பிரீமியம் ஸ்டோரி

கிராமம் ஏராளமான சுவாரசியங்களைத் தன்னுள் புதைத்து வைத்திருக்கிறது. வாழ்ந்து அனுபவித்தவர்களுக்கு காலம் முழுவதும் அந்த அனுபவம் மனதில் தேங்கி, சுவையூட்டிக்கொண்டேயிருக்கும்.

போகிற வழியில் ஒரு ரோட்டோர மரத்தில் கட்டியிருக்கிற தேனடை அன்றைய பொழுதை இனிப்பாய் மாற்றிவிடும். இரவுகளில் ஈட்டியும் டார்ச் லைட்டுமாகக் கிளம்பும் இளைஞர்படை, வரப்போர செலவு பார்த்து வெட்டி எலி பிடித்து, காலையில் கோத்துப்பிடித்துவரும் கம்பீரமே ஊரை உற்சாகமாக்கிவிடும். ஈனாத கொட்டு மாடுகளும் கொம்பில்லாத மோளை மாடுகளும் முன்நெற்றியில் சுழி அமைந்த ராஜசுழி மாடுகளும் கண்காட்சித்திடலாக கிராமங்களை மாற்றும். இப்படியான அனுபவங்களையெல்லாம் கூர்ந்து அவதானித்து எழுதி இலக்கியமாக்கியிருக்கிறார் குமாரகேசன்.

ஈசல், எலி, தேன், தானியம் பற்றியெல்லாம் கதைகதையாக எழுதிச்செல்லும் குமாரகேசன், பாதையோரப் புதரில் மஞ்சளும் கறுப்புமாகப் பழுத்து முகிழ்ந்திருக்கும் காராம்பழத்தையும் கொக்கி முள்ளுக்குள் மறைந்துகிடக்கும் சூராம் பழத்தையும் நினைவுகளில் பழுக்க வைக்கிறார். புஞ்சைக்காடுகளில் உலவித்திரியும் பச்சைக்காடை, செம்போத்துப் பறவைகளின் இயல்பு பற்றி எழுதப்பட்ட ஒரு கட்டுரை சுவையானது. தமிழ்நிலத் திணை வாழ்க்கையில் தானியங்கள் எப்படியெல்லாம் நிறைந்திருந்தன என்று சுவை ததும்ப எழுதப்பட்ட கட்டுரையும் முக்கியமானது. கொங்கு மண்டலத்தில் விருந்தாளியாக ஒரு வீட்டுக்குச் செல்லும்போது நாட்டுக்கம்பில் சுக்கு, மிளகு, பனங்கருப்பட்டி சேர்த்து இடித்து, மட்டையெடுத்த தேங்காய் வடிவில் மாவு உருண்டை பிடித்து போசி நிறைய எடுத்துக்கொண்டு போவார்களாம். குமாரகேசன் எழுதும்போது நாவில் ருசிக்கிறது.

பனைமரங்கள் கிராமத்து வாழ்க்கையில் எத்தகைய முக்கியத்துவம் பெறுகின்றன என்றொரு கட்டுரை வியக்கவைக்கிறது. ‘தென்னையை வைத்தவன் தின்னுட்டுச் சாவான், பனையை வைத்தவன் பார்த்துட்டுச்சாவான்’ என்ற சொலவடையில் தொடங்குகிற கட்டுரை, ‘பகைக்காரன் உறவை நம்பினாலும் பனைமரத்து நிழலை நம்பக்கூடாது’ என்ற சொலவடையில் பயணிக்கிறது. வம்புப்பனை எனும் பருவம் மாறிப் பாளைபோடும் மரங்களைக்கூட கவனித்து ஆவணப்படுத்துகிறார் குமாரகேசன்.

படிப்பறை

சொலவடைகள், நம்பிக்கைகளென நூலில் சேகரிப்புகள் நிறைந்திருக்கின்றன. நல்லதொரு ஆவணம்!

தானிய தேசம்

-நாவல் குமாரகேசன்

வெளியீடு : இருவாட்சி (இலக்கியத் துறைமுகம்),

41, கல்யாண சுந்தரம் தெரு,
பெரம்பூர், சென்னை-600011
அலைபேசி: 9444640986

பக்கங்கள்: 192

விலை: ரூ.200தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு