பெரிய மாலின் ஆடை ஷோரூமில் இருந்த பளிச்
மூலை முடுக்கு சந்து பொந்து சகலத்திலும் கிடந்தது
கதவைத் திறந்தால் அழைக்கக் கவிழும் ஆதிகாலச் சரக்கு
மேலே நுழைந்தால் விரியும் வெள்ளை வெளேர்
ஆடை அடுக்கின் ஃப்ளோரசென்ட்டில் துள்ளிய
எண்ணமெல்லாம் வண்ணமம்மா பாடல்
சீருடைக்காரியின் இளித்தும் இளிக்காத அந்த நாசூக்கு
ட்ராலியைக் காட்டிவிட்டு பின்னால் அகன்ற அவளது சீலச் செப்பம்
எங்கிருந்து வந்து பரவிப் பாவுதென தெரியாத மெல்லிய ஸ்வரமூட்டம்
இவையெல்லாம் பளிச்சா என்றால் இவையெல்லாம் சேர்ந்த பளிச்
உருளை வண்டிக்குள் திணித்திருந்தவற்றை
அவரவர் வரிசைக்குக் காத்திருந்து அட்டையைத் தேய்த்தபடி
தேய்த்து முடித்தவர்கள் அரவமில்லாமல் வெளியேறியபடி இருந்தார்கள்
அதுவுமே பளிச்சென தெரிந்தது
அள்ளி அள்ளி வீசுபவர் வந்து ஞாயிறுகளில் அதைப் பொறுக்குபவர்
என எல்லோரும்
இந்தப் பளிச்சிற்காகத்தானே இத்தனை மெனக்கெடுகிறார்கள்.