Published:Updated:

கவிதை: அவனும் ஒரு அறிவிப்பும்

கவிதை
பிரீமியம் ஸ்டோரி
கவிதை

பார்வதி

கவிதை: அவனும் ஒரு அறிவிப்பும்

பார்வதி

Published:Updated:
கவிதை
பிரீமியம் ஸ்டோரி
கவிதை

க்கர நாற்காலியில் ஒய்யாரமாய் அமர்ந்திருப்பான் அவன்

அவ்வப்போது நாற்காலியை

பக்கவாட்டில் சொய்ங்கென நகர்த்துவதும்

பிறகு அப்படியே அமர்ந்திருப்பதும்

அவனுக்கு மிகப் பிடிக்கும்

தத்துவம் பேசுவான்

குளிக்கின்ற அன்றைக்கெல்லாம்

தகதகவென ஒளிர்வான்

மிகப் பெரிய நூலகம்

வீட்டில் இருப்பதை

கவனிக்கக் கூடிய கர்வத்துடன்

நண்பர்களிடம் சொல்லுவான்

ஆம் அவனுக்கு நண்பர்களுண்டு

எப்படியெனக் கேட்க வேண்டாம்

அது எனக்கும் தெரியாது

அழகிய மதுப் போத்தல்களும்

டெரகோட்டா காதணிகளும்

ஆரோவில் ஊதுபத்திகளும்

குரசோவா திரைப்படங்களும்

சில்பியின் ஓவியங்களும்

பிடித்த மலரென்பதாலேயே

நொறுக்குத்தீனி டப்பாவில்

சூரியகாந்தி விதைகளும்

அவன் வீட்டில் உண்டு

போன்சாய் மரங்களை மட்டும்

பிடிக்காதவருக்குக் கொடுத்து விட்டான்

இல்லை அது நானில்லை

எனக்கு போன்சாய் பிடிக்கும்

என்று அவனுக்குத் தெரியும்

சொல்ல மறந்துவிட்டேன்

அவனுக்குப் பொய் பிடிக்கும்

அதனால்தான் அதைப்

பிடிக்காதென்று சொல்லுவான்

கலகலவெனச் சிரிப்பான்

நாம் சிரிக்க எத்தனித்தால்

ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்குவான்

மேற்கூறிய எல்லாமே

உங்களுக்கும் பொருந்தினால்

உடனே தொடர்பு கொள்ளுங்கள்

டிவிட்டரில் இருக்கிறேன்

வீட்டின் முகப்பில்

இடம் கொஞ்சம் வைத்திருக்கிறேன்

அங்கு இலேசாய்ப் படியட்டும்

உங்கள் பகல் நேர நிழல்.