Published:Updated:

பாருலகின் ரியாலிட்டி! - கவிதை #MyVikatan

விகடன் வாசகர்

``பக்தியில் திளைக்கும் ஆழ்வாரைக் காணேன். பதவியில் திளைக்கும் ஆள்வாரைக் கண்டேன்.''

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

பாற்கடலின் பரந்தாமரே...

காஞ்சியின் அத்திவரதரே,

பொற்றாமரைக் குளத்தில் சயனம் தெளிந்து

பூமியில் எழுந்தருளிய தாங்கள்

பாருலகில் பார்த்ததென்ன?

வினவினாள் மகாலட்சுமி திருவடிகளைப் பிடித்தபடி..!

Representational Image
Representational Image

கண்டவற்றையும் கண்டேன்

காணாதவற்றையும் கண்டேன்,

பதிலுரைத்தார் பார்த்தசாரதி புன்முறுவலுடன்.

கண்டது என்ன?

காணாதது என்ன என்றாள் கமலத்தேவி.

பக்தியில் திளைக்கும் ஆழ்வாரைக் காணேன்

பதவியில் திளைக்கும் ஆள்வாரைக் கண்டேன்

மக்களை கொட்டிலில் தவிக்க விட்டு,

தனியே தரிசித்தவர்களைக் கண்டேன்.

பணம், பதவி,

புகழுக்காக பாதகங்கள் புரியும் பாவிகளைக் கண்டேன்

சீற்றம் கொள்ளும் விலங்குகள் அழிந்து

சூழ்ச்சிகள் செய்யும்

மனித மிருகங்கள் கண்டேன்.

ஆட்சியரிடம் அடங்கி

அநீதி செய்பவரிடம் ஒடுங்கி, நட்சத்திரத்திடம்

மயங்கிய இறையடியோரைக் கண்டேன்.

Representational Image
Representational Image

மரங்கள் மாயமாகி

மனிதர்கள் மரமானதைக் கண்டேன்.

பக்தி வியாபாரமாய் பதவி அநீதியாய்

பணமே ஆட்சியாய் தர்மம் அரூபமாய்

அதர்மம் விஸ்வரூபமாய்.

எங்கெங்கும் வியாபித்திருக்க

ஆலயங்களில் பக்தியைக் காணேன்

ஆட்சியாளரிடம் மாண்பைக் காணேன்

சிகரங்களைக் காணவில்லை

சிலைகளைக் காணவில்லை

தர்மத்தைக் காணவில்லை

பக்திதனைக் காணவில்லை

மொத்தத்தில் கடவுளையும் காணவில்லை

பூமியையும் காணவில்லை.

Representational Image
Representational Image

கலி முற்றியதால் மண்ணுலகு அழியத்தான் வேண்டுமா?

கவலையுடன் கேட்டாள் அன்னை கஜலட்சுமி.

மனிதத்தை மறந்துவிட்டு

பேராசையில் உழலும் மனிதர்கள்,

அழிப்பதை அவர்களே செய்வர்.

மீண்டும் ஆக்கத்தைச் செய்தால் போதும்.

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.

எது நடக்க இருக்கிறதோ,

அதுவும் நன்றாகவே நடக்கும்.

என்றார் ஸ்ரீ கிருஷ்ணர்!

- கே. அஷோக் குமார்

Representational Image
Representational Image

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/