பிரீமியம் ஸ்டோரி

நவீன கவிதைகளை விரும்பாத கி.ரா எனும் பொல்லாக் கிழவனுக்கு

எழுத்துக் கீதாரி - கவிதை

மொழியைக் கதைகளால் உழுதுகொண்டு போகிறான் கிழவன்

புரளுகிற சொற்களில் சாரமுள்ள கிடைவாசம் படிகிறது புதிதாய்.

களையெடுக்கும் பெண்களின் முதுகெலும்புகளைத் தடவிக்கொடுத்தபடி

தாலாட்டுக்கும் ஒப்பாரிக்கும் நடுவிலான கண்ணாமூச்சி பற்றி

அழிப்பாங்கதைகளைப் போடுகிறான் கள்ளப் புன்னகையோடு.

‘கதவு’களற்ற வீடுகளின் கூரைகளில் செங்கொடிகளை ஏற்றிவிட்டு வீடுதிரும்புகையில் தெருச்சண்டையின் வசவுச் சொற்களைச் சேகரிக்கிறான்.

அறுவடைக் களைப்பில் குடிகள் உறங்கும் ராத்திரிகளில்

பண்டித மொழியையும் கூலிகளின் மொழியையும்

குருதி தெறிக்க மோதவிட்டுப் பரிசோதிக்கிறான்.

விடியலில் சுரங்களை சாதகம் செய்த குளத்துப் பூக்களிடம்

வயலினை ஏந்திக்கிடந்த நாள்களின் கழுத்துவலியைப் பாடுகிறான்.

சாராய ருசி தோதுபடாமல் கடிதங்களில் போதையுறுகிறான்.

கலிங்கத்துப் பரணியிலிருந்து வழிதப்பித் திரிந்த

கெட்டவார்த்தைகள் பேசும் கிளியை அவன்தான் ஆதரவாய் வளர்க்கிறான்.

நாறுகிற மனித உளத்தைப் புனைவின் முலைப்பாலைப் பூசி ஆற்றுகிறான்

மழையிடம் பாடம் படித்த கிழவன், ஞானத்தைச் சிறு பூனையாக்கி

தன் காலடியிலேயே திரிய வைத்திருக்கிறான்.

உணவுப்பிரியனவன் அடுக்களைப் பலகார வாசனையில்

லயித்தபடி தானியங்களின் வரலாற்றை அசைபோடுகிறான்.

கண்ணசந்த குறும்பு மூதாயின் பல்செட்டைத் திருடிச்சென்று

அதனிடம் ரகசியமாகக் கதை கேட்கிறார்கள் சிறுவர்கள்.

எழுத்துக் கீதாரி - கவிதை

வாழ்ந்த அசதியின் முனகல் கேட்கிற வீட்டை நோக்கி

யாரும் தப்ப வழியே இல்லாத கனவு வருகிறது மேளதாளத்தோடு.

“அம்புட்டுதானா?” எனக் காலத்திலிருந்து கேட்கிற முதியன்

தன் நீண்ட கைகளை வாஞ்சையோடு நம் திசையில் ஆட்டுகிறான்.

மரியாதைக்காக வெடிக்கும் துப்பாக்கிகளிடம்

“பாத்து… பாவம் பட்சிக!” என்ற கடைசிச் சொற்களோடு மௌனிக்கிறான்.

சுதி சுத்தமான நாயன இசையோடு கதைசொல்லியின் ரயில் கிளம்புகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு