Published:Updated:

படிப்பறை

தொல்குடித் தழும்புகள் - மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் செம்பேன் உ ஸ்மான்

பிரீமியம் ஸ்டோரி

‘அந்திக் கருக்கலில் வந்துசேர்ந்த அந்நியனை விடியக்கருக்கலில் தேடாதே’ என்பது செனகலியச் சொலவடை. அப்படி அந்திக்கருக்கலில் அந்த அரைப்பாலை நிலத்துக்கு வந்தவன்தான் முகமது ஃபால். தன்னை நன்றாக கவனித்துக்கொள்வதன் மூலம் அந்த இடத்து மக்கள் சொர்க்கம் செல்லலாம் எனச் செய்தி பரப்பி ராஜ வாழ்க்கை வாழ்கிறான். மதத்தின் பெயரால் இப்படி ஏமாற்றுபவன், இறுதியாக இன்னொருவனிடம் ஏமாறுவதாக முடிகிறது ஒரு கதை.

செம்பேன் உஸ்மானுடைய முதல் சிறுகதைத் தொகுப்பில் வருகிற ஒரேயொரு துளி மட்டுமே இந்த ‘போலி மீட்பன்’ கதை. அடிமை வணிகம், காலனி ஆதிக்க வரலாறு, பின்காலனியம், இன ஒதுக்கல் வரலாறு மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் இஸ்லாம் ஆகியவையே அவருடைய படைப்புகளின் மையச்சரடுகள். `ஆப்பிரிக்க சினிமாவின் தந்தை’ என்று போற்றப்படும் அவர், தன்னுடைய முதல் திரைப்படத்தை எடுப்பதற்கு முன்னரே மூன்று நாவல்களையும் ஒரு சிறுகதைத் தொகுப்பையும் எழுதி முடித்திருந்தார். ஆனால், 80 சதவிகிதத்துக்கும் அதிகமாக எழுத்தறிவற்றவர்கள் இருந்த தன் மக்களிடம் எழுத்தின் மூலமாகச் சென்று சேர முடியாத இயலாமைதான் அவரை சினிமாவின் பக்கம் தள்ளியது. சினிமாவை, ‘மக்களின் இரவுப் பாடசாலை’ என்றே அவர் அழைத்தார்.

அப்படிப்பட்ட ஓர் ஆப்பிரிக்க ஆளுமையின் படைப்பை செம்மையான மொழிபெயர்ப்பில் ‘தொல்குடித் தழும்புகள்’ என்ற தலைப்பில் தமிழுக்கு கொண்டுவந்திருக்கிறார் எழுத்தாளர் லிங்கராஜா வெங்கடேஷ். ஆப்பிரிக்க இலக்கியங்கள் பெரிய அளவில் தமிழ் சமூகத்தோடு ஒத்துப்போவதை, அதை வாசித்தவர்களால் உணர முடியும். இந்தத் தொகுப்பிலும், வயது முதிர்ந்த ஒருவனுக்கு மணம்முடித்துத் தரப்படும் இளம்பெண்ணின் வாதைகள் கடத்தும் ‘பிலாலின் நான்காவது மனைவி’, அடிமை முறையை ஏற்க மறுத்த மக்களின் வலிமிகுந்த வரலாறான ‘தொல்குடித் தழும்புகள்’ போன்ற கதைகள் நம் மண்ணின் அவலங்களோடு பொருந்திப்போகின்றன.

படிப்பறை
படிப்பறை

நுண்ணிய உணர்வுகளின் வழியே விடைதெரியா பல கேள்விகளை எழுப்பி, கதையின் போக்கில் அதற்கான விடைகளை விடுவிக்கும் சிறுகதைகள் அடங்கிய இந்தத் தொகுப்பு தமிழில் முக்கியமான வரவு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொல்குடித் தழும்புகள் - மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்

செம்பேன் உ ஸ்மான்

தமிழில்: லிங்கராஜா வெங்கடேஷ்

வெளியீடு: கலப்பை பதிப்பகம்

9/10 முதல்தளம், 2-ஆம் தெரு,

திருநகர், வடபழனி, சென்னை-26.

9444 83 83 89

பக்கங்கள்: 160

விலை: ரூ.180/-

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு