Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

அஞ்சலை அம்மாள்

படிப்பறை

அஞ்சலை அம்மாள்

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாறென நாம் படித்துக்கொண்டிருப்பது நிஜ வரலாற்றின் ஒரு துளியே. முன்வரிசைத் தலைவர்களின் வரலாற்றை மட்டுமே பாடப்புத்தகங்கள் தாங்கி நிற்கின்றன. சதி வழக்கு, தாக்குதல் வழக்கெனப் பல நூறு போராளிகள் தங்கள் வாழ்நாளைச் சிறையில் கழித்திருக்கிறார்கள்.உயிரை இழந்திருக்கிறார்கள். அப்படியான பல வரலாறுகள் பதிவாகாமலே மறைந்துபோய்விட்டன. அஞ்சலையம்மாள் அப்படித்தான் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறார்.

கடலூர், சுண்ணாம்புக்காரத் தெருவில் பிறந்த அஞ்சலையம்மாளின் வரலாறென்பது தமிழர்கள் பெருமிதம் கொள்ளத்தக்கது. குதிரை வண்டியால் ஒரு கிழவரை இடித்துத் தள்ளியதோடு சாட்டையாலும் தாக்கிய ஒரு வெள்ளைக்காரக் காவலனை ஊரே வேடிக்கை பார்க்க, ‘உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா’ என்று கண்டித்ததில் தொடங்குகிறது அஞ்சலை அம்மாளின் பொதுவாழ்வு.

9 முறை தண்டனை விதிக்கப்பட்டு 7 ஆண்டுகளைச் சிறையில் கழித்த அஞ்சலை அம்மாளின் தியாக வாழ்க்கையை நாவலுக்குரிய விறுவிறுப்பில் சுவாரஸ்யமாகவும் உணர்வுபூர்வமாகவும் எழுதியிருக்கிறார் ராஜா வாசுதேவன். ஆறு குழந்தைகளைப் பெற்ற குடும்பத்தலைவியான அஞ்சலையம்மாள் பொதுவாழ்க்கைக்கு வந்தது முதல் இறக்கும் வரை அப்பழுக்கில்லாத காந்தியவாதியாக வாழ்ந்திருக்கிறார். தன் கடைசி மகனைக் கருவில் சுமந்தபடி உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தைக் கடலூரில் நடத்தியிருக்கிறார். அதற்காகக் கைதுசெய்யப்பட்டு, பரோலில் வெளிவந்து குழந்தையைப் பெற்றுத்தந்துவிட்டு மீண்டும் சிறைக்குச் சென்றிருக்கிறார்.

படிப்பறை

பொதுமக்கள் நிலையில் சுதந்திரப் போராட்டத்தீ எப்படியெல்லாம் கனன்றெரிந்தது; சாதாரண மக்கள் எவ்வளவு வேட்கையோடு சுதந்திரத்துக்காகக் களமாடினார்கள் என்ற எதார்த்தத்தை அஞ்சலையம்மாளின் வாழ்க்கை உணர்த்துகிறது. ‘சிறையில் முதல் வகுப்பு வசதிகள் தரப்பட்டிருந்தபோதும் மூன்றாம் வகுப்புச் சிறையிலேயே தங்கியிருந்தார். கம்பையும் கேழ்வரகையும் எந்திரக்கல்லில் அரைத்து அரைத்து அவரின் கைகள் காய்த்துப்போயிருந்தன’ என்ற செய்தி இதயம் கனக்கச் செய்கிறது.

காந்தி, பெரியார், காமராஜர், ராஜாஜி, பாரதியார், ஓமந்தூரார் என அக்காலத் தலைவர்களின் மரியாதைக்குரியவராக, இந்திய வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற தலைவராக அஞ்சலையம்மாள் இருந்திருக்கிறார். அவரின் வரலாற்றைத் தமிழர்கள், குறிப்பாகத் தமிழ்ப்பெண்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டும்!

அஞ்சலை அம்மாள்-

ராஜா வாசுதேவன்

வெளியீடு:

தழல் பதிப்பகம்,

எண்-35, அண்ணா நகர் பிளாஸா, சி-47, 2வது அவென்யூ, அண்ணா நகர், சென்னை-40

தொடர்பு எண்: 9360860699

பக்கங்கள்: 314

விலை: ரூ.250

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism