பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

பெண்ணுக்கு ஒரு நீதி - பதிப்பகம் : மைத்ரி

ந்தியா முழுக்க பெண்கள்மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்திருக்கின்றன. ஆனால் மாநில மகளிர் பாதுகாப்புக்காகவும் அவர்கள் மீதான வன்முறைகளுக்கான நீதி வேண்டியும் 1993-ல் கட்டமைக்கப்பட்ட தமிழ்நாடு மகளிர் ஆணையம் எப்படி இயங்குகிறது என்பதை விளக்குகிறது மைத்ரி பதிப்பக வெளியீட்டில் வந்திருக்கும் `பெண்ணுக்கு ஒரு நீதி’ புத்தகம். 2002 முதல் 2005 காலகட்டம் வரை மகளிர் ஆணையத்தின் தலைவராக இருந்த பேராசிரியர் வசந்தி தேவி இதை எழுதியிருக்கிறார். அவர் காலத்தில் நிகழ்ந்த முக்கியச் சம்பவங்களை ஆணையம் எவ்வாறு கையாண்டது என்பது குறித்தான ஆவணம் இந்தப் புத்தகம். தான் பதவியில் இருந்த மூன்றாண்டுகளில் பொதுவிசாரணை முறையை அமல்படுத்தியதையும் அதற்கு அரசுத் தரப்பிலிருந்தே அவர் சந்தித்த எதிர்ப்புகள் குறித்தும் பேசியிருக்கிறார். 2001-ல் வெறும் 110 மனுக்களை மட்டுமே பெற்றிருந்த ஆணையம் 2004-ல் 850 மனுக்களைப் பெற்றிருக்கிறது. ஆண்டுதோறும் பெறும் மனுக்களின் எண்ணிக்கை ஆணையத்தின் வளர்ச்சியைக் குறிக்கிறது என்கிறார்.

முதலும் முக்கியமுமாக, கருப்பியின் வழக்கு பற்றிப் பேசுகிறது புத்தகம். 2002 டிசம்பரில் பரமக்குடி காவல்நிலையத்தின் பின்புறம் இருந்த மின்பரிமாற்ற கோபுரத்தில் பட்டியலினப் பெண் ஒருவர் தூக்கிடப்பட்டு இறந்து கிடந்ததை, தற்கொலை என்று வழக்கை முடிக்கிறது காவல்துறை. ஆனால் அது தற்கொலை அல்ல, காவல்துறையின் சித்திரவதைக் கொலை என்பதை நிரூபிக்க, ஆணையத்தின் தலைவராக இருந்தது தொடங்கி தனது பதவிக்காலம் முடிந்த பிறகும் எட்டாண்டுகள் வரை போராடியிருக்கிறார்.

பெண்ணுக்கு ஒரு நீதி
பெண்ணுக்கு ஒரு நீதி

2013-ல் கருப்பி வழக்கில் தீர்ப்பளித்த ராமநாதபுரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்ட காவலர்களுக்குச் சிறைத்தண்டனை வழங்குகிறது.

முழுமையான சட்ட அதிகாரங்கள், கட்டமைப்புகள், நிதி ஆதாரம் கொடுக்கப்படும் நிலையில் மகளிர் ஆணையங்கள் பயனளிப்பவையே என முடித்திருக்கிறார் வசந்தி தேவி. பெயரளவில் நிறுவப்படும் அரசின் அத்தனை ஆணையங்களுக்கும் அது பொருந்துகிறது. பெண்ணுரிமையிலும் சட்டப்போராட்டத்திலும் அக்கறைகொண்ட அத்தனை பேரும் படிக்க வேண்டிய நூல் இது.

பெண்ணுக்கு ஒரு நீதி

பதிப்பகம் : மைத்ரி

மைத்ரி புக்ஸ், 49 பி, ஒமேகா பிளாட்ஸ், 4வது லிங்க் சாலை

சதாசிவ நகர், மடிப்பாக்கம், சென்னை - 600091

மின்னஞ்சல் : maitribooks@gmail.com

தொலைபேசி: 9445575740, பக்கங்கள் : 144, விலை : ரூ.130