“மிக மிகக் கடினமாய் இருந்தாலும் சரி
கொஞ்சம் சிரமப்பட்டாவது மூச்சுவிடு காலே”
அவள் எப்போதும் தனது கால்களிடம்
இப்படித்தான் கெஞ்சுவாள்
கால்களுக்கு மூக்கு இருக்கிறது என்பதை
சமீபத்தில்தான் கண்டறிந்தாள்
தனது எல்லாம் வல்ல வார்த்தைகள் இறந்த பிறகு
தனது எல்லாம் வல்ல இறைவன் கைவிட்ட பிறகு
அவளுக்கு வேறுவழி தெரியவில்லை
தனது காலிலே விழுந்துவிட்டாள்

“கொஞ்சம் மூச்சு விடு காலே”
நீ மூச்சு விட விடத்தான் எனது பிரமை கலைகிறது
என்னுடைய எல்லாப் பிரார்த்தனைகளும்
ஏதேன் தோட்டத்தின் பறிக்கப்பட்ட பாவங்கள்
எனது பிஞ்சுக்காலே பட்டுக்காலே
கொஞ்சம் மூச்சு விடு இந்த மரத்த காலால் இனி
எதை உதைக்கப் போகிறேன்
சுவர்களின் மேல் பூனை தாவுகிறது
முழுமை பெறாத சித்திரங்கள்
தங்களைத் தாங்களே வரைகின்றன
தூரத்தின் இசை ரயிலாய் இடிகிறது
விண்மீனும் மழையும்
ஒருசேரப் பொழியும் இரவாகின்றன
தயவுசெய்து மூச்சு விடு காலே
ஆஹா, அப்படித்தான் நன்றாக இழுத்து மூச்சுவிடு
நீ தேறுகிறாய் காலே நீ விடும் மூச்சு
எனக்கு சகலத்தையும் காண்பிக்கிறது
என்னால் உன்னைத் தூக்க முடிகிறது
ஒரு தேன்சிட்டுபோல நீயிடும் ஓசை கேட்கிறது
எனக் கொஞ்சியவள் அன்றிரவும் தனது
கால்களைத் தூக்கி அவ்வளவு மென்மையான
அந்தத் தலையணையின் மேல் வைத்தாள் இப்போது
அவளுக்கு அந்தத் தலையணைதான் மகன்.
