அதன் தமிழ் மொழிபெயர்ப்பே ‘சாதியின் குடியரசு – நவீன தாராளமய இந்துத்துவா காலத்தில் சமத்துவம் பற்றி சிந்தித்தல்’ என்ற புத்தகம்.

சாதி, வர்க்கம் மற்றும் தலித் இயக்கங்களின் மீதான கறாரான கருத்துச் சாடல்கள் இதில் ஒருபக்கம் முன்வைக்கப்படுகின்றன. மற்றொரு பக்கம், தலித் இயக்கங்களுக்கும் மார்க்சியத்துக்குமான முரண்பாடுகளையும் உறவையும் இதில் முன்வைக்கிறார். சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியாவில் இடதுசாரிகளால் மார்க்சியம் எவ்வாறு அணுகப்படுகிறது என்பதை விமர்சிக்கவும் அவர் தவறவில்லை, “ஐயம் எழுப்புபவர்களை பிற்போக்காளர், துரோகி, முதலாளித்துவப் பாதையாளர், திரிபுவாதி, என்றெல்லாம் முத்திரையிட்டு, எதிரி முகாமிற்குத் தள்ள அவர்கள்(மார்க்சியவாதிகள்) தயங்கவில்லை. என்றாலும், இன்றைய இடதுசாரி இயக்கத்திற்கு செவ்வியல் மார்க்சியத்தைக் கொண்டு செய்ய எதுவுமில்லை” என்று புத்தகத்தின் ஓரிடத்தில் குறிப்பிட்டு நேரடியாகவே விமர்சனங்களை மேற்கொள்கிறார்.
இடஒதுக்கீடு பற்றிய பரவலான விவாதம் முதல் கட்டுரையாக இடம்பெறுகிறது. தீண்டக்கதகாதவர்களோடு இணைக்கப்படாத இடஒதுக்கீடு பழங்குடிகளுக்குத் தேவையாக இருக்கிறது என்கிறார். ஆனால் “தீண்டத்தகாதாரோடு ஒப்பிடும்போது அவர்கள் (பழங்குடிகள்) சமூக விலக்கத்தால் பாதிக்கப்படவில்லை” என்கிற கருத்தை எந்த அடிப்படையில் முன்வைக்கிறார் என்று புரியவில்லை.

வேறொரு இடத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதாவால் அம்பேத்கர் காவிமயமாக்கப்படுவதைக் கடுமையாக விமர்சிக்கிறார். அதற்குக் காரணம் காங்கிரஸ்தான் என்பதை ஆதாரங்களோடு குறிப்பிடுகிறார். கட்டுரைத் தொகுப்பின் தமிழ் மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரை நீண்ட நெடும் வாக்கியங்களும் கரடுமுரடான சொல்லாடல்களும் வாசிப்பவர்கள் அந்த வாக்கியங்களின் அரசியலை அணுகுவதற்கு இடையூறாக இருக்கிறது. சுதந்திரத்துக்குப் பிறகான இந்திய இடதுசாரி, தலித் மற்றும் முற்போக்கு இயக்கங்களையும் அதன் செயல்பாடுகளையும் பாராட்டுவதாக இல்லாமல் அவர்களின் முற்போக்குச் சிந்தனை ஏன் ஓரிடத்திலேயே தங்கிவிட்டது என்கிற கேள்விதான் இந்த புத்தகம் எழுப்பும் கூர்மையான விமர்சனம். விமர்சனத்தை அணுகி அதற்கான பதில்களைத் தேடுவது காலத்தின் தேவை.
சாதியின் குடியரசு
(ஆனந்த் டெல்டும்டே)
தமிழில்: ச.சுப்பாராவ்
பரிசல் வெளியீடு,பாரதி புத்தகாலயம் 7, இளங்கோ சாலை.
தேனாம்பேட்டை. சென்னை - 600018.பக்கங்கள் : 424
விலை : ரூ.350