கட்டுரைகள்
Published:Updated:

மின்-கலப்பைகள்

மின்-கலப்பைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
மின்-கலப்பைகள்

பெரு.விஷ்ணுகுமார்

றக்கும் தறுவாயில் என் அம்மா

இரண்டு உள்ளங்கைகளைத் தந்தாள்

இறுக்கித் தைக்கப்பட்ட

ரேகையின் தையல்

எங்கே விடுபடுமோவென

அன்றிலிருந்து கையை உதறுவதேயில்லை

நெற்குறியின் உடலைத் தலையிலிருந்து

இப்படி ! அறுத்துக் காண்பிக்கிறது

கதிரரிவாளின் கேள்விக்குறி.

கறையான் வனைந்து மீதம்வைத்த

ஏர்க்கலப்பையை

சுத்தியலாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறான்

ஒரு மடையன்.

மாடுகளின் கொம்புகளை () அடிக்கடி

அடைப்புக்குறிகளாகப் பயன்படுத்துவதோடு சரி.

வேறு தொழிலின்றி

வலையோடு கடலுக்குப் புறப்படுகின்றன

காலிகிணற்றுக்குள் கூடுகட்டிப் பழகிய சிலந்திகள்

பனிவயலில் புகைமூட்டம்,

அணைந்தணைந்து மிதக்கும் மின்மினிகளென

சிதறிய கங்குகள்

எட்டு புள்ளி நாலு வரிசையென

மறுகாலை விழுந்துகிடந்தது.

வழிதப்பிய ஆட்டுமேகத்தை

பீடிப்புகையால் கட்டியிழுத்துப்போகிறவன்

இரவு வானைப் பார்த்துக் கேட்டேன்,

இத்தனை விதைகளிருந்தும் பயனென்ன

கண்ணுக்குத் தெரியும்படியா விதைப்பது

கண்டுகொள்ளப்படாத சிறுநகரத்தின்

கூரையின் மேல்நின்று

குதித்துவிடுவேனென வேடிக்கை

காட்டுகிறேன்.

மின்-கலப்பைகள்

பிறகு குதித்தும் காட்டுகிறேன்.

நிம்மதியாகச் சிதறினேனா

அதுதான் இல்லை

படமெடுக்கும் டிஜிட்டல் பாம்புகளால்

அந்தரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளேன்

முன்னொரு காலம்

வரப்பெங்கிலும் உருகிவழிந்த

தானிய மெழுகுவத்திகளே

அதன் நுனியின் வந்தமர்ந்த நான்

உம்மைக் கடித்ததென

நசுக்கியெறிப்பட்ட பூச்சி.

தடுக்கி விழுந்திடாது

விளக்கெங்கும் ஓடித்திரியும்

சேறுபூசிய பனித்துளிகள்,

இன்னும் அதனுள்ளே தெரிகிறது

வெட்டியெறியப்பட்ட

கபிலர் கண்ட பனைமரம்

முடிவாக என்னதான் கூறவருகிறாய்

இந்த உள்ளங்கைகளை வைத்துப் பயனென்ன

உனக்குத் தெரியுமா

இவையெல்லாம் வெறும் ரேகையென்று

கருதுகிறாயா, இல்லை

‘விளையாது’ என்று தெரிந்தும்

மின்கலப்பையால் நானே உழுததன் தடங்கள்.