
கங்காபுரம் : அ.வெண்ணிலா
பேரரசுகளின் பிரமாண்டங்கள், காலம் கடந்த பெருமிதத்தைச் சிலருக்குத் தந்தாலும், அக்காலத்தில் உரிமை இழந்த, அதிகாரத்தின் நெருக்கடிக்கு ஆட்பட்ட மக்களுக்கு அது ஒரு கசப்பான வரலாறுதான். அந்த இருண்ட வரலாற்றில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்வதும் அதை விமர்சனத்துக்குள்ளாக்குவதும் பின்னாளில் நிச்சயம் நடக்கும். இந்த நெருக்கடிகள் குடிமக்களுக்கு மட்டுமல்ல, கடாரம்கொண்ட, கங்கைவென்ற அரசனுக்கும் நிகழ்ந்திருக்கின்றன.

மிகச்சிறந்த போர்வீரனாகவும் நிர்வாகத்திறன் கொண்டவனாகவும் இருந்தாலும், ‘தந்தை ராஜராஜசோழனைப்போல்’ எனும், பிறரின் சொல்லுக்குப் பின்னால், தன் அடையாளம் இருட்டடிப்பாவது பெருந்துயரைத் தருகிறது மகன் ராஜேந்திர சோழனுக்கு. தன் தந்தையின் அந்தப் பிரமாண்ட நிழலிலிருந்து, தன்னை விடுவித்துக் கொள்ள, அவன் அகத்தில் நடக்கும் போராட்டமே இந்நாவல்.
ராஜராஜனுக்கு எல்லாமே பிரமாண்டமாக இருக்கவேண்டும். தன்மீது அவன் கட்டமைத்திருக்கிற பிம்பத்தை யாரும் அவ்வளவு எளிதில் தொட்டுவிடக் கூடாது. அதனால்தான் போரில் சிறந்த ராஜேந்திரனை 50 வயது வரைக்கும் இளவரசுப் பட்டம் சூட்டாமல் வைத்திருந்தான். வெளியே அதைக் காட்டிக்கொள்ளாவிட்டாலும், அதிகாரப் புறக்கணிப்பும் அங்கீகாரத் தவிப்பும் ராஜேந்திரனைத் தனிமைத் துயரில் தள்ளுகிறது.

அரசனான பின்னும் தொடர்ந்த அத்துயரிலிருந்து தன்னை விடுவிடுத்துக் கொள்ள அவன் எடுக்கும் புதிய முயற்சிகள், அதில் அவன் அடையும் பின்னடைவுகள் ஆகியவற்றை மிக விரிவாகப் பேசுகிறது நாவல். அரசவையில் ஐந்து மனைவியர், அணுக்கியாக பரவை நங்கை இருந்தாலும் அவன் மனக்காயத்துக்கு மருந்தாக மரணத்திலும் உடனிருக்கிறாள் வீரமாதேவி என்னும் பெண்ணொருத்தி.
‘கங்காபுரம்’ ராஜேந்திரனின் துயர வரலாறுதான் எனினும், மக்களில் ஒருவனாக; அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்பவனாக; தேவரடியார் பெண் பரவை நங்கையைத் தேரில் ஊர்வலமாகத் தன்னுடன் அழைத்து வருபவனாக; விபத்தில் மாண்டுபோன நாட்டிய மங்கையின் நளினத்தில் கோயிலின் விமானத்தைக் கட்டத் தீர்மானிப்பவனாக என... தனித்த அடையாளம் கொண்டு நம் மனதில் அசைக்க முடியாத இடத்தில் நிற்கிறான் ராஜேந்திரன்.
தனித்த அழகியலோடு மிளிரும் விவரணைகளும், ஆரம்பம் முதல் கடைசி வரை சுவாரஸ்யம் குறையாத மொழிநடையுமாக, ராஜேந்திரனுக்கு வீரமாதேவி போல், வாசிக்கும் நமக்கு அவ்வளவு இணக்கமாக இந்த நாவல் இருக்கிறது.
கங்காபுரம் : அ.வெண்ணிலா
வெளியீடு : அகநி,எண்:3, பாடசாலை தெரு, அம்மையாபட்டு, வந்தவாசி - 604408. திருவண்ணாமலை மாவட்டம்.
தொடர்புக்கு : 98426 37637, 94443 60421
விலை: ரூ.450 ,பக்கங்கள் : 520