
ஒரு கன்டெய்னர், மின்தூக்கியால் கப்பலில் ஏற்றப்படும்போது
சிலநூறு டன் கோதுமைகளும்
ஆயிரம் தோலா ஆட்டிறைச்சி மற்றும் துருவதேசப் பழப்பெட்டிகள்
கொஞ்சம் கணினி மென்பொருட்கள்
உயிருள்ள கடலாமைகளும் அதில் பயணிக்கலாம்
தூரதேச அகதிகள் கன்டெய்னரில் ஒளிந்திருக்கிறார்கள் என்பது வதந்தி
க்ரூடாயில் பீப்பாய்கள் சுத்திகரிக்கப்பட
உடல் மறைக்கும் ஆடைகள் வண்ணபொம்மைகள்
சிலநேரம் நாய்களின் மாமிசமும் பயணிக்கலாம்
ஒரு கன்டெய்னரின் கொள்ளளவு ஒரு நாட்டின் தேசிய வருமானம் மட்டுமல்ல
கடல்கடந்து வேற்று நாட்டில் பாயும் வளமான ஆயுதமும்கூட
இப்போது கைச்சாத்திடும் துறைமுகம் அதை
இரண்டு சந்தைகளுக்குப் பிரிக்கிறது
நாம் முதல் சந்தையில் ஒரு கன்டெய்னரை
அனைத்துலக ஒப்பந்தத்தின் கீழ் வாங்குகிறோம்
இரண்டாவது சந்தையில் அனைத்தும் விலைமலிவாகிவிடுகிறது
சமயத்தில் தெருவில் கொட்டப்படுகிறது
இறுதியில்
பழுதாகிவிடும் அக்கன்டெய்னர்
கடல் மறந்து நமது குடியிருப்பு வீடாகிவிடுகிறது.