Published:Updated:

பொதுவுடைமைக் கவிஞர் தமிழ் ஒளி பிறந்ததின சிறப்புக் கட்டுரை!

தமிழ் ஒளி

தன் கவிதைகள் மூலம் பொதுவுடைமை சித்தாந்தத்தை தமிழுலகுக்கு தந்த முக்கியமான கவிஞர்களுள் ஒருவர் தமிழ் ஒளி.

பொதுவுடைமைக் கவிஞர் தமிழ் ஒளி பிறந்ததின சிறப்புக் கட்டுரை!

தன் கவிதைகள் மூலம் பொதுவுடைமை சித்தாந்தத்தை தமிழுலகுக்கு தந்த முக்கியமான கவிஞர்களுள் ஒருவர் தமிழ் ஒளி.

Published:Updated:
தமிழ் ஒளி

பொழுதுபோக்கிற்காகவும் கேளிக்கைக்காகவும் மட்டும் கலை பயன்படுவதில்லை.சமூகத்தில் நடக்கும் அநீதிகளையும், பாகுபாடுகளையும் மக்களுக்கு உணர்த்துவதில் கலை பெரும்பங்கு வகிக்கிறது. மக்களின் உரிமைக்காகவும், சமூதாய சீர்த்திருத்தங்களுக்கும் கலையை பயன்படுத்தி வெற்றி கண்டவர்கள் பலர்.

பொதுவுடைமை கருத்துகளை பெரும்பாலும் மொழிபெயர்ப்பு புத்தகங்கள் மூலமாக மட்டுமே படித்துவந்தனர் தமிழ் மக்கள். தன் கவிதைகள் மூலம் பொதுவுடைமை சித்தாந்தத்தை தமிழுலகுக்கு தந்த முக்கியமான கவிஞர்களுள் ஒருவர் தமிழ் ஒளி.

உலகத் தொழிலாளர் ஒற்றுமையே

நல்லுணார்வே, அன்பே, இருட்கடலில்

ஆழ்ந்திருந்து வந்த முத்தே

முழுநிலவே, மே தினமே வாராய் நீ

வாராய் உனக்கெந்தன் வாழ்த்தை

இசைக்கின்றேன்…. என்று தன் கவிதை மூலம் உழைக்கும் மக்களுக்கு சொந்தமான மே தினத்தை கொண்டாடியவர் பொதுவுடைமைக் கவிஞர் தமிழ் ஒளி.

தமிழ் ஒளி
தமிழ் ஒளி

சொந்த ஊரை விட்டு வெளியே வரும் பெரும்பாலானவர்களுக்கு வாழ்வாதாரத்துக்கான தளமாக, அரசியல் தளமாக சென்னை விளங்குகிறது. பொதுவுடைமைக் கவிஞர் தமிழ் ஒளி அரசியல் வாழ்க்கையிலும் சென்னை நகரத்துக்கு முக்கியமான பங்குண்டு.

திராவிட மாணவர் கழகத்தில் ஈடுபாடு கொண்ட தமிழ் ஒளிக்கு சென்னையில் வாழ்ந்த நாட்கள் உழைக்கும் மக்களின் பிரச்னைகளை உணர்த்தின. சாதிய சிக்கல்கள் மட்டுமல்லாமல் வர்க்க ரீதியாகவும் மக்கள் சுரண்டப்படுகிறார்கள் என்பதை உணர்ந்த தமிழ் ஒளியின் வாழ்க்கை கருப்பிலிருந்து சிவப்பை ( கம்யூனிஸம்) நோக்கிப் பயணித்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புதுச்சேரியில் உள்ள குறிஞ்சிப்பாடிக்கு அருகிலுள்ள ஆடூரிலிருந்து புறப்பட்ட கவிஞர் இங்குள்ள சாதிய சிக்கல்களை தான் எழுதிய வீராயி என்ற கதையின் மூலம் உலகிற்கு திரையிட்டுக் காட்டுகிறார் .வீராயி ஒரு ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண். வீராயி- வாழ்க்கை முழுவதும் துன்பத்தை மட்டுமே அனுபவிக்கும் கதாபாத்திரம். தன் வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள உற்ற துணை கிடைத்த போதும் இங்குள்ள சாதிய ஆணவத்தால் திருமண வாழ்க்கையை பார்க்காமலே இருவரும் கொல்லப்படுகின்றனர். இந்த கதையின் மூலம் சமூகத்தில் அடித்தட்டில் வாழும் மக்களுக்கு நிம்மதி என்றுமிருப்பதில்லை என்று அடித்தட்டு மக்களின் குரலாக ஒலிக்கிறார் கவிஞர்.

கவிஞனின் காதல், நிலைபெற்ற சிலை, வீராயி, மே தின ரோஜா, வீதியோ? வீணையோ? மாதவிக்காவியம், கண்ணப்பன் கிளிகள், கோசலைக்குமாரி, பாடு பாப்பா போன்ற கவிதை நூல்களுக்கும்; சிலப்பதிகாரம் நாடகமா? காவியமா? திருக்குறளும் கடவுளும், தமிழர் சமுதாயம் ஆகிய கட்டுரைகளுக்கும் சொந்தக்காரர் தமிழ் ஒளி. சமூகத்தின் முன்னேற்றத்துக்காக கவிதைகளை எழுதிய தமிழ் ஒளி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராவார்.

கம்யூனிஸ்ட் கொடி
கம்யூனிஸ்ட் கொடி

1948-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டது. ஜனசக்தி இதழும் வெளிவருவதில் சிக்கல் இருக்கும் பட்சத்தில் ”முன்னனி” என்ற இதழ் தான் பொதுவுடைமைக் கருத்துகளை பிரசுரித்தது. முன்னனி இதழுக்காக தமிழ் ஒளி பெரிதளவில் உழைத்தார். அகில இந்திய வானொலியில் ”சுதந்திரம்” என்னும் கவிதை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ் ஒளி சுதந்திரம் அடித்தட்டு மக்களின் உரிமைகளை மீட்டு அவர்கள் வாழ்க்கையை வளமாக்குவதாக இருக்க வேண்டும் என்று கவிதைகள் மூலம் வலியுறுத்தினார்

பொதுவுடைமை சமூகத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணித்த கவிஞர் தமிழ் ஒளி அவர்கள் தனித்தமிழகத்துக்கான கோரிக்கையையும், தாய்மொழிக் கல்வியை வலியுறுத்தியும் எழுதியுள்ளார்.

“ தன்குமரி எல்லை தன்னைச் சார்ந்த தமிழகத்தில்

எல்லாம் தமிழர்க்கே என்ற போர் முரசும்

எல்லோரும் கேட்டே எழுகின்ற நேரமிது

என்று மொழி வாரியாக மாநிலங்கள் பிரித்த போது குமரியைத் தலைநகராகக் கொண்டு தனித்தமிழகம் வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தம்மொழிக் கல்வியை கற்பதிலார் அவர் துமிழ்மொழி கற்க நமை வருத்தி வாய்மொழி பெற்று மகிழ்ந்திடுவர் அவர் வாழ்க்கையில் ஞானம் வருவதேயில்லை

என்னும் பாடலின் மூலம் தாய்மொழிக்கல்வியை வலியுறுத்துகிறார்.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் கொள்கைக்காக கலையை தன் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திய கவிஞர் 1965-ம் ஆண்டு எழுதுவதையும் மூச்சுவிடுவதையும் நிறுத்தி கொண்டார். அனைவருக்குமான சமத்துவ உலகத்தை வலியுறுத்திய கவிஞருக்கு அவர் வாழ்ந்த காலத்திலும், இறந்த பின்னும் அவருக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. தமிழ் ஒளி பிறந்து இன்றோடு (21.9.22) 98 ஆண்டுகள் நிறைவடைகிறது. கவிஞர் தமிழ் ஒளியின் நூற்றாண்டு பிறந்த நாளை அரசு எடுத்து நடத்த வேண்டும் என்று தமிழ் கூறும் நல்லுலகம் விரும்புகிறது.