Published:Updated:

படிப்பறை

துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜா மலர் - சிறுகதைகள்

பிரீமியம் ஸ்டோரி
தமிழின் குறிப்பிடத்தகுந்த சிறுகதை எழுத்தாளர் உதயசங்கரின் சமீபத்திய நூல் ‘துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜா மலர்.’ தலைப்பைப் படித்ததும் நாம் அடையும் அதிர்ச்சியை அக்கதையும் அளிக்கிறது.

சமகாலத்தில் நாம் அடிக்கடி கேள்விப்படும் ஆணவக்கொலைதான் மையம். ஆனால், அதனை இக்கதை சொல்லியிருக்கும் விதம் இப்பிரச்னையின் தீவிரத்தை மிக ஆழமாக வாசகர் மனத்தில் இறக்குகிறது.

சிறுகதைகள்
சிறுகதைகள்

அன்றாடம் நாம் காணும், உரையாடும் எளிய மனிதர்களின் வாழ்க்கையை மிக உண்மையாகப் பேசும் கதைகள். மனித மனங்களின் விசித்திர உணர்வுகளை நம்மால் பல நேரங்களில் புரிந்துகொள்ளவே முடியாது என்பதற்கு அழுத்தமான உதாரணம் ‘கிருஷ்ணனின் அம்மா’ கதை. நான்கு குழந்தைகள் உள்ள வீட்டில் அப்பா ஊரை விட்டு ஓடிவிடுகிறார். மூத்த பிள்ளை கிருஷ்ணன் குழந்தைத் தொழிலாளியாகி வீட்டைத் தாங்குகிறான். தம்பி, தங்கைகளைப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்புகிறான். அவர்களுக்கு முன்னின்று திருமணம் செய்துவைக்கும் அம்மா, கிருஷ்ணனின் திருமணம் பற்றிப் பேசக்கூட மாட்டார். அம்மாவின் சிறு பாராட்டுக்காக ஓடி ஓடி உழைக்கும் கிருஷ்ணன், இறுதிவரை உடல் உபாதையோடு வாழ்க்கையைக் கழிக்கிறான். அம்மா என்றால் அன்பு; பாரபட்சமின்மை; கருணை என்று சொல்லப்பட்டு வருபவை மீதான முக்கியமான கேள்வியை வீசிச்செல்கிறது இக்கதை.

‘நொண்டி நகரம்’ எனும் கதையில், குப்பைமேட்டில் வசிக்கும் கிழவர் அளித்த புத்தகத்தின் வழியே ஒரு கதை கிடைக்கிறது. மலையாளத்தில் உள்ள கதையை மொழிபெயர்க்க ஒருவரிடம் தருகிறார். அந்தக் கதையில் வரும் அகோர ஆதிமூலம் கதாபாத்திரம் வாசிப்பவரை அதிரச் செய்யும் செயலைச் செய்கிறது. ஆனாலும் அதை விவரிக்கையில் லேசான எள்ளலைக் கையாள்கிறார் உதயசங்கர்.

நேரடியாகக் கதை சொல்லும் முறையில் எழுதப்பட்டிருக்கும் கதைகள்தான் என்றாலும், ஒவ்வொரு கதைக்கும், கதை செல்லும் பாதையை விவரிக்கும் தன்மையில் பல வித்தியாசங்களைக் கையாள்கிறார் உதயசங்கர். ரோஜாப்பூவின் இதழ்கள் ஒரு பெண்ணின் முன்கதையைச் சொல்வதுபோலவும், பாட்டில்களுக்குள் வாழும் மனிதர்களைப் பற்றியும், ஹேங் ஓவரில் ஒரே இடத்தில் சுற்றும் இளைஞன் பற்றியும், வெளிநாட்டு எழுத்தாளர் தன் கதையை விவரிக்கும் விதம் என... வாசகருக்கு சோர்வில்லாத தன்மையில் கதைகள் எழுதப்பட்டுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜா மலர்

- சிறுகதைகள்

உதயசங்கர்

வெளியீடு: நூல் வனம், M22, 6வது அவென்யூ, அழகாபுரி நகர், ராமாபுரம், சென்னை - 600089, கைப்பேசி: 9176549991

விலை: ரூ.200, பக்கங்கள்: 216

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு