சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

தாவோ தே ஜிங்- தாவோயிசத்தின் அடித்தளம் லாவோ ட்சு

‘வாழ்வுக்கு நோக்கம் என்று ஒன்றில்லை. நிகழ்வது எதுவோ அதன்படி வாழ்வது மேல்’ என்பதுதான் லாவோட்சு நமக்கு போதிக்கிற நெறி.

சமூகம் வகுத்துவைத்திருக்கும் இலக்கணங்களை, விதிமுறைகளையெல்லாம் லாவோட்சுவும், அவர்வழி உருவாகிய தாவோயிசமும் ஏற்பதில்லை. “பிறர் என்ன நினைப்பார்கள் என்று கவலைகொண்டால் நீ எப்போதும் அவர்களது சிறைக்கைதியாகத்தான் இருப்பாய்” என்கிறார் லாவோட்சு.

கி.மு 551 முதல் 479 வரையிலான காலகட்டத்தில் சீனாவில் வாழ்ந்தவர் லாவோட்சு. அரசு ஊழியராகப் பணியாற்றியவர், நிர்வாகத்தில் நிகழ்ந்த முறைகேடுகளையும் ஊழல்களையும் சக மனிதர்களின் பேராசைகளையும் கண்டு மனம் வெதும்பி, நாட்டை விட்டு வெளியேறினார். எல்லையை அடைந்தபோது அங்கிருந்த காவலர் லாவோட்சுவை அடையாளம் கண்டு, ‘நீங்கள் உங்கள் ஞானத்தையேனும் நம் மண்ணுக்குத் தந்துவிட்டுச் செல்லுங்கள்’ என்று கோரிக்கை விடுக்கிறார். அந்தத் தருணத்தில் லாவோட்சு படைத்தளித்த 81 பாடல்கள், உலகத்தை அவர் பக்கம் திருப்பியது. ‘தாவோ தே ஜிங்’ என்ற பெயரில் தொகுக்கப்பட்ட அந்தப் பாடல்களை உலகம் தத்தம் மொழிகளில் சுவீகரித்துக்கொண்டது. அதுவே ‘தாவோயிசம்’ என்ற தத்துவப் பெருவெளியாக மலர்ந்தது.

‘தாவோ தே ஜிங்’ நிறைய தரிசனங்களை உருவாக்குகிறது. அதன் ஒவ்வொரு வார்த்தையும் பன்மயமான தர்க்கங்களையும் பொருண்மைகளையும் உள்ளடக்கியிருக்கிறது. உலகின் எல்லாத் தத்துவங்களோடும் அதைப் பொருத்தி சமன்படுத்தமுடியும். சந்தியா நடராஜன், ‘தாவோ தே ஜிங்’கின் சாரத்தை நுட்பமாக உள்வாங்கி, நம் உபநிடதங்களோடும் சித்தர்களின் பாடல்களோடும் ஒப்பிடுகிறார்.

படிப்பறை
படிப்பறை

81 பாடல்களையும் தமிழ்ப்படுத்தி, அவற்றின் உள்ளடக்கத்தை எளிய மொழியாக்கி, நம் வாழ்வோடு இழைசேர்க்கிறது இந்த நூல். தாவோயிசம் என்ற சமயமாக உருப்பெற்ற ஒரு தத்துவ வெளியின் பொருள்நூலாக மட்டுமன்றி, வாழ்வியல் நூலாக, தெளிந்த திட்டங்கள் கொண்ட ஒரு நெறியாக ‘தாவோ தே ஜிங்’ பாடல்களை வகைப்படுத்துகிறார் சந்தியா நடராஜன்.

ஏற்கெனவே சி.மணியின் மொழிபெயர்ப்பில், கிரியா வெளியீடாக ‘தாவோ தே ஜிங்’ தமிழுக்கு வந்திருக்கிறது. சந்தியா நடராஜன், அதன் சாரங்களை நம் வாழ்க்கை முறையோடும் நம் நம்பிக்கைகளோடும் பொருத்தி இன்னும் நெருக்கமாக்கியிருக்கிறார்.

தாவோ தே ஜிங்- தாவோயிசத்தின் அடித்தளம்

லாவோ ட்சு

தமிழில்

சந்தியா நடராஜன்

வெளியீடு: சந்தியா பதிப்பகம், புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை- 6000083

மின்னஞ்சல்: sandhyapathippagam@gmail.com

பக்கங்கள்: 240

விலை: 200 ரூபாய்