Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

நன்மாறன் கோட்டைக்கதை - இமையம்

வெவ்வேறுவிதமான மனிதர்களின் உணர்வுகளையும் வாழ்நிலைகளையும் முன்வைத்து அவற்றினூடாக நுட்பமான மற்றும் வெளிப்படையான அரசியலைப் பேசுபவை இமையத்தின் படைப்புகள். உள்ளொளி, தரிசனம், படைப்புப் புனிதம் என்றெல்லாம் பாசாங்கு காட்டாமல் ஒரு காயத்தைக் கீறும் அறுவைச் சிகிச்சையாளரின் மனநிலையில் வாழ்க்கையைக் கீறிப்போடும் கதைகள்தான், இமையத்தின் ‘நன்மாறன் கோட்டைக்கதை’ தொகுப்பில் உள்ள ஒன்பது கதைகளும்.

‘நன்மாறன் கோட்டைக்கதை’, ‘போலீஸ்’, ‘நம்பாளு’ என்ற மூன்று கதைகளும் சாதிய அதிகாரம் குறித்துப் பேசுகின்றன. மாடுகளுக்கிடையிலான ஓட்டப்பந்தயத்தில், தலித் ஒருவரின் மாடு வென்றதால் நிகழும் கொலையை; அது எப்படி ஒரு தலித் சிறுவனின் கல்வியை பாதிக்கிறது என்பதைப் பேசுகிறது ‘நன்மாறன் கோட்டைக்கதை’. தலித் ஒருவரின் பிணம் பொதுப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படாமல், காவல்துறையே எடுத்துச்சென்றதைச் செய்தியாகப் படித்திருப்போம். அந்தக் காவலர்களில் ஒருவரின் பார்வையிலிருந்து சாதியமனநிலையை விவரிக்கிறது ‘போலீஸ்.’ ஒரு செய்தி எப்படி இலக்கியமாக முடியும் என்பதற்கான மகத்தான உதாரணமாக விரியும் இந்தக் கதை, சாதிக்காவலர்கள் எப்படி மக்களின் காவலர்கள் ஆவார்கள் என்ற கேள்வியைச் சமூகத்தின்முன் வீசுகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மேட்டிமை மனநிலையிலிருந்து திராவிட இயக்கத்தை அணுகும் எழுத்தாளர்கள் மத்தியில், திராவிட இயக்கத்தின் உள்ளிருந்து எழும் முக்கியமான விமர்சனக்குரல் இமையத்தினுடையது. திராவிட இயக்கத்தின் தேவையை அங்கீகரித்துக்கொண்டே, சமத்துவத்தின் குரலாக எழுந்த திராவிட இயக்கத்தில் இப்போது நிலவும் அதிகாரப்படிநிலைகள், சாதியம், புறக்கணிக்கப்படும் தொண்டர்கள் ஆகியவற்றை முன்வைக்கும் ‘நம்பாளு’, ‘கட்சிக்காரன்’ சிறுகதைகள், நீதியின் வலிமைமிக்க, துணிச்சலான சுயவிமர்சனங்கள்.

நன்மாறன் கோட்டைக்கதை
நன்மாறன் கோட்டைக்கதை

இந்தத் தொகுப்பில் ஆறு கதைகள் கிராமங்களில் வாழும் எளிய பெண்களின் காதல், வாதை, வழிபாட்டின் பெயரிலான ஏமாற்று, சுயமரியாதை ஆகியவற்றை பிரசாரத் தொனி சற்றும் இல்லாது முன்வைக்கின்றன. மூன்று கதைகளில் ‘ரெண்டாயிரத்துப் பதிமூணிலுமா’, ‘ரெண்டாயிரத்துப் பதினேழிலுமா’, ‘ரெண்டாயிரத்துப் பதினெட்டிலுமா?’ என்ற குரல்கள் கேட்கின்றன. காலம் குறித்த தன்னுணர்வும், காலம் நகர்கிற அளவுக்கு சமூகம் நகரவில்லை என்ற ஆதங்கமும் தோய்ந்தவை அந்தக் கேள்விகள்.

அரசியல் சரிநிலைகளுக்காகத் தராசுத்தட்டுக்கு அடியில் காந்தம் வைக்காத, நம்மை நாமே பரிசீலிக்க உதவும் சிறுகதைகள் இவை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நன்மாறன் கோட்டைக்கதை - இமையம்

வெளியீடு : க்ரியா, புது எண் 2, பழைய எண் 25, 17வது கிழக்குத்தெரு, காமராஜர் நகர், திருவான்மியூர், சென்னை - 600041.

மின்னஞ்சல் : crea@crea.in

பக்கங்கள் : 216

விலை : ரூபாய் 225