கள் ஏற்புடையனவா? E=mc2 சமன்பாடும் ஐன்ஸ்டைன் மகளின் கண்ணீரும் நிகரான மதிப்புடையவையா? இப்படி நிறைய கேள்விகள்… பதில்கள்!

தத்துவப் பேராசிரியர் சுந்தர் சருக்கை ஆங்கிலத்தில் எழுதிய மூன்று நாடகங்களின் தொகுப்பே ‘இரண்டு தந்தையர்கள்’ நூல். முதல் நாடகம் ‘ஹார்டியின் நியாயப்பாடு’. கணிதமேதை ராமனுஜத்தின் நண்பரான ஜி.ஹச்.ஹார்டி தற்கொலைக்குத் தயாராகிறார். அந்த இறுதித் தருணத்தில் ராமானுஜம் ஒரு முறை தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் நினைவுக்கு வருகிறது. அந்நினைவின் வழியே இரண்டு தற்கொலை முயற்சி சம்பவங்களுக்கு இடையிலான பண்பாட்டு, தத்துவார்த்த முரண்கள் ஆராயப்படுகின்றன. இரண்டாவது நாடகம் ‘சாதாரண மனிதன் அல்ல’. தலைவிதிகளைக் கணித்துச் சொல்லும் ஜிப்ஸி பெண்மணியைச் சந்திக்கிறார் ஐன்ஸ்டைன். புறக்கணிக்கப்பட்ட அவரின் முதல் மனைவி, மனநலக் காப்பகத்தில் பெரும்பான்மை காலத்தைக் கழித்த அவரின் மகன், கடைசிவரை அங்கீகரிக்கப்படாத (திருமணத்துக்கு முன்பே பிறந்த) அவரின் மகள் லீஸரல் ஆகியோர் கேட்க விரும்பும் கேள்விகளை முன்வைத்து ஐன்ஸ்டைனை உலுக்குகிறாள் ஜிப்ஸி பெண்மணி. “நிரூபிக்க முடியாத உண்மைகளும் இருக்கின்றன!’ என்கிற வாக்கியத்தின் முன் குழப்பத்தோடு மௌனிக்கிறார் ஐன்ஸ்டைன்.

படிப்பறை

மூன்றாவது நாடகம் ‘இரண்டு தந்தையர்’. ஐன்ஸ்டைனின் மகள் லீஸரல், காந்தியைச் சந்திக்க, காந்தியின் மகன் ஹரிலால் ஐன்ஸ்டைனைச் சந்திக்கிறான். இரண்டு அசாதாரண மனிதர்களின் பிள்ளைகள் தங்களின் தந்தையர்மீதான கேள்விகளை, புரிதல்களை, குற்றச்சாட்டுகளை, அன்பை முன்வைக்கிறார்கள். மிக உணர்ச்சிகரமான முரண்களின் சந்திப்பு அது. இறுதிப்பகுதியில் காந்தியும் ஐன்ஸ்டைனும் சந்திக்கிறார்கள். எது உண்மை, எது கண்டுபிடிப்பு, எது சரி, எது வெற்றி, எது முடிவு போன்ற கேள்விகளுக்கான விடைகளை நோக்கி நம்மை உரையாடல் வழியே நகர்த்துகிறார்கள். வரலாற்று உண்மைகளைக் கவித்துவத்தின் மெல்லிய வெளிச்சத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தும் அழுத்தமான புனைவு இது. சீனிவாச ராமாநுஜம் நூலை எளிமையாகவும் நுட்பமாகவும் தமிழாக்கம் செய்திருக்கிறார். தமிழ் நவீன இலக்கியத்துக்கு நல்வரவு இந்த நூல்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரண்டு தந்தையர் (நாடகங்கள்) சுந்தர் சருக்கை

தமிழில்: சீனிவாச ராமாநுஜம் வெளியீடு: மாற்று வெளியீட்டகம்,

சென்னை பக்கம்: 184 விலை: ரூ 200

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு